Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Monday, 30 January 2012

தரமும் தகுதியும் தாழ்ந்து போன இந்திய கிரிக்கெட் அணி




இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு, மிகப்பெரும் தோல்வியையும் அவமானத்தையும் தந்திருக்கிறது நம் இந்திய அணி அல்லது பி சி சி ஐ அணி. ஒவ்வொரு இந்தியர்களின் ரத்தத்திலும், சித்தத்திலும் இரண்டற கலந்து விட்ட கிரிக்கெட் ரசனை ஒவ்வொரு இந்திய வீரரையும் உச்சத்தில் அமர வைத்து அழகு பார்த்தாலும் கொஞ்சமும் பொறுப்பின்றி கிரிக்கெட் விளையாட்டை விளையாட்டாய் விளையாடிய இந்திய அணியை எவ்வளவு விளாசினாலும் தகும்.


இந்த பதிவில் ஒவ்வொரு வீரரின் பேட்டிங், பௌலிங் ஸ்டாடிஸ்டிக்ஸ் சொல்லி என்னையும் உங்களையும் வேதனை படுத்த விருப்பம் இல்லை, தனி வீரரைப் பற்றிய விமர்சனமாகவும் இது இருக்காது. தொடரின் துவக்கத்திலேயே இந்திய அணியை காகித புலிகள் என விமர்சனம் செய்திருந்த ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளின் தீர்க்கதரிசனத்தை ஆரம்பத்தில் எதிர்த்தாலும் கொஞ்சம் வெறுத்தாலும் இப்போது அதை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை, அவர்களின் தீர்க்கதரிசனத்தை முழுமையான உண்மையாக்கிய பெருமை நமது வீரர்களையே சேரும்.





ஒவ்வொரு இந்தியனின் விளையாட்டு ஆர்வத்தை பல வழிகளில் பயன்படுத்தி அவனின் உழைப்பை உறிஞ்சி பணமாக்கி உலகத்திலேயே மிகவும் பணக்கார கிரிக்கெட் போர்டாக தன்னை நிலை நிறுத்தி கொண்டிருக்கும் பி சி சி ஐ, இந்த விளையாட்டை முன்னேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த தோல்விக்கு காரணமாக அவர்கள் சொல்லப்போகும் காரணம் அரதபழசான ஆஸ்திரேலியாவின் ஆடுகளம், இது என்ன யாருமே அறியாத ரகசியமா என்ன?, ஒவ்வொரு முறையும் உதை வாங்கி வரும் போதும் அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல், இந்திய அணியின் தரத்தை தாழ்த்தும் பி சி சி ஐ க்கு அறிவோ? அக்கறையோ இல்லாமல் இருப்பதுதான் இதன் காரணம்.


இவர்களிடம் இருக்கும் பணத்தை கொண்டு அதேமாதிரியான ஒரு ஆடுகளத்தை உருவாக்கி இளம் வீரர்களுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களைக் கொண்டே பயிற்சி அளிக்கலாம், கூடுதலாக ஆஸ்திரேலியாவிலேயே ஒரு ஆடுகளம் அமைத்து அங்கு நம் வீரர்களை அழைத்து சென்று முன்னாள் சிறந்த பந்து வீச்சாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கலாம்.பல நாட்டு சிறந்த ஆடுகளம் மாதிரியான ஆடுகளம் அமைத்து பயிற்சி அளிக்கலாம்,இதற்கு மெக்ராத், டொனால்டு, அக்ரம்,வால்ஷ்,போன்றோர்களை பயன் படுத்தலாம் அவர்கள் கேக்கும் தொகைக்கு அதிகமாகவே நம்மிடம் பணம் உண்டு. இது நம்முடைய பேட்ஸ்மேன்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.


உள்ளூர் ஐ பி எல் மாதிரியான பிற நாட்டு 20 - 20 ஓவர் போட்டிகளில் நம் அணி வீரர்களை விளையாட அனுமதிக்கவேண்டும், இது அந்த நாட்டு ஆடுகளத்தை அறிய ஒரு வாய்ப்பாக அமையும், அப்படித்தானே நம் நாட்டு சுழலையும்,இந்திய வீரர்களின் பலகீனத்தையும் , மித வேக ஆடுகளத்தையும் ஐ பி எல் மூலமாக வெளி அணிவீரர்கள் அறிந்து கொள்கிறார்கள். 


என்னதான் கரடியாக கத்தினாலும் கிரிக்கெட் பார்ப்பதை அதன் ரசிகர்கள் விடப்போவதில்லை, அவர்களும் மாறப்போவதில்லை ( நானும் தான்) இதே இந்திய அணி அடுத்து ஏதாவது ஒரு சிறு வெற்றி பெற்றாலும் கோபம் எல்லாம் வற்றி போய் அவர்களின் புகழ் பாடத்தான் போகிறோம் ஆனாலும் என்னில் பொங்கி வரும் ஆற்றாமையையாவது இந்த பதிவு குறைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவு.


அன்பன் 
ARR. 

Saturday, 2 April 2011

வென்றோம் உலக கோப்பை 2011

வென்றோம் உலக கோப்பை 2011



 ஒவ்வொரு இந்தியனின் 28 வருட கனவு , தவம் ,இன்னும் சுவாசம் கூட இந்தியாவின் தேசிய விளையாட்டாகி போன கிரிக்கெட் -இல் உலக கோப்பை எனும் அந்த உலோக கோப்பை , யாருமே எதிர் பார்க்காமல் 1983 இல் உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், தூக்கியது கப்பை மட்டுமல்ல, இந்தியாவின் கெளரவம் , அந்த விளையாட்டின் மீதான இந்தியர்களின் ஆர்வம் . அந்த மாயா ஜால 1983 வித்தைக்கு பின் , இந்தியாவே இந்த விளையாட்டில் சொக்கி போய் சுற்றி சுற்றி வந்தது . 

பல முறை இந்திய ரசிகர்களின் கனவை பொய்யாக்கினாலும்,இந்த ஆட்டமே வேண்டாம் என துறவறம் பூண்டாலும்  அடுத்த ஆட்டத்திற்குள் , அந்த ஆட்டத்தினுள் இழுக்கும் சூட்சமம் என்ன வென்று இன்றுவரை யாருமே அறியார் .1987 இல் உலக சாம்பியனாக உள்ளே நுழைந்த இந்திய அணி செமி பைனல் வரை முன்னேறி இங்கிலாந்துவிடம் தோல்வி,. அடுத்து 1992 முதல் ரவுண்டிலேயே காலி, 1996 இல் இலங்கையிடம் செமி பைனலில் தோல்வி , 1999  இல் சூப்பர் சிக்ஸ் இல் காலி , அடுத்து வந்த 2003 இல் எல்லோராலும் இந்த முறை வென்றே தீருவோம்  என்றே நம்பப்பட்ட பைனலில் ஆஸ்திரேலியாவிடம், படு தோல்வி . 2007 உலக கோப்பையில் உலக்கை அடி தோல்வி .

இப்படி கடந்த 28 ஆண்டுகளாக ஆட்டம் காட்டிய இந்த உலோக உலக கோப்பை , இந்த முறை நம் அணியின் கேப்டன் தோனி இன் தலைமையில் இளமையும் , அனுபவமும் கலந்த கலக்கல் அணியாக புத்தம் புது எழுச்சியுடன், சென்ற மூன்று ஆண்டுகளில் சரித்திரம் பல படைத்து , வென்றே தீருவோம் என்றே சொல்லி,கில்லியாக இந்த முறை களமிறங்கியது .

இத்தனை ஆண்டுகளில் நம் அணியில் நல்ல பிளேயர் விளையாட மாட்டனா என்று எண்ணிய காலம்  போய் இந்த முறை நல்ல பிளேயர் எல்லாம் விளையாட முடியலையே என்று பெருமை பொங்கும் படியான  டீம் அமைந்தது , பந்து வீச்சு தான் சற்று பலவீனம் என்றாலும் , பேட்டிங்கில் பட்டையை கிளப்பினார்கள் நம்மவர்கள் .அதிலும் சேவாக் , சச்சின் , யுவராஜ் , கம்பீர் , கோஹ்லி, ரெய்னா என கலக்கல் அதிரடி சரவெடி தான் . 

மிகவும் கடினமான பிரிவில் இருந்த இந்தியா , தென் ஆப்பிரிக்காவுடன் போராடி தோற்றது , இங்கிலாந்துடன் சதிராடி சமன் செய்தது , பங்களாதேஷ் , அயர்லாந்து , நெதர்லாந்து ,மேற்கிந்திய தீவுகளுடன் வெற்றியை வெகுமானித்தது.அடுத்து நாக் அவுட் முறையிலான போட்டிகள் . காலிறுதியில்  உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை , அசால்டாக அடித்து , அமோக வெற்றியை பெற்றது . அரை இறுதியில் பங்காளி பாகிஸ்தானை புதுப் புனலாய் புரட்டி எடுத்து, இறுதியில் புகுந்தது .

இறுதியில் இறுமாப்பு இலங்கையுடன் இன்று மோதியது இந்தியா .டாஸ் இல் வென்ற இலங்கையின் அணி தலைவர் சங்ககரா பேட்டிங்கை தேர்வு செய்ய , தொடங்கியது , தொடரின் இறுதியாட்டம் . தரமான தரங்கா தட்டு தடுமாறி 2 ரன்னில் அவுட் ஆக, தில்லான தில்ஷனும் சங்கா வும் இலங்கையை நிலை நிறுத்த முயற்சித்தனர். தில்ஷன் முப்பது சொச்ச ஓட்டத்திலும், சங்கா 48ஓட்டத்திலும் பெவிலியன் திரும்ப , அடுத்து வந்த மகத்தான மகிலா  இலங்கை அணிக்கு வெற்றி பாதையை தான் சதத்தால் காட்ட துவங்கினார் , அடுத்து வந்த 2 ஆட்டக்காரர்களும் சொற்ப ரன்னில் அவுட் ஆக பின் வந்த பின் வரிசை பிளேயர்கள் குலசேகராவும், பெரேராவும் அதிரடியில் ஸ்கோரை உயர்த்த ஆட்ட நேர முடிவில் இலங்கையின் ஸ்கோர் 274/6.

275 ரன் எடுத்தால்  வெற்றி என்ற கடின இலக்குடன் , ஆட தொடங்கிய சேவாகும், சச்சினும் சொற்ப ரன்னிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர் , மலிங்காவின் வேகத்தில். ஆனால் அடுத்து ஆடவந்த கம்பீர் , கம்பீரமாய் தன் ஆட்டத்தை துவக்க , துணைக்கு வீரமான வீராட் , இருவரும் இந்திய அணியின் வெற்றிக்கு ராஜா பார்ட்டை அமைக்க அடித்தளமிட்டனர் , திஷானின் சுழலில் வீராட் வீழ , அடுத்து வந்தது மச்சக்கார மகேந்திர சிங் தோனி , வேகமும் விவேகமும் கலந்து ஆடிய கம்பீரும் , தோனியும் இலங்கையின் பந்து வீச்சை விளாசி , விரட்டி, வெளுத்து எடுத்தனர் . இருவரும் சேர்ந்து 100 ரன்னுக்குமேல்  எடுத்து ஆடிய வேளையிலே 97 ரன்னில் தன் விக்கெட்டை கம்பீர் பறிகொடுத்தார். அடுத்து வந்த யுவன் யுவராஜும் , கேப்டன் தோனியும் வரலாற்று வெற்றியை இந்திய அணியின் இதயத்தில் இசையாய் இணைத்தனர் .

வெற்றிக்கு தேவை பட்ட ரன்னை தன் இமாலய சிக்சரால் நிறைவு செய்த தோனி , இன்றைய தன்னுடைய தன்னிகரில்லா ஆட்டத்தின் மூலம் தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைத்தார் .




ஆட்டம் நிறைவடைந்தவுடன் சச்சினை சக அணிதோழர்கள் தங்கள் தோளில் சுமந்து மைதானத்தை சுற்றிவந்தது , அவர்களின் இதயத்தில் சச்சினின் இடத்தை உலகுக்கு வெளிக்காட்டியது . அழுகையும் ஒரு அழகை கொடுக்கும் என்பது நம்மவர்கள் சிலரின் ஆனந்த கண்ணீரில் தெரிந்தது .


ஒப்பில்லா உயர் வான் புகழ் 

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 

உயிர் ஊட்டிய 

உணர்வு ஊட்டிய 

உரம் ஊட்டிய 

உற்சாகம் ஊட்டிய 

உன்னத தலைவன் தோனிக்கும் 

சாதனை நாயகன் சச்சினுக்கும் 


சரித்திர புகழ் வாழ்த்துக்கள்

இந்த 

இளைய அணிக்கு 

இனிய அணிக்கு

இணையில்லா அணிக்கு

இதய பூர்வமான வாழ்த்துக்கள் 

வென்றோம் ............

உலோக கோப்பை மட்டும் அல்ல 


உலக கோப்பை .................
 உயரிய கோப்பை........................   

அன்பன்
ARR