இன்று பலகட்ட போராட்டங்களுக்கு பின் மத்திய அரசால் ஒப்புக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட லோக்பால் சட்ட வரைவில் பல தடங்கல்கள் , ஆறாவது முறையாக கூடிய இந்த குழு இறுதியில் ஒரு இறுதி முடிவும் எடுக்காமல் கலைந்தது மீண்டும் கூடுவதற்கு. இந்த பதிவில் நான், என்ன சட்டம் , உரிமை , அளவீடு , சுதந்திரம் பற்றி எல்லாம் எழுதப்போவது இல்லை , ஒரு சராசரி இந்தியனாக , இந்திய ஜனநாயகத்தின் மேல் இன்னும் நம்பிக்கை உள்ளவனாக என் மனதில் தோன்றும் சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்
சரி இந்த லோக்பால் சட்ட வரைவில் என்னதான் பிரச்சனை , இந்த சட்டத்துக்குள் பிரதமரையும் , உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் விசாரணைக்கு கொண்டுவரவேண்டும் என்பதே அன்ன ஹசாரே , சாந்தி பூஷன் போன்றவர்களுடைய கோரிக்கை, அதை எதிர்க்கிறது பிரணாப் தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு, அதன் காரணம் என்ன என்பதை இன்றுவரை நான் அறியேன், மக்களால் தேர்தெடுக்க பட்டு மக்களால் அமையப்பெற்ற அரசின் தலைமை அமைச்சராக இருக்கும் பிரதமரை , மக்களுக்கான சட்ட திட்டத்தில் , ஊழலுக்காகவோ இன்னும் பிற காரணங்களுக்காகவோ விசாரிப்பதில் என்ன தவறு இருந்து விடமுடியும்.
உலகத்திலேயே மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசில் உச்ச அதிகாரம் பெற்றவராய் இருக்கும் அமெரிக்க குடியரசு தலைவரே அந்நாட்டு நீதிமன்றத்தால் விசாரிக்க படும்போது (நிக்சன் மற்றும் கிளிண்டன்)மக்களுக்காக ஆட்சி நடத்துவதாக சொல்லும் இவர்கள் ஏன் பிரதமரை இந்த சட்ட வரைவுக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை , உள்துறை செயலரிலிருந்து நிதி அமைச்சர்வரை அமெரிக்காவின் ஆணைப்படி நிர்பந்தத்தால் நிர்ணயிக்கும் இந்திய அரசு இந்த விஷயத்தில் ஏன் அமெரிக்காவை பின் பற்ற மறுக்கிறது.
ஒரு நாட்டை வழிநடத்தும் தலைவர் குற்றமற்றவராக இருக்கவேண்டும் என்று மக்கள் நினைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும், இது மக்களின் உரிமை சம்பந்தப்பட்டது அல்லவா? நாட்டின் எதிர்கால நலன் மற்றும் வளர்ச்சி சம்பந்தப்பட்டது அல்லவா?
குற்றம் செய்தோ அல்லது குற்றம் செய்தவராக சந்தேகப்படும் மனிதர் எப்படி பிரதமராக இருக்க முடியும்? இந்திய ஜனநாயகம் இவர்களுக்கு என்ன கேலிக்கூத்தான விஷயமாக போய்விட்டதா. உயர் பதவியில் இருப்பவர்களிடம் தூய்மையை எதிர்பார்ப்பது குற்றமா, அதையும் தாண்டி ஒருவர் குற்றம் சாட்டப்பட்டுவிட்டதலேயே சட்டம் அவருக்கு தண்டனை கொடுத்துவிடப்போகிறதா என்ன?, இப்படி விசாரிப்பதற்கே இத்தனை தடை என்றால் என்ன மக்களாட்சி இது ???
மக்களுக்கு வழிக்காட்டியாக இருக்கவேண்டியவர்களே இப்படி சட்டத்தின் முன்னே நிற்கவும் அதன் விளைவை சந்திக்கவும் இப்படி பயப்பட்டால் அல்லது தவிர்க்க முயற்சி செய்தால் என்ன அரசியல் அமைப்பு இது ?, சட்டம் எல்லாம் ஒன்றுமே அறியாத பாமரனை தண்டிக்கத்தானா? பணக்காரர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் சட்டம் என்பதே இல்லையா? தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க நம் நாட்டின் சட்டத்திற்கு உரிமை உண்டு , இதில் யாருக்கும் விதிவிலக்கு தரக்கூடாது என்பது என் எண்ணம், இதில் உங்களுக்கு ஏதேனும் கருத்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
அன்புடன்
ARR
26 comments:
தங்கள் கருத்து தான் இந்தியாவில் உள்ள பெரும்பாலோரின் கருத்து. அரசு இதற்கு செவி சாய்த்தே ஆக வேண்டும்.
@தமிழ் உதயம்
நன்றி நண்பரே உங்களின் இந்த உடனடிக் கருத்திற்கு
லோக் பால் சட்ட வரைவில் சிக்கல்கள் இருக்கின்றன என்று தெரிகிறது. எது எப்படி இருந்தாலும் அண்ணா ஹசாரே குழுவினர் மட்டுமே ஊழலை ஒழிப்பதில் அக்கரை கொண்டவர் போலும், அரசு ஊழலுக்குத் துணை போவதாலேயே அவர்கள் தயங்கு கிறார்கள் என்று சித்தரிப்பது ஜீரணிக்க முடியாத ஒன்று. எத்தனையோ மக்கள் நல சட்டங்களும் திட்டங்ளும் இந்த அரசு கொண்டு வந்தாலும் அதனை செயல்படுத்த உள்ள அதிகாரிகள் சரியில்லை என்பதே நிதர்சனம். எடுத்தோம் கவிழ்த்தோம், என்றில்லாமல் ஆர அமர செயல்படுவதே. சிறந்தது. அண்ணா ஹசாரே குழுவினரின் மிரட்டலும் HOLIER THAN THOU
ATTITUDE-ம் நடுநிலையில் இருந்து பார்க்கும்போது நெருடுகிறது. இருக்கும் கட்சிகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வதும் கண்கூடு. காந்தியடிகளின் உண்ணா நோன்பு அவரை அவரே வருத்திக் கொண்டு மக்களின் உள்ளுணர்வை உணரவும் தூய்மைப் படுத்தவும் மேற்கொள்ளப்பட்டது. அரசையும் மற்றோரையும் மிரட்ட அல்ல.
@G.M Balasubramaniam
நல்ல பல கருத்துக்களை தந்ததில் மனம் மகிழ்கிறேன் ஐயா
நன்றி உங்களின் கருத்திற்கு
உங்கள் எழுத்து உண்மையிலேயே ஆயுத எழுத்து தான் ....அருமையான கேள்விகள் ...பதில் தான் எங்கும் இல்லை ...வாக்களித்து அன்பை நிரூபித்தேன் ,,,,வருகிறேன்
@ரியாஸ் அஹமது
மனம் நிறைந்த நன்றி நண்பா
உங்களின் கருத்துக்கும்
பாராட்டுக்கும் வாக்கிற்கும்
இப்ப காங்கிரஸ் சொல்லி இருக்கற பரிந்துரை பிரகாரம் கீழ்மட்ட ஊழல் அதாவது ரோடு போடறது அப்புறம் ட்ராபிக் சிக்னலில் லஞ்சம் வாங்குவது போன்றத் தப்பை செய்பவர்களை மட்டுமே தண்டிக்க /விசாரிக்க முடியும் . ஊழல் பெருச்சாளிகளான மேல் மட்ட அதிகாரிகளை
விசாரிக்க இயலாது
//G.M Balasubramaniam said...
எது எப்படி இருந்தாலும் அண்ணா ஹசாரே குழுவினர் மட்டுமே ஊழலை ஒழிப்பதில் அக்கரை கொண்டவர் போலும், அரசு ஊழலுக்குத் துணை போவதாலேயே அவர்கள் தயங்கு கிறார்கள் என்று சித்தரிப்பது ஜீரணிக்க முடியாத ஒன்று.//
//அண்ணா ஹசாரே குழுவினரின் மிரட்டலும் HOLIER THAN THOU ATTITUDE-ம் நடுநிலையில் இருந்து பார்க்கும்போது நெருடுகிறது. //
திரு.G.M.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஒரு சல்யூட்! அண்ணா ஹஜாரேயின் அண்மைக்காலப் பேச்சும் செயலும் அவர் சொல்லிக் கொள்கிற குறிக்கோளுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை என்பதே எனது கருத்தும்.
@எல் கே
அப்படித்தான் தெரியுது சார்
இதற்கெதுக்கு லோக்பால் பசும்பால் எல்லாம் இருக்கற மாதிரியே இருந்திடலாமே
நன்றி உங்களின் கருத்திற்கு
@சேட்டைக்காரன்
உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன், வழி மொழிகிறேன் நண்பரே
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி
எந்தவொரு சட்டமாக இருந்தாலும், அதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்து, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவரின் அனுமதி பெற்ற பிறகே செயல்பாட்டுக்கு வர இயலும் என்பது அண்ணா ஹஜாரேயின் குழுவிலுள்ள சாந்திபூஷன், பிரசாந்த்பூஷனுக்குத் தெரியாதா என்ன?
முரண்பட்ட கொள்கைகளையுடைய கட்சிகள் இந்தச் சட்டத்தை மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைப் போலவே கிடப்பில் போடவும் வாய்ப்பிருப்பதை அண்ணாஜி அறிய மாட்டாரா?
முன்னை விட அரசு நிறையவே இறங்கிவந்திருக்கிற சூழலில், ஓரளவு பொதுவான அம்சங்களோடு லோக்பால் சட்டத்தை வருகிற பாராளுமன்றத்தொடரிலேயே கொண்டுவர அனுமதித்திருந்தால், எதிர்காலத்தில் தேவைப்படுகிற திருத்தங்களைக் கொண்டு வர முடிந்திருக்கும்.
’நான் சொல்வதுதான் சட்டம்," என்று முரண்டு பிடிப்பதிலிருந்தே அண்ணா ஹஜாரேயின் குறிக்கோள் உண்மையிலேயே ஊழலை ஒழிப்பதுதானா என்ற பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
//எல் கே said...
இப்ப காங்கிரஸ் சொல்லி இருக்கற பரிந்துரை பிரகாரம் கீழ்மட்ட ஊழல் அதாவது ரோடு போடறது அப்புறம் ட்ராபிக் சிக்னலில் லஞ்சம் வாங்குவது போன்றத் தப்பை செய்பவர்களை மட்டுமே தண்டிக்க /விசாரிக்க முடியும் . ஊழல் பெருச்சாளிகளான மேல் மட்ட அதிகாரிகளை விசாரிக்க இயலாது//
கார்த்தி! நீங்கள் சொல்வது தவறு! கேபினட் அமைச்சர்கள் வரைக்கும் மத்திய அரசு (காங்கிரஸ் அல்ல!) தயாரித்திருக்கிற வரைவுச்சட்டத்தில், நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படுவார்கள். மேல்மட்ட அதிகாரிகள் என்றால், அமைச்சரவைத் துணைக் காரியதரிசி வரைக்கும் சட்டம் பாயும்.
@@சேட்டைக்காரன்
நன்றி தங்களின் தொடர்ந்த கருத்துக்கு நண்பரே
உங்கள் வலைப் பக்கம் திறக்க எனக்கு நெடு நேரம் பிடிக்கிறது. கமெண்ட்ஸ் க்ளிக் செய்தாலும் அப்படியே...எனக்கு மட்டும்தான் அப்படியா என்று தெரியவில்லை.
ஏன் பிரதமரை இதில் சேர்க்க பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்றால் எதாவது செய்து நேரம் கடத்தும் முயற்சிதான்....! லோக்பால், மக்கள் மன்றம் என்றெல்லாம் படித்து விட்டு நாம் ஏதோ தமிழ் பட க்ளைமாக்ஸ் கோர்ட் சீன போல எதிர்பார்க்கிறோம் என்று தோன்றுகிறது.
//உயர் பதவியில் இருப்பவர்களிடம் தூய்மையை எதிர்பார்ப்பது குற்றமா, அதையும் தாண்டி ஒருவர் குற்றம் சாட்டப்பட்டுவிட்டதலேயே சட்டம் அவருக்கு தண்டனை கொடுத்துவிடப்போகிறதா என்ன?, இப்படி விசாரிப்பதற்கே இத்தனை தடை என்றால் என்ன மக்களாட்சி இது ???//
குற்றம் நிரூபிக்கப்பட்டாலே தண்டனை அவ்வளவு எளிதில் தந்துவிடப்போவதில்லை. அப்பீல் மேல் அப்பீல் செய்து கொள்ள வழிவகை செய்து தரப்படும்.
திரு. சேட்டைக்காரன் அவர்களின் கருத்துக்கள் எல்லாம் எனக்கும் சரியென்றே தோன்றுகிறது.
அவர் சாதாரண ஆசாமி இல்லை. நாட்டு நடப்புகள் அனைத்தும் அறிந்த நகைச்சுவையாளர்.
Voted 7 to 8 in Indli
லோக்பால்-மக்களுக்கு நன்மை தரும். அரசியல்வாதிகளுக்கு பயத்தை தரும்(தப்பு செய்தவர்களுக்கு).
பெரிதாய் இதை பற்றி அனுபவம் இல்லை என்பதால் நோ கமென்ட்!
@ஸ்ரீராம்.
எனக்கும் கூட அப்படித்தான் ஆகிறது
சரிசெய்ய ஏதேனும் வழி இருந்தால் நண்பர்கள் யாராவது சொல்லுங்கள்
நன்றி தங்களின் கருத்துக்கு
@வை.கோபாலகிருஷ்ணன்
நன்றி ஐயா தங்களின் கருத்துக்கு
உங்களின் தொடர் ஊக்கம் என்னை பெருமை அடைய செய்கிறது
@குணசேகரன்...
வாங்க வணக்கம் குணா
நன்றி தங்களின் கருத்துக்கு
@மைந்தன் சிவா
உங்களின் வருகைக்கு நன்றி சிவா
ஒரு வேளை.. தற்போதைய பிரதமர் 'லோக்சபா' உறுப்பினர் அல்லாததால், அவரை 'லோக்பாலில்' சேர்க்க வேண்டாமென நினைத்தார்களோ ?
@Madhavan Srinivasagopalan
ஹாஹ் ஹாஹா
இருக்கலாம் மாதவன்
நன்றி தங்களின் கருத்துக்கு
எத ஆதரித்தாலும் அதற்க்கு எதிரான கருத்துக்களே வருதுன்னே, நாளையே அன்னா ஹஜாரே இருபது வயதில் செய்த பாலியல் தில்லுமுல்லுகள் என்று கூட வரலாம் , எதையுமே ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இப்போதெல்லாம் மனதே வர்றதில்லே , காரணம் எத சொன்னாலும் அதற்க்கு எதிரா நம்புற மாதிரி எல்லோரிடமும் ஒரு கருத்து இருக்குன்னே
:-(
@ஷர்புதீன்
உண்மைதான் சகோதரரே
எல்லாவற்றுக்கும் மாற்று கருத்து உண்டு
இரவும் பகலும் போல
எதார்த்தமான உண்மைகள்
நன்றி தங்களின் கருத்துக்கு
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவது அவசியம் தானே...
ஆதலால்...பிரதமரும் விதிவிலக்கல்ல என்பது என் அபிப்பிராயம்.
இதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
Post a Comment