Saturday 31 December 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்

காலம் பல  அருமையான வாழ்க்கை தத்துவத்தை நமக்கு எப்போதுமே சொல்லி செல்கிறது . 
  • காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை
  • காலம் தன் தலைமையை தானே தேர்ந்தெடுக்கிறது
  • காலம் பல பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது 
  • தன்னை மதிக்காதவர்களைப் பற்றி கவலைபடுவதே இல்லை 
  • மதிப்பவர்களை தன்னுடனே அழைத்து செல்ல தவறுவதில்லை 
  • நிலையாமையே நிலை என்ற நிதர்சனத்தை நிரந்தரமாக்கி கொண்டுள்ளது 
  • எல்லா மாற்றங்களிலும் மாறாதிருக்கிறது 
  • உள்ளவரை உழைத்துக் கொண்டே இருக்கிறது 
  • பயனை மற்றவர்களுக்கு தர தயாராக இருக்கிறது எப்போதும் எங்கேயும்
இது போல் இன்னும் எத்தனையோ அனுபவப் பாடங்களை தந்து போகிறது காலம் 

நாளை முதல் ஒரு புது காலத்தில் நுழையும் நண்பர்களுக்கும் , அவர்தம் குடும்பத்தினர்  அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 

அன்பன்
ARR  


Saturday 3 December 2011

கனிமொழிக்கு கட்சி பதவி தேவையா? அவசியமா?

                             

  நேற்று நீண்ட நாட்களாக சிறையில் இருந்த திருமதி.கனிமொழி சென்னை வந்தார், தி மு க வின் அனைத்து மட்ட தலைவர்களும் விமான நிலையத்திலும் , அவரது வீட்டிலும் திரண்டிருந்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.அவரை வரவேற்று விமான நிலையத்திலிருந்து அவரின் வீடு வரை ஒரே போஸ்டர் மயம், அதில் கண்டுள்ள வாசகங்கள் அவரின் சிறை வாழ்க்கை வ.உ.சி யையே பின்னுக்கு தள்ளியது.

 

                                    சரி இப்போது , நம் பதிவு எதை பற்றியது கனிமொழிக்கு பதவி கொடுப்பது அவசியமா? என்பதுதான். மாறன் சகோதரர்களுடன் பிரச்சனை ஏற்பட்ட பின்புதான் கனி மொழிக்கு அதிகாரபூர்வ அங்கிகாரம் கொடுக்கப்பட்டது, தில்லியில் நம்பிக்கைக்கு உரிய நபராக இவர் வலம் வர மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதன் பிறகே கட்சியில் இவரின் முக்கியத்துவம் படிப் படியாக அதிகமானது. முன்னாள் அமைச்சர் ராசா தொலை தொடர்பு அமைச்சராக இவரது ஆதரவும் முக்கியமானதாக சொல்லப்பட்டது, இதனாலேயே இவருக்கும் மாறன் சகோதரர்களுக்கும் பிரச்சனை ஆனது. 

                                        நான் முன்பே என்னுடைய மற்றொரு பதிவில் சொன்னபடி

(கனிமொழி சிறையில்.... கலைஞர் கண்ணீர்....)

இன்று கனிமொழிக்கு ஏற்பட்ட நிலைக்கு அவரின் தாயார் ராஜாத்தி அம்மாளே காரணம், அவரின் ஆசையினாலும் தூண்டுதலினாலுமே அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்பட்டது, அதுவரை கனிமொழி நல்ல கவிஞராக இலக்கியவாதியாகவே எல்லாராலும் அறியப்பட்டார், அவர் தொடங்கிய வேலை வாய்ப்பு முகாம்கள் படித்த பட்டதாரிகளுக்கு வேலையும் வாழ்க்கையையும் பெற்றுத் தந்ததை யாராலும் மறுக்க முடியாது.

                 இன்னும் அவருக்கு கட்சியில் முக்கியத்துவத்தை அதிகப் படுத்தினால் அது அவருக்கும் கட்சிக்குமே பிரச்சனையாக முடியும், ஏற்கெனவே ஸ்டாலின், அழகிரி என இரு பிரிவாக செயல் படும் கட்சி இனி மூன்று பிரிவாக ஆவதற்கான வழிவகையாகவே இது அமையும். அதையும் தொடர்ந்து இது கனிமொழிக்கு பல பிரச்சனைகளையே தரும்.

                            இதுவரை கனிமொழியில் சிறையில் இருந்தவரை, அவர் திடமாக எதிர்கொண்டதாக சொல்லப்பட்டாலும், அவரின் தாயும் தந்தையும் உருகி துடித்ததை யாராலும் மறுக்க முடியாது , பெண் என்றும் ஒரு குழந்தைக்கு தாயென்றும் பாராமல் சிறையில் அடைத்திருக்கிறார்களே என்று பேசியவர்கள் இன்று அவருக்கு கட்சி பதவி கேட்பதில் துளியும் நியாயம் இல்லை. இது ஒரு நல்ல தாயை, மனிதாபிமானம் உள்ளவரை, இலக்கியவாதியை குழப்பும் செயலாகவே அமையும்.

                            இனி கனிமொழி இந்த வழக்கை நல்ல முறையில் எதிர்கொண்டு, ஒரு நல்ல தாயாக, கவிஞராக, இலக்கியவாதியாக, நாட்டுப்புற கலைகளை வளர்ப்பவராகவே இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். மற்றவைகளின் ஆசைக்காகவும், பதவி மோகத்திற்காகவும் இவர் தன் வாழ்க்கையை பலியிடக்கூடாது என்பதும் என் விருப்பம்.ஏனெனில் இவரின் மனிதாபிமானம் திஹார் சிறையில் உள்ள குழந்தைகளும் அறிவார்கள்.இது மாதிரியான பண்புகளை எந்த ஆட்சி மாற்றத்தாலும் இவைகளை தடுக்கமுடியாது.


 நிறைவாக.., கனிமொழியை பற்றியும், அவரின் அரசியல் எதிர்காலத்தையும் பற்றி சிந்திப்பவர்கள், பேசுபவர்கள் அவரின் நலனில் உண்மையான உரிமையுள்ள அவரின் கணவரை பற்றியும் அவரின் பிரிவால் துடித்த மகனின் எண்ணத்தை பற்றியும் கவலைபட்டதாக தெரியவில்லை. திருமதி.கனிமொழி  சமூக அக்கறையுள்ள ஒரு குடும்பத்தலைவியாக காணவே நடு நிலையாளர்களின் விரும்புகிறனர், என் விருப்பமும் அதுவே.

பட உதவி: தினகரன், தி ஹிண்டு

அன்பன்
ARR

Friday 2 December 2011

உண்மையான ராஜதந்திரி கருணாநிதியா? ஜெயலலிதாவா?


                                                  அரசியலில் ராஜ தந்திரம் என்பது இன்றியமையாத ஒன்று, அந்த குணத்தை வைத்தே அரசியலில் வெற்றி தோல்விகள் முடிவு செய்யப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில் இரு பெரும் கட்சிகளான அதிமுக வும் திமுக வும் இருந்து வருகின்றன, அதிமுக செல்வி.ஜெயலலிதாவின் தலைமையிலும், திமுக திரு.கருணாநிதியின் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது. கடந்த 20வருடங்களில் நான் கவனித்து வந்த அரசியலில் இவ்விருவருமே தமிழகத்தை தங்களின் ஆளுமையால் கட்டுபடுத்தி வருகின்றார்கள், இவ்விருவரையும் நான் கவனித்தவரையில் யார் சிறந்த ராஜதந்திரி அல்லது அரசியல் சாணக்கியர் என்று என் அரசியல் ஞானத்தை வைத்து அலசப்பட்டுள்ள அரசியல் பதிவு, இது தமிழகம் சார்ந்த, அவர்களின் அரசியல் சார்ந்த முடிவுகளின் அடிப்படையில் அலசப்பட்டுள்ளது.



 கலைஞர் கருணாநிதி: 1991 - 1996
  • 1991 தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகும், 1993 ல் திமுக உடைந்து மதிமுக உருவான பின்னும் கட்சியை கட்டுப்பாட்டுடன் வைத்திருந்து மீண்டும் அபார வெற்றி பெற்றது அவரின் தன்னிகரில்லாத தலைமைக்கு அபாரமான எடுத்துக்காட்டு.
  •  தனித்தே நின்றிருந்தாலும் ஜெயலலிதாவின் மீதிருந்த வெறுப்பினால் வெற்றி பெறக்கூடிய சூழ்னிலை இருந்தும், புதிதாக உதயமான த மா கா விற்க்கு 40 சட்ட மன்ற தொகுதிகளை கொடுத்து கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து போனது நல்ல ஒரு முன்னுதாரணம்.
செல்வி.ஜெயலலிதா 1991 - 1996

  • 1991 தேர்தலில் பெற்ற அபரிதமான வெற்றியை தன் அரசியல் அனுபவமின்மையால், தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனது.
  • 1991 பெற்ற வெற்றி தன்னால் பெற்ற வெற்றி என்று வீர வசனம் பேசிவிட்டு மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணிக்காக காத்து கிடந்தது. 
கலைஞர் கருணாநிதி:  1996 -2001


  • ஜெயலலிதாவின் மீதுள்ள வெறுப்பால் பெற்ற வெற்றிக்கு த ம கா விற்கும்  பங்கு கொடுத்தது .
  • 1996 ல் நடை பெற்ற உள்ளாட்சி தேர்தலில் அ தி மு க தனக்கு ஏற்பட்ட தோல்வியிலிருந்து எழுந்திராத நிலையிலும், த மா கா அவசியம் இல்லாத போதிலும் நகராட்சி தலைவர் பதவிகளையும் , மேயர் பதவிகளையும் வாரி வழங்கியது.
  • 1998 மக்களவை தேர்தலில் 2 இடங்கள் கேட்ட பா ம க வை உதறி பிரயோஜனமே இல்லாத த மா கா விற்கு மீண்டும் 20 மக்களவை இடங்களைக் கொடுத்தது. அந்த தேர்தலில் தோல்வி அடைந்து அ தி மு க விற்கு புத்துணர்சி தந்தது.
  • 1999 தேர்தலில் ஜெயலலிதா பாணியிலேயே கூட்டணி அமைத்து தன் தனித் தன்மையை இழந்தது.
  • 2001 ல், பயனில்லாத பா ஜ கா வுடன் கூட்டணி அமைத்து மீண்டும் த மா கா, பா ம க கம்யூனிஸ்டு, ம தி மு க வுடன் கூட்டணி அமைக்க முடியாமல்  நல்லாட்சி தந்திருந்தும் தேர்தலில் தோற்றது.
செல்வி.ஜெயலலிதா 1996 - 2001
  • 1996 ல் கிடைத்த படுதோல்விக்கு பிறகு தனி ஒரு நபராக கட்சியை தூக்கி நிறுத்தியது
  • 1998 ல் யாரும் எதிர்பாராத விதமாக ஜம்போ கூட்டணி அமைத்து மீண்டும் வெற்றி வெளிச்சத்தில் வலம் வர தொடங்கியது.
  • 1999 ல் பலமான கூட்டணி இல்லாமலேயே சாதகமான வெற்றியைப் பெற்றது.
  • 2001 ல் தன்னை எதிர்த்து தொடங்கப் பட்ட த மா காவையே தன் கூட்டணிக்குள் அழைத்து மறுமுறையும் பலமான கூட்டணி அமைத்து 1996 ல் இழந்த வெற்றியை மீண்டும் பெற்றது. 

கலைஞர் கருணாநிதி:  2001-2006
  • 2001 ல் தன்னை கைது செய்த சம்பவத்தை சாதகமாக பயன்படுத்தி அதில் வெற்றி பெற்றது.
  • 2004 ல் மீண்டும் ஜெயலலிதாவின் பாணி கூட்டணி அமைத்து அபார வெற்றி பெற்று மத்திய அரசில் முக்கிய பங்கு வகித்தது .

செல்வி.ஜெயலலிதா 2001- 2006

  • ஆட்சிக்கு வந்ததும் கருணாநிதியை தவறான அணுகுமுறையில் கைது செய்தது.
  • அரசு அலுவலர்களை சாட்டையால் வேலைவாங்குவேன் என தைரியமாக சொன்னது
  • மதரீதியிலான சில வேண்டாத முடிவுகளை எடுத்தது
  • தன்னை எதிர்த்து அரசியல் செய்த வை கோ வை 2006 தேர்தலில் தன் அணிக்கு வரவழைத்து, பலமில்லாத கூட்டணியாக இருந்தும் குறிப்பிட்டு சொல்லும் படியான வெற்றியை பெற்றது.

கலைஞர் கருணாநிதி:  2006 - 2011

  • பலமான கூட்டணி அமைத்தும், வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை தேர்வு செய்யாமல் பெரும்பான்மை பெற முடியாமல் போனது
  • கடும் மின்வெட்டுக்கு வழி வகுத்தது
  • மீண்டும் காங்கிரஸுக்கு உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கொடுத்து மேயர் பதவியையும், நகராட்சி தலைவர் பதவிகளையும் வாரி வழங்கியது
  • மீண்டும் ஜெயலலிதாவை பழிக்கு பழியாக கைது செய்யாமல், பழிவாங்கும் அரசியலுக்கு முடிவு கட்டியது.
  • மீண்டும்,மீண்டும் ஒரே மாதிரியான அமைச்சரவைகளை அமைத்தது.
  • பலமே இல்லாத காங்கிரஸ் கட்சியை 2009 தேர்தலிலும் தூக்கி சுமந்தது
  • இலங்கை தமிழருக்கு ஆதரவு தராதது
  • 2011 தேர்தலில் கட்சியையும் மக்களையும் மறந்து குடும்பத்திற்காக காங்கிரஸிடம் கேவலப்பட்டு ஆட்சியை இழந்தது.

செல்வி.ஜெயலலிதா 2006 - 2011

  • ஒரு பொறுப்புள்ள எதிர் கட்சி தலைவராக செயல்படாவிடாலும், திடீர் திடீரென சட்டசபையில் கலந்து கலக்கியது
  • இலங்கை தமிழர் பிரச்சனையை தனக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொண்டது
  • கடைசி 18 மாதங்களில், கட்சியை அசுர வேகத்தில் பலப்படுத்தியது
  • திறனான கூட்டணி அமைத்து, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்தெடுத்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
கலைஞர் கருணாநிதி:  2011 

  • பொறுப்புள்ள கட்சியின் தலைவர் என்பதை மறந்து, ஒரு குடும்பத்துக்கு மட்டும் தலைவராக இருப்பது

செல்வி.ஜெயலலிதா : 2011

  • சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் அனைத்து கட்சிகளையும் தள்ளிவைத்து உள்ளாட்சி பதவிகளை பங்கு போடாமல் தன் கட்சி தொண்டர்களுக்கே பதவிகளை வாரி வழங்கியது.
  • இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு தேர்தல் கவலை இல்லை என்ற தெம்பில் பால், பேருந்து கட்டணங்களை உயர்த்தியது.

அவர்களின் குண நலன்களை இங்கே எனக்கு தெரிந்தவரையில் பட்டியலிட்டு இருக்கிறேன், இனி யார் சிறந்த அரசியல் ராஜ தந்திரி என்பது உங்களின் கைகளில் , முடிவில்.

அன்பன்
ARR