Tuesday, 31 May 2011

"திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - நிறைவுப்பகுதி


துணை செய்தி : சென்ற முறை நானிந்த தொடரை முடித்த விதம் எனக்கே பிடிக்கவில்லை , இந்த ஆன்மீக அனுபவத்தை தொடர்கதை போல பாவித்து முடித்திருந்ததை மாதிரி உணர்கிறேன், தவறிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.


         போனை எடுத்த எனக்கு என் மனைவியிடம் இருந்து நல்ல செய்தியே வந்தது , என் மகள் இன்று வெயிட் ஏறவும் இல்லை இறங்கவும் இல்லை, அதை கேட்ட நான் சற்றே நிம்மதி அடைந்தேன், காலையில் எழுந்த நாங்கள் நடக்க தொடங்கினோம், காலையில் வடமால்பேட்டில் உணவு , பின் அங்கிருந்து நடக்க தொடங்கினோம், நடக்க தொடங்கிய சற்று நேரத்திற்கெல்லாம் கண்களில் திருச்சானூர் கோபுரம் பட , ஆஹா என்னே ஒரு நிம்மதி மனதில், வாழ்க்கையில் அதுவரை அனுபவித்திராத திருப்தி எத்தனையோ முறை அந்த கோபுரத்தை பாத்திருந்தாலும் இந்த முறை இருகரம் கொண்டு என்னை அழைப்பதாகவே தெரிந்தது , என் கவலையெல்லாம் பறந்தது போன மாதிரி ஒரு இன்பம் ,தாய்பசுவை நோக்கி ஓடும் கன்றினைப்போல் எனை அறியாமல் வேகமாக நடந்தேன் , என் நண்பர்கள் என் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக வந்தனர்.               



அலமேலு மங்காபுரத்தில், பத்மாவதி தாயார் இருக்கிறார். இவளை, “அலமேலு’ என்பர். “அலர்மேலு’ என்பதே சரியான வார்த்தை. “அலர்’ என்றால், “தாமரை!’ “மேலு’ என்றால், “வீற்றிருப்பவள்!’ இதையே, “பத்மாவதி’ என்கின்றனர். “பத்மம்’ என்றாலும், “தாமரை!’ “வதி’ என்றால், “வசிப்பவள்!’ ஆக, தாமரையில் வீற்றிருப்பவள் என்பது இந்தச் சொல்லின் பொருள். செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமியே, பத்மாவதியாக பூலோகத்தில் அவதாரம் செய்தாள்.என் மகளின் பெயரும் அதே அர்த்தம் கொண்டதுதான் "கமலாத்மிகா"
கமலத்தில் வீற்றிருப்பவள் என பொருள்படும்.  


                                         தாயே என் துணை நீயே 

  கோவிலில் நுழைந்த எனக்கு உள்ளமெல்லாம் மகிழ்ச்சி, என் துயர் துடைக்க காத்திருக்கும் அந்த தெய்வ தாயாரை கண்குளிர பாக்க போகிறேன் , என் துயரையெல்லாம் கொட்டி தீர்க்க போகிறேன் என்ற ஆவல் என்னை அப்படியே அள்ளிச்சென்றது,வரிசையில் நின்று அன்னையை கண்குளிர,மனம்நிறைய,கண்ணீருடன் சேவித்தேன் என் மகளை அவளிடம் ஒப்புவித்தேன், தாயாரின் அந்த பார்வையில் நானிருக்கிறேன் உனக்கு என சொல்லாமல் சொல்லியது போன்றதொரு தெய்வீகப்பார்வை,  தாயாரின் திவ்ய தரிசனம் முடித்து வெளியே வந்தேன், மனமெல்லாம் அப்படி ஒரு திருப்தி, அதை என்னால் சொல்லில் சொல்ல முடியாத  ஒரு உன்னதம், என் சோகத்தையெல்லாம் துடைத்து எடுத்தது போன்றதொரு எண்ணம் , அந்த கணம் கவலையெல்லாம் என்னை விட்டு பறந்தோடி பிறந்த குழந்தையை போலே உணர்ந்தேன் , ஒன்றுமே இல்லாத நிசப்தம் அதில் நீக்கமற நிரந்த நிதர்சனம்.

                                       கோவிலைவிட்டு வெளியே வந்த நான் முழு உற்சாகத்துடன் திருமலையை நோக்கி நடக்க தொடங்கினேன் அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில்  உள்ள அலிப்பிரி அங்கிருந்து தான் ஏழுமலையானின் தெய்வீக திருமலைக்கு நடக்க தொடங்க வேண்டும் 

      இங்கிருந்து ஒன்பது கிலோமேட்டார் தொலைவில் 3900 படிக்கட்டுகளை கொண்டதுதான் திருமலை, 

"ஓம் நமோ நாராயணாய"  "ஓம் நமோ நாராயணாய"   
           "ஓம் நமோ நாராயணாய"  "ஓம் நமோ நாராயணாய"
                       "ஓம் நமோ நாராயணாய"  "ஓம் நமோ நாராயணாய"
          
என்ற கோஷங்கள் விண்ணை எட்ட , நாங்களும் அந்த உயிர் உருக்கும் 
"ஓம் நமோ நாராயணாய"   "ஓம் நமோ நாராயணாய" என்ற கோஷத்தை சொல்லியபடியே மலை ஏற தொடங்கினோம், ஒவ்வொரு  படி ஏறும் போதும் "ஓம் நமோ நாராயணாய" என நாங்கள் மூவரும் மாறி மாறி சொல்லிக்கொண்டே ஏறினோம் , ஏறியதே தெரியவில்லை கோவிந்தன் கோஷம் குறை நீக்கி , வலி நீக்கி , துயர் துடைத்து , துன்பம் அழித்து அழைத்து சென்றது எங்களை. வேங்கடவன் அருளாட்சி செய்யும் தெய்வீக திருமலையை , திக்கு தெரியாத என்னிலையை சொல்லி வேண்ட அடைந்தேன் . அந்த கோவிந்தன் என்னை ஆட்கொள்ளுவான் , என் துயரை தூளக்குவான் என்றபடியே அவன் சன்னதியை அடைந்தேன், உள்ளே நுழைந்த எனக்கு ,இந்த அகில லோகத்தையும் காக்கும் அந்த பரந்தாமன் , பரலோக நாயகன் , வாசுதேவன் , கோவர்த்தன் , அச்சுதன் , முகுந்தன் ,ஜகந்நாதன் பரப்ரஹ்மன், ஆஹா திவ்ய தெய்வீக திருமேனி தரிசனம் 


         என் குறையை எல்லாம் அவனிடத்தில் கொட்டினேன்,நீயே எல்லாம் உன்னிடமே நான் சரணாகதி மும்மூர்த்திகளில் காப்பவனே ,கமலபாதா, ஆதி மத்தியாந்த ரஹிதா, அநாத ரக்ஷகா, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா, பரமானந்தாஎன் மகளை உன்னிடத்தில் இருந்தே பெற்றேன் , இவள் உன் உடமை அவளை காப்பது உன் கடமை , இனி நீயே பொறுப்பு அவளுக்கு நீயே காப்பு .

 கராரவிந்தேந பதாரவிந்தம்
முகாரவிந்தே விநிவேசயந்தம்!
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயாநம்

பாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி!   

          எங்கள் ஊர் மன்னார்குடி ஸ்ரீவித்யாராஜகோபாலன் சன்னதியில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான கோபாலனை கையில் ஏளை பண்ணி இந்த சுலோகத்தை தீட்ஷதர் சொல்லுவர் , அது நினைவுக்கு வந்து அதை சொல்லியபடியே வெளியே வந்தேன் . தரிசனம் முடிந்து வெளியே வந்த நான் என் அறைக்கு சென்று என் மனைவிக்கு போன் செய்து குட்டிம்மா எப்படி இருக்கிறாள் என கேட்டபோது, நல்லா  இருக்கிறாள் நேற்றைவிட இன்றைக்கு 70 கிராம் வெயிட் அதிகமாயிருக்கிறாள் என்றாள் என் மனைவி , இதை விட என்ன பெரிதாய் தரமுடியும் எனக்கு அந்த தயாநிதி .............................   

                  
              திருமலை இந்த பூமியில் ஒரு தெய்வீக திருத்தலம் , அந்த இடம் நம்மை தெய்வீகத்தை உணரவைக்கும் , நம்வாழ்வை உயரவைக்கும் . கோடானு கோடி மக்களின் துயர் துடைக்கும் வேங்கடரமணன்  என்னை மட்டும் கைவிடவா போகிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே அவன் அருளால் என்னை இதுவரை அழைத்து வந்திருக்கிறது , இன்னும் என் வாழ்க்கை பாதை முழுவதும் அவன் சித்தம் தான் ,நான் வாழ்ந்தாலும்  வீழ்ந்தாலும் சகலமும் அவனுக்கே சமர்ப்பணம் , இது வரை என்னுடன் இந்த தொடரில் தொடர்ந்து வந்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்த அத்தனை பேரின் பாதம் தொட்டு  , இதில் ஏதேனும் குறை இருந்தால் அதை பொறுத்து கொள்ள வேண்டி வணங்குகிறேன் நன்றி   

                       

                        "ஓம் நமோ நாராயணாய"  "ஓம் நமோ நாராயணாய"   

அன்பன்
ARR
     

Monday, 30 May 2011

திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - 4


           நினைவு வந்து பார்த்த போது நாகலாபுரம் கோவில் எதிரே  உள்ள  நாங்கள் தங்க வேண்டிய மண்டபத்தில் இருந்தேன் சுற்றி என் நண்பன் ஐயப்பன் , பிரேம்குமார் சார் , திரு.ரமேஷ் எல்லோரும் இருந்தார்கள்,நினைவிழந்த என்னை திரு பிரேம்குமார் அமைப்பாளர்களின் வேனில் அழைத்து வந்திருக்கிறார் . எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது , அப்போது ஐயப்பன் வேண்டாம் ராஜகோபால் நீ நடக்கவேண்டாம், எங்க கூட வேன்லேயே வந்திடு என்றார், என் யாத்ரீக நண்பர்களும் அதையே ஆமோதிக்க சங்கடத்தில் நான், சரி காலையிலே பாத்துக்கலாம் என்றபடியே நான் தூங்கிபோனேன்.

           மறுநாள்  விடிகாலையிலேயே முழிப்புவந்துவிட்டது,உடனே என் இரு நண்பர்களையும் எழுப்பினேன் , சார் போலாமா ? என்ற என்னை இருவரும் ஆச்சர்யமாக பார்த்தார்கள் , உங்களால் நடக்க முடியுமா என்று கேட்ட அவர்களிடம் ,முடியும் வாங்க போகலாம் என்றழைத்தேன், இருவரும் என்னுடன் கிளம்ப வெளியே வந்த நான் கோவில் கோபுரத்தை பார்த்து வணங்கி நடக்க தொடங்கினேன். நேற்று நடக்க தொடங்கியபோது இருந்த வலி கூட இப்போது இல்லை , அந்த உள்ளங்கால் கட்டிகளை தவிர்க்காமல் அவைகளை பதிய வைத்தே நடந்தேன், ஏதோ பலுன்  மீது நடப்பதை  போன்ற உணர்வு, அன்று என்னுளே ஏதோ ஒரு புத்துணர்ச்சி வந்ததை போன்ற உணர்வு வெகு வேகமாய் நடந்து ராமகிரியை அடைந்தோம் , அங்குதான் காலை உணவு.

         
             ராமகிரியை பற்றி என் நண்பன் ஐயப்பன் சொல்லி நான் கேட்டது 

                       இராம பிரானின் கட்டளைப்படி சேதுவில் பிரதிஷ்டை செய்ய ஆஞ்சநேயர் வடக்கிருந்து சிவலிங்கத்தை கொண்டு வரும்போது, அதைத் தன்னிடத்தில் இருத்திக் கொள்ள பைரவர் எண்ணி அதற்கோர் வழியை மேற்கொண்டார். அதன்படி ஆஞ்சநேயருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. சிவலிங்கத்தைத் தரையில் வைக்கக் கூடாதென்று எண்ணி, சிறுவனாக அங்கு வந்த பைரவரிடம் தந்துவிட்டு நீர்ப் பருகச் சென்றார். அவர் குளத்தில் இறங்கி நீர் பருகி வருவதற்குள், பளுவாக உள்ளதென்று சொல்லிச் சிறுவன் பூமியில் வைத்துவிட்டான். கோபமுற்ற ஆஞ்சநேயர் அச்சிவலிங்கத்தைத் தன் வாலால் சுற்றிப் பலமாக இழுத்தார் - பயனில்லை. சிவலிங்கம் சற்று சாய்ந்ததே தவிர அதைப் பெயர்த் தெடுக்கமுடியவில்லை.ஆதலின் சிவனும் இங்கேயேபிரதிஷ்டையானார்.வாலால்சுற்றியிழுக்கப்பட்டமையால் சுவாமி - வாலீஸ்வரர் என்னும் பெயர் பெற்றார். ஆஞ்சநேயர் கோபத்தில் வீசிய மலையே இதற்கு முன்பு இங்கிருந்த 'காளிங்கமடு' என்னும் நீர் நிலையில் விழுந்து, அதனால் நீர் நிலையழிந்து மலையேற்பட்டது.இராமரின் பூசைக்காக எடுத்து வரப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டையானதால் "ராம்" என்பதும்; நீர் நிலை மறைந்து மலை ஏற்பட்டதால் "கிரி" என்பதும் சேர்ந்து இப்பகுதி பிற்காலத்தில் "ராமகிரி" என்று வழங்கலாயிற்று.

                       மூலவர் - வாலீஸ்வரர்; சுயம்பு மூர்த்தி; சற்று சாய்ந்த நிலையில் உள்ளார். வாலால் சுற்றியிழுத்த தழும்புகள் திருமேனியில் உள்ளன. இங்குள்ள நந்தியின் வாயிலிருந்து இடையறாது நீர் கொட்டிக் கொண்டேயுள்ளது. இந்நீர் (தீர்த்தக்) குளத்தில் நிரம்பி 'காரியாறு' என்றும் பெயருடன் ஓடுகிறது.



       அந்த நந்தி தீர்த்ததிலேயே குளித்து நல்ல மனதிற்கு நிறைந்த தரிசனம் முடிந்து, உணவால் வயிறை நிரப்பி மீண்டும் முன்னிலும்  வேகமாய் நடக்க தொடங்கினேன், அந்த ஆண்டவன் அருளால்.மதியம் சாப்பாடு கோனே என்ற இடத்தில் அங்குதான் புகழ்பெற்ற கோனே பால்ஸ் உள்ளது , மதியம் உணவை முடித்து நாங்கள் மாலையில் சென்ற இடம் நாராயணவனம்.

        
       இங்குதான் தாமரை மத்தில் பத்மாவதி தாயாரை ஆகாசராஜன் கண்டெடுத்ததும் ,  பிருகு மகரிஷி, மகாவிஷ்ணுவின் மார்பில் உதைக்கச் சென்றதால் கோபம் கொண்ட மகாலட்சுமி பூலோகம் வந்தாள். அவளைத்தேடி சீனிவாசனாக வந்த பெருமாள், தனது பக்தையான வகுளாதேவியின் மகனாக வளர்ந்தார். ஒருசமயம் அவர் வேட்டைக்குச் சென்றபோது, ஆகாசராஜன் அரண்மனையில் பத்மாவதியைச் சந்தித்து திருமணம் செய்ய முடிவெடுத்தார். அவர்களது திருமணம், நாராயணவனத்தில் நடந்தது. அற்புதமான கோவில் மனதை அப்படியே ஆட்கொள்ளும், இங்கு ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கும் , பத்மாவதி தாயாருக்கும் திருமணம் ஆனபோது உபயோகப்படுத்திய மஞ்சள் அரைக்கும் எந்திரத்தை இன்னும் வைத்திருக்கிறார்கள். மாலையில் மனம் நிறைந்த தரிசனம் முடித்து நாங்கள் சென்ற இடம் புத்தூர், இங்குதான் இரவு தங்கினோம் , இந்த நாள் எனக்கு எப்பபடி போனதென்றே தெரியாமல் என்னை ஆண்டவன் அழைத்து வந்த நாள், இன்னும் சொல்வேதேன்றால் என் பிராத்தனையை , என் கண்ணீரை அவன் ஏற்று கொண்ட நாளாகவே கருதினேன், மனதில் அப்படி ஒரு திருப்தி.

     இரவு புத்தூரில் நல்ல உணவு தந்தார்கள், சாப்பிட்டுவிட்டு படுக்க எத்தனிக்கையில் என் மனைவியிடம் இருந்து மறுபடியும் போன், என்னை அறியாமல் என் கைகள் நடுங்க தொடங்க 
                   கோபாலா கோவிந்தா 
என்றபடியே போனை எடுக்கபோனேன் .............................        

Saturday, 28 May 2011

திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - 3

          முக்கிய செய்தி : என் மகள் இப்போது என் அன்னையின் ஆசியாலும் ஆண்டவனின் அருளாலும் பூரண நலத்துடன் இருக்கிறாள்.தன் கருத்தை பதியும் போது இந்த செய்தியை பதிவிடச் சொன்ன GMB அய்யாவுக்கு நன்றி 

        மறுநாள் விடிகாலையிலேயே எழுந்தோம், காலையில் நடந்தால் களைப்பு தெரியாது என்ற அனுபவ வாக்கை தொடர்ந்து நடக்க தொடங்கினோம், நாங்கள் மூவரும் ஒரு குழுவாக ஆகி பேசி புரிந்து ஒருவர்மேல் ஒருவர் ஈடுபாடு கொண்டு அந்த ஆண்டவன்  பெயரால் ஒன்றானோம், அந்த மூவரில் நான்தான் கொஞ்சம்  தடிமனான உருவம் அப்போது என் எடை என்பது கிலோ இருந்தது, தொடைகள் ஒன்றோடொண்டு உரசி அதன் பாதிப்பும் என் நடையை தடை செய்தது, இருந்தாலும் தேங்காய் எண்ணெய் காலுக்கு கை கொடுக்க, கோவிந்த கோஷம் பாடி , பரந்தாமனின் பக்தியில் சகலமும் மறந்து காலை ஏழு மணியளவில் சூளைமேனி செங்காலம்மன் கோவில் வந்தடைதோம் , ஜிலு சிலுவென வீசும் தென்றல் காற்றில், பச்சை பசேலன இருக்கும் தோட்டங்களுக்கு நடுவே சாந்தமாய் அருள் தரும் வனதேவதை அவள், வரும் வழியிலேயே பம்ப்செட்டு குளியல் போட்டுவிட்டதால் அன்னையை மனம் உருகி வேண்டினேன், அங்குதான் காலை டிபன், திருப்பதியான உணவிற்குப்பின் மனமும் , காலும் வேண்ட அங்கேயே ஒரு மணிநேரம் ஓய்வு.

             ஓய்விற்கு பின் நடை யாத்திரை தொடங்கினேன்  என் இரு யாத்திரை நண்பர்களுடன், நடக்கும் நடையில் கால்கள் வலிக்க , பாண்டுரங்கனின் அருள்நாடி கோஷங்கள் ஒலிக்க மதியம் பனிரெண்டுமணிளவில் ஊத்துக்கோட்டை அடைந்தோம், அங்குதான் மதிய உணவு அற்புதமான உணவு,  இந்த போஜனம் எங்களுடன் யாத்திரை வரும் WS கம்பனி ஊழியர்களின்  கைகர்யம், அத்துணை தூரம் எங்களோடு நடந்து வந்து எங்களுக்கே அவர்கள் ஓடி யாடி பரிமாறிய பக்தியின் பரிமாணம் சொல்லில் அடங்காது.அங்கிருந்து மீண்டும் சிறு ஓய்வுக்கு பின் யாத்திரை தொடங்கியது 
அங்கிருந்து நாங்கள் சென்றஇடம் ஆந்திராவின் எல்லை பகுதியான சுருட்டப்பள்ளி 
                    
  எனக்கு இந்த தலத்தை பற்றிய வரலாறு அப்போது புதிதாக இருந்தது , பலருக்கு தெரிந்திருக்கலாம் , என்னை போல் அறியாதவர்களுக்காக ஒரு சிறு குறிப்பு 





வரலாறு : துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் இந்திரன். அசுரர்கள் அவனது ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு பிரகஸ்பதி கூறினார்.


திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர்.வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவனை வேண்டினர்.சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வர கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி சிவனிடம் தந்தார். அப்போது முப்பத்துமுக்கோடி தேவர்களும்,""சிவபெருமானே! இந்த விஷத்தை வெளியில் வீசினாலும், தாங்களே உண்டாலும் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான் சூழ்நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள்''என மன்றாரடினார்.உடனே சிவன் "விஷாபகரண மூர்த்தி'யாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த லோகமாதா பார்வதி, சிவனை தன் மடியில் கிடத்தி அவரது  வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கண்டத்தில் கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது. அவர் "நீலகண்டன்' ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் "அமுதாம்பிகை' ஆனாள். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படி செல்லும் வழியில் இத்தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணத்திலும், ஸ்கந்த புராணத்திலும் கூறப்படுகிறது.பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்தார். இந்த அருட்காட்சியை சுருட்டப்பள்ளியில் பார்க்கலாம். 

பொது தகவல் : தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.பிரதோஷ பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான்
அன்னையின் மடியில் அய்யன் படுத்துறங்கும் அழகை காண கண் கோடி வேண்டும் அப்படி ஒரு அற்புத காட்சி, அந்த அதிசய மகோன்னத தரிசனத்தை முடித்து விட்டு நாங்கள் செல்லவேண்டிய இடம் வேதநாராயண பெருமாள் ஆட்சி செலுத்தும் நாகலாபுரம் இரவு தங்கலும் அங்கேதான்.

     
மாலை காபி குடித்து விட்டு நடக்க தொடங்கிய எனக்கு கால் வலி தாங்க முடியவில்லை இப்போது இரு உள்ளங்காலிலும் கொப்பளங்கள், அவை என் பாதங்களை பதியவிடமுடியாதபடி செய்துவிட்டதால் குதிகாலாலேயே நடக்கவேண்டிய நிர்பந்தம்,கால்களிலும் வீக்கம், உடல் மிக சோர்வடைந்து விட்டதால் அந்த ஆண்டவனின் துணைகொண்டு நடந்து கொண்டு இருந்தேன், அப்போது என் மனையாளிடமிருந்து போன், "என்னங்க எங்க இருக்கீங்க மத்தியானத்திலிருந்து உங்களுக்கு டிரை பண்ணுறேன் கிடைக்கவேயில்லை" என்றாள், சிக்னல் இருந்திருக்காது என்ன விஷயம் என்றேன் என் வலியை காட்டாமல், "பாப்பா வெயிட் குறைஞ்சிகிட்டே போறா,காலையிலிருந்து அம்பது கிராம் குறைஞ்சிட்டா என்ன பண்ணுறதுன்னே தெரியல என அழத்தொடங்கினாள், என்னில் பீறிட்ட அதிர்ச்சியை காட்டாமல் அம்பது கிராம் தானே பரவால்ல சரியாயிடும் நீ ஒண்ணும் கவலைபடாதே என்று கூறி அவளின் என்னை பற்றிய கவலைகளுக்கும் பதில் சொல்லி போனை வைத்தேன்.

 எனக்கு கண் இரண்டும் அப்படியே  இருண்டுகொண்டு வருவதைபோல ஒரு உணர்வு, அம்பது கிராம் என்றால் குறைவாகத்தெரியும் ஆனால் 850 கிராம் உள்ள  குழந்தை ஐம்பது கிராம் குறைகிறாள் என்றாள் , ஆண்டவா என்ன செய்ய போகிறாய் என்னை?, சொல்லி அழக்கூட யாருமில்லையே, கண்களில் கண்ணீர், பாசம் என்னை கோழை ஆக்கிய கணம் அது, என் அன்னை சொல்வது போல பாசம் உள்ளவர்கள் அனைவருமே கோழைகள்தான், பாசத்தின் முதல் படியே தைரியம் இழப்பதுதான்.அப்போதுவரை என் மகளை தொட்டது கூட கிடையாது நான். செப்டெம்பர் மாதம் பிறந்தவளை நான் தொட்டு தூக்கியது நவம்பர் இரண்டாம் தேதிதான்,  நானும் என்னுடன் திரு.பிரேம்குமாரும் நடந்து கொண்டிருக்கிறோம், அவரின் தோளை ஆதரவாய்பற்றியே நடக்கிறேன்,துக்கம் தொண்டையை கடந்து வாய்விட்டு அழுகிறேன், உடலும் மனமும் ஒருசேர சோர்வடைய 

         பரந்தாமா! பக்தவட்சலா!
                பாண்டுரங்கா! பாபவிமோசனா!
                     ஸ்ரீதரா! ஸ்ரீனிவாசா!!
                           கோபாலா! கோவிந்தா! 
            அழுதபடியே அவன் நாமம் சொல்லிய நான், மெல்ல நினைவிழக்க தொடங்கினேன் .................                               
                        
அன்பன் 
ARR

Friday, 27 May 2011

திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - 2

இந்த பாத யாத்திரையை தொடங்கும் முன் இந்த பாதயாத்திரை குழுவினரைப்பற்றி சொல்கிறேன் ,இந்த சமாஜத்தின் பெயர் ராமானுஜ பக்த சபா, இதுவரை தொடர்ந்து 29 ஆண்டுகள் பாத யாத்திரை சென்று கொண்டு இருக்கிறார்கள் , இதன் முக்கிய அமைப்பாளர்கள் 
 1. திரு .ராமசந்திரன்
 2. திரு .நாராயணன் 
 3. திரு .சந்திரசேகர் (எ) ஐயப்பன் 

 முப்பது பேருடன் தொடங்கிய இந்த பாத யாத்திரை இப்போது சுமார் ஐநூறு யாத்திரிகர்களுடன் தொடர்கிறது.இந்த யாத்திரையின் போது அவர்கள் பாதயாத்திரை செல்லுபவர்களை பார்த்துகொள்ளும் முறை மிக அலாதியானது , ஒரு வேனில் இங்கும் அங்குமாக அமைப்பாளர்கள் நகர்ந்து கொண்டே இருப்பார்கள் , முதலில் வருபவரிலிருந்து கடைசி யாத்திரிகரை பார்க்கும் வரை அந்த நகருதல் இருக்கும் , அந்த வேனில் மோர், தண்ணீர், பழச்சாறுகள், பிஸ்கட்டுகள்  இருந்து கொண்டே இருக்கும் , வேண்டியவர்கள் வேண்டியதை நிறுத்தி பெற்றுகொள்ளலாம், மூன்று வேளையும்  அறுசுவை உணவு , மாலையில் டி அல்லது காபி   இரவில் தங்குவதற்கான மண்டபங்கள் அனைத்தும் அற்புதமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும், இவை அனைத்திற்கும்  அவர்கள் வாங்கும் தொகை ரூ.400 மட்டுமே, பல கைங்கர்யங்கள் மூலமாக இது இவர்களுக்கு சாத்தியப்படுகிறது.இது மட்டும் இல்லாமல் பாதயாத்திரைக்கு தேவையான அத்தனை பொருட்களையும் (தோளில்  மாட்டிக்கொள்ளும் படியான ஒரு துணிப்பை,வேங்கடவனின் உருவம் தாங்கிய படம் ,ஒரு மஞ்சள் வேஷ்டி,பெரிய ஏழடி உயரமான தடிமனான பாலித்தீன் கவர்,எங்கெங்கு தங்குகிறோம், உணவு வழங்கும் இடம் , நேரம் போன்றவை அச்சடிக்க பட்ட ஒரு விளக்க காகிதம் )பாதயாத்திரை துவங்குவதற்கு முதல் நாள் சகஸ்ரநாம பூஜை செய்து அதிலும் நம்மை பங்கேற்க வைத்து , பின் நம்மிடம் அளிப்பார்கள்  அதை கையில் வாங்கிய உடனேயே நம்மில் ஒரு உன்னத உணர்வா இல்லை சக்தியா என்று தெரியாத வகையில் ஒன்று உள்செல்லும்.காலையில் பூஜையை தொடர்ந்து புறப்படும் யாத்திரை வேங்கடவனின் புகழ் பாடி செல்லும், பெரம்பூரை சுற்றி வந்து பின் அவரவர் தன் வழியே புறப்படுவர்.

      காலையில் உணவு பொன்னியம்மன்மேட்டில் உள்ள லக்ஷ்மிநரசிம்மர் கோவிலில் ,மனதிற்கு  நிறைவாய் நரசிம்மனை தரிசித்துவிட்டு வந்து அங்கேயே உணவை வாங்கி அருந்தி பின் யாத்திரை தொடங்கும். 

    அங்கிருந்து தொடங்கும் யாத்திரை மதியம் பனிரெண்டு மணியளவில் காரனோடையில் முடியும் அங்கு தான் மதிய உணவு , அற்புதமான சாப்பாடு மனம் நிறையும்  அளவுக்கு அன்பாய் பரிமாறுவார்கள், பின் அங்கேயே சிறிது  நேரம் ஓய்வு ,பின் நடக்க தொடங்கினேன், இது என் முதல் முறை பயணம் என்பதால் கூட யாரும் இல்லை தனியாளாக போவது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது, கால் மெல்ல வலிக்க தொடங்கியது, காலையிலிருந்து 22 கிலோமீட்டர் நடந்திருக்கிறேன் எனக்கே ஆச்சர்யம் இன்னும் 18 கிலோமீட்டர் நடக்கவேண்டும், நடந்து கொண்டிருக்கிறேன் அப்போது என்னிடம் தண்ணீர் கேட்டபடியே இருவர் அறிமுகம் ஆனார்கள் ஒருவர் திரு. ரமேஷ் உதவி பேராசிரியர் கால்நடை மருத்துவ கல்லூரி, இன்னொருவர் திரு .பிரேம்குமார் துணை ஆணையர் கலால் வரி, மூன்று பேருக்கும் பண்பலை ஒத்துபோக ஒன்றாகவே நடக்க தொடங்கினோம் , இவர்களின் நட்பு எனக்கு சற்று உறுதியை தந்தது. 

பழக்கமில்லாமல் நடப்பதால் காலில் வலி தாங்க முடியவில்லை , என்னுடன் வந்தவர்கள் முன்பே இதற்காக தினமும் இரண்டு கிலோமீட்டர் நடை பயிற்சியை மேற்கொண்டதால் அவர்களால் சமாளிக்க முடிந்தது, கோவிந்தனின் பெயரைசொல்லி தொண்டர்ந்தேன் பயணத்தை, ஒரு மணிநேரத்திற்கு நான்கு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்பது எங்களின் திட்டம், நான்கு கிலோமீட்டர் நடந்தவுடன் பத்து நிமிட ஓய்வு இதன் படி நடக்க தொடங்கினோம். இரண்டு கிலோமீட்டர் நடந்த உடனேயே கால் வலியால் ஓய்வுக்காக கெஞ்ச தொடங்கும் , அப்போது எங்களில் ஒருவரோ இல்லை எங்களை கடந்து செல்பவரோ சத்தமாக "கோபாலா .... கோவிந்தா....
வெங்கட்ரமணா ........ வைகுண்தாவாசா" என சொல்லி செல்லும் போது எங்கிருந்தோ வரும் வேகம் என்னை உந்தித்தள்ளும் இப்படியே இரவு ஏழு மணிக்கு பெரியபாளையம்  அடைத்தோம், இங்குதான் இரவு தங்கல்.

     இரவு உணவருந்திவிட்டு காலில் மஞ்சளும் தேங்காய் எண்ணையையும்  கலந்து போட்டுகொள்ளும்மாறு அனுபவஸ்த்தர்கள் சொல்ல அதன் படியே போட்டுக்கொண்டேன் அப்போதுதான் என் கையில் பட்டது என் வலது  உள்ளங்காலில் ஒரு ருபாய் நாணய அளவுக்கு ஒரு கட்டி, அது தெரியாமலேயே நடந்து வந்திருக்கிறேன். பக்கத்தில் திரும்பி பார்கிறேன் ஒருவர் இன்னொருவருக்கு கால் அமுக்கி கொண்டிருக்கிறார், இருவருமே அம்பது வயதை கடந்தவர்கள் , ஆனால் முன் பின் அறியாதவர்கள் இந்த யாத்திரையில் பெற்ற அறிமுகம் தான் ஆயினும் இந்த பாத சேவை, , இதில் இன்னொரு சுவாரஸ்யமான செய்தி காலை அமுக்கியவர் SAIL கம்பனியில் பொது மேலாளர், அமுக்கபட்டவர் அகரத்தில் நடைபாதையில் உணவகம் நடத்திவருபவர், என்னே அந்த ஆண்டவனின் விளையாட்டு, அவன் பெயரால் மக்கள் ஒருநிலையாவது என்ன ஒரு அற்புதம் அப்படியே பக்தியின் பலம் அறிந்து நெகிழ்து போனேன்.கண்களில் என்னை அறியாமலேயே கண்ணீர் , என் வலி மறந்து அவர் மறுத்தும் அவர் காலை நான் பிடித்து விட  தொடங்கினேன் , இப்படி ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் சேவையாலேயே ஆண்டவனின் பக்தியை அனுபவித்த முதல் நாள் அது ..........................                                

Thursday, 26 May 2011

திருமலை பாதயாத்திரை காரணமும் அனுபவமும் - 1

  

                              கடந்த 2003 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் தேதி இரவு எட்டு மணி பத்து நிமிடத்திற்கு சதய நட்சத்திரத்தில் என் மனைவியின் வயிற்றில் ஏழு மாதமும் இரண்டு நாட்கள்  மட்டுமே இருந்த என் மகள் கமலாத்மிகா பிறந்தாள்.


பிறந்த போது எடை தொள்ளாயிரம் கிராம் உயரம் 37 செமீ. எனக்கு மகள் பிறந்தாள் என்ற மகிழ்ச்சியை கொண்டாட முடியாத தினமாக அது அமைந்தது. குழந்தை பிறந்தவுடன் மனைவியையும் குழந்தையும் ஒருங்கே காணுபவர்கள் மத்தியில் மனைவியை தனியாகவும் என் குழந்தையை நானடோலோஜி வார்டிலும் பார்த்தேன். என்னதான் கஷ்டமாக இருந்தாலும் நான் பெற்ற குழந்தையை பார்த்த போது நான் பெற்ற இன்பம் சொல்லி விளங்காது.

   குழந்தை பிறந்து இரண்டு வாரத்தில்  டாக்டர் என்னையும் என் மனைவியையும் கூப்பிட அவர் அறைக்கு சென்றோம்,இனி டாக்டர் "கொஞ்சம் கிரிடிகலாதான் இருக்கு பாக்கலாம் பேபி வெயிட் குறையாம இருக்கணும் அது ரொம்ப முக்கியம் இதுமாதிரி ஆயிரத்தில் ஒரு குழந்தைதான் வெயிட் கெயின் பண்ணும் பாக்கலாம் என்றார்", எனக்கு பூமி அப்படியே பிளந்து என்னை உள்ளிழுப்பது மாதிரி ஆனது, மனைவிநிலை சொல்லவே வேண்டாம், அறையில் இருந்து வெளியே வந்த என்னை எதிர்கொண்ட என் அம்மா, டாக்டர் என்னப்பா சொன்னார் என்றபோது பீறிட்டு கிளம்பிய அழுகையை  அடக்கிய படியே ஒண்ணும் இல்லமா, குழந்தை ஆரோக்கியமாதான் இருக்காம் என்றேன். ரொம்ப சந்தோசம் நான் கும்புடுற ஏழுமலையான் என்னை கைவிடமாட்டான் , முகம் டல்லா வந்தியா அதான் கொஞ்சம் பயந்துட்டேன் என்ற அம்மாவின் பார்வை தவிர்த்து மனைவியின் முகம் நோக்கினேன்.

    (இது என் மகளின் புகைப்படம் இல்லை மாதிரிக்காக )  


              அடுத்த இரண்டு நாட்களில் என் மகளின் எடை 70 கிராம் குறைந்து போனது, நிலையில்லாமல் நானும் என் மனைவியும், அப்போது என் அம்மாவின் வார்த்தைகளும்    என் அலுவலக நண்பன் திரு.ஐயப்பன் என்னிடம்  ரொம்ப நாளாக சொல்லிவந்த திருமலை பாத யாத்திரை என் நினைவிற்கு வந்தது(சென்னை பெரம்பூரிலிருந்து திருமலை வரை)  அவருக்கு போன் செய்த நான் அய்யப்பா இந்த வருஷம் எந்த தேதி பாத யாத்திரை போறீங்க என்றேன் உடனே அவர் இந்த மாதம் 26 ஆம் தேதி நாளை மறுநாள் கிளம்புறோம் என்றார், அப்படியா நானும் வரேன் இந்த முறை என்றேன், ரொம்ப சந்தோசம் ராஜகோபால் நான் உங்க பேரை பதிவு பண்ணிடுறேன் என்றார்.

என் மனைவியிடம் நான் போகப்போகும் பாத யாத்திரையை பற்றி சொன்னேன், ஏங்க இதெல்லாம் உங்க உடம்புக்கு ஆகுமா, வேண்டாம் என்றாள் இல்லை நான் போகப்போறேன் என்றேன், என் அம்மாவிடம் சொன்னேன் இப்படி உடம்ப வருத்திகிறதேல்லாம் வேண்டாம்பா, சின்ன வயசுலேயே நீ இங்க பத்து வீடு தள்ளி இருக்குற கடைக்கு போனால் கூட லூனாவை எடுத்துட்டுதான் போவ உன்னாலஎல்லாம் அவ்வளவு தூரம் போக முடியுமா யோசிச்சு பண்ணுடா என்றார். எது எப்படி இருந்தாலும் பாத யாத்திரை செல்வது என முடிவேடுத்துவிட்டேன்.மறுநாள் காலை ஐந்து மணிக்கு பெரம்பூர் BB ரோட்டில்\உள்ளவெங்கடேசபெருமாள் கோவிலில் இருந்து தொடங்கியது பாத யாத்திரை...............................  

        
        
    (இதுவும் மாதிரிப்படமே ) 

                    இந்த நான்கு நாட்கள் பாத யாத்திரையில் ஆண்டவனை ,மிக  அருகில் உணர்ந்த அனுபவத்தை, வரும் பதிவுகளில் சொல்கிறேன் 

அன்பன் 
ARR 

Tuesday, 24 May 2011

சமச்சீர் கல்வியும் சில சந்தேகங்களும்

இன்று எல்லோராலும் உச்சரிக்க படுகின்ற ஒரு வார்த்தை சமச்சீர் கல்வி




        சமச்சீர் கல்விக்கு தமிழக அமைச்சரவை தடை ,சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்க தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, இந்தக் கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பழைய பாடப் புத்தகங்களே பயன்படுத்தப்பட உள்ளன. பாடப் புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில், பள்ளிகளை ஜூன் 15-ம் தேதி திறக்கலாம் என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதை பற்றி பேசுவதற்கு முன் நாம் சமச்சீர் கல்வி என்றால் என்னவென்று பார்ப்போம்.

சமச்சீர் கல்வி முறை

சமச்சீர் கல்வி முறையானது, இதுவரை மாநில அளவில் இருந்துவரும் நான்கு தொடக்கக்கல்வி அமைப்புகளை ஒன்றாக்குகிறது. மாநில அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்ற நான்கு அமைப்புகளையும் ஒன்றாக்கி மாநில அரசின்கீழ் செயல்படும் அமைப்பாக்குவது தான் சமச்சீர் கல்வி முறையின் திட்டம்.

                   இது சென்ற ஆண்டு முதல் தவணையாக ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டது , இந்த ஆண்டு அது பத்தாம் வகுப்பு வரை செயல்பாட்டுக்கு வருவதாக சொல்லி அதற்கான ஆயத்த வேலைகளையும் தொடங்கிவிட்டது சென்ற அரசு.இதுவரை இந்தப் பாடத்திட்டத்திற்காக  ரூ.200 கோடி செலவில் 6.5 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த பாடத்திட்டங்கள்  சமச்சீர் கல்விக்காக கொண்டுவரப்பட்ட பொதுப்பாடத்திட்டம் வல்லுநர் குழுவால் உருவாக்கப்பட்டது. வல்லுநர் குழு, ஆசிரியர் குழு, மறு ஆய்வுக் குழு ஆகிய மூன்றுக் குழுக்களால் பாடநூல்கள் எழுதப்பட்டன.

                          ஆனால் உண்மையில் இப்போது அறிமுகப்படுத்தப்பட இருந்தது பொதுப்பாடத்திட்டம் மட்டுமே. சமச்சீர் கல்வி அல்ல. பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே சமச்சீர் கல்வி அளிக்க முடியும்.



சந்தேகங்கள்
 •  சமசீர் கல்வி முறை உண்மையிலேயே தரம் இன்றி இருப்பதால்தான் தடை செய்யப்பட்டதா , இல்லை அதில் உள்ள முன்னாள் முதல்வர் எழுதிய செம்மொழி பாடலால் நிறுத்தப்பட்டதா ?
 • உண்மையான  காரணம் எழுத்து, கருத்துப் பிழைகள்தான் எனில், அதில் உள்ள குறைகளை, எழுத்து, கருத்துப் பிழைகள் இருக்குமானால் சுற்றறிக்கைகள் மூலம் அதை நீக்கலாம், அதற்காக பாடத்திட்டத்தையே மாற்றுவது மாணவர்களைப் பாதிக்காதா ?
 • இந்த சமச்சீர்பாடத்திட்டம் அமலில் இருக்கும்போதே, கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக அரசு வல்லுநர் குழு நியமித்து ஆராயமுடியாதா?
 • பாடப் புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில், பள்ளிகளை ஜூன் 15-ம் தேதி திறக்கலாம் என்பது சரி, ஆனால் இந்த இடைப்பட்ட நாட்களில் , நிலவும் மின்தடையில் எல்லா வகுப்பிற்கான பாட புத்தகங்களை அச்சிடமுடியுமா , முடிந்தாலும் அது பிழை இன்றி இருக்குமா ?
 • இந்தப் பாடத்திட்டத்திற்காக ரூ.200 கோடி செலவில் அச்சிடப்பட்டுள்ள 6.5 கோடி புத்தகங்கள் என்னவாகும் ?
 • இந்த மறு பதிப்பிற்கான செலவு மற்றும் கால விரயத்திற்கு யார் பொறுப்பாவது? 
 • சட்டசபையை பழைய ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றும் செயல் பெரிய பாதிப்பை உருவாக்க போவதில்லை , ஆனால் மாணவர்களின் எதிர்காலத்தை  நிர்ணயிக்கும் கல்வியில் இது போன்ற அதிரடி அவசர முடிவுகள் தேவையா ?
 • சென்ற அரசு தவறு செய்வதாக சொல்லி மீண்டும் இவர்கள் தவறான செயலை செய்வது போல் ஆகிவிடாதா ?
 • இதற்கு  இதை தவிர வேறு நல்ல தீர்வே கிடையாதா 
அன்பன்
ARR

Sunday, 22 May 2011

நெடுந்தொடர் என்னும் கொடுந்தொடர்கள்

        இப்போதெல்லாம் எல்லா சேனல்களிலும் நெடுந்தொடர் என்பது மிக முக்கியமான ஒன்றாகி போய்விட்டது , அதை யாரும் குறை சொல்லவில்லை, ஆனால் அதற்கு அவர்கள் எடுத்துகொள்ளும் கதை கருவும் அதை அவர்கள் (திரைக்கதை)கொண்டுசெல்லும் விதமும்தான் என்னை கொதிப்படைய செய்கிறது. இன்று தொடர்ந்துவரும் எல்லா தொடர்களிலுமே உள்ள முக்கிய கரு



 1. அடுத்தவள் கணவன் மேல் ஆசைப்படுவது 
 2. பில்லி சூன்யம் 
 3. இரண்டு பொண்டாட்டி கட்டிக்கொண்டவன் 

   மேற்கண்ட இவை  இல்லாத தொடர்களை நாம் பார்ப்பது என்பது மிக அரிது. இது போன்ற தொடர்கள் டி ஆர் பி ரேட்டிங்கில் உயரே வருவதால் இது மாதிரியான தொடர்களே அதிகம் வருகின்றது , ஆனால் இதை பார்க்கும் இளம் தலைமுறையினர் இதெல்லாம் சரிதான் என்று நினைத்து விட மாட்டார்களா , அவர்களும் அதே மாதிரி செயல்களில் ஈடுபட்டால் நம் கலாச்சாரம் என்ன ஆவது. அதிலும் அதிகம் அதில் வரும் வசனங்கள்

 • எனக்கு நீதான் வேணும் மாமா உன்னை எப்படியும் அடைஞ்சே தீருவேன்
 • உன் புருஷனை எனதாக்கி காட்டுறேண்டி 
 • இது ஆண்டவனுக்கும்  மீறின செயல்  
  இப்படியான வசனங்கள் இளந்தலைமுறையினரிடம்   மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்பதை ஏன் இந்த தொடர் தயாரிப்பாளர்கள் உணருவதேயில்லை. அதையும் விட கொடுமை இதையெல்லாம் நாம்  குழந்தைகளுடம் பார்ப்பது .

அடுத்து குழந்தைகளுக்கான கார்டூன் சேனல்கள் , 


இதில் வருபவை அருவருப்பின் உச்சம். சின்ன குழந்தைகளே காதலையும்,டேட்டிங்கை பற்றியும் பேசுவதை என்னவென்று சொல்லுவது, நம் நாட்டிற்கே சம்பந்தம் இல்லாத எதாவது ஒரு நாட்டின் கார்டூனை தமிழ்படுத்துவதால் வரும் வினை இது, கோடி கோடியாய் பணம் சம்பாதிப்பவர்கள் குழந்தைகளுக்காக இந்திய கலாச்சாரம் சார்ந்த ஒரு தொடரை தயாரிக்க முடியாதா?.  இல்லாவிட்டால் அடிதடி இப்படியான தொடர்களை பார்த்து வளரும் குழந்தைகளின் மனநிலையும் எதிர்காலமும்   எப்படி இருக்கும். முன்பு போல நீதி கதைகளையும், போதனை கதைகளையும் சொல்ல இன்றைய தனி குடும்பங்களில் வழியே இல்லை. அப்படியே இருந்தாலும் பெரும்பாலான பாட்டிகள் தவமிருப்பது தொலைகாட்சி பெட்டிகளின் முன்னால்தான், இதில் விதிவிலக்கான தாத்தா பாட்டிகளும் உண்டு .இதனால் குழந்தைகளும் கண்ணும் கெட்டு  மனமும் கெட்டு போகின்றது. நாமும் குழந்தைகள் வால்தனம் பண்ணாமல் அமைதியாய் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் அவர்களை டி வி முன்னாள் அமரவைத்து  விடுகிறோம்.அதுவும் இல்லாமல் தொடர்ந்து டி வி பார்க்கும் குழந்தைகளுக்கு இருதய நோய் வர அதிக சாத்திய கூறுகள் இருப்பதாக விஞ்ஞானம் சொல்லுகிறது.  

          வீட்டிற்கே வில்லங்கத்தை அழைத்து வரும் இந்த நெடுந்தொடர்களுக்கும்,
கார்டூன் சேனல்களுக்கும் தீர்வு என்ன? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

அன்பன்
ARR  

Saturday, 21 May 2011

மன்னித்துவிடு மன்னவளே



வேதனையில் வெந்து 
வெதும்புகிறேன் ......
நான் செய்த தவறு 
இன்று என்னவளை 
பாதிக்க ............
கண்ணீர் இன்றி 
அழுகிறேன் 
மன்னியடி 
பாவி எனை 
என உன் கரம்
பற்றி குரல் உடைந்து 
தொழுகிறேன் 
ஆயினும் நீ 
என்னால் வந்த 
வலி தாங்கி முகத்தில் 
அன்பின் அற்புத 
ஒளி தாங்கி 
"இதில் மன்னிக்க 
ஏதுமில்லையே 
நான் யார் 
உங்களவள் இல்லையா?"
என பாசமாய் வினவுகிறாய்  
தீயாய் தகிக்கிறது 
என் மனம் 
தண்டிப்பதை விட 
அதை மன்னிப்பதும்
மறப்பதும் தான் 
பெரிய தண்டனை 
கோடாரியால் வெட்டியவனை 
பார்த்து , கவனம் 
கையில் பட்டுவிட போகிறது 
என்கிறாய், 
குழந்தையை போல 
நான் அழ 
தாயை போல 
தேற்றுகிறாய்
என்னுடைய 
குற்றஉணர்வு 
நெருப்பில் இட்ட புழுவாய் 
என்னை துடி துடிக்க  செய்ய 
அன்பே என்னை 
கோபமாய் அடிக்கவாவது 
செய்யேன் 
என நான் மன்றாட 
வேகமாய் 
என்னை இழுத்து
முத்தமிடுகிறாய்  
 இது  நான் பெற்ற
பாக்கியமா? 
இல்லை 
பொக்கிஷமா?

மன்னிக்கவேண்டி
உன்னவன் 
உன் 
உயிரானவன்  
    

  

Friday, 20 May 2011

மௌனம் கொடிது



வாக்கியத்தின் வார்த்தைகளிலுள்ள
எழுத்துக்களை கலைத்து போட்டது, போல் 
புரியாதிருக்கிறது உன் மௌனம் 

புறக்கணிக்கபடுதல் புதிது 
என்பதால் மட்டுமல்ல, புதிராய்
 புரியாதிருக்கிறது உன் மௌனம் 

சண்டையில்லை சச்சரவில்லை 
சந்தேகமில்லை சங்கோஜமில்லை, ஆயினும் 
புரியாதிருக்கிறது உன் மௌனம் 

நிறுத்தா பாவனை பேசும் உன் விழி கூட
விளக்கவில்லை ஒரு இம்மி, அதனால் 
புரியாதிருக்கிறது உன் மௌனம் 

நட்பாய் நகர்ந்த நம் உறவு 
நெருப்பாய் நெருடும் தகிப்பில் 
புரியாதிருக்கிறது உன் மௌனம் 

பேசாதிருத்தல் உன் அடையாளமே 
 இல்லை அந்த மாறுதலினாலேயே
புரியாதிருக்கிறது உன் மௌனம்

காதலை சொல்லுதல் பாவமா 
அதனால் வந்த கோபமா , இன்னும் கூட 
புரியாதிருக்கிறது உன் மௌனம்

சம்மதத்தின்  மொழியும் எதிர்ப்பின்  
வழியும் இது என்பதாலேயே 
புரியாதிருக்கிறது உன் மௌனம்  

சரி ............
என் குற்றத்தை 
கூறியாவது 
தூக்கிலிடு, 
என்னை ஏன் 
பிடிக்கவில்லை உனக்கு ???

அன்பன்
ARR






   


Wednesday, 18 May 2011

இனி..... கலைஞர் செய்ய வேண்டியது

                                         ஒருவர் தோற்று போனதனாலேயே அவரின் செயல்பாடுகள் அனைத்தும் தவறு, அவரை வெற்றி கொண்டவர் தவறே செய்யாதவர் என்ற கோணத்தில் நான் இதை  இங்கு எழுதவில்லை, அதுவும் இல்லாமல் கலைஞருக்கோ அவரின் தி மு கழகத்திற்கோ இது போன்ற தோல்விகள் ஒன்றும் புதிதல்ல , சாம்பலில் இருந்து மீண்டு வந்த பீனிக்ஸ் பறவை போல் பல முறை மீண்டு வந்திருக்கிறார் கருணாநிதி , ஆயினும் அவர் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு தோன்றுவதை உண்மையாய் இங்கே பதிவிடுகிறேன். 

     இனி கலைஞருக்கு .......


 •  நீங்கள் சொன்னபடியே மக்கள் உங்களுக்கு ஓய்வு அளித்திருக்கிறார்கள், தயவு செய்து ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் , நீங்கள் இந்த தள்ளாத வயதிலும் எங்களுக்கு உழைக்க நினைத்தாலும், எங்களுக்கு நீங்கள் இந்த வயதான காலத்திலும் பதவிக்கு ஆசைபடுவதாகவே தெரிகிறது. இந்த முடியாத வயதில் நீங்கள் எங்களுக்கு முடிந்ததை செய்தாலும் எங்களுக்கு எதுவுமே முடியாததை போலவே இருக்கிறது. 
 • போதும்  நீங்கள் தொண்டாற்றியது , உங்களின் சேவைகளின் சாட்சியாய் பல நல்ல திட்டங்களும் , கட்டடங்களும் உங்கள் பெயர் தாங்கி காலத்திற்கும் நிற்கும்
 • உங்களின் இடம் உங்களுக்கு பிறகு யாராலுமே நிரப்ப முடியாததாகவே இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை 
 • தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிற்கே பல முன்னோடி திட்டங்களையும் கொள்கைகளையும் வகுத்தவர் நீங்கள்தான் என்பதயும் யாரும் மறுப்பதற்கு இல்லை   
 • சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் கூறியது போல் தலைவன் எப்போதும் தலைவனாகவே இருக்க வேண்டும் நண்பனாய் , தகப்பனாய், கணவனாய் இருக்க கூடாது ஆனால் நீங்கள் இப்போது தலைவனாக  இல்லை , தகப்பனாய் , தாத்தாவாய், கணவனாய் மாறி விட்டீர்கள் அதுவாகவே தொடருங்கள்.
 • கட்சியின் நுரையீரலை அழித்த புல்லுருவிகளை அடையாளம் காணுங்கள் , களைஎடுங்கள்
 • கட்சியின் உண்மையான தொண்டனுக்கு மதிப்பும் பொறுப்பும் அளியுங்கள் 

 • பல காலமாய் பதவிகளில் அட்டை போல் ஒட்டியிருக்கும் பழம் பெருமை பேசும் ஊழல்வாதிகளை ஓரம்கட்டுங்கள்.நீங்கள் ஆட்சி அமைக்கும் போதெல்லாம் உங்களின் அமைச்சரவையை வெகு இலகுவாக யூகிக்கலாம் , ஆனால் அது ஜெயலலிதாவிடம் கிடையாது, அதிரடி அமைச்சரவைதான். 
 • இளைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள், கழகத்தில் புது ரத்தம் பாயட்டும் 
 • மக்களின் நியாயமான தேவைகளுக்கு போராடுங்கள், மத உணர்வாளர்களை புண்படுத்தி பேசுவதை நிறுத்துங்கள் 
 • இந்த ஆட்சியின் நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பை தாருங்கள் 
 • ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நியாயமான ஒத்துழைப்பை தந்து விசாரணை விரைவாய் நடந்திட உதவிடுங்கள்.என்ன மாதிரியான தீர்ப்பு வந்தாலும் கவலைபடாதீர்கள் , ஏனெனில் இதற்கு மக்கள் உங்களுக்கு தண்டனை வழங்கி விட்டார்கள், ஒரே தவறுக்கு இரண்டு முறை தண்டிக்கும் பழக்கம் நம் தமிழக மக்களுக்கு இல்லை.உதாரணம், நீங்கள் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும் , இரண்டாவது முறையாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும்.
 • கட்சியின் அடிமட்ட தொண்டனே கட்சியின் ஆணிவேர் , அவனை தவிர்த்தது மிகப்பெரிய தவறு, அவனை கட்சியின் சமீபமாக்குங்கள், இந்த முறை நான் அறிந்தே பல தீவிர தொண்டர்கள் கழகத்திற்கு வாக்களிக்கவில்லை.      

 •      கட்சியில் தொடரும் குழப்பங்களை நீக்க ஸ்டாலின் ஐ தலைவராக்குங்கள் , உங்கள் மகன் என்பதால் மட்டுமல்ல கடந்த காலங்களில் தலைமைக்கான தகுதிகளை நிரம்ப வளர்த்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.      

 • கட்சியில் ஆதரவு இருக்குமா என்று யோசிப்பதை தவிர்த்து மக்களிடம் ஆதரவு இருக்குமா என்று எண்ணுங்கள், உங்களுக்கு பின் அவரே சரியான தலைவர் கழகத்திற்கு.

 • இதனால் கட்சியில் குழப்பம், சச்சரவு வரலாம் எல்லாவற்றையும் விட்டு தள்ளுங்கள் இனி நீங்கள் இழக்க போவதற்கு ஒன்றும் இல்லை , அப்படியே எதிர்ப்பவர்களால் எதுவும்  செய்ய முடியாது ,ஒரு வெற்றியை கூட தரமுடியாதவர்களை பற்றி உங்களுக்கு என்ன கவலை.

 • இந்த குழப்பங்கள் கழகத்தை பலவீனப்படுத்தினாலும் வெகு விரைவில் பலப்படுத்தும், ஒற்றை தலைமை எந்த ஒரு செயலுக்கும் மிக முக்கியம் என்பதை அறியாதவர் இல்லை நீங்கள் .
நன்றி 
இன்னனம் 

திருவாரூர் முத்துவேலர் ருணாநிதியின்  தொண்டன்  

Monday, 16 May 2011

கருணாநிதியின் தோல்வியும் ஜெயலலிதாவின் வெற்றியும்


   மீண்டும்  மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள  செல்வி.ஜெ.ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் . இந்த ஆட்சி காலத்தில் அவர் என்ன செய்யவேண்டும் என்ன செய்யகூடாது என்று நான் இங்கே எழுத போவதில்லை. ஒரு சராசரி மனிதனாய் இன்னும் ஒரு நடுநிலையானவனாய் நின்று என் அரசியல் பார்வையை இங்கே பதிவிடுகிறேன்

ஏன் இந்த தோல்வி கருணாநிதிக்கு ?    



          இதற்கு பலபேர் பல காரணங்கள் கூறினாலும் நான் காரணங்களாய்  பார்ப்பது 

 • கட்சியும் ஆட்சியும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனது
 • தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்பது போல அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே தனித்தனியாக குறுநில மன்னர்களாய் செயல்பட்டது 
 • கட்சியின் அடிமட்ட தொண்டனுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லாமல் தொண்டர்கள் அந்நிய படுத்தப்பட்டு  தனிமை படுத்தப்பட்டது 
 • கட்சிக்காக செய்த தியாகங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு துதிபாடிகளுக்கு முக்கியத்துவம்   தரப்பட்டது
 • கட்சியில் முக்கிய தலைவர்களே தனக்கென ஒரு கோஷ்டியை எல்லா மட்டத்திலும் வளர்த்தது  
 • உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் அராஜகம் மற்றும் அட்டுழியம் 
 • பகுதி செயலாளர் முதல் தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் அசுர வளர்ச்சி 
 • மத்திய அரசின் தவறான கொள்கை முடிவுகளை எதிர்க்காதது 
 • இலங்கை தமிழர் பிரச்சனையில் தி மு க வின் தவறான நிலைப்பாடு (இந்த முறை)
 • காங்கிரஸ் உடனான கூட்டணி குழப்பம் , மற்றும் காங்கிரசார் தேர்தல்  வேலை செய்யாமல் போனது 
 • தி மு கவின் கட்சி கட்டுப்பாடு மீறி பல இடங்களில் தி மு க வினரே சுயேட்ச்சையாக நின்றது 
 • ஊடகங்களின் அபரிதமான எதிர்ப்பு   
 •  ஸ்பெக்ட்ரம் ஊழலும் அதை தி மு க கையாண்டவிதமும்.
 • தி மு க ஒரு கார்பொரேட் கம்பனி போல் செயல்பட்டது   
 • கட்சியில் ஒரு குறிப்பிட்ட வர்களே தொடர்ந்து கட்சி பதவிகளில் இருப்பது , இது அந்த கட்சிக்கு புது ரத்தம் உள்ளே வர தடையாக இருந்துவிட்டது .
 • எத்தனையோ பல நல்ல திட்டங்களை உருவாக்கி அதை செயல் படுத்தியபோதும் அதை பயன்பெற மக்களிடம் தி மு க வினரே பணம் பெற்றது , அதன் பயனை விட வெறுப்பையே மிக அதிகமாய் உருவாக்கியது.
 • இயற்கை வளங்களை அழிக்கும் படியான மணல் கொள்ளை.
 • மின் வெட்டும் அதனை கையாண்ட விதமும்.
 • மதிய அரசில் பங்கேற்று அதன் தவறான செயல்பாடுகளுக்கு பங்குதாரராய் ஆனது .      
 • நிறைவாய் ஒரு பெரிய கட்சியின் தலைவராக, தமிழக முதல்வராக இல்லாமல் ஒரு குடும்ப தலைவராக கருணாநிதி சுருங்கிப்போனது 


ஜெயலலிதாவின் வெற்றியின் காரணங்கள் 


 • மேலே சொன்ன அத்தனை தி மு க வின் செயல்பாடுகள்
 • இரட்டை இலை சின்னம் 
 • கருணாநிதியின் மாற்று ஜெயலலிதாதான் என்ற மக்களின் நம்பிக்கை 
 • ஊடகங்கள் 
 • அவரின் தைரியமான செயல்பாடுகளில் மக்கள் கொண்டுள்ள அபரிதமான நம்பிக்கை. 
அன்பன் 
ARR

Saturday, 14 May 2011

மனைவி இல்லாத வீடு



கோடை விடுமுறையில் 
கூடை சந்தோஷம் கொண்டது 
துள்ளி விளையாண்ட 
பள்ளி பருவத்திலே !

கோடை விடுமுறையில்
கூடியிருந்த சந்தோஷம் 
தாய்வீடு போக
நோய்கொண்டவன் உருவத்திலே !

செல்லமவ சின்ன சிரிப்புல 
கொண்ட துக்கமெல்லாம் தூரபோகும் 
வெல்லமவ சொல்லி புட்டா 
கண்ட துன்பமெல்லாம் தூசாபோகும்!

குழப்பமான நேரத்திலெல்லாம் துணியாய் 
துவண்டு போகும் எம்மனசு 
குழந்தையாய் என்னவ தோளில்
சாய்ந்திட்டா பூத்துபோவது புதுதினுசு!

சமைச்ச பாத்திரத்தை எல்லாம்
நானே நின்னு அலம்புறேன் 
எனக்காக இவ்வளவு கஷ்டமாபட்டேன்னு 
எனக்கு நானே புலம்புறேன் !

தேன்மொழி பேச்சை கேக்காம
உடம்பில் இல்ல சக்கரை
அவளில்லாம அழகிழந்து கிடக்குது

என் வீட்டு அடுக்கரை !       

என்னபுள்ள மாதிரி பாத்துகிற
அவஎன் அம்மாவின் மறுதோன்றல்
எந்த தெச நின்னாலும்
அவவந்தா எம்மேல்வீசும் ஒருத்தென்றல்!  

நான் கொண்ட சோகத்திற்கெல்லாம்
சொந்தமவ பரிவா மருந்திடுவா
நான் கொண்ட கோபத்தையெல்லாம்
பந்தமவ உடனே மறந்திடுவா !!

என் இதயத்தை இயக்குற
அவளே என் சுவாசம்
படுக்கையில புரண்டு படுக்கையில
மெத்தையெல்லாம் அவ வாசம் !  

நீயிருந்த நாளெல்லாம்
நான்  உன்ன தேடல
நீயில்லாத நாளெல்லாம்
எனக்கு கையும்காலும் ஓடல!


ஒருத்தி கூடஇல்லாமல் போனால்
மொத்த உலகமே காலியா கிடக்குது 
எப்பவருவா எந்தேவதை என 
எம்மனசு கிடந்தது தவியா தவிக்குது !

அன்பன்
ARR

பட உதவி :cinemaanma.wordpress.com