Wednesday, 30 March 2011

சுதந்திரம் ..........

சுதந்திரம் .......... 


ராகவன் அய்யா எங்கள் ஊரில் எல்லோராலும் மதிக்கபடுகின்ற மாசற்ற மனிதர் , சுதந்திர போராட்ட தியாகி , மகாத்மா காந்தியுடன் மிக நெருக்கமாய் பழகியவர் , அவரையே இன்றுவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு அவர் வழி நடப்பவர் . வயது 95  ஐ நெருங்கினாலும் இன்னும் இளமை மாறாத மிடுக்கு நடை , கண்ணாடி போடாத களங்கமில்லா கண் பார்வை , அவர் கதர் உடுத்தி தெருவில் நேர்கொண்ட பார்வையுடன்  நடந்து வந்தால் ராஜநடைதான்.நம்மை அறியாமலேயே கைகள் அவரை வணங்கும் .

      அதிர்ஷ்டவசமாக அவர் எங்கள் பக்கத்து வீடு மனிதர் என்பதால் நான் சிறுவயது முதலே அவரை பார்த்து , பிரமித்து ,வளர்ந்தவன் . எனக்கு வாஞ்சிநாதன் என வாஞ்சையுடன் பெயர் சூட்டியதும் அவர்தான். நான் என்றால் அவருக்கு மிக பிரியம் , வாஞ்சி ... வாஞ்சி என வாய் நிறைய அழைத்து கொஞ்சி மகிழ்வார் .இன்று நானும் படித்து , வேளையில் சேர்ந்து திருமணம் ஆகி , குழந்தை குடும்பம் என்று ஆனாலும் , இன்றும் அதே மாறாத அன்பு , ஆதரவு,அரவணைப்பு அவர் இளமை போலவே மாறாதிருக்கின்றது. அவரின் பிள்ளைகளும் படித்து பம்பாய் , தில்லி என இருந்தாலும் அவர் இன்னும் எங்கள் ஊரில் தான் வாசம் , கேட்டால் இந்த ஊரை போல எது வரும் என்பார் , நானும் அதை பற்றி அதிகம் கேட்பதில்லை , ஏனென்றால் எனக்கும் அதில் முழு உடன்பாடு உண்டு .

     என்னதான் பெரிய வேலையில் இருந்தாலும் , இரு குழந்தைக்கு தந்தை என்றாலும் , இந்த சொந்த ஊருக்கு வரும் போது நான் குழந்தை தான். கவலை மறந்து போகும் , துயரம் தொலைந்து போகும் , பொறுப்பு பறந்து போகும் , இன்னும் சொல்வதென்றால் , நகர வாழ்க்கை எனும் நரக வாழ்க்கையில் சிக்கி மூச்சி திணறும் எனக்கு எங்கள் ஊர் விஜயம் தான் ஆக்சிஜன். என் தாயின் மடியில் படுத்து இருப்பதை போல ஒரு சுகம் .


     அப்படி ஒருநாள் ஊருக்கு வரும்போது , என் ஊரை பற்றிய புராணத்தை கேட்டு , என் நெருங்கிய நண்பன் ஜெயந்தன் என்னுடன் வந்தான் நான் சொல்வதெல்லாம் உண்மை தானா என கண்டறிய வந்தானா என்பதை நானறியேன் . அவனுடன் வந்த அந்த சனிக்கிழமையில் நாள் முழுவதும் ஊர் சுற்றினோம் , நான் வரும் போதெல்லாம் வாங்கி சாப்பிடும் இலந்த வடையிலிருந்து, ஆட்டுக்கால் சூப் வரை அவனும் ருசி பார்த்தான்.  

     எங்களோடு சேர்ந்து சுற்றிய சூரியன் எலுமிச்சை பழ வண்ணத்திலிருந்து ஆரஞ்சு பழமாக மாறி மறையும் வேலையில், பெரியவர் ராகவன் அய்யா வீட்டுக்கு சென்றேன் என் நண்பனுடன் , வழக்கமான அறிமுக படலம் முடிந்தவுடன் , இந்த இந்திய தேசத்துக்கு காந்தி நிஜமாவே நல்லது செஞ்சிருக்காருன்னு நீங்க நினைகிறீங்களா என்றான் ஜெயந்தன் ,  இந்த கேள்வியால் கலவரமாகி என்னடா இப்படி கேக்குற என்ற என்னை கை அமர்த்தி ராகவன் அய்யா பேச தொடங்கினார் , நினைகிறேனா , அதை முழு மனசோட நம்புறேன் என்றார் .அப்படியா அவர் விட்டு சென்ற எதாவது ஒரு நல்ல விஷயத்தை சொல்லுங்க பார்க்கலாம் இது ஜெயந்தன் , அகிம்சை இது அய்யா , நடுவில் தர்ம சங்கடமாய் நான் .

  அகிம்சையா, அப்பாவி தொண்டர்களை அடி வாங்க உட்டுட்டு இவர் மட்டும் அடிபடாமல் இருந்தாரே , அந்த அகிம்சையா , இவர்  போதித்ததெல்லாம் மற்றவர்களுக்கு தானே இவர் ஒன்னும் அதை கடைபிடித்ததா, தெரியலையே .
இன்னும் சொல்ல போனால் இவர் நிறுத்திய வேட்பாளர் பட்டாபி சீதாராமையா   தோற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக  வெற்றி பெற்ற போது நேதாஜி யின் வெற்றி என்னுடைய தோல்வி என்று கூறினாரே , இதனால் பின்னாளில் இவரின் ஆதரவாளர்களின் ஒத்துழையாமையால், நேதாஜி காங்கிரஸ் பதவியிலிருந்து ராஜினமா செய்தாரே அப்போது எங்கே போனது இவரின் ஜனநாயகம் , இன்னும் பாகிஸ்தான் பிரிவினையின் போது ஜின்னா பாகிஸ்தான் முஸ்லிம்களின் நாடு என சொன்னபோது இவர் இது இந்துக்களின் நாடு என்று சொல்லாமல் தன் சுய புகழுக்காக இந்தியா  மத சார்பற்ற நாடு என்று சொல்லி அன்று தொடங்கிய கலவரம் இன்று வரை தொடர யார் கரணம் உங்கள் காந்தி தானே , ஒன்று பாகிஸ்தான் பிரிக்க படாமல் இருந்திருக்க வேண்டும் இல்லை என்றால் பாகிஸ்தான் முஸ்லிம் நாடாக பிரகடனபடுத்த பட்ட போதே இந்தியாவும் இந்துக்களின் நாடாக மலர்ந்திருக்க வேண்டும் , அவரின் அந்த முடிவுதான் இன்று இந்தியாவின் எல்லா பின்னடைவுகளுக்கும் காரணம் , இன்னும் இது போல் சொல்லிக்கொண்டே போகலாம், அவரின் சொந்த புகழுக்காக எங்களை அடகு வைத்து விட்டு போனார். இவர் ஜெயிலில் இருந்த போது கூட எந்த கஷ்டங்களையும் அனுபவிக்கவில்லை , வ .உ . சி, சுப்ரமணிய சிவா போன்றோர்கள்  பட்ட கஷ்டங்களின் நிழல்  கூட இவர் மேல் படவில்லை. அன்று இருந்த சுயநல தலைவர்களாலும், அப்பாவி தொண்டர்களாலும் நம்ப வைக்கப்பட்ட தலைவர் தான் உங்கள் காந்திஜி , என ஜெயந்தன் பொரிந்து தள்ளி விட்டான்,
                நிலத்தில்  விழுந்த மீனை போல நான் துடியாய் துடித்தேன் . எங்க ஊரே வணங்கும் ஒரு உத்தமரிடம் இப்படி வகை தொகை இல்லாமல் பேசுகிறானே என்ன செய்வது என்று புரியாமல், தெரியாமல் டேய்  நீ வீட்டுக்கு போடா , நான் அப்பறமா வரேன் என கூறி அவனை அங்கிருந்து அப்புறபடுத்தினேன், ஆனாலும் அய்யாவின் முகத்தை ஏறெடுத்து பார்க்க முடியாமல் தவித்தேன் , நெளிந்தேன் , ஒரு வழியாக தெளிந்து அய்யா என்ன மன்னிச்சிடுங்க , அவன் எபோதுமே இப்படிதான் எல்லாம் தெரிஞ்ச மாதிரி  எதாவது உளறி கொட்டுவான் , எனக்காக நீங்க அவனை மன்னிக்கணும் , என்னை அறியாமலேயே , அவரின் பதங்களில் சரணடைந்தேன் , கண்களில் கண நேரத்தில் கட கட வென கண்ணீர் . 

               என்னை தூக்கி அமரவைத்த அய்யா, கணீரென கம்பீரமாய் பேச தொடங்கினார் , வாஞ்சி இப்போ என்ன நடந்து போச்சின்னு இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுற , அவர் அவரோட கருத்துக்களை சொன்னார் அவ்வளவுதானே , அவர் சொன்னதுனால மகாத்மா வின் புகழ் மங்கிடவா போவுது , இதெல்லாம் சின்ன விஷயம் . மகாத்மாவின் உண்மையான தொண்டனின் முதல் தகுதியே சகிப்புதன்மைதான். இதுக்கு நான் கோவப்பட்டேன்னா, அப்புறம் நான் காந்தியவாதியே கிடையாது. ஆனா ஒரு விஷயத்தில் எனக்கு சந்தோசம் தான் , ஏன்னா , மகாத்மா வாங்கி கொடுத்த  சுதந்திரம் தானே இவரை இப்படி பேசவைக்குது, எது எப்படி இருந்தாலும் இவரின் இந்த சுதந்திர சிந்தனைக்கு , பேச்சுக்கு காரணம் மகாத்மா என்பதில் பெருமை தான். இந்த இந்திய தேசத்துக்கு சுதந்திரம் புகழுரதில மட்டும் இல்லை  இகழுரதிலேயும் இருக்கு . இவரின் கருத்துக்களை நான் எதிர்க்காமல் இருக்கிறதில்தான் அவரின் சுதந்திரம் இருக்கு.அவரின் சுதந்திரத்துல நான் தலையிடாம இருக்கிறதில்தான்ஒவ்வொரு காந்தியவாதியின் கண்ணியம் இருக்கு, ஒருவரின் சுதந்திரத்தில் நான் இடையூறு செய்யாதிருத்தல் மகாத்மாவிற்கு நான் செய்யும் சேவை ,இன்னும் கடமை . எனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லை,மௌனத்தை விட பெரிய அகிம்சை இல்லை ,  நீ கவலை படாம போய்ட்டு வா , என கூறிய ராகவன் அய்யா முன்பை விட என்னில் விஸ்வரூபமெடுத்து உயர்ந்து நின்றார் .


       
அன்பன் 
ARR

Saturday, 26 March 2011

அனைவருக்கும் வண்ணமிகு வணக்கம் !

அனைவருக்கும் வண்ணமிகு வணக்கம் !


எல்லோரையும் போல் எனக்கும் ஏதாவது எப்போதாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போதும், என்னுளே ,என் ஓரத்திலே ஒளிந்து ஒலித்து கொண்டே இருக்கும் அதன் தொடர்ச்சியே இந்த முதல் முயற்சி . இதை தொடங்கும் முன் என்னுடைய எல்லா எழுத்துக்களையும் நல்லா இல்லை என்றாலும் ஆர்வமாய் , அதிசயமாய் , ஆச்சர்யமாய் ரசித்த என் அன்பான அம்மாவுக்கு என் முதல் நன்றி , பின் அதனை தொடர்ந்து என்னுடன் பிறந்ததற்காகவே அவைகளை சகித்து கொண்ட என் உடன்  பிறந்தவர்களுக்கு என் அடுத்த நன்றி ,பட்டிமன்றம் , கவிஅரங்கம் , வழக்காடு மன்றம், உரை வீச்சு , என்று வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் என் திறமையை பிரகடனபடுத்த பிரயத்தனபட்டு நான் கொட்டி தீர்த்த என் உளறல்களை உள்வாங்கிய ஹரித்ராநதி தெருவாசிகளுக்கு தெவிட்டாத நன்றி , முக்கியமாய் இது போன்ற ப்ளாக் களை தன் எழுத்தால் அறிமுகப்படுத்திய என் நண்பன் ஆர் வி எஸ் எம் க்கு முழு நன்றி ,நிறைவாய் என் குறைகளை முழுதாய் ஏற்று என்னை முழுமையாக்கிய என் மனைவிக்கு மகிழ்வான நன்றி .

அன்பன்
ARR

கல்லூரி காலங்கள் ..... MCE


 

கல்லூரி காலங்கள் ..... MCE

கல்லூரி காலங்கள் .....

இது என் நினைவலைகளில் ஒருஅலை 

        அனைவரையும் போலவே எங்களது கல்லூரி வாழ்கையும் கவலை இல்லாமலே கடந்துபோன இன்னும் கலந்துபோன , கவர்ந்துபோன காலங்கள்தான்,இறந்த காலங்கள் மீண்டும் திரும்பி வராது என்பது நிதர்சனமான உண்மை என்றாலும் கனவிலாவது வராதா என்பது  என்னுடைய சின்ன பெரிய ஆசை .என்னுடைய கல்லூரி நண்பர்களில் என்னால் மறக்க முடியாத , என்னிலிருந்து பிரிக்க முடியாத நண்பர்கள்  ராசிபுரம் செந்தில் , திருச்சி ஏர்போர்ட் ஸ்ரீனி , உறையூர் சாலைதெரு கேப்ரியல், ஈரோடு அபுதாகிர் , தள்ளபாடி சுகா, கரூர் செல்வா , நெய்வேலி ரமேஷ் ,மணப்பாறை சத்யா ,சமயபுரம் பூபதி,திருவாரூர் போலிஸ் சுரேஷ் , லால்குடி ஜான்சன் ,துறையூர் கே கே ,D R K என்கிற ரவிக்குமார் , இப்படி நிறைய நிரம்பா சொல்லிக்கொண்டே போகலாம் . பொதுவாகவே பொறியியல் கல்லூரிகளில் ஹாஸ்டல்களில் தங்கி படிப்பவர்கள் ஒரு குழுவாகவும் , நேரடியாக தினமும் வந்து செல்லும் மாணவர்கள் ஒரு குழுவாகவும் இருப்பாகள் அதற்காக இருவரிடமும் பிரச்னை என்று அர்த்தம் இல்லை , ஒருவரோடு ஒருவர் பேசும், பழகும் நேரம் பொறுத்தே நட்பு பலப்படுவது இயல்பு .நான் முதல் இரண்டு  வருடங்கள் ஹாஸ்டல் வாசியாகவும் அடுத்த இரண்டு வருடங்கள் டேஸ்காலர் ஆகவும் இருந்ததால் எனக்கு எல்லோரிடமும் ஒரே மாதிரியான நட்பு வலிமையாக இருந்தது .

கல்லூரியின் முதல் நாள் /முதல் ஆண்டு 
         கல்லூரியில் புதிதாய் சேரும் மாணவர்கள் ராகிங் என்னும் ஒரு வித்தியாசமான அறிமுக படலத்தை சந்திக்காமல் இருக்கவே முடியாது , இருக்கவும் கூடாது .  கல்லூரி முதல் நாளில் நானும் அதை சந்திக்க நேர்ந்தது , என் சீனியர்கள் சும்மா வந்து என்னிடம் பேர் கேட்டதற்கே , தீவிரவாதிகளை கண்ட கேப்டன் போல நானும் கோவை சண்முகமும் வெகுண்டெழுந்து அன்றைய கல்லூரி செய்திகளில் முக்கிய செய்தியாணோம் , பின்பு அதே முக்கிய செய்திக்காக எங்க இருவரையும் 2nd , 3rd , 4th இயர் சீனியர்கள் மொத்தமாக முக்கி முக்கி எடுத்தது ஒரு தனி சோக கதை, ஆக்ரோஷமான நாங்கள் அந்த மொத்தலில்  அடங்கி ஒடுங்கி போனோம். 

கல்லூரியின் இரண்டாம் ஆண்டு 
          ராகிங் இல் நொந்து நூலான நாங்களும் இரண்டாம் ஆண்டு மாணவர்களானதால் , இந்த முறை எங்கள் முறை, அந்த இரண்டாம் ஆண்டு கல்லூரியின் முதல் நாளில் கிரிடம் சூட்டாத ராஜாவை போலவே கல்லூரியில் நுழைந்தேன், நல்ல அடிமைகள் சிக்கினார்கள் என்ற களிப்போடு இருந்த எனக்கு மீண்டும் ஓர் பேரிடி அதே  3rd , 4th இயர் சீனியர்கள் மூலமாக , நான் என் கல்லூரியின் முதல் நாளில் தெரியாத்தனமாக துள்ளியதால் (பின்பு என்னை அள்ளி அள்ளி துவைத்தது வேறு கதை ) நான் யாரையும் ராகிங் செய்யகூடாது என்ற புதிய ,வலிய, அநியாயமான உத்தரவு என் உற்சாகத்தை உள்ளே உதைத்து உருட்டி உடைத்து  உட்காரவைத்தது.   கிரிடம் சூட்டாத ராஜாவாக ஆசைப்பட்ட நான் அது கிட்டாமல் கிலிபிடித்த கீரிபிள்ளையானேன். என்ன கொடுமை இது , கைக்கு எட்டியது விரலுக்கு எட்டவில்லையே, ஆனாலும் என் அன்பான சீனியர்களுக்கு தெரியாமல் என் ராகிங் ஐ தொடங்குவது என முடிவெடுத்தேன்.

முதல் ராகிங் செய்த அனுப( பா)வம்

        அன்று உணவு இடைவேளையில் எனக்கு கிடைத்த இடைவெளியில் ஒரு முதலாம் ஆண்டு வகுப்பறையில் அலப்பறையாக நுழைந்தேன் , முதலில் தென்பட்ட ஒரு பாவப்பட்ட ஜீவனை என்னருகே அழைத்தேன் , ரொம்ப ஸ்டைலாக (பல நாள் ப்ராக்டிஸ் செய்த கேள்விகள் ) வாட் இஸ் யுவர் நேம் ? என்றதற்கு முருகேசன் சார்  என்று வந்த பதிலால் தைரியமடைந்த நான், க்ரோர்பதி அமிதாப் போல அடுத்த கேள்வியை வீசினேன், வாட் இஸ் யுவர் ஹாபி? என்ற எனக்கு அடுத்து வந்த பதில் என்னை நிலைகுலைய செய்தது அந்த பதில் சரியா இல்லை தவறா என்று உறுதி படுத்த முடியாத , கணிக்க முடியாத , யூகிக்க முடியாத ஆங்கில புலமை என்னுடையது , அந்த பதில் ஆஸ்கிங் சாங்க்ஸ் சார்  , என் முகத்தில் தெரியும் களேபரத்தை மறைத்து கொண்டு இன்னும் ஸ்டைலாக ( எனக்கு ஸ்டைலாக கேக்றோம்ன்னு தோணியது , அவனுக்கு எப்படி தோன்றியதோ ) என்னடா சொல்லுறே என்று வசதியாக தாய் தந்த தமிழ் மொழிக்கு மாறினேன் உடனே அவனும் அதற்கே காத்திருந்தால் போல் தமிழில், பாட்டு கேக்கறது சார் என்றான் , ஆங்கிலத்தில் பாதி A கூட முழுதாக தெரியாதா நானே சிரியோ சிரியென சிரித்தேன், அப்படி பட்ட ராகிங் அனுபவ தொடக்கம் என்னுடையது

மூன்று  மற்றும் நான்காம் ஆண்டு அனுபவங்கள் வரும் பதிவுகளில் ..................  

அன்பன்
ARR

ம தி மு க முடிவு மதியூக முடிவா ?தமிழக அரசியலில் யாராலும் தவிர்க்க முடியாத தலைவர்  வைகோ என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமும் இருக்க முடியாது, 


‘அரசியலில் நேர்மை;    பொதுவாழ்வில் தூய்மை ;     இலட்சியத்தில் உறுதி’ என்ற
 கொள்கை முழக்கங்களை கொண்டு அரசியலில் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் நாள், சென்னை, தியாகராய நகரில் உள்ள ‘தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் தொடங்கப்பட்ட இயக்கம் தான் ம தி மு க. தி மு கவில் இருந்து எம் ஜி ஆர் விலகி அ தி மு க வை துவக்கியபோது ஏற்பட்ட எழுச்சி ம தி மு க தொடங்கப்பட்டபோதும் மக்களிடையே இருந்தது,வை கோ சென்ற இடமெல்லாம் கூட்டம் . ம தி மு க சந்தித்த முதல் பொது தேர்தல் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது, ஆனால் துரதிஷ்டவசமாக அன்று வீசிய ஜெயலலிதா எதிர்ப்பு அலையில் வை கோ கூறியதை போலவே கட்டு மரங்களுடன் சேர்ந்து சந்தன மரங்களும் அடித்து செல்லப்பட்டன .ஆனாலும் 1996ல் போட்டியிட்ட ம.தி.மு.க., 5.78 சதவீத ஓட்டுகளை பெற்று போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வை கோ உட்பட தோல்வியடைந்தனர்.அன்று தொடர்ந்த அதே தனித்தன்மையை வை கோ தொடர்திருப்பாரேயானால் இன்று தமிழகத்தில் ம தி மு க ஒரு அசைக்க முடியாத சக்தியாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

         ஆனால் வை கோ செய்த முதல் அரசியல் தவறு 1998 இல் அ தி மு க வுடன் கூட்டணி அமைத்தது , யாரை ஊழல் ராணி என பட்டி தொட்டி எல்லாம் பேசினாரோ , அதே ஜெயலலிதா உடன் கூட்டணி அமைத்தது, அந்த தேர்தலில் ம தி மு க . சிவகாசி, பழநி, திண்டிவனம் ஆகிய மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இரண்டாவது தவறு யாரை எதிர்த்து தனிக்கட்சி துவங்கினரோ அதே கருணாநிதியுடன் 1999 கூட்டணி அமைத்தது , இவரை கட்சியை விட்டு கருணாநிதி நீக்கிய போது  வைகோவைக் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி, நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர், தீக்குளித்து மடிந்தனர். உலகில் வேறு எந்த இயக்கத்திலும், கட்சித்தலைமையைக் கண்டித்து, இவ்வாறு தீக்குளித்த மடிந்ததாக வரலாறு இல்லை.  இந்த தொண்டர்களின் உணர்வுகளை கொஞ்சமும் மதிக்காமல் தி மு க உடன் கூட்டணி கண்டார் .1999 நாடாளுமன்றத் தேர்தலில், சிவகாசி, பொள்ளாச்சி, திண்டிவனம், திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றது. இரண்டு அமைச்சர்கள் பொறுப்பு வகித்தனர்.


     மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்ற கதையாக 2001 சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி ம தி மு க வை அழிக்க பார்க்கிறார் எனக்கூறி 2001 தேர்தலில் 211 இடங்களில் தனித்து போட்டியிட்டு 4.65 சதவீத ஓட்டுகள் பெற்றது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது . பின் அமைந்த  ஜெயலலிதா அரசாங்கத்தால் இவர் மீது பொடா சட்டம் பாய்ச்சப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார் , மீண்டும் 2004 இல் தி மு க வுடன் தேர்தல் உடன்பாடு 2004 நாடாளுமன்றத் தேர்தலில்,  ம.தி.மு.க. சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது.அடுத்து வந்த 2006 சட்டமன்ற தேர்தலில் , தி.மு.க., கூட்டணியில் தொகுதி பிரச்னையால், கடைசி நேரத்தில் விலகி, அ.தி.மு.க., கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டது. இதில், ஆறு இடங்களில் வெற்றி பெற்று 5.98 சதவீத ஓட்டுகளை பெற்றது. மீண்டும் அவர் அ தி மு க உடன் கூட்டணி சேர்ந்தது ம தி மு க வுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த கால கட்டங்களில் மதிமுக வின் நிலையற்ற தன்மையாலும் , ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறமுடியாமலும் பல இரண்டாம் கட்ட தலைவர்கள் கட்சியை விட்டு விலகினார்கள் , இது ம தி மு க விற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. இன்று அதே காரணத்தை சொல்லியே அ தி மு க , ம தி மு க விற்கு குறைந்த தொகுதிகளை கொடுக்க முன்வந்துள்ளது, ஆனால் இவரை விட்டு விலகி போனவர்கள் எல்லாம் கூறிய ஒரே காரணம் அ தி மு க வுடன் உடன்பாடு கொண்டதை கூறித்தான் ( 1998 பொன் . முத்துராமலிங்கத்திலிருந்து  2010 கண்ணப்பன் வரை ) யாரை எதிர்த்து கட்சி கரைந்ததோ அந்த கட்சியே இன்று இவரை கரைந்த கட்சி என்று காரணம் சொல்லி தனித்துவிட்டுள்ளது.

சரி எல்லாவற்றிக்கும் பிறகும் இன்று ம தி மு க தொண்டனும் தமிழக நடுநிலை வாக்காளர்களும் வை கோ விடம் எதிர்பார்ப்பது என்ன ??????????????     தேர்தல் புறக்கணிப்பை புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் , புறக்கணிப்பு என்பது புறமுதுகிட்டு ஓடுவதை போல அல்லவா? 
அ தி மு க , தி மு க விற்கு பிறகு எல்ல தொகுதிகளிலும் , நகரத்திலும் ,ஒன்றியத்திலும் கட்சியின் கட்டமைப்பை கனமாக வைத்திருக்கும் ஒரே கட்சி ம தி மு க , எந்த ஜாதி சாயலும் பூசிக்கொல்லாத ஒரு கட்சி ம தி மு க, தோல்விகளை கண்டு கலங்காத கட்சி ம தி மு க. இத்தனை தகுதிகளை ஒருங்கே கொண்ட ம தி மு க தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறுவது அந்த கட்சி தொண்டர்களை சோர்வடையவே செய்யும் . எல்லா கட்சி தொண்டர்களும் தேர்தல் திருவிழாவில் பங்கு பெரும் போது , உங்களுக்காக (வை கோ ) உழைத்து இன்றுவரை அதன் பலனை அனுபவிக்காமல் இருக்கும் அந்த தொண்டனின் நிலையை எண்ணிபார்க்க வேண்டாமா?

இந்த தேர்தல் ம தி மு க தன்னை மீண்டும் தமிழக அரசியலில் நிலை நிறுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பு, ம தி மு க தொண்டர்கள் வாய் நிறைய வருங்கால முதல்வர் வை கோ என்றழைக்க காத்து கிடக்கிறார்கள் , அவர்களுக்காகவாவது ம தி மு க தேர்தலில் பங்கு பெறவேண்டும், 234 தொகுதிகள் இல்லை என்றாலும் கூட அவர்கள் பலமாக இருக்கும் 35 தொகுதிகளிலாவது (அ தி மு க விடம் கொடுத்த பட்டியலின் படி ) போட்டியிட வேண்டும் என்பதே உண்மையான ம தி மு க தொண்டனின் எதிர்பார்ப்பு . இது வரை நடந்த தேர்தல்களின் படி நீங்கள் தனித்து நின்றாலும் , கூட்டணியில் இருந்தாலும் உங்களுக்கென்று ஒரு நிலையான ஓட்டு வங்கி உள்ளது (ஏறக்குறைய 5% ), இந்த தேர்தலில் நீங்கள் தோற்றாலும் அது ம தி மு க விற்கு ஒரு நல்ல அடித்தளத்தை அமைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .


வாழ்த்துக்கள் திருமிகு .வைகோ 
பல்கட்டும் பலம் வளரட்டும் வளம் 


அன்பன்
ARR.