Saturday, 31 December 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்

காலம் பல  அருமையான வாழ்க்கை தத்துவத்தை நமக்கு எப்போதுமே சொல்லி செல்கிறது . 
 • காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை
 • காலம் தன் தலைமையை தானே தேர்ந்தெடுக்கிறது
 • காலம் பல பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது 
 • தன்னை மதிக்காதவர்களைப் பற்றி கவலைபடுவதே இல்லை 
 • மதிப்பவர்களை தன்னுடனே அழைத்து செல்ல தவறுவதில்லை 
 • நிலையாமையே நிலை என்ற நிதர்சனத்தை நிரந்தரமாக்கி கொண்டுள்ளது 
 • எல்லா மாற்றங்களிலும் மாறாதிருக்கிறது 
 • உள்ளவரை உழைத்துக் கொண்டே இருக்கிறது 
 • பயனை மற்றவர்களுக்கு தர தயாராக இருக்கிறது எப்போதும் எங்கேயும்
இது போல் இன்னும் எத்தனையோ அனுபவப் பாடங்களை தந்து போகிறது காலம் 

நாளை முதல் ஒரு புது காலத்தில் நுழையும் நண்பர்களுக்கும் , அவர்தம் குடும்பத்தினர்  அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 

அன்பன்
ARR  


Saturday, 3 December 2011

கனிமொழிக்கு கட்சி பதவி தேவையா? அவசியமா?

                             

  நேற்று நீண்ட நாட்களாக சிறையில் இருந்த திருமதி.கனிமொழி சென்னை வந்தார், தி மு க வின் அனைத்து மட்ட தலைவர்களும் விமான நிலையத்திலும் , அவரது வீட்டிலும் திரண்டிருந்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.அவரை வரவேற்று விமான நிலையத்திலிருந்து அவரின் வீடு வரை ஒரே போஸ்டர் மயம், அதில் கண்டுள்ள வாசகங்கள் அவரின் சிறை வாழ்க்கை வ.உ.சி யையே பின்னுக்கு தள்ளியது.

 

                                    சரி இப்போது , நம் பதிவு எதை பற்றியது கனிமொழிக்கு பதவி கொடுப்பது அவசியமா? என்பதுதான். மாறன் சகோதரர்களுடன் பிரச்சனை ஏற்பட்ட பின்புதான் கனி மொழிக்கு அதிகாரபூர்வ அங்கிகாரம் கொடுக்கப்பட்டது, தில்லியில் நம்பிக்கைக்கு உரிய நபராக இவர் வலம் வர மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதன் பிறகே கட்சியில் இவரின் முக்கியத்துவம் படிப் படியாக அதிகமானது. முன்னாள் அமைச்சர் ராசா தொலை தொடர்பு அமைச்சராக இவரது ஆதரவும் முக்கியமானதாக சொல்லப்பட்டது, இதனாலேயே இவருக்கும் மாறன் சகோதரர்களுக்கும் பிரச்சனை ஆனது. 

                                        நான் முன்பே என்னுடைய மற்றொரு பதிவில் சொன்னபடி

(கனிமொழி சிறையில்.... கலைஞர் கண்ணீர்....)

இன்று கனிமொழிக்கு ஏற்பட்ட நிலைக்கு அவரின் தாயார் ராஜாத்தி அம்மாளே காரணம், அவரின் ஆசையினாலும் தூண்டுதலினாலுமே அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்பட்டது, அதுவரை கனிமொழி நல்ல கவிஞராக இலக்கியவாதியாகவே எல்லாராலும் அறியப்பட்டார், அவர் தொடங்கிய வேலை வாய்ப்பு முகாம்கள் படித்த பட்டதாரிகளுக்கு வேலையும் வாழ்க்கையையும் பெற்றுத் தந்ததை யாராலும் மறுக்க முடியாது.

                 இன்னும் அவருக்கு கட்சியில் முக்கியத்துவத்தை அதிகப் படுத்தினால் அது அவருக்கும் கட்சிக்குமே பிரச்சனையாக முடியும், ஏற்கெனவே ஸ்டாலின், அழகிரி என இரு பிரிவாக செயல் படும் கட்சி இனி மூன்று பிரிவாக ஆவதற்கான வழிவகையாகவே இது அமையும். அதையும் தொடர்ந்து இது கனிமொழிக்கு பல பிரச்சனைகளையே தரும்.

                            இதுவரை கனிமொழியில் சிறையில் இருந்தவரை, அவர் திடமாக எதிர்கொண்டதாக சொல்லப்பட்டாலும், அவரின் தாயும் தந்தையும் உருகி துடித்ததை யாராலும் மறுக்க முடியாது , பெண் என்றும் ஒரு குழந்தைக்கு தாயென்றும் பாராமல் சிறையில் அடைத்திருக்கிறார்களே என்று பேசியவர்கள் இன்று அவருக்கு கட்சி பதவி கேட்பதில் துளியும் நியாயம் இல்லை. இது ஒரு நல்ல தாயை, மனிதாபிமானம் உள்ளவரை, இலக்கியவாதியை குழப்பும் செயலாகவே அமையும்.

                            இனி கனிமொழி இந்த வழக்கை நல்ல முறையில் எதிர்கொண்டு, ஒரு நல்ல தாயாக, கவிஞராக, இலக்கியவாதியாக, நாட்டுப்புற கலைகளை வளர்ப்பவராகவே இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். மற்றவைகளின் ஆசைக்காகவும், பதவி மோகத்திற்காகவும் இவர் தன் வாழ்க்கையை பலியிடக்கூடாது என்பதும் என் விருப்பம்.ஏனெனில் இவரின் மனிதாபிமானம் திஹார் சிறையில் உள்ள குழந்தைகளும் அறிவார்கள்.இது மாதிரியான பண்புகளை எந்த ஆட்சி மாற்றத்தாலும் இவைகளை தடுக்கமுடியாது.


 நிறைவாக.., கனிமொழியை பற்றியும், அவரின் அரசியல் எதிர்காலத்தையும் பற்றி சிந்திப்பவர்கள், பேசுபவர்கள் அவரின் நலனில் உண்மையான உரிமையுள்ள அவரின் கணவரை பற்றியும் அவரின் பிரிவால் துடித்த மகனின் எண்ணத்தை பற்றியும் கவலைபட்டதாக தெரியவில்லை. திருமதி.கனிமொழி  சமூக அக்கறையுள்ள ஒரு குடும்பத்தலைவியாக காணவே நடு நிலையாளர்களின் விரும்புகிறனர், என் விருப்பமும் அதுவே.

பட உதவி: தினகரன், தி ஹிண்டு

அன்பன்
ARR

Friday, 2 December 2011

உண்மையான ராஜதந்திரி கருணாநிதியா? ஜெயலலிதாவா?


                                                  அரசியலில் ராஜ தந்திரம் என்பது இன்றியமையாத ஒன்று, அந்த குணத்தை வைத்தே அரசியலில் வெற்றி தோல்விகள் முடிவு செய்யப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில் இரு பெரும் கட்சிகளான அதிமுக வும் திமுக வும் இருந்து வருகின்றன, அதிமுக செல்வி.ஜெயலலிதாவின் தலைமையிலும், திமுக திரு.கருணாநிதியின் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது. கடந்த 20வருடங்களில் நான் கவனித்து வந்த அரசியலில் இவ்விருவருமே தமிழகத்தை தங்களின் ஆளுமையால் கட்டுபடுத்தி வருகின்றார்கள், இவ்விருவரையும் நான் கவனித்தவரையில் யார் சிறந்த ராஜதந்திரி அல்லது அரசியல் சாணக்கியர் என்று என் அரசியல் ஞானத்தை வைத்து அலசப்பட்டுள்ள அரசியல் பதிவு, இது தமிழகம் சார்ந்த, அவர்களின் அரசியல் சார்ந்த முடிவுகளின் அடிப்படையில் அலசப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி: 1991 - 1996
 • 1991 தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகும், 1993 ல் திமுக உடைந்து மதிமுக உருவான பின்னும் கட்சியை கட்டுப்பாட்டுடன் வைத்திருந்து மீண்டும் அபார வெற்றி பெற்றது அவரின் தன்னிகரில்லாத தலைமைக்கு அபாரமான எடுத்துக்காட்டு.
 •  தனித்தே நின்றிருந்தாலும் ஜெயலலிதாவின் மீதிருந்த வெறுப்பினால் வெற்றி பெறக்கூடிய சூழ்னிலை இருந்தும், புதிதாக உதயமான த மா கா விற்க்கு 40 சட்ட மன்ற தொகுதிகளை கொடுத்து கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து போனது நல்ல ஒரு முன்னுதாரணம்.
செல்வி.ஜெயலலிதா 1991 - 1996

 • 1991 தேர்தலில் பெற்ற அபரிதமான வெற்றியை தன் அரசியல் அனுபவமின்மையால், தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனது.
 • 1991 பெற்ற வெற்றி தன்னால் பெற்ற வெற்றி என்று வீர வசனம் பேசிவிட்டு மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணிக்காக காத்து கிடந்தது. 
கலைஞர் கருணாநிதி:  1996 -2001


 • ஜெயலலிதாவின் மீதுள்ள வெறுப்பால் பெற்ற வெற்றிக்கு த ம கா விற்கும்  பங்கு கொடுத்தது .
 • 1996 ல் நடை பெற்ற உள்ளாட்சி தேர்தலில் அ தி மு க தனக்கு ஏற்பட்ட தோல்வியிலிருந்து எழுந்திராத நிலையிலும், த மா கா அவசியம் இல்லாத போதிலும் நகராட்சி தலைவர் பதவிகளையும் , மேயர் பதவிகளையும் வாரி வழங்கியது.
 • 1998 மக்களவை தேர்தலில் 2 இடங்கள் கேட்ட பா ம க வை உதறி பிரயோஜனமே இல்லாத த மா கா விற்கு மீண்டும் 20 மக்களவை இடங்களைக் கொடுத்தது. அந்த தேர்தலில் தோல்வி அடைந்து அ தி மு க விற்கு புத்துணர்சி தந்தது.
 • 1999 தேர்தலில் ஜெயலலிதா பாணியிலேயே கூட்டணி அமைத்து தன் தனித் தன்மையை இழந்தது.
 • 2001 ல், பயனில்லாத பா ஜ கா வுடன் கூட்டணி அமைத்து மீண்டும் த மா கா, பா ம க கம்யூனிஸ்டு, ம தி மு க வுடன் கூட்டணி அமைக்க முடியாமல்  நல்லாட்சி தந்திருந்தும் தேர்தலில் தோற்றது.
செல்வி.ஜெயலலிதா 1996 - 2001
 • 1996 ல் கிடைத்த படுதோல்விக்கு பிறகு தனி ஒரு நபராக கட்சியை தூக்கி நிறுத்தியது
 • 1998 ல் யாரும் எதிர்பாராத விதமாக ஜம்போ கூட்டணி அமைத்து மீண்டும் வெற்றி வெளிச்சத்தில் வலம் வர தொடங்கியது.
 • 1999 ல் பலமான கூட்டணி இல்லாமலேயே சாதகமான வெற்றியைப் பெற்றது.
 • 2001 ல் தன்னை எதிர்த்து தொடங்கப் பட்ட த மா காவையே தன் கூட்டணிக்குள் அழைத்து மறுமுறையும் பலமான கூட்டணி அமைத்து 1996 ல் இழந்த வெற்றியை மீண்டும் பெற்றது. 

கலைஞர் கருணாநிதி:  2001-2006
 • 2001 ல் தன்னை கைது செய்த சம்பவத்தை சாதகமாக பயன்படுத்தி அதில் வெற்றி பெற்றது.
 • 2004 ல் மீண்டும் ஜெயலலிதாவின் பாணி கூட்டணி அமைத்து அபார வெற்றி பெற்று மத்திய அரசில் முக்கிய பங்கு வகித்தது .

செல்வி.ஜெயலலிதா 2001- 2006

 • ஆட்சிக்கு வந்ததும் கருணாநிதியை தவறான அணுகுமுறையில் கைது செய்தது.
 • அரசு அலுவலர்களை சாட்டையால் வேலைவாங்குவேன் என தைரியமாக சொன்னது
 • மதரீதியிலான சில வேண்டாத முடிவுகளை எடுத்தது
 • தன்னை எதிர்த்து அரசியல் செய்த வை கோ வை 2006 தேர்தலில் தன் அணிக்கு வரவழைத்து, பலமில்லாத கூட்டணியாக இருந்தும் குறிப்பிட்டு சொல்லும் படியான வெற்றியை பெற்றது.

கலைஞர் கருணாநிதி:  2006 - 2011

 • பலமான கூட்டணி அமைத்தும், வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை தேர்வு செய்யாமல் பெரும்பான்மை பெற முடியாமல் போனது
 • கடும் மின்வெட்டுக்கு வழி வகுத்தது
 • மீண்டும் காங்கிரஸுக்கு உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கொடுத்து மேயர் பதவியையும், நகராட்சி தலைவர் பதவிகளையும் வாரி வழங்கியது
 • மீண்டும் ஜெயலலிதாவை பழிக்கு பழியாக கைது செய்யாமல், பழிவாங்கும் அரசியலுக்கு முடிவு கட்டியது.
 • மீண்டும்,மீண்டும் ஒரே மாதிரியான அமைச்சரவைகளை அமைத்தது.
 • பலமே இல்லாத காங்கிரஸ் கட்சியை 2009 தேர்தலிலும் தூக்கி சுமந்தது
 • இலங்கை தமிழருக்கு ஆதரவு தராதது
 • 2011 தேர்தலில் கட்சியையும் மக்களையும் மறந்து குடும்பத்திற்காக காங்கிரஸிடம் கேவலப்பட்டு ஆட்சியை இழந்தது.

செல்வி.ஜெயலலிதா 2006 - 2011

 • ஒரு பொறுப்புள்ள எதிர் கட்சி தலைவராக செயல்படாவிடாலும், திடீர் திடீரென சட்டசபையில் கலந்து கலக்கியது
 • இலங்கை தமிழர் பிரச்சனையை தனக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொண்டது
 • கடைசி 18 மாதங்களில், கட்சியை அசுர வேகத்தில் பலப்படுத்தியது
 • திறனான கூட்டணி அமைத்து, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்தெடுத்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
கலைஞர் கருணாநிதி:  2011 

 • பொறுப்புள்ள கட்சியின் தலைவர் என்பதை மறந்து, ஒரு குடும்பத்துக்கு மட்டும் தலைவராக இருப்பது

செல்வி.ஜெயலலிதா : 2011

 • சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் அனைத்து கட்சிகளையும் தள்ளிவைத்து உள்ளாட்சி பதவிகளை பங்கு போடாமல் தன் கட்சி தொண்டர்களுக்கே பதவிகளை வாரி வழங்கியது.
 • இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு தேர்தல் கவலை இல்லை என்ற தெம்பில் பால், பேருந்து கட்டணங்களை உயர்த்தியது.

அவர்களின் குண நலன்களை இங்கே எனக்கு தெரிந்தவரையில் பட்டியலிட்டு இருக்கிறேன், இனி யார் சிறந்த அரசியல் ராஜ தந்திரி என்பது உங்களின் கைகளில் , முடிவில்.

அன்பன்
ARR

 

Wednesday, 30 November 2011

ஸ்டாலின் / அழகிரி ஒரு ஒப்பீடு          இந்த தலைப்பே இது ஒரு அரசியல் சார்ந்த பதிவு என்பதை சொல்லிவிடும், கடந்த தேர்தல்களில் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் தி மு கழகத்தில் இது மாதிரியான ஒரு ஒப்பீடு தேவையா என்று பார்த்தோமேயானால், ஆம் இப்போது தான் தேவை, ஏனெனில் தோல்விகளின் போதும், அதை எதிர் கொள்கிற போதும் தான் ஒரு தலைவனின் தகுதி தெரியும், அதைப் போலவே ஒரு நல்ல தலைவனால் தான் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள, தோல்விகளைக்கூட பயன் படுத்திக்கொள்ள முடியும்.


                        தன்னுடைய தமிழால், திறமையால், எழுத்தால், பேச்சால் பிரளயம் போல அரசியல் வானை பிளந்துகொண்டு வந்த மு.கருணாநிதியின், புத்திரர்களாக இருந்தாலும் இந்த இருவருக்குமே அவரைப் போல திறமை கிடையாது என்பதே முழு உண்மை. தனக்கென தானே தனி ராஜபாட்டை அமைத்து கொண்ட அவருக்கும், ராஜபாட்டை அமைத்து தந்தும் அதில் தன் முழு ஆதிக்கத்தை செலுத்த முடியாத இவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.


            சரி இப்போது தி மு கழகத்திலே அடுத்த தலைவர் யார் என்ற போட்டியும், தொண்டர்கள் பலம் பெற்றவர் யார் என்ற போட்டியும் தி மு க வின் ஒவ்வொறு மட்டத்திலும் விவாதிக்க பட்டு வருகின்றது.


அடுத்து யார்? ஸ்டாலினா? அழகிரியா??.     


இதற்கான பதிலை சொல்ல நான் அரசியல் ஜோதிடன் இல்லை ஆனால் அரசியலை உற்று நோக்கும் ஒரு சராசரி மனிதனாய் என் பார்வையில் இருவருக்குமிடையேயான ஒப்பீட்டு அளவிலான செய்திகளை இங்கே பார்ப்போம்.


முதலில் அழகிரி......... 
தென் மண்டல செயலாளரும், மத்திய அமைச்சரும் அவரின் தொண்டர்களால் அஞ்சா நெஞ்சன் என்று அழைக்க படும் அழகிரியின் செயல் பாடுகள் பெரும்பாலும் உணர்ச்சிகளின் வழியே நடத்தப் படுவதாகவே உணர்கிறேன். அதன் காரணங்கள் • எந்த ஒரு பொதுவான கட்சி நிகழ்வுகளிலும் தன்னை முன்னிலை படுத்தவிடில் அந்த நிகழ்சியை புறக்கணிக்க போவதாக செய்திகளை அவரின் தொண்டர்களின் மூலமாக பரப்புவது
 • 2001 தேர்தலில் தன் ஆதரவாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு தர வில்லை என்ற காரணத்திற்காக ஒரு நகர செயலாளரைப் போல தன் கட்சிக்கு எதிராகவே போட்டி வேட்பாளர்களை நிறுத்தி தி மு க வின் தோல்விக்கு காரணமாக இருந்தது.
 • தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்து அவர்களின் கொட்டத்தை அடக்காமலிருந்தது.
 • தன்னை புகழ்பவர்கள் தன் குடும்பத்தாரையும் முன்னிலைப் படுத்த வேண்டும் என் நினைத்தது
 • விமர்சனங்களை தாங்கமுடியாமல், விமர்சித்தவர்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது.
 • தகுதியே இல்லாதவராக இருப்பினும் தன்னை புகழ்ந்தால் அவர்களுக்கு பதவிகளை வாரி வழங்குவது
 • எந்த கட்டுபாடும் இல்லாமல் கட்சியின் எதிர் காலத்தை நினைக்காமல் தன் விருபத்திற்கு ஏற்றார் போல செயல் படுவது.
 • ஆட்சியில் இருந்த போது தென் மாவட்டங்களின் ஒரே பிரதி நிதியாக செயல்பட்டு , கடந்த உள்ளாட்சி தேர்தலில், தன் சொந்த தொகுதியில் கூட பிரச்சாரம் செய்யாமல் இருந்தது 
 • மத்திய அமைச்சராக ஒரு பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு, பெரும்பாலான நாட்களில் நாடாளுமன்றத்திற்கு செல்லாமலும், துறை சம்பந்தமான கூட்டங்களில் கலந்து கொள்ளாமலும் இருப்பது.
 • ஸ்டாலின் எப்போது மதுரை வந்தாலும் குறுகிய மனப்பான்மையுடன் அவரை யாரும் வரவேற்க்க செல்லக்கூடாது என தடை விதித்து கட்சியில் பிரிவு வருவதற்கு காரணமாக இருப்பது. 
 • எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற் போல, சென்ற ஆட்சியில் அஞ்சாநெஞ்சனாக வலம் வந்து, இந்த அ தி மு க ஆட்சியில் சத்தமே இல்லாமல் தில்லியிலேயே இருப்பது.

இனி ஸ்டாலின்

இவரின் கடந்த கால, அதாவது 1989க்கு முன் செயல் பாடுகள் பல விமர்சனங்களுக்கு ஆளானாலும், இவரின் கடந்த 15 ஆண்டு அரசியல் செயல்பாடுகள் ஒரு பக்குவப்பட்ட அரசியல்வாதியை இவரின் உள்ளே காணமுடிகிறது.அதற்கான காரணங்களாக நான் கருதுவது

 • தோல்வியோ வெற்றியோ தன் அரசியல் பயணத்தில் கிஞ்சித்தும் தளர்வு வராமல் தொடர்ந்து செயலாற்றிக்கொண்டு இருப்பது
 • இது வரை அவருக்கு அளிக்க பட்ட கட்சி பதவிகள் அனைத்தையும் குறையின்றி செயல் படுத்தியது.
 • எந்த ஒரு ஆட்சிப் பணிக்கும் மக்களின் மூலமாகவே ஜனநாயகத்தின் வழியே தன்னை தேர்வு செய்ய வைத்தது.
 • 2001ஆம் ஆண்டில் சென்னை மேயரா? அல்லது சட்ட மன்ற உறுப்பினரா என்ற கேள்விக்கு எதிர்கட்சி வரிசையில் இருந்தாலும், முக்கிய பதவியில் இல்லை என்றாலும் சட்ட மன்ற உறுப்பினராகவே தொடர்ந்தது.  
 • தன்னை சுற்றி இருப்பவர்கள் தொடர்ந்து தவறு செய்வதாக அறிந்தால் அவர்களை தன்னிடமிருந்து விலக்கி வைப்பது.
 • விமர்சனங்களை துவளாமல் எதிர்கொள்வது
 • கட்சியின் வெற்றிக்காக தொடர்ந்து கடந்த 25 வருடங்களாக பிரச்சாரத்தில் ஈடுபடுவது
 • கட்சிக்கு கடந்த காலங்களில் எந்த சங்கடங்களையும் ஏற்படுத்தாதிருப்பது
 • மக்களிடம் நல்ல அபிமானத்தை பெற்றிருப்பது
 • அரசியல் கடந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது
 • ஒரு நல்ல தலைவனாக தன்னை நிலை நிறுத்த முயற்சிப்பது.
 • கூட்டணிக் கட்சி தலைவர்களை அரவணைத்து செல்வது
 • கட்சி தலைவரின் மகன் என்பதையும் தாண்டி தனக்கென ஒரு நிலையை அடைந்திருப்பது
 • தன் தகுதிக்குட்பட்ட பதவிகளைப் பெறுவது
 • தலைவனுக்குரிய போராட்ட குணம்
 • கட்சியில் பெரும்பாலான தொண்டர்களால் விரும்பப்படுவது.

       இப்படி பல ஒப்பீடுகளின் அடிப்படையில் என்னை பொறுத்த மட்டில் ஸ்டாலினே முன்னிலையில் இருக்கிறார், இந்நிலை, என்னிலை மட்டுமே, தொண்டர்களின் நிலை நானறியேன். இப்பதிவில் உங்களுக்கு மாறுபட்ட அல்லது வேறுபட்ட கருத்திருந்தால் அதை பின்னூட்டங்களில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

அன்பன்
ARR

Tuesday, 29 November 2011

மழலைகள் உலகம் மகத்தானது - தொடர் பதிவுமழலைகள் உலகம் மகத்தானது என்ற மகோன்னத தொடர் பதிவை என்னை தொடர அன்பு கட்டளையிட்ட மதிப்புக்குரிய அய்யா திரு.வை.கோபாலகிருஷ்ணன்  அவர்களின் உத்தரவை ஏற்று நான் எழுதிய பதிவு இது...........
                      மழலைகள் உலகம் மட்டுமல்ல மழலைகள் உள்ள உலகமும் கூட மகத்தானதுதான். சரி மழலைகள் உலகம் மகத்தானது என்பதன் காரணத்தை அறிய முற்படுகையில் அந்த அற்புத உலகத்தில் தான் போட்டி, பொறாமை, குரோதம்,துரோகம், என்ற எந்த கீழான எண்ணங்களும் அவர்களிடத்தே இல்லை.சலனமே இல்லாத நிதர்சனமான உள்ளம் அது. சந்தோஷமோ, சோகமோ உடனே வெளிப்படுத்திவிடும் மழலைகளின் உலகம் மகத்தானதாக இருப்பதில் என்ன ஆச்சர்யம் இருந்துவிட முடியும்.


                      என் வாழ்க்கையில் இன்னும் என் குடும்பத்தில் பல மழலைகளைப் பார்த்திருந்தாலும், நான் ரசித்த இரு மழலைகளைப் பற்றியே இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
1. என் சின்ன அண்ணன் மகள்: கமலகிருஷ்ணவி 


                     எங்கள் குடும்பத்தில் சரியாக 35 வருடங்களுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை அவள். அதற்கு முன் எங்கள் அம்மா அப்பாவிற்கு 8 பேர பசங்க இருந்தாலும் ஒரு பேத்தி இல்லையே என்ற குறை குறைக்க வராது வந்த மாமணி போல் வந்த தேவதை அவள். பேர பசங்களின் கடா முடா விளையாட்டுக்களையே பார்த்த நாங்கள் இவளின் அமைதியான விளையாட்டுக்களால் மனம் மகிழ்ந்து போனோம், அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தின் நிதி நிலை சரியில்லாத கவலையை அகற்ற வந்த அகல்விளக்கு அந்த பாப்பாகுட்டி.


2. என் மகள்: கமலாத்மிகா


                என்னையும் என் எழுத்தையும் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு தெரியும் என் மகளை நான் பெற பட்ட வேதனைகள், ஒவ்வொரு முறையும் மருத்துவர்கள் வெவ்வேறு பிரச்சனைகளை சொல்ல, மனம் நொந்து மருத்துவமனையில் இருந்த என் மகளை பார்க்க போகும் போதெல்லாம், என்னை வரவேற்பது போல சின்ன கை, கால்களை ஆட்டி அந்த மணியான காந்த கண்களால் பார்க்கும் பார்வை ஒராயிரம் இடிகளையும் ஒருங்கே தாங்கும் சக்தியை தரும். 


               நம் உருவத்தையும், நம்மவர்களின் உருவத்தையும் செயல்களையும் அவர்களின் வழியே காணும் போது நாம் பெரும் இன்பம் எதற்கும் ஈடாகாது.
நம் சந்ததிகளின் வழியே நம் சாயல்களை நம் மழலைகளின் வழியே காணும் போது அந்த ஆண்டவனின் படைப்பையும் அதன் ஆச்சர்யத்தையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.


மழலைகளின் உலகம் மகத்தானது மட்டும் அல்ல, மகத்துவமானது இன்னும் மகோன்னதமானது.


அன்பன்
ARR.

Sunday, 27 November 2011

அம்மாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்.
தாயே தவமே, பண்பே பயனே!
வாழ்வே வரமே, அன்பே அறனே!
பாசத்தின் பிரமாண்டமே! ஆட்டுவித்த அற்புதமே!
பிரியத்தின் பிரகடனமே! சாதித்த சகாப்தமே!

நீ சென்றது
யாராலும் தொடமுடியாத தூரம்!
ஆனாலும் இது
யார் தூக்கிவைத்த பாரம்!

புரியாத புதிரே, பிரியாத உயிரே!
உள்ளங்கை தண்ணீரே,  உறையாத கண்ணீரே!
நீ மற்றவர்களால் உணரமுடியாத உயரம் – ஆனாலும்!
நீ மறைந்தது சொல்லிமாளா துயரம்!


எங்களின்..... 
சேவைகள் மறுத்த கண்மணியே,
தேவைகள் தீர்த்த தேவதையே,
தீர்ந்து போன தேன்மொழியே,
விட்டுச் சென்றதேன் வான்வழியே! 

பெறுதலுக்கரிய பொக்கிஷமே,
வீழ்த்தமுடியா வைராக்கியமே,
இருள் அழித்த ஒளியே,
நிஜமாய் நீயில்லை இனியே!

துன்பம் துடைத்த தூயவளே,
இன்பம் இழைத்த இனியவளே,
பாசம் பழக்கிய பனிமலரே – இனி,
எங்களுக்கு உனைப்போல் யாருளரே!

ஓய்ந்து விட்ட ஓவியமே!
கரைந்து விட்ட காவியமே!
வளரமுடியாத வளர்பிறையே – நீ
வரமுடியாதா மறுமுறையே ?

வரமுடியாதா மறுமுறையே??

இன்று (28/11/2011) எங்கள் அம்மாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்.
அன்பன்
ARR
ARR

Monday, 14 November 2011

குழந்தைகள்........ வாழ்வியலின் வண்ணங்கள்
குழந்தைகள்........

வாழ்வியலின் வண்ணங்கள்


வாழ்வியலின் வசீகரங்கள்


வாழ்வியலின் வசந்தங்கள்வாழ்வியலின் வடிகால்கள்

வாழ்வியலின் வடிவங்கள்


வாழ்வியலின் விழுதுகள்


வாழ்வியலின் அற்புதங்கள்


வாழ்வியலின் அஸ்த்திவாரங்கள்


வாழ்வியலின் அர்த்தங்கள்


வாழ்வியலின் முழுமைகள்வாழ்வியலின் மகிமைகள்

வாழ்வியலின் தத்துவங்கள்


வாழ்வியலின் மகத்துவங்கள்

இன்னும்


இது போல் எத்தனையோ

இந்த குழந்தைகள் தின நாளில்

குழந்தைகளாய் இருப்பவர்களுக்கும்


குழந்தைகளாய் இருந்தவர்களுக்கும்


மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்அன்பன் 
ARR

Tuesday, 25 October 2011

சென்னை மழை

2 நாள் மழைக்கே சென்னை தொன்னை போல் தண்ணீரை தேக்கி 
நிற்கிறது.

இண்டு இடுக்கு சந்து பொந்து

பிரதான சாலை குறுக்கு சாலை

புது ரோடு பழைய ரோடு

எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது

நீர், நம் நாட்டு ஊழலைப் போலே


இந்த லட்சணத்தில்

வார்டு உறுப்பினராம்

சட்டமன்ற உறுப்பினராம்

மாநகர மேயராம்

நாடாளுமன்ற உறுப்பினராம்

ஆனால் யாருமே இல்லை நல்லது செய்ய


நல்லரசு அமைக்க முடியாத இவர்களா

வல்லரசு ஆக்கப் போகிறார்கள்

அல்லாடும் மக்களை

பந்தாடும் பாவிகளே

கொள்கை எல்லாம் போதும்டா

கொள்ளை அடிச்சிட்டு போங்கடா...........அனைவருக்கும் இனிய தீபாவளி நல் 


வாழ்த்துக்கள் 

அன்பன்

ARR

Thursday, 21 July 2011

தமிழக அரசுக்கு சாட்டையடி கொடுத்த உச்ச நீதி மன்றம்.


அவசரத்தில் அள்ளிதெளித்த அரைவேக்காட்டுத்தனமாக அறிவித்த சமச்சீர் கல்வி தடை இன்று பல பகீரத முயற்சிகளுக்குப் பின் உச்ச நீதி மன்றத்தால் நீக்கப்பட்டு இருக்கிறது.இந்த மனு தொடர்பாக இன்று விசாரித்த ஜே.எம்,. பாஞ்சால் தலைமையிலான பெஞ்ச் நீதிபதிகள் , சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். வரும் ஆகஸ்ட் 2 ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

            அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஏற்படுத்தப்பட்ட இந்த தடை ஏற்படுத்தி இருக்கும் இழப்பு எவ்வளவு  தெரியுமா ??, மக்களின் வரிப் பணத்தில் புத்தகங்களுக்காக குறைந்த பட்சம் இருநூறு கோடி, இதனிலும் அதிகமாக நீதிமன்றத்தில் வாதாடியவர்களுக்கான கூலியும் , மற்றவர்களுக்கான போய் வந்த பொய் செலவுகளும் . இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல ஒண்ணே கால் கோடி மாணவர்களின் அறுபது கல்வி நாட்கள் , இதற்கு  என்ன பதில் சொல்லப் போகிறது இந்த அரசு , ஜெயலலிதாவிடம் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்ப் பார்த்த மக்களுக்கு இந்த மாதிரியான செயல்கள் மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லைஎதில் தான் அரசியல் செய்வது என்ற அடிப்படை நியாம் கூட இல்லாத அரசுகள் அமைவதும் , அவற்றையே நாம் மீண்டும் சுழற்சி முறையில் தேர்தெடுப்பதும், தமிழக மக்களின் சாபக் கேடு .  

அன்பன் 
ARR

Tuesday, 19 July 2011

அன்பானவர்களுக்கு வணக்கம் என் மிகப் பிரியமானவர்களுக்கு, வணக்கம்
நலம் நாடுவதும் நலமே...............
          இப்போது என் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தை கடந்து கொண்டிருப்பதால், என்னால் முன்பு போல வலைப்பூவில் செயல் பட முடியாமல் போகின்றது, அதன் காரணமாகவே உங்களின் உன்னத படைப்புகளை படித்தும் பின்னூட்டமிட முடியாமல் என் வாக்கினை பதிய முடியாமல் போகின்றது. நீங்கள் அனைவரும் என்னை தயை கூர்ந்து பொறுத்தருள வேண்டுகிறேன்.வெகு விரைவில் நான் மீண்டும் மீண்டு வந்து உங்களின் அன்பு ஜோதியில் ஐக்கியமாவேன்.


அன்பு, நன்றி , நலம்,வணக்கம்
 
அன்பன்
ARR .        

Monday, 18 July 2011

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் திருந்தாத தமிழக அரசு

                              

                           சமச்சீர் கல்வியே தொடரவேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகாவது திரிசங்கு சொர்க்கத்தில் அல்லாடும் பாவப்பட்ட தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் தான் பிடித்த முயலுக்கு மூணுகால் என்ற வறட்டு பிடிவாதத்தை தமிழக அரசு இந்த தீர்ப்பை மேல் முறையீடு செய்யப் போவதாக கூறி நிரூபணம் செய்திருக்கிறது.

             இன்று சமச்சீர் கல்வி மீதான வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதி மன்றம்  1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியே தொடரும்,மேலும் அனைத்து வகுப்புகளிலும் நடப்பாண்டில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த வேண்டும். வரும் 22ந் தேதிக்கு சமச்சீர் கல்வி பாடநூல்களை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இன்று தேதி பதினெட்டு இன்னும் நான்கு நாட்களில் அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வியை நிர்ணயம் செய்யும் பாட புத்தகங்களை வழங்குவது குதிரை கொம்பான விஷயம் அதையும் தாண்டி பெரும்பாலான பள்ளிகளுக்கு பழைய பாட திட்ட புத்தககங்களை விநியோகித்து வருவதாகவும் செய்திகள் வந்தபடியே இருந்தன.இவை அனைத்தையும் தாண்டி சமச்சீர் பாட புத்தகங்கள் மாணவர்களை சென்றடையுமா என்பது விடை தெரியாதா கேள்வி.                      ஏன் இந்த மாதிரியான பிடிவாத செயல்கள் என்பது யாருக்கும் புரியாத மர்மமாகவே இருக்கிறது. இவர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு மாணவர்களின் படிப்பையும் அவர்களின் எதிர்காலத்தையுமா பாழாக்குவது , இதுவா ஒரு பொறுப்புள்ள அரசின் அடையாளம் ?. இப்போதே 50 நாட்களை இழந்து நிற்கின்றனர் மாணவர்களும் ஆசிரியர்களும் , சரியான நேரத்தில் தொடங்கி பாடம் நடத்தினாலே புரியாத நம் மாணவர்கள், இப்போது பாடங்களை நடத்தி முடிக்க அவசரம் காடும் ஆசிரியர்களின் வேகத்துக்கு எப்படி ஈடு கொடுக்க போகிறார்கள் .

                   அடுத்து, மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் பாட வழி புத்தகங்களே வழங்கப்பட்டு இருக்கிறது. இப்போது சமச்சீர் கல்வி என்றால் அந்த பாடப் புத்தககங்களின் கதி என்ன? புதிய  பாட புத்தகங்களுக்கு மீண்டும் பெற்றோர்கள் பணம் செலுத்த வேண்டுமா?. ஒரு தரமான பள்ளிபடிப்பை மாணவர்களுக்கு தர வக்கில்லாமல் கல்வியை தனியாரிடம் தாரை வார்த்த தமிழக அரசுகள் இப்போது இப்படி மாணவர்களின் எதிர்காலத்தில் சதிராட்டம் ஆட எந்த தகுதியும் கிடையாது .

                     இது மாதிரியான கேவலமான செயல் எந்த மாநிலத்திலும் நடக்காது . இதுவே தமிழர்களின் தலைவிதி.மக்களின் குடி கெடுக்கும் மது விற்பனையில் எந்த தடையையும் ஏற்படுத்தாத தடுக்காத அதில் அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டாத அரசுகள் , அவர்களின் அரிப்பை தீர்த்துக்கொள்ள எதிர் கால இந்தியாவை வழிநடத்தப் போகும் இந்த தளிர்களின் எதிர்காலத்தை பாழாக்குவது துளியும் நியாயமில்லை.      

அன்பன் 
ARR