Showing posts with label பிரிவு. Show all posts
Showing posts with label பிரிவு. Show all posts

Thursday, 8 March 2012

சந்தேகமும் நம்பிக்கையும்........


சந்தேகம் சங்கடங்களின் சங்கமம்
நம்பிக்கை நகர்தலின் நற்குணம்.

ஆனாலும்….

சந்தேகத்தின் மீதான நம்பிக்கையும்
நம்பிக்கையின் மீதான சந்தேகமுமே
நம்மை வழி நடத்துகிறது


சந்தேகம் சலனத்தின் குறியீடு
நம்பிக்கை அறியாமையின் அளவீடு


சந்தேகத்தின் முழுமையில்
நரகம் உருப்பெறுகிறது

நம்பிக்கையின் முழுமையில்
சொர்க்கம் விடைப்பெறுகிறது


குருடனுக்கு காட்சிகளில் சந்தேகம்
பார்வையில் நம்பிக்கை
பரிவறியாதவர்க்கு நட்பில் சந்தேகம்
காதலில் நம்பிக்கை

இரண்டுமே எரிகின்ற கொள்ளி
இதில் எந்த கொள்ளி
நல்ல கொள்ளி.

நம்பிக்கை
யோசிக்க விடுவதில்லை
சந்தேகம்
வாழவே விடுவதில்லை

ஆகவே
அனைத்தையும் அன்பால்
உணர்வோம்
உணர்த்துவோம்

அன்பே
சந்தேகத்திற்கும்
நம்பிக்கைக்கும்
அப்பாற்பட்டது – செயலில்
அளப்பறியது.

அன்பன் 
ARR

Sunday, 27 November 2011

அம்மாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்.




தாயே தவமே, பண்பே பயனே!
வாழ்வே வரமே, அன்பே அறனே!
பாசத்தின் பிரமாண்டமே! ஆட்டுவித்த அற்புதமே!
பிரியத்தின் பிரகடனமே! சாதித்த சகாப்தமே!

நீ சென்றது
யாராலும் தொடமுடியாத தூரம்!
ஆனாலும் இது
யார் தூக்கிவைத்த பாரம்!

புரியாத புதிரே, பிரியாத உயிரே!
உள்ளங்கை தண்ணீரே,  உறையாத கண்ணீரே!
நீ மற்றவர்களால் உணரமுடியாத உயரம் – ஆனாலும்!
நீ மறைந்தது சொல்லிமாளா துயரம்!


எங்களின்..... 
சேவைகள் மறுத்த கண்மணியே,
தேவைகள் தீர்த்த தேவதையே,
தீர்ந்து போன தேன்மொழியே,
விட்டுச் சென்றதேன் வான்வழியே! 

பெறுதலுக்கரிய பொக்கிஷமே,
வீழ்த்தமுடியா வைராக்கியமே,
இருள் அழித்த ஒளியே,
நிஜமாய் நீயில்லை இனியே!

துன்பம் துடைத்த தூயவளே,
இன்பம் இழைத்த இனியவளே,
பாசம் பழக்கிய பனிமலரே – இனி,
எங்களுக்கு உனைப்போல் யாருளரே!

ஓய்ந்து விட்ட ஓவியமே!
கரைந்து விட்ட காவியமே!
வளரமுடியாத வளர்பிறையே – நீ
வரமுடியாதா மறுமுறையே ?

வரமுடியாதா மறுமுறையே??

இன்று (28/11/2011) எங்கள் அம்மாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்.
அன்பன்
ARR
ARR

Thursday, 7 July 2011

வீணே வெறுத்தோம் உறவை மறந்தோம்

Eclipse

என் உருவை பார்க்கும் 
போதெல்லாம் 
நீயே தெரிந்தாய் 
என்  எழுத்தை எழுதும்
போதெல்லாம்
உன் எழுத்தின் பிம்பங்கள் 

விரல்களுக்குள்ளே 
விரோதம் வந்த 
வினோதம் நம்
பிரிவு 
தண்ணீர் போல
பிரிந்தாலும் 
தன்மை மாறாதது நம்
உறவு 

ஒன்றோடொன்று 
சம்பந்தம் இல்லாமல்
தனித் தனி 
தீவுகளாக இருந்தாலும்
நாம் வாழ்ந்த 
பிரபஞ்சம் ஒன்றுதான் 

உருவானதும் 
கருவானதும் 
ஒரே கருவறைதான் 
வாழ்வதும் 
வகுப்பதும் 
ஒரே வழிமுறைதான்


சின்ன மிதிவண்டிகளைப்
பார்க்கும் போதெல்லாம் - உன்
செல்ல பிறந்தநாள் 
பரிசு இன்றும்
ஞாபகம் வராமல் இல்லை 

ஒருமுறை நான் 
வெளியூர் செல்கையிலே
வழியனுப்ப வந்த நீ
மறைந்து மறைந்து 
கண்ணீர் மறைத்தது 
இன்னும் 
மறையாதிருக்கிறது

துரோகங்களை  
தொட்டுவிடவில்லை 
நாம்
உறவின் உரிமைகளை 
விட்டுவிடவில்லை 
நாம்

ரயில் சினேகங்களையும்
மதிக்கும் நாம் - நம்
உயிர் சினேகத்தை 
மறுத்தது துளியும் 
நியாயமில்லை

நம் 
தவறுகளை விட 
குறைகளை விட
கோபங்களை விட
குரோதங்களை விட
பெரியதல்லவா 
நம் சகோதரத்துவம்.

காலத்தின்
களத்தில்
சூழ்நிலையால் 
சுருங்கிப்போனது 
நம் உணர்வு  
காலத்தின்
மாற்றத்தில் 
சந்தோஷத்தில் 
மலரட்டும்
நம் உறவு 

அன்புடன்
சகோதரன் 
ARR