Showing posts with label ஆன்மீகம்/அனுபவம். Show all posts
Showing posts with label ஆன்மீகம்/அனுபவம். Show all posts

Tuesday, 31 May 2011

"திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - நிறைவுப்பகுதி


துணை செய்தி : சென்ற முறை நானிந்த தொடரை முடித்த விதம் எனக்கே பிடிக்கவில்லை , இந்த ஆன்மீக அனுபவத்தை தொடர்கதை போல பாவித்து முடித்திருந்ததை மாதிரி உணர்கிறேன், தவறிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.


         போனை எடுத்த எனக்கு என் மனைவியிடம் இருந்து நல்ல செய்தியே வந்தது , என் மகள் இன்று வெயிட் ஏறவும் இல்லை இறங்கவும் இல்லை, அதை கேட்ட நான் சற்றே நிம்மதி அடைந்தேன், காலையில் எழுந்த நாங்கள் நடக்க தொடங்கினோம், காலையில் வடமால்பேட்டில் உணவு , பின் அங்கிருந்து நடக்க தொடங்கினோம், நடக்க தொடங்கிய சற்று நேரத்திற்கெல்லாம் கண்களில் திருச்சானூர் கோபுரம் பட , ஆஹா என்னே ஒரு நிம்மதி மனதில், வாழ்க்கையில் அதுவரை அனுபவித்திராத திருப்தி எத்தனையோ முறை அந்த கோபுரத்தை பாத்திருந்தாலும் இந்த முறை இருகரம் கொண்டு என்னை அழைப்பதாகவே தெரிந்தது , என் கவலையெல்லாம் பறந்தது போன மாதிரி ஒரு இன்பம் ,தாய்பசுவை நோக்கி ஓடும் கன்றினைப்போல் எனை அறியாமல் வேகமாக நடந்தேன் , என் நண்பர்கள் என் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக வந்தனர்.               



அலமேலு மங்காபுரத்தில், பத்மாவதி தாயார் இருக்கிறார். இவளை, “அலமேலு’ என்பர். “அலர்மேலு’ என்பதே சரியான வார்த்தை. “அலர்’ என்றால், “தாமரை!’ “மேலு’ என்றால், “வீற்றிருப்பவள்!’ இதையே, “பத்மாவதி’ என்கின்றனர். “பத்மம்’ என்றாலும், “தாமரை!’ “வதி’ என்றால், “வசிப்பவள்!’ ஆக, தாமரையில் வீற்றிருப்பவள் என்பது இந்தச் சொல்லின் பொருள். செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமியே, பத்மாவதியாக பூலோகத்தில் அவதாரம் செய்தாள்.என் மகளின் பெயரும் அதே அர்த்தம் கொண்டதுதான் "கமலாத்மிகா"
கமலத்தில் வீற்றிருப்பவள் என பொருள்படும்.  


                                         தாயே என் துணை நீயே 

  கோவிலில் நுழைந்த எனக்கு உள்ளமெல்லாம் மகிழ்ச்சி, என் துயர் துடைக்க காத்திருக்கும் அந்த தெய்வ தாயாரை கண்குளிர பாக்க போகிறேன் , என் துயரையெல்லாம் கொட்டி தீர்க்க போகிறேன் என்ற ஆவல் என்னை அப்படியே அள்ளிச்சென்றது,வரிசையில் நின்று அன்னையை கண்குளிர,மனம்நிறைய,கண்ணீருடன் சேவித்தேன் என் மகளை அவளிடம் ஒப்புவித்தேன், தாயாரின் அந்த பார்வையில் நானிருக்கிறேன் உனக்கு என சொல்லாமல் சொல்லியது போன்றதொரு தெய்வீகப்பார்வை,  தாயாரின் திவ்ய தரிசனம் முடித்து வெளியே வந்தேன், மனமெல்லாம் அப்படி ஒரு திருப்தி, அதை என்னால் சொல்லில் சொல்ல முடியாத  ஒரு உன்னதம், என் சோகத்தையெல்லாம் துடைத்து எடுத்தது போன்றதொரு எண்ணம் , அந்த கணம் கவலையெல்லாம் என்னை விட்டு பறந்தோடி பிறந்த குழந்தையை போலே உணர்ந்தேன் , ஒன்றுமே இல்லாத நிசப்தம் அதில் நீக்கமற நிரந்த நிதர்சனம்.

                                       கோவிலைவிட்டு வெளியே வந்த நான் முழு உற்சாகத்துடன் திருமலையை நோக்கி நடக்க தொடங்கினேன் அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில்  உள்ள அலிப்பிரி அங்கிருந்து தான் ஏழுமலையானின் தெய்வீக திருமலைக்கு நடக்க தொடங்க வேண்டும் 

      இங்கிருந்து ஒன்பது கிலோமேட்டார் தொலைவில் 3900 படிக்கட்டுகளை கொண்டதுதான் திருமலை, 

"ஓம் நமோ நாராயணாய"  "ஓம் நமோ நாராயணாய"   
           "ஓம் நமோ நாராயணாய"  "ஓம் நமோ நாராயணாய"
                       "ஓம் நமோ நாராயணாய"  "ஓம் நமோ நாராயணாய"
          
என்ற கோஷங்கள் விண்ணை எட்ட , நாங்களும் அந்த உயிர் உருக்கும் 
"ஓம் நமோ நாராயணாய"   "ஓம் நமோ நாராயணாய" என்ற கோஷத்தை சொல்லியபடியே மலை ஏற தொடங்கினோம், ஒவ்வொரு  படி ஏறும் போதும் "ஓம் நமோ நாராயணாய" என நாங்கள் மூவரும் மாறி மாறி சொல்லிக்கொண்டே ஏறினோம் , ஏறியதே தெரியவில்லை கோவிந்தன் கோஷம் குறை நீக்கி , வலி நீக்கி , துயர் துடைத்து , துன்பம் அழித்து அழைத்து சென்றது எங்களை. வேங்கடவன் அருளாட்சி செய்யும் தெய்வீக திருமலையை , திக்கு தெரியாத என்னிலையை சொல்லி வேண்ட அடைந்தேன் . அந்த கோவிந்தன் என்னை ஆட்கொள்ளுவான் , என் துயரை தூளக்குவான் என்றபடியே அவன் சன்னதியை அடைந்தேன், உள்ளே நுழைந்த எனக்கு ,இந்த அகில லோகத்தையும் காக்கும் அந்த பரந்தாமன் , பரலோக நாயகன் , வாசுதேவன் , கோவர்த்தன் , அச்சுதன் , முகுந்தன் ,ஜகந்நாதன் பரப்ரஹ்மன், ஆஹா திவ்ய தெய்வீக திருமேனி தரிசனம் 


         என் குறையை எல்லாம் அவனிடத்தில் கொட்டினேன்,நீயே எல்லாம் உன்னிடமே நான் சரணாகதி மும்மூர்த்திகளில் காப்பவனே ,கமலபாதா, ஆதி மத்தியாந்த ரஹிதா, அநாத ரக்ஷகா, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா, பரமானந்தாஎன் மகளை உன்னிடத்தில் இருந்தே பெற்றேன் , இவள் உன் உடமை அவளை காப்பது உன் கடமை , இனி நீயே பொறுப்பு அவளுக்கு நீயே காப்பு .

 கராரவிந்தேந பதாரவிந்தம்
முகாரவிந்தே விநிவேசயந்தம்!
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயாநம்

பாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி!   

          எங்கள் ஊர் மன்னார்குடி ஸ்ரீவித்யாராஜகோபாலன் சன்னதியில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான கோபாலனை கையில் ஏளை பண்ணி இந்த சுலோகத்தை தீட்ஷதர் சொல்லுவர் , அது நினைவுக்கு வந்து அதை சொல்லியபடியே வெளியே வந்தேன் . தரிசனம் முடிந்து வெளியே வந்த நான் என் அறைக்கு சென்று என் மனைவிக்கு போன் செய்து குட்டிம்மா எப்படி இருக்கிறாள் என கேட்டபோது, நல்லா  இருக்கிறாள் நேற்றைவிட இன்றைக்கு 70 கிராம் வெயிட் அதிகமாயிருக்கிறாள் என்றாள் என் மனைவி , இதை விட என்ன பெரிதாய் தரமுடியும் எனக்கு அந்த தயாநிதி .............................   

                  
              திருமலை இந்த பூமியில் ஒரு தெய்வீக திருத்தலம் , அந்த இடம் நம்மை தெய்வீகத்தை உணரவைக்கும் , நம்வாழ்வை உயரவைக்கும் . கோடானு கோடி மக்களின் துயர் துடைக்கும் வேங்கடரமணன்  என்னை மட்டும் கைவிடவா போகிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே அவன் அருளால் என்னை இதுவரை அழைத்து வந்திருக்கிறது , இன்னும் என் வாழ்க்கை பாதை முழுவதும் அவன் சித்தம் தான் ,நான் வாழ்ந்தாலும்  வீழ்ந்தாலும் சகலமும் அவனுக்கே சமர்ப்பணம் , இது வரை என்னுடன் இந்த தொடரில் தொடர்ந்து வந்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்த அத்தனை பேரின் பாதம் தொட்டு  , இதில் ஏதேனும் குறை இருந்தால் அதை பொறுத்து கொள்ள வேண்டி வணங்குகிறேன் நன்றி   

                       

                        "ஓம் நமோ நாராயணாய"  "ஓம் நமோ நாராயணாய"   

அன்பன்
ARR
     

Monday, 30 May 2011

திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - 4


           நினைவு வந்து பார்த்த போது நாகலாபுரம் கோவில் எதிரே  உள்ள  நாங்கள் தங்க வேண்டிய மண்டபத்தில் இருந்தேன் சுற்றி என் நண்பன் ஐயப்பன் , பிரேம்குமார் சார் , திரு.ரமேஷ் எல்லோரும் இருந்தார்கள்,நினைவிழந்த என்னை திரு பிரேம்குமார் அமைப்பாளர்களின் வேனில் அழைத்து வந்திருக்கிறார் . எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது , அப்போது ஐயப்பன் வேண்டாம் ராஜகோபால் நீ நடக்கவேண்டாம், எங்க கூட வேன்லேயே வந்திடு என்றார், என் யாத்ரீக நண்பர்களும் அதையே ஆமோதிக்க சங்கடத்தில் நான், சரி காலையிலே பாத்துக்கலாம் என்றபடியே நான் தூங்கிபோனேன்.

           மறுநாள்  விடிகாலையிலேயே முழிப்புவந்துவிட்டது,உடனே என் இரு நண்பர்களையும் எழுப்பினேன் , சார் போலாமா ? என்ற என்னை இருவரும் ஆச்சர்யமாக பார்த்தார்கள் , உங்களால் நடக்க முடியுமா என்று கேட்ட அவர்களிடம் ,முடியும் வாங்க போகலாம் என்றழைத்தேன், இருவரும் என்னுடன் கிளம்ப வெளியே வந்த நான் கோவில் கோபுரத்தை பார்த்து வணங்கி நடக்க தொடங்கினேன். நேற்று நடக்க தொடங்கியபோது இருந்த வலி கூட இப்போது இல்லை , அந்த உள்ளங்கால் கட்டிகளை தவிர்க்காமல் அவைகளை பதிய வைத்தே நடந்தேன், ஏதோ பலுன்  மீது நடப்பதை  போன்ற உணர்வு, அன்று என்னுளே ஏதோ ஒரு புத்துணர்ச்சி வந்ததை போன்ற உணர்வு வெகு வேகமாய் நடந்து ராமகிரியை அடைந்தோம் , அங்குதான் காலை உணவு.

         
             ராமகிரியை பற்றி என் நண்பன் ஐயப்பன் சொல்லி நான் கேட்டது 

                       இராம பிரானின் கட்டளைப்படி சேதுவில் பிரதிஷ்டை செய்ய ஆஞ்சநேயர் வடக்கிருந்து சிவலிங்கத்தை கொண்டு வரும்போது, அதைத் தன்னிடத்தில் இருத்திக் கொள்ள பைரவர் எண்ணி அதற்கோர் வழியை மேற்கொண்டார். அதன்படி ஆஞ்சநேயருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. சிவலிங்கத்தைத் தரையில் வைக்கக் கூடாதென்று எண்ணி, சிறுவனாக அங்கு வந்த பைரவரிடம் தந்துவிட்டு நீர்ப் பருகச் சென்றார். அவர் குளத்தில் இறங்கி நீர் பருகி வருவதற்குள், பளுவாக உள்ளதென்று சொல்லிச் சிறுவன் பூமியில் வைத்துவிட்டான். கோபமுற்ற ஆஞ்சநேயர் அச்சிவலிங்கத்தைத் தன் வாலால் சுற்றிப் பலமாக இழுத்தார் - பயனில்லை. சிவலிங்கம் சற்று சாய்ந்ததே தவிர அதைப் பெயர்த் தெடுக்கமுடியவில்லை.ஆதலின் சிவனும் இங்கேயேபிரதிஷ்டையானார்.வாலால்சுற்றியிழுக்கப்பட்டமையால் சுவாமி - வாலீஸ்வரர் என்னும் பெயர் பெற்றார். ஆஞ்சநேயர் கோபத்தில் வீசிய மலையே இதற்கு முன்பு இங்கிருந்த 'காளிங்கமடு' என்னும் நீர் நிலையில் விழுந்து, அதனால் நீர் நிலையழிந்து மலையேற்பட்டது.இராமரின் பூசைக்காக எடுத்து வரப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டையானதால் "ராம்" என்பதும்; நீர் நிலை மறைந்து மலை ஏற்பட்டதால் "கிரி" என்பதும் சேர்ந்து இப்பகுதி பிற்காலத்தில் "ராமகிரி" என்று வழங்கலாயிற்று.

                       மூலவர் - வாலீஸ்வரர்; சுயம்பு மூர்த்தி; சற்று சாய்ந்த நிலையில் உள்ளார். வாலால் சுற்றியிழுத்த தழும்புகள் திருமேனியில் உள்ளன. இங்குள்ள நந்தியின் வாயிலிருந்து இடையறாது நீர் கொட்டிக் கொண்டேயுள்ளது. இந்நீர் (தீர்த்தக்) குளத்தில் நிரம்பி 'காரியாறு' என்றும் பெயருடன் ஓடுகிறது.



       அந்த நந்தி தீர்த்ததிலேயே குளித்து நல்ல மனதிற்கு நிறைந்த தரிசனம் முடிந்து, உணவால் வயிறை நிரப்பி மீண்டும் முன்னிலும்  வேகமாய் நடக்க தொடங்கினேன், அந்த ஆண்டவன் அருளால்.மதியம் சாப்பாடு கோனே என்ற இடத்தில் அங்குதான் புகழ்பெற்ற கோனே பால்ஸ் உள்ளது , மதியம் உணவை முடித்து நாங்கள் மாலையில் சென்ற இடம் நாராயணவனம்.

        
       இங்குதான் தாமரை மத்தில் பத்மாவதி தாயாரை ஆகாசராஜன் கண்டெடுத்ததும் ,  பிருகு மகரிஷி, மகாவிஷ்ணுவின் மார்பில் உதைக்கச் சென்றதால் கோபம் கொண்ட மகாலட்சுமி பூலோகம் வந்தாள். அவளைத்தேடி சீனிவாசனாக வந்த பெருமாள், தனது பக்தையான வகுளாதேவியின் மகனாக வளர்ந்தார். ஒருசமயம் அவர் வேட்டைக்குச் சென்றபோது, ஆகாசராஜன் அரண்மனையில் பத்மாவதியைச் சந்தித்து திருமணம் செய்ய முடிவெடுத்தார். அவர்களது திருமணம், நாராயணவனத்தில் நடந்தது. அற்புதமான கோவில் மனதை அப்படியே ஆட்கொள்ளும், இங்கு ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கும் , பத்மாவதி தாயாருக்கும் திருமணம் ஆனபோது உபயோகப்படுத்திய மஞ்சள் அரைக்கும் எந்திரத்தை இன்னும் வைத்திருக்கிறார்கள். மாலையில் மனம் நிறைந்த தரிசனம் முடித்து நாங்கள் சென்ற இடம் புத்தூர், இங்குதான் இரவு தங்கினோம் , இந்த நாள் எனக்கு எப்பபடி போனதென்றே தெரியாமல் என்னை ஆண்டவன் அழைத்து வந்த நாள், இன்னும் சொல்வேதேன்றால் என் பிராத்தனையை , என் கண்ணீரை அவன் ஏற்று கொண்ட நாளாகவே கருதினேன், மனதில் அப்படி ஒரு திருப்தி.

     இரவு புத்தூரில் நல்ல உணவு தந்தார்கள், சாப்பிட்டுவிட்டு படுக்க எத்தனிக்கையில் என் மனைவியிடம் இருந்து மறுபடியும் போன், என்னை அறியாமல் என் கைகள் நடுங்க தொடங்க 
                   கோபாலா கோவிந்தா 
என்றபடியே போனை எடுக்கபோனேன் .............................        

Saturday, 28 May 2011

திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - 3

          முக்கிய செய்தி : என் மகள் இப்போது என் அன்னையின் ஆசியாலும் ஆண்டவனின் அருளாலும் பூரண நலத்துடன் இருக்கிறாள்.தன் கருத்தை பதியும் போது இந்த செய்தியை பதிவிடச் சொன்ன GMB அய்யாவுக்கு நன்றி 

        மறுநாள் விடிகாலையிலேயே எழுந்தோம், காலையில் நடந்தால் களைப்பு தெரியாது என்ற அனுபவ வாக்கை தொடர்ந்து நடக்க தொடங்கினோம், நாங்கள் மூவரும் ஒரு குழுவாக ஆகி பேசி புரிந்து ஒருவர்மேல் ஒருவர் ஈடுபாடு கொண்டு அந்த ஆண்டவன்  பெயரால் ஒன்றானோம், அந்த மூவரில் நான்தான் கொஞ்சம்  தடிமனான உருவம் அப்போது என் எடை என்பது கிலோ இருந்தது, தொடைகள் ஒன்றோடொண்டு உரசி அதன் பாதிப்பும் என் நடையை தடை செய்தது, இருந்தாலும் தேங்காய் எண்ணெய் காலுக்கு கை கொடுக்க, கோவிந்த கோஷம் பாடி , பரந்தாமனின் பக்தியில் சகலமும் மறந்து காலை ஏழு மணியளவில் சூளைமேனி செங்காலம்மன் கோவில் வந்தடைதோம் , ஜிலு சிலுவென வீசும் தென்றல் காற்றில், பச்சை பசேலன இருக்கும் தோட்டங்களுக்கு நடுவே சாந்தமாய் அருள் தரும் வனதேவதை அவள், வரும் வழியிலேயே பம்ப்செட்டு குளியல் போட்டுவிட்டதால் அன்னையை மனம் உருகி வேண்டினேன், அங்குதான் காலை டிபன், திருப்பதியான உணவிற்குப்பின் மனமும் , காலும் வேண்ட அங்கேயே ஒரு மணிநேரம் ஓய்வு.

             ஓய்விற்கு பின் நடை யாத்திரை தொடங்கினேன்  என் இரு யாத்திரை நண்பர்களுடன், நடக்கும் நடையில் கால்கள் வலிக்க , பாண்டுரங்கனின் அருள்நாடி கோஷங்கள் ஒலிக்க மதியம் பனிரெண்டுமணிளவில் ஊத்துக்கோட்டை அடைந்தோம், அங்குதான் மதிய உணவு அற்புதமான உணவு,  இந்த போஜனம் எங்களுடன் யாத்திரை வரும் WS கம்பனி ஊழியர்களின்  கைகர்யம், அத்துணை தூரம் எங்களோடு நடந்து வந்து எங்களுக்கே அவர்கள் ஓடி யாடி பரிமாறிய பக்தியின் பரிமாணம் சொல்லில் அடங்காது.அங்கிருந்து மீண்டும் சிறு ஓய்வுக்கு பின் யாத்திரை தொடங்கியது 
அங்கிருந்து நாங்கள் சென்றஇடம் ஆந்திராவின் எல்லை பகுதியான சுருட்டப்பள்ளி 
                    
  எனக்கு இந்த தலத்தை பற்றிய வரலாறு அப்போது புதிதாக இருந்தது , பலருக்கு தெரிந்திருக்கலாம் , என்னை போல் அறியாதவர்களுக்காக ஒரு சிறு குறிப்பு 





வரலாறு : துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் இந்திரன். அசுரர்கள் அவனது ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு பிரகஸ்பதி கூறினார்.


திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர்.வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவனை வேண்டினர்.சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வர கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி சிவனிடம் தந்தார். அப்போது முப்பத்துமுக்கோடி தேவர்களும்,""சிவபெருமானே! இந்த விஷத்தை வெளியில் வீசினாலும், தாங்களே உண்டாலும் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான் சூழ்நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள்''என மன்றாரடினார்.உடனே சிவன் "விஷாபகரண மூர்த்தி'யாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த லோகமாதா பார்வதி, சிவனை தன் மடியில் கிடத்தி அவரது  வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கண்டத்தில் கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது. அவர் "நீலகண்டன்' ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் "அமுதாம்பிகை' ஆனாள். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படி செல்லும் வழியில் இத்தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணத்திலும், ஸ்கந்த புராணத்திலும் கூறப்படுகிறது.பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்தார். இந்த அருட்காட்சியை சுருட்டப்பள்ளியில் பார்க்கலாம். 

பொது தகவல் : தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.பிரதோஷ பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான்
அன்னையின் மடியில் அய்யன் படுத்துறங்கும் அழகை காண கண் கோடி வேண்டும் அப்படி ஒரு அற்புத காட்சி, அந்த அதிசய மகோன்னத தரிசனத்தை முடித்து விட்டு நாங்கள் செல்லவேண்டிய இடம் வேதநாராயண பெருமாள் ஆட்சி செலுத்தும் நாகலாபுரம் இரவு தங்கலும் அங்கேதான்.

     
மாலை காபி குடித்து விட்டு நடக்க தொடங்கிய எனக்கு கால் வலி தாங்க முடியவில்லை இப்போது இரு உள்ளங்காலிலும் கொப்பளங்கள், அவை என் பாதங்களை பதியவிடமுடியாதபடி செய்துவிட்டதால் குதிகாலாலேயே நடக்கவேண்டிய நிர்பந்தம்,கால்களிலும் வீக்கம், உடல் மிக சோர்வடைந்து விட்டதால் அந்த ஆண்டவனின் துணைகொண்டு நடந்து கொண்டு இருந்தேன், அப்போது என் மனையாளிடமிருந்து போன், "என்னங்க எங்க இருக்கீங்க மத்தியானத்திலிருந்து உங்களுக்கு டிரை பண்ணுறேன் கிடைக்கவேயில்லை" என்றாள், சிக்னல் இருந்திருக்காது என்ன விஷயம் என்றேன் என் வலியை காட்டாமல், "பாப்பா வெயிட் குறைஞ்சிகிட்டே போறா,காலையிலிருந்து அம்பது கிராம் குறைஞ்சிட்டா என்ன பண்ணுறதுன்னே தெரியல என அழத்தொடங்கினாள், என்னில் பீறிட்ட அதிர்ச்சியை காட்டாமல் அம்பது கிராம் தானே பரவால்ல சரியாயிடும் நீ ஒண்ணும் கவலைபடாதே என்று கூறி அவளின் என்னை பற்றிய கவலைகளுக்கும் பதில் சொல்லி போனை வைத்தேன்.

 எனக்கு கண் இரண்டும் அப்படியே  இருண்டுகொண்டு வருவதைபோல ஒரு உணர்வு, அம்பது கிராம் என்றால் குறைவாகத்தெரியும் ஆனால் 850 கிராம் உள்ள  குழந்தை ஐம்பது கிராம் குறைகிறாள் என்றாள் , ஆண்டவா என்ன செய்ய போகிறாய் என்னை?, சொல்லி அழக்கூட யாருமில்லையே, கண்களில் கண்ணீர், பாசம் என்னை கோழை ஆக்கிய கணம் அது, என் அன்னை சொல்வது போல பாசம் உள்ளவர்கள் அனைவருமே கோழைகள்தான், பாசத்தின் முதல் படியே தைரியம் இழப்பதுதான்.அப்போதுவரை என் மகளை தொட்டது கூட கிடையாது நான். செப்டெம்பர் மாதம் பிறந்தவளை நான் தொட்டு தூக்கியது நவம்பர் இரண்டாம் தேதிதான்,  நானும் என்னுடன் திரு.பிரேம்குமாரும் நடந்து கொண்டிருக்கிறோம், அவரின் தோளை ஆதரவாய்பற்றியே நடக்கிறேன்,துக்கம் தொண்டையை கடந்து வாய்விட்டு அழுகிறேன், உடலும் மனமும் ஒருசேர சோர்வடைய 

         பரந்தாமா! பக்தவட்சலா!
                பாண்டுரங்கா! பாபவிமோசனா!
                     ஸ்ரீதரா! ஸ்ரீனிவாசா!!
                           கோபாலா! கோவிந்தா! 
            அழுதபடியே அவன் நாமம் சொல்லிய நான், மெல்ல நினைவிழக்க தொடங்கினேன் .................                               
                        
அன்பன் 
ARR

Friday, 27 May 2011

திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - 2

இந்த பாத யாத்திரையை தொடங்கும் முன் இந்த பாதயாத்திரை குழுவினரைப்பற்றி சொல்கிறேன் ,இந்த சமாஜத்தின் பெயர் ராமானுஜ பக்த சபா, இதுவரை தொடர்ந்து 29 ஆண்டுகள் பாத யாத்திரை சென்று கொண்டு இருக்கிறார்கள் , இதன் முக்கிய அமைப்பாளர்கள் 
  1. திரு .ராமசந்திரன்
  2. திரு .நாராயணன் 
  3. திரு .சந்திரசேகர் (எ) ஐயப்பன் 

 முப்பது பேருடன் தொடங்கிய இந்த பாத யாத்திரை இப்போது சுமார் ஐநூறு யாத்திரிகர்களுடன் தொடர்கிறது.இந்த யாத்திரையின் போது அவர்கள் பாதயாத்திரை செல்லுபவர்களை பார்த்துகொள்ளும் முறை மிக அலாதியானது , ஒரு வேனில் இங்கும் அங்குமாக அமைப்பாளர்கள் நகர்ந்து கொண்டே இருப்பார்கள் , முதலில் வருபவரிலிருந்து கடைசி யாத்திரிகரை பார்க்கும் வரை அந்த நகருதல் இருக்கும் , அந்த வேனில் மோர், தண்ணீர், பழச்சாறுகள், பிஸ்கட்டுகள்  இருந்து கொண்டே இருக்கும் , வேண்டியவர்கள் வேண்டியதை நிறுத்தி பெற்றுகொள்ளலாம், மூன்று வேளையும்  அறுசுவை உணவு , மாலையில் டி அல்லது காபி   இரவில் தங்குவதற்கான மண்டபங்கள் அனைத்தும் அற்புதமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும், இவை அனைத்திற்கும்  அவர்கள் வாங்கும் தொகை ரூ.400 மட்டுமே, பல கைங்கர்யங்கள் மூலமாக இது இவர்களுக்கு சாத்தியப்படுகிறது.இது மட்டும் இல்லாமல் பாதயாத்திரைக்கு தேவையான அத்தனை பொருட்களையும் (தோளில்  மாட்டிக்கொள்ளும் படியான ஒரு துணிப்பை,வேங்கடவனின் உருவம் தாங்கிய படம் ,ஒரு மஞ்சள் வேஷ்டி,பெரிய ஏழடி உயரமான தடிமனான பாலித்தீன் கவர்,எங்கெங்கு தங்குகிறோம், உணவு வழங்கும் இடம் , நேரம் போன்றவை அச்சடிக்க பட்ட ஒரு விளக்க காகிதம் )பாதயாத்திரை துவங்குவதற்கு முதல் நாள் சகஸ்ரநாம பூஜை செய்து அதிலும் நம்மை பங்கேற்க வைத்து , பின் நம்மிடம் அளிப்பார்கள்  அதை கையில் வாங்கிய உடனேயே நம்மில் ஒரு உன்னத உணர்வா இல்லை சக்தியா என்று தெரியாத வகையில் ஒன்று உள்செல்லும்.காலையில் பூஜையை தொடர்ந்து புறப்படும் யாத்திரை வேங்கடவனின் புகழ் பாடி செல்லும், பெரம்பூரை சுற்றி வந்து பின் அவரவர் தன் வழியே புறப்படுவர்.

      காலையில் உணவு பொன்னியம்மன்மேட்டில் உள்ள லக்ஷ்மிநரசிம்மர் கோவிலில் ,மனதிற்கு  நிறைவாய் நரசிம்மனை தரிசித்துவிட்டு வந்து அங்கேயே உணவை வாங்கி அருந்தி பின் யாத்திரை தொடங்கும். 

    அங்கிருந்து தொடங்கும் யாத்திரை மதியம் பனிரெண்டு மணியளவில் காரனோடையில் முடியும் அங்கு தான் மதிய உணவு , அற்புதமான சாப்பாடு மனம் நிறையும்  அளவுக்கு அன்பாய் பரிமாறுவார்கள், பின் அங்கேயே சிறிது  நேரம் ஓய்வு ,பின் நடக்க தொடங்கினேன், இது என் முதல் முறை பயணம் என்பதால் கூட யாரும் இல்லை தனியாளாக போவது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது, கால் மெல்ல வலிக்க தொடங்கியது, காலையிலிருந்து 22 கிலோமீட்டர் நடந்திருக்கிறேன் எனக்கே ஆச்சர்யம் இன்னும் 18 கிலோமீட்டர் நடக்கவேண்டும், நடந்து கொண்டிருக்கிறேன் அப்போது என்னிடம் தண்ணீர் கேட்டபடியே இருவர் அறிமுகம் ஆனார்கள் ஒருவர் திரு. ரமேஷ் உதவி பேராசிரியர் கால்நடை மருத்துவ கல்லூரி, இன்னொருவர் திரு .பிரேம்குமார் துணை ஆணையர் கலால் வரி, மூன்று பேருக்கும் பண்பலை ஒத்துபோக ஒன்றாகவே நடக்க தொடங்கினோம் , இவர்களின் நட்பு எனக்கு சற்று உறுதியை தந்தது. 

பழக்கமில்லாமல் நடப்பதால் காலில் வலி தாங்க முடியவில்லை , என்னுடன் வந்தவர்கள் முன்பே இதற்காக தினமும் இரண்டு கிலோமீட்டர் நடை பயிற்சியை மேற்கொண்டதால் அவர்களால் சமாளிக்க முடிந்தது, கோவிந்தனின் பெயரைசொல்லி தொண்டர்ந்தேன் பயணத்தை, ஒரு மணிநேரத்திற்கு நான்கு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்பது எங்களின் திட்டம், நான்கு கிலோமீட்டர் நடந்தவுடன் பத்து நிமிட ஓய்வு இதன் படி நடக்க தொடங்கினோம். இரண்டு கிலோமீட்டர் நடந்த உடனேயே கால் வலியால் ஓய்வுக்காக கெஞ்ச தொடங்கும் , அப்போது எங்களில் ஒருவரோ இல்லை எங்களை கடந்து செல்பவரோ சத்தமாக "கோபாலா .... கோவிந்தா....
வெங்கட்ரமணா ........ வைகுண்தாவாசா" என சொல்லி செல்லும் போது எங்கிருந்தோ வரும் வேகம் என்னை உந்தித்தள்ளும் இப்படியே இரவு ஏழு மணிக்கு பெரியபாளையம்  அடைத்தோம், இங்குதான் இரவு தங்கல்.

     இரவு உணவருந்திவிட்டு காலில் மஞ்சளும் தேங்காய் எண்ணையையும்  கலந்து போட்டுகொள்ளும்மாறு அனுபவஸ்த்தர்கள் சொல்ல அதன் படியே போட்டுக்கொண்டேன் அப்போதுதான் என் கையில் பட்டது என் வலது  உள்ளங்காலில் ஒரு ருபாய் நாணய அளவுக்கு ஒரு கட்டி, அது தெரியாமலேயே நடந்து வந்திருக்கிறேன். பக்கத்தில் திரும்பி பார்கிறேன் ஒருவர் இன்னொருவருக்கு கால் அமுக்கி கொண்டிருக்கிறார், இருவருமே அம்பது வயதை கடந்தவர்கள் , ஆனால் முன் பின் அறியாதவர்கள் இந்த யாத்திரையில் பெற்ற அறிமுகம் தான் ஆயினும் இந்த பாத சேவை, , இதில் இன்னொரு சுவாரஸ்யமான செய்தி காலை அமுக்கியவர் SAIL கம்பனியில் பொது மேலாளர், அமுக்கபட்டவர் அகரத்தில் நடைபாதையில் உணவகம் நடத்திவருபவர், என்னே அந்த ஆண்டவனின் விளையாட்டு, அவன் பெயரால் மக்கள் ஒருநிலையாவது என்ன ஒரு அற்புதம் அப்படியே பக்தியின் பலம் அறிந்து நெகிழ்து போனேன்.கண்களில் என்னை அறியாமலேயே கண்ணீர் , என் வலி மறந்து அவர் மறுத்தும் அவர் காலை நான் பிடித்து விட  தொடங்கினேன் , இப்படி ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் சேவையாலேயே ஆண்டவனின் பக்தியை அனுபவித்த முதல் நாள் அது ..........................                                

Thursday, 26 May 2011

திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - 1

  

                              கடந்த 2003 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் தேதி இரவு எட்டு மணி பத்து நிமிடத்திற்கு சதய நட்சத்திரத்தில் என் மனைவியின் வயிற்றில் ஏழு மாதமும் இரண்டு நாட்கள்  மட்டுமே இருந்த என் மகள் கமலாத்மிகா பிறந்தாள்.


பிறந்த போது எடை தொள்ளாயிரம் கிராம் உயரம் 37 செமீ. எனக்கு மகள் பிறந்தாள் என்ற மகிழ்ச்சியை கொண்டாட முடியாத தினமாக அது அமைந்தது. குழந்தை பிறந்தவுடன் மனைவியையும் குழந்தையும் ஒருங்கே காணுபவர்கள் மத்தியில் மனைவியை தனியாகவும் என் குழந்தையை நானடோலோஜி வார்டிலும் பார்த்தேன். என்னதான் கஷ்டமாக இருந்தாலும் நான் பெற்ற குழந்தையை பார்த்த போது நான் பெற்ற இன்பம் சொல்லி விளங்காது.

   குழந்தை பிறந்து இரண்டு வாரத்தில்  டாக்டர் என்னையும் என் மனைவியையும் கூப்பிட அவர் அறைக்கு சென்றோம்,இனி டாக்டர் "கொஞ்சம் கிரிடிகலாதான் இருக்கு பாக்கலாம் பேபி வெயிட் குறையாம இருக்கணும் அது ரொம்ப முக்கியம் இதுமாதிரி ஆயிரத்தில் ஒரு குழந்தைதான் வெயிட் கெயின் பண்ணும் பாக்கலாம் என்றார்", எனக்கு பூமி அப்படியே பிளந்து என்னை உள்ளிழுப்பது மாதிரி ஆனது, மனைவிநிலை சொல்லவே வேண்டாம், அறையில் இருந்து வெளியே வந்த என்னை எதிர்கொண்ட என் அம்மா, டாக்டர் என்னப்பா சொன்னார் என்றபோது பீறிட்டு கிளம்பிய அழுகையை  அடக்கிய படியே ஒண்ணும் இல்லமா, குழந்தை ஆரோக்கியமாதான் இருக்காம் என்றேன். ரொம்ப சந்தோசம் நான் கும்புடுற ஏழுமலையான் என்னை கைவிடமாட்டான் , முகம் டல்லா வந்தியா அதான் கொஞ்சம் பயந்துட்டேன் என்ற அம்மாவின் பார்வை தவிர்த்து மனைவியின் முகம் நோக்கினேன்.

    (இது என் மகளின் புகைப்படம் இல்லை மாதிரிக்காக )  


              அடுத்த இரண்டு நாட்களில் என் மகளின் எடை 70 கிராம் குறைந்து போனது, நிலையில்லாமல் நானும் என் மனைவியும், அப்போது என் அம்மாவின் வார்த்தைகளும்    என் அலுவலக நண்பன் திரு.ஐயப்பன் என்னிடம்  ரொம்ப நாளாக சொல்லிவந்த திருமலை பாத யாத்திரை என் நினைவிற்கு வந்தது(சென்னை பெரம்பூரிலிருந்து திருமலை வரை)  அவருக்கு போன் செய்த நான் அய்யப்பா இந்த வருஷம் எந்த தேதி பாத யாத்திரை போறீங்க என்றேன் உடனே அவர் இந்த மாதம் 26 ஆம் தேதி நாளை மறுநாள் கிளம்புறோம் என்றார், அப்படியா நானும் வரேன் இந்த முறை என்றேன், ரொம்ப சந்தோசம் ராஜகோபால் நான் உங்க பேரை பதிவு பண்ணிடுறேன் என்றார்.

என் மனைவியிடம் நான் போகப்போகும் பாத யாத்திரையை பற்றி சொன்னேன், ஏங்க இதெல்லாம் உங்க உடம்புக்கு ஆகுமா, வேண்டாம் என்றாள் இல்லை நான் போகப்போறேன் என்றேன், என் அம்மாவிடம் சொன்னேன் இப்படி உடம்ப வருத்திகிறதேல்லாம் வேண்டாம்பா, சின்ன வயசுலேயே நீ இங்க பத்து வீடு தள்ளி இருக்குற கடைக்கு போனால் கூட லூனாவை எடுத்துட்டுதான் போவ உன்னாலஎல்லாம் அவ்வளவு தூரம் போக முடியுமா யோசிச்சு பண்ணுடா என்றார். எது எப்படி இருந்தாலும் பாத யாத்திரை செல்வது என முடிவேடுத்துவிட்டேன்.மறுநாள் காலை ஐந்து மணிக்கு பெரம்பூர் BB ரோட்டில்\உள்ளவெங்கடேசபெருமாள் கோவிலில் இருந்து தொடங்கியது பாத யாத்திரை...............................  

        
        
    (இதுவும் மாதிரிப்படமே ) 

                    இந்த நான்கு நாட்கள் பாத யாத்திரையில் ஆண்டவனை ,மிக  அருகில் உணர்ந்த அனுபவத்தை, வரும் பதிவுகளில் சொல்கிறேன் 

அன்பன் 
ARR