Saturday, 30 April 2011

அந்நிய தேசத்து இந்தியனின் கண்ணீர்


நினைவுகளில் நனைந்து
ஈரமாகிறது மனம்!
சொந்த பந்தங்கள் 
தூரமாகிறது தினம்!  

சம்பாத்தியமே சுவாசமாகி 
சுருங்கிப்போனது உறவுகள்!
பாசமின்றி பகிர்வின்றி 
கண்ணீராகிறது இரவுகள்!

விருப்பமின்றி நாடுகடந்து 
தத்தளிக்கிறது தனிமை !  
புன்னகையின்றி நகர்புகுதந்து
நரகத்திலும் கொடுமை !


அன்னையின் அன்பை 
அறிய வழியில்லை !
பிறந்த மழலையின் 
முகம்பார்க்க விழியில்லை !


தொலைபேசி தொடர்புகளில் 
தொட்டுக்கொள்ளும் இளமை !
கரம்பிடித்தவளின் குரலில்
குடியிருக்கும் வெறுமை !


பரிவுகளின் பிரிவுகள்
மூடவைக்காது கண்இமை! 
வீடுசெல்ல எத்தனிக்கையில்
போகவைக்காது  கடன்சுமை!


அந்நியதேசத்து இந்தியனாய் 
பணம்பறிக்க வந்தோம் !
அங்கிங்குநகரா அடிமைவாழ்வு
மனம்நொறுக்க நொந்தோம் !      


என்தேசம் துறந்து 
பறவைபோல்  பறந்து 


உறவையெல்லாம் மறந்து 
உணர்வெல்லாம் மரத்து 


உரிமை இழந்து 
உயிர்மை  இழைத்து 


நாங்கள் இங்கு இல்லாமல் இருக்கிறோம்!
தீர்வின்றி தவிக்கிறோம் !


ஓய்வின்றி உழைக்கிறோம்! 
எங்கள் துயரத்தை வார்த்தையாய் வடிக்கிறோம்! 
-----------------------------------------------------------------------------


தூரத்து தேசங்களில் துயரம் துரத்த


இதயம் இரைக்க இரைதேடும்
உதயம் உதிக்க கரைதேடும் 
என் சக இந்தியனுக்கு 
அக சுகம் இழந்தவனுக்கு சமர்ப்பணம்........


அன்பன்
ARR 

பட உதவி :emirates247.com / NDTV 

Friday, 29 April 2011

காதலிக்காக காத்திருக்கிறேன்..கதிரவன் களைத்து 
கரை தொடும் வேளையில் 
புன்னகை பூவிழியாளுக்காக 
பூக்களுடன் 
காத்திருக்கிறேன் ............

தென்புற தென்றல் 
தேகம் தொட்டு செல்ல 
எழிலாள் என்னவளுக்காக 
எதிர் பார்ப்புடன் 
காத்திருக்கிறேன் ............

தாயும் சேயும்  
பாசம் பேசி கொள்ள 
அன்னநடை அவளுக்காக 
ஆர்வமாய் 
காத்திருக்கிறேன் ............

முதுமையில் மூழ்கிய
முதியவர்கள் நட்புடன் நகர 
தேன்மொழி தேவதைக்காக 
தேரைப்போல் 
காத்திருக்கிறேன் ............

கண்கவர் காற்றாடிகள் 
பறவைபோல் பறக்க 
ஒளிவெள்ள ஓவியத்திற்காக 
ஒலியின்றி
காத்திருக்கிறேன் ............

சிங்கார சிறுமியர் 
மான்போல் துள்ளியாட 
மனம்கவர் மன்னவளுக்காக  
மரம்போல்
காத்திருக்கிறேன் ............

வருவோர் போவோர் 
எல்லாம் எள்ளி எனைப்பார்க்க 
அந்த அற்புதத்திற்காக 
அமைதியாய்
காத்திருக்கிறேன் ............

தேங்கிய  நீரில்
கன்னியர்கள் முகம் திருத்த 
உன்னத உயிராளுக்காக 
உரிமையாய்
காத்திருக்கிறேன் ............
  
வசீகர வண்ணங்கள்
கலவையாய் கலந்தாட 
நளினமான நல்லவளுக்காக 
நகராமல் 
காத்திருக்கிறேன் ............


அன்பன் 
ARR

   Friday, 22 April 2011

நியாய வாதிகளா நாம் ??                                இன்று ஊழலை பற்றியும் அரசியல்வாதிகளின் அடாவடிகளை பற்றியும் , வாய் கிழிய நரம்பு புடைக்க பேசி, பேசி காலத்தை கழிக்கும் நான் /நாம் ஊழலற்ற அரசாங்கத்தை வேண்டும், கேக்கும் , தகுதி உள்ளவர்களா ..............இது யாரையும் தனிப்பட்ட முறையில் அல்லது பொத்தாம் பொதுவில்  குற்றம் சாட்டும் நோக்கில் எழுத பட்டதோ அல்லது புனைய பட்டதோ இல்லை,  என்மீதான ஒரு சுய பரிசோதனையின் தொடக்கத்தின் தொடர்வும், அதன் நிறைவுமே காரணி .....

                                 இதை பற்றி சிந்திக்க தொடங்கினால் பின் அதை பற்றி எழுத தொடங்கினால் மிக நீளமான தொடராகவே அது இருக்கும் , அதில் எனக்கு உடன்பாடில்லாததால் என் தமிழுக்கு உறுதியில்லாததால் சிறு குறிப்பு போலவே தொடங்கி முடிக்கிறேன் . 

                                 இன்று நம்மிடையே பெரும் விவாத பொருளாக இருக்கும் , நம்மை ஆளப்போகிறவர்களின் பற்றியதான கருத்து, அரசியல்வாதிகள் எவருமே நல்லவர்கள் இல்லை அவர்கள் நல்லது செய்யபோவதும் இல்லை. இதை கேட்கும் முன் நாம்/நான் நல்லவர்களா , இதுவரை சட்டத்தை மீறி 
எதுவுமே செய்ததில்லையா?, லஞ்சம் கொடுத்ததில்லையா? , லஞ்சம் பெற்றதில்லையா? ,நம்மில் யாராவது லஞ்சம் கொடுக்காமல் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளோமா?,நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியதில்லையா?, சிக்னலில் ஆரஞ்சு விளக்கு எரிந்த பின்னும் வண்டியை நிறுத்தாமல் போனதில்லையா ?, வழி மறித்த போக்குவரத்து காவலருக்கு தண்டம் கட்டியதே இல்லையா ? வீடு பதிவு செய்யும் போது சரியான தொகை கட்டியிருக்கிறோமா? இது போன்ற பல கேள்விகளுக்கு நாம் அனைவருமே சில கேள்விகளுக்காவது ஆம் என்று சொல்லுவதை தவிர்க்க முடியாது .

                                   இப்படி யார் என்ன செய்தாலும் பாதிக்கும் மத்திய வர்க்கமான நாமே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தவறுகளை துணிந்து செய்யும் போது , மத்தவர்களை சொல்லி பயன் என்ன ??. தெருவில் குப்பை தொட்டியை தவிர அதை சுற்றியே எல்லா குப்பைகளும் கிடக்கிறது , குப்பை அள்ளுபவர் தொட்டியுள் உள்ள குப்பையை மட்டும் அள்ளி செல்கிறார் , அவரின் செயலில் குறை சொல்ல முடியாது , குப்பையை தொட்டியில் சரியாக போடுவதற்கே நேரம் அல்லது கவனம் இன்னும் பொறுப்பு இல்லாத நான்/ நாம் எப்படி மற்றவர்களின் செயலில் நேர்மையை எதிர்பார்க்க முடியும் .

                                   அடுத்தது பிளாஸ்டிக் உபயோகம் , எதிலும் எல்லாவற்றிலும் இந்த பிளாஸ்டிக் இன் ஆளுமைதான், இதை நம்மில் எத்தனை பேர் தவிர்த்திருக்கிறோம் , இன்று மதியம் சாப்பாடு பார்சல் வங்கி சாப்பிட்ட நான் உபயோக படுத்திய பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை 21 , ஒருநாளைக்கு என் ஒருவனுக்கே இத்தனை என்றால் , எத்தனை மனிதர்கள், எத்தனை சாப்பாடு, எத்தனை உணவகங்கள், உண்மையாய் எண்ணி பார்த்தோமானால் நாளையிலிருந்து நம்மிலிருந்து பிளாஸ்டிக் விலக தொடங்கும் , பிளாஸ்டிக் பை அழிய அல்லது மக்கி போக 100 - 1000  ஆண்டுகள் ஆகுமாம். மண்ணில் புதையும் பிளாஸ்டிக் பை மழை நீரை பூமி தாய் உள்ளே இழுக்க அனுமதிப்பதில்லை , அதனால் நிலத்தடி நீர் பாதிக்கபடுகின்றது, இன்று நாம் பல வழிகளில் பிளாஸ்டிக்கை சமீபமாக கொண்டுவிட்டோம், முன்பெல்லாம் இட்லி வாங்க சென்றால் கூட கையில் ஒரு தம்ளரோ அலது தூக்கோ கொண்டுசெல்வோம், வாழை இலையோ. தாமரை  இலையோ வைத்து கட்டி அதோடு சட்னியும் வைத்து கொண்டு செல்லும் பாத்திரத்தில் சாம்பார் தருவார்கள் ,ஆனால் இன்று அப்படியே தலைகீழ் இட்லி வைத்து கட்டுவதிலிருந்து சட்னி சாம்பார் வரை எல்லாமே பிளாஸ்டிக் பைகள்தான், இன்னும் இவை எல்லாம் இல்லாவிட்டால் அந்த மாதிரியான கடைகளின் தரம் பற்றிய சந்தேகம் வந்துவிடும் நமக்கு. 
                                   அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.


   
                                                             இதை எல்லாவற்றையும் விட கொடுமையான சேதி என்னவென்றால் ஒரு பிளாஸ்டிக் பையை நான் /நாம் பயன்படுத்தும் நேரம் இருபது நிமிடங்கள் மட்டுமே.

                                                                 அடுத்து ஆலய தரிசனம், இப்போதெல்லாம் எந்த கோவிலுக்கு சென்றாலும் சிறப்பு தரிசனம் , பணம் இருந்தால் எல்லாமே நடக்கும் , நம் தேவைகளை தீர்க்கும் ஆண்டவனை பார்க்கவே லஞ்சம் கொடுக்கிறோம் , அரசாங்கமும் , அறநிலையத்துறையும் நம்மை தவறாக வழி நடத்தினாலும் நாம் / நான் தடம் மாறலாமா ? நாம் குறுக்கு வழியில் சென்று ஆண்டவனை தரிசிக்கும் நேரம் பொது வழியில்  வந்து காத்து கிடக்கும் இல்லாதவனின் நேரம் அல்லவா ? அவனுக்காக ஒதுக்க பட்ட நேரத்தை நான்/ நாம் உபயோக படுத்தலாமா? நமக்கு/எனக்கு வசதிஎன்றால் யார் பாதிக்க படுவதை பற்றியும் கவலை இல்லை நமக்கு, இந்த மாதிரியான சுய நலமே நம்மையும் நம் நாட்டையும் இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.


                            அதன் தொடர்ச்சியே ஊழல்வாதிகள ஓட்டுக்கு பணம் கொடுப்பதன் மூலம் நம்மையும் ஊழலை செய்ய தூண்டுகிறார்கள். என்ன செய்தாலும் நம்மை கேள்வி கேப்பான் இல்லை என்ற தைரியம் அவர்களுக்கு , நியாமான எந்த செயலுக்கும் நம்மிடையே ஆதரவு இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.நம்மில் யாருக்குமே அநீதியை எதிர்த்து போராட தைரியம் / நேரம் /அக்கறை இல்லை , அதே அநீதி நமக்கு நடக்கும் போது நமக்காக போராட யாரும் இருக்க போவதில்லை. ஏன் இந்த நிலை நமக்கு ஐயாயிரம் ஆண்டு வரலாறுக்கு சொந்த மாணவர்கள் நாம் , இன்று முன்னேறிய நாடுகளெல்லாம் காட்டு மனிதர்களாக சுற்றி திரிந்த போது, அரசியல் அமைப்பு, அரசியல் வரையறை , இலக்கியம் , வாணிபம் , கலை , கட்டிடம் , ஆன்மிகம்,வானவியல் , மருத்துவம் ,சட்டம் என பல துறைகளில் கொடி கட்டி வாழ்தவர்தான், ஆனால் இன்று நம்மிடயே தனி மனித ஒழுக்கமும் , நியாய அநியாயங்களை பற்றிய விழிப்புணர்வும், ஒற்றுமையும் இல்லாமல் போனது தான் .

                                                           ஒரு நடை பாதை வியாபாரி தொடங்கி , பெரிய வணிகர்கள் வரை சட்டத்திற்கு புறம்பாக அவர்கள் ஆக்கிரமித்துள்ள இடங்கள் எவ்வளவு , இன்று தெருவில் நடை பாதைகளே இல்லை எங்கும் ஆக்கிரமிப்பு , அதையும் தாண்டி அங்கு வாங்கும் நான்/நாம் ரோட்டிலேயே வண்டியை நிறுத்தி மற்றவர்களுக்கு பாதிப்பு அளிக்கும் வகையில் செயல்படுகிறோம். என்று மாறும் இந்த நிலை,இது போல் எத்தனையோ வகைகளில் எத்தனையோ அத்து மீறல்கள் , சொன்னால் பத்தி பத்தாது .                     இதை சாதகமாக கொண்டே அரசியல் வாதிகள் நம்மை , நம் வளத்தை கொள்ளை கொ(ல்) ள்கிறார்கள். எதிர்த்து கேட்க யாருக்கும் தைரியமும்  தகுதியும் இல்லை என்ற நினைப்பு அவர்களுக்கு,  எல்லோரும் மாற்றத்திற்கு காத்திருக்கிறோம் , ஆனால் நம்மில் மாறுவதர்க்குதான் யாரும் தயாரில்லை. ஓட்டு போடுவதுடன் நம் ஜனநாயக கடமை முடிந்துவிடுவதில்லை நம்மை தன்னொழுக்க மனிதனாய் ஒவ்வொரு நிலையிலும் நிலை நிறுத்திகொள்வதிலும் தான் இருக்கிறது நம் ஜனநாயகம் .

                       நிறைவாய் , நம்மில் எதை மாற்றி கொள்கிறோமோ இல்லையோ குறைந்த பட்சம் பிளாஸ்டிக்கிற்காவது இன்று முதல் தடை சொல்வோம் .செய்வோம்.

அன்பன்
ARR 

பட உதவி :thehindu.com / viswanathan.in / shop.easystorehosting.com


Thursday, 21 April 2011

என் கல்லூரி மகிழ் தருணங்களின் தொகுப்பு - இரண்டு

என் கல்லூரி நாட்களில் நான் கடந்து வந்த சில மகிழ் தருணங்களின் 
தொகுப்பு இரண்டு ...................-----------------------------------------------------------------------------------------
நண்பன் : ஏன்டா இப்படி லொட லொடன்னு பேசிக்கிட்டே இருக்கே , சரியான ஓட்ட வாய்டா உனக்கு.......

நான் : ஓட்டையா இருந்தாதாண்டா அது வாய், இல்லன்னா அது கன்னம் இல்ல ????


--------------------------------------------------------------------------------------
கல்யாண பந்தியில் 
பரிமாறுபவர் : சார் சாம்பாரா ?????

நான் : என்ன சார் கொண்டு வந்தது நீங்க என்ன கேக்குறிங்க சாம்பாரான்னு ..........


----------------------------------------------------------------------------------------------------------
திருச்சி NSB ரோட்டில் , துணி வாங்கி கொண்டு வெளியே வரும்போது ,

 ஒரு தையல்  கடை பையன் : சார் தைக்கிறின்களா???????

நான் : எனக்கு தையல் தெரியாதே தம்பி ..........    


-----------------------------------------------------------------------------------------------

சத்திரம் பஸ் நிறுத்தத்தில் .........

நான் : ஹலோ மிஸ் உங்க பேர் என்ன ???????

அந்த அழகான பெண் : ஹும் சீ போ.........

நான் : ஓ சீன பெண்ணா ?????


( இது ஜூ.வி இல் டயலாக் பகுதியில் வந்தது )
-----------------------------------------------------------------------------------------------

என் பிறந்த நாளின் போது...........

நான் : மச்சி இன்னைக்கு என் பர்த்டே சுவீட் எடுத்துக்கோ .....

நண்பன் : தேங்க்ஸ் .... விஷ் யு தி சேம்டா மச்சி 

நான் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


-----------------------------------------------------------------------------------------
கொஞ்சம் ரண கல கடிதான்

நான்: மச்சி உன் உடம்பு அரிச்சா என்ன செய்வ 

நண்பன்: இது என்னடா கேள்வி , சொறிஞ்சிக்குவேன் 

நான்: சரி , அந்த அறிப்பே வராம இருக்க என்ன பண்ணனும் தெரியுமா ?

நண்பன் : ஒழுங்கா டெய்லி குளிக்கணும் 

நான்: இல்ல  மச்சி உடம்புல ஒரு நம நமப்பு வருமே ... அது வந்த அப்புறம் தானே சொரிஞ்சிப்பே , அந்த நம நமப்பு வராம இருக்க என்ன பண்ணனும் தெரியுமா ?

நண்பன் : தெரியலடா மச்சி நீயே சொல்லு 

நான்: அரிக்கிரதுக்கு முன்னாடியே சொறிய ஆரம்பிச்சிடணும் .......      

  ---------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பன்
ARR.

பட உதவி :imageenvision.com / 

Monday, 18 April 2011

என் கல்லூரி நாட்களில் நான் கடந்து வந்த சில மகிழ் தருணங்களின் தொகுப்பு

என் சுவை நகைச்சுவை, 
என் கல்லூரி நாட்களில் நான் கடந்து வந்த சில மகிழ் தருணங்களின் தொகுப்பு ஒன்று . 
கண்டக்டர் : திருச்சி மட்டும் ஏறு .........   திருச்சி மட்டும் ஏறு .........
நான் : சார் நான் ராஜகோபால் ஏறலாமா ????

------------------------------------------------------------------------------------------


கண்டக்டர் : ஏர்போர்ட் இருக்கா ..........???????
நான் : சார் வண்டிய கொஞ்சம் ஸ்லோ பண்ணுங்க பாத்து சொல்லுறேன் ........

---------------------------------------------------------------------------------------------

நான் : மச்சி சொல்ல மறந்துட்டேண்டா..........
நண்பன் : என்னடா மாப்புளே ??????
நான் : அதான் மறந்துட்டேன்னு சொல்லுறனே ........ 

---------------------------------------------------------------------------------------------
நான் : மாப்புளே இவ்வளவு தூரம் பழகுறோம் எங்கிட்ட சொல்லவே இல்ல பத்தியா??????????
நண்பன் :என்னடா மச்சி சொல்லலே ??????/
நான் : அதான் நீ சொல்லலேயே எனக்கு எப்பிடி தெரியும் ??  

-----------------------------------------------------------------------------------------------------
நான் : நீ டுவல்துல தமிழ்ல எத்தனை மார்க்கு 
ஜுனியர் : ஒன் பிப்டி த்ரீ சார்
நான் : டேய் நான் தமிழ்ல தானே கேட்டேன் தமிழ்ல சொல்லு 
ஜுனியர் : சாரி சார் நூத்தி அம்பத்தி மூணு சார் 
நான் : இங்க்லீஷ் ல ...................
ஜுனியர் : (ரொம்ப விவரமாய் ) ஒன் எய்ட்டி டூ சார் .........
நான் : டேய் தமிழ்ல நூத்தி அம்பத்தி மூணு நா ... இங்க்லீஷ் ல ஒன் எய்ட்டி டூ வா , எப்படிடா அது ....நான் கேக்குறது புரியுதா இல்லையா ???? சரி இப்போ சொல்லு நீ இங்க்லீஷ் ல எத்தனை மார்க்கு 
ஜுனியர் : ஒன் எய்ட்டி டூ சார் .........
நான் : தமிழ்ல 
ஜுனியர் : நூத்தி எண்பத்தி ரெண்டு சார் 
நான் : அப்ப நீ தமிழ்ல யும் ,இங்க்லீஷ் ல யும் ஒரே மார்க்கா ?
ஜுனியர் : இல்ல சார் 
நான் : நீதானடா சொன்ன இங்க்லீஷ் ல ஒன் எய்ட்டி டூ,  தமிழ்ல நூத்தி எண்பத்தி ரெண்டு ன்னு ? நான் கேக்கறது புரியலையா ??இப்ப சொல்லு நீ தமிழ்ல எத்தனை மார்க்கு ??????
ஜுனியர் : சார் .................என்ன உட்டுடுங்க ................

----------------------------------------------------------------------------------------------


நான் : ( கையில் ஒரு குச்சியுடன்)  உனக்கு பரத நாட்டியம் தெரியுமா ??
மாணவி : தெரியாது சார் ....
நான் : குச்சிபுடி ........
மாணவி : அதுவும் தெரியாது சார் ........
நான் : ஹலோ என் கைல இருக்குற குச்சை புடிக்க தெரியாது உனக்கு 
மோகனா :  ஹி ஹி ஹி (ரொம்ப அழகாவே சிரித்தாள் ... ஹி ஹி ஹி )  
---------------------------------------------------------------------------------------------------
காலேஜ் டே பங்க்ஷனில் ............ ரிசப்ஷன் டேபிளில் அமர்ந்திருக்கும் ஜுனியர் பெண்ணிடம் (எங்க காலேஜ் ல ஜூனியர் பொண்ணுகளிடம் தான் நம்ம பாச்சா பலிக்கும் ) MAY I HELP YOU BOARD ஐ காட்டி ....
நான் : இது என்ன மேடம் 
ஜுனியர் :   MAY I HELP YOU 
நான் : அப்படின்னா ?
ஜுனியர் : என் உதவி உங்களுக்கு தேவையான்னு அர்த்தம் .......
நான் : அப்படியா , கைல காசில்ல ஒரு நூறு ரூபாய் கிடைக்குமா ??? 
ஜுனியர் :......................................
(எப்படி கேட்டாலும் நம்மள நம்பி ஒரு நயா பைசா கொடுக்கல )
----------------------------------------------------------------------------------------------------

இந்த நினைவுகள் தொடரும் ...................

அன்பன்
ARR. 

Saturday, 16 April 2011

தமிழக மீனவர்கள் படுகொலை எனும் கொடூரம்

தமிழக மீனவர்கள் படுகொலை எனும் கொடூரம்          தமிழகமீனவர்களின் படுகொலைகளை பற்றி பல கட்டுரைகளும் கருத்துக்களும் வந்தாலும் , அதற்க்கு பல அரசியல் காரணங்கள் சொல்லப்பட்டாலும் (கட்சதீவு, கடற்பரப்பை உலக மயமாக்கல்) ஒரு சராசரி தமிழனாய், இந்தியனாய் அல்லது குறைந்த பட்சம் ஒரு சக மனிதனாய் என் மனதில் தோன்றும் எண்ணங்களை இங்கே எழுதுகிறேன் .
        தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அன்றாட நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன. கடந்த 30 ஆண்டுகளாக, இலங்கைக் கடற்படையினர், சர்வதேச கடல் பரப்பிலும், இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளேயும் நுழைந்து, அங்கு மீன் பிடிக்கின்ற தமிழக மீனவர்களின் வலைகளை அறுப்பதும், படகுகளை உடைத்து நொறுக்குவதும், தமிழக மீனவர்களின் ஆடைகளைக் களைந்து கடலுக்கு உள்ளே தூக்கி வீசுவதும், சுட்டுக் கொல்வதும் வாடிக்கையாகி விட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தச் சம்பவங்கள், வாரம் தவறாமல் நடக்கின்ற கொடுமை ஆகி விட்டது.


    இதுவரை ஐநூறு மீனவர்கள் கொல்லப்பட்டதாக புள்ளிவிவரம் சொல்லுகிறது , இந்த புள்ளிவிவரம் சொல்லா விவரம் எவ்வளவு என தெரியாது , இந்த ஐநூறு மீனவர்களின் உயிர் மட்டுமல்ல இதுவரை இலங்கை கடற்படையினரால் கை , கால் , கண் இழந்து நடை பிணமாய் இருப்பவர்கள் எத்தனையோ  பேர். இவர்கள் செய்த குற்றம் தான் என்ன?  தானும் தன மக்களும் உயிர் வாழ இந்த கடலை தேர்ந்தெடுத்ததா இல்லை இந்தியாவில் தமிழனாய் பிறந்ததா ?என்ன கொடுமை இது உரிமை இருந்தும் உறவுகள் இருந்தும் அனாதைகளை போலே அடித்து துவைத்து , அவமானப்படுத்தப்பட்டு , தந்தையுடன் மகனையும் , தம்பியுடன் அண்ணனையும் தகாத உறவு கொள்ள செய்து அவர்களை அவமானத்தில் கூனி குறுக செய்து கொலை செய்ய , என் சக இந்திய மீனவர்கள் யாரும் இல்லா அனாதைகளா , நூற்றி இருபது கோடி சகோதர இந்தியர்களை கொண்ட இந்த மீனவன் இரண்டே கோடி மக்களை கொண்ட அற்ப மனிதர்களால் இப்படி வேட்டை ஆடப்படுவது என்னே கொடுமை , நாதியற்ற மனிதர்களா இவர்கள்.

        ஒரு மீனவனின் இறப்பு நமக்கெலாம் செய்தி, ஆனால் அவன் குடும்பத்திற்கு ஒரு தலைவனின் , ஒரு பாசமுள்ள தகப்பனின், பரிவுள்ள  கணவனின், அக்கறையுள்ள சகோதரனின் இழப்பு, நம்மில் எத்தனை பேர் உணர்ந்து இருக்கிறோம் இந்த இழப்பை. இதை சரி செய்ய என்ன செய்யப்போகிறோம்?, பதிலில்லை  நம்மிடம், வெறுமையாய் பொறுமையாய் நிற்கிறோம்.

  ஊழலை எதிர்க்க அன்ன ஹசரேவுக்காக மெரினாவில் மெழுகுபத்தி ஏந்திய நாம் இதுவரை நம் மீனவர்களுக்காக ஒரு தீக்குச்சியை ஏற்றி இருக்கிறோமா நண்பர்களே? அதற்காக அந்த செயலை நான் தவறென்று சொல்லவில்லை அது நம் அவசியம் ஆனால் இது அத்தியாவசியம். இதற்கு நான் குற்றம் சாட்டுவது நம் ஊடகங்களைத்தான், அவர்களுக்கு முக்கியம் டி ஆர் பி ரேட்டிங் மட்டும் தான் நாமல்ல , எத்தனை பத்திரிக்கைகள் அல்லது ஊடகங்கள் இந்த பிரச்னைக்கு தொடர்ந்து முக்கியத்துவமும் குரலும் கொடுத்து வருகின்றன.நாம் நம்மையும் நம் உணர்வுகளையும் ஊடகங்களின் ஊடே வழி நடத்துகிறோமோ என்ற சந்தேகம் எனக்கு 

        நம் இந்தியா மும்பையுடன் முடிந்து விடுகின்றதா என்ன? , மும்பை படு கொலைக்கு பின் பாகிஸ்தானுடன் குறைந்த பட்சம் கிரிக்கெட் தொடர்பை அறுத்த நாம் , இன்றுவரை இலங்கையுடன் தொடர்பு    கொண்டிருப்பது ஏன்?, இன்று அத்தனை இந்தியர்களும் பார்த்து ரசித்து வரும் ஐ பி எல் இல் ஒரு பாகிஸ்தான் வீரரும் இல்லை ஆனால் என் மீனவனின் குடி கெடுத்த இலங்கையை சேர்ந்த பதினோரு பேர் இங்கே விளையாடுகிறார்கள் அதில்  இரண்டு பேர் இரு அணிகளின் தலைவர்கள் , மும்பை இந்தியனின் உயிருக்கு ஒரு நியாயம் , ராமேஸ்வரம் இந்தியனின் உயிருக்கு ஒர் நியாயமா? தெரிந்தால் நீங்களாவது விளக்கம் சொல்லுங்கள் எனக்கு

இந்தியா மூன்று பக்கமும் கடலால் சூழ பட்டுள்ள தீபகர்ப்பம் ஆனால் எந்த மாநிலத்து மீனவனுக்கும் நேராத  கதி நம் தமிழ் மீனவனுக்கு மட்டும் நேர்வதன் காரணம் என்ன ? நம் மீனவர்களின் உயிர் மத்திய  அரசால் அலட்சிய படுத்தப்படுகிறதா ?, நம் அண்டை மாநில மீனவர்கள் பாகிஸ்தான் கடல் எல்லையை தாண்டினால் கூட  பத்திரமாக திருப்பி அனுப்ப படுகின்றனரே, ஏன் என் தமிழனுக்கு மட்டும் இந்த இழிநிலை?.    
  

       இதெற்கெல்லாம் காரணம் என்ன? நாம் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்காததும் , நம் உணர்வுகளை பிரதிபலிக்காததும் தான். யாருக்கோ எங்கோ நடப்பதாக நாம் எண்ணுவதும் அல்லது மற்றவர்களால் நம்பவைக்கபடுவதும்தான். நம் வாழ்க்கை நமக்காக வாழ்வதோடு மட்டும் முடிந்து விடவில்லை , நம் சமுகத்திற்க்காகவும் அதன் முன்னேற்றத்திற்கும் பயன்படல் வேண்டாமா?. இதுவரை நம்மில் பலபேர் இந்த பிரச்னையை உணர்வு பூர்வமாக அணுகவேயில்லை, அது நம்மில் செய்தியாகத்தான் செலுத்தப்பட்டிருக்கிறது.நம்மிடையே உணர்வும் இல்லை ஒற்றுமையும் இல்லை காரணம் அரசியல்வாதிகள். பக்கத்து மாநிலங்களில் கொள்கையால் கட்சியால் வேறு பட்டு இருந்தாலும் மக்களுகென்றால் வேற்றுமை மறந்து ஒன்று படுகிறனர் , ஆனால் நம்மவர்கள் என்னவென்று சொல்லுவேன் ????????????. இனி அந்த அரசியல்வாதிகளை  நம்பி பயனில்லை...........   

அந்த மாற்றம் இனி நம்மில் இருந்தே தொடங்கட்டும், 
இலங்கையின் கொட்டம் அடங்கட்டும்,
மீனவர்களின் வாழ்வு மலரட்டும் . 


அன்பன் 
ARR    


பட உதவி :pagalavan.in / http://inioru.com

Wednesday, 13 April 2011

நான் ரசிக்கும் கர்ணன்

நான் ரசிக்கும் கர்ணன் 


          மகாபாரத மாந்தர்களில் நான் மிகவும் ரசித்த , வியந்த , பிரமித்த ஒருவன் கர்ணன் , வாழ்கையில் இகழ்தல்களை களைய கடும் முயற்சி செய்த மாசற்ற மாமனிதன், விதியின் வலிமையால் வாழ்க்கை முழுவதும் வலி சுமந்த வீர வில்லாள வித்தகன். அவமானங்களுக்கும் அவச்சொல்லுக்கும் ஆட்பட்ட அவதார அற்புதன். வாழ்கையில் உணர்வுகளின் வழியே தன் செயல்களை செதுக்கிய சீர்மிகு சிறப்பாளன்.தானம் தருவதையே தன் சுவாசமாக கொண்ட சுந்தர சுதன் .துரதிஷ்டங்களாலேயே துரத்தப்பட்டு வீழ்த்தப்பட்ட அசகாய சூர சூரியபுத்திரன் .       வாழ்கையில் மற்றவர்களால் புறக்கணிக்கபடுவதென்பது, யாராலும் ஏற்று கொள்ள முடியாத செயல் , அதுவும் திறமைகளனைத்தும் ஒருங்கே பெற்ற ஒப்பற்ற ஒருவனால் எப்படி ஏற்று கொள்ள முடியும் , அந்த மாதிரியான நெருடல்களின் நெருக்குதல்கள் தான் கர்ணனை அநீதியின் பக்கம் அழைத்து சென்றது , கர்ணன் காலத்தின் கோலத்தால் அநீதியின் பக்கம் நின்றவன் ஆனால் அநீதி செய்தவன் அல்லன். 

கிருஷ்ணா பரமாத்மா என்றுமே கர்ணனிடம் ஒரு அதீத ஈடுபாடு கொண்டவர் , ஒருமுறை அவர் பாண்டவர்களிடம் கர்ணனின் புகழை சொல்லிக்கொண்டு இருந்த போது சினம் கொண்ட அர்ஜுனன், நீங்கள் கர்ணனை இத்தனை தூரம் புகழ அவன் ஒன்றும் பெரிய தானப்பிரபு அல்லன் , நீங்கள் அவனை தகுதிக்கு மீறி கொண்டடுவதாகவே நினைக்கிறேன் என்ற வேளையில் கிருஷ்ணர் அவனின் பெருமையை புரிய வைக்க நிகழ்த்தினார் ஒரு நிகழ்வை , பாண்டவர்களை அழைத்து இரு பெரிய தங்க மலைகளை கொடுத்து இந்த இரண்டையும் இன்று மாலைக்குள் நீங்கள் தானம் செய்துவிட வேண்டும் என கூறினார் , உடனே பாண்டவர்களும் இதென்ன பிரமாதம் என வேக வேகமாய் வருவோர் போவோரிடம் எல்லாம், மலையை வெட்டி வெட்டி கொடுத்தனர் , சூரியன் மறையும் மாலை வேளைவரை அள்ளி அள்ளி கொடுத்ததும் மலையின் கால் பகுதி கூட அவர்களால் கொடுக்க முடியவில்லை , ஆனாலும் அவர்கள், இதே கதி தானே அவனுக்கும் , ஐந்து பேரான எங்களாலேயே கொடுக்க முடிய வில்லையே கர்ணன் ஒருவனால் எப்படி இது சாத்தியமாகும் என பரமாத்மாவை வினவ , உடனே கர்ணனை அழைத்த கண்ணன் அதே மலைகளை தந்து செய்தியையும் சொன்னார் , சிறிதும் யோசிக்காத கர்ணன் , அவ்வழியே வந்த ஒரு முதியவரிடம் இதோ இந்த இரண்டு மலைகளையும் தானமாக கொள்வீர் என கூறி தந்து சென்றான் , இதை கண்ட  பாண்டவர்கள் விக்கித்து நின்றனர் ,உடனே கண்ணன் இது தான் உங்களுக்கும் கர்ணனுக்கும் உள்ள வித்தியாசம் என கூறினார்.தானத்தில் தனக்கென ஒரு வரையறையே வைத்து கொள்ளாத வான் புகழ் வள்ளலவன்.

       அவன் ஒரு மாபெரும் மாவீரன் அவன் வென்ற மன்னர்களின் வரிசை மிக நீளம் அவற்றில் சில கம்போஜாக்கள், ஷாகாக்கள், கேகாயாக்கள், அவந்தியாக்கள், காந்தாராக்கள், மடரகாக்கள், டிரைகர்டாக்கள், தன்கனாக்கள், பாஞ்சாலாக்கள், விதேஹாக்கள், சுஹ்மாக்கள், அங்ககாக்கள், வங்காக்கள், நிஷாடாக்கள், கலிங்காக்கள், வாட்சா, ஆஷ்மகாக்கள், ரிஷிகாக்கள் ஜரசந்தா, சிசுபாலா, தண்டவக்ரா, சால்யா மற்றும் ருக்மி உள்ளிட்டோர் தோற்கடிக்கப்பட்டவர்கள். கிருஷ்ணரையே அச்சுறுத்திய ஜராசந்தன் கர்ணனால் பதினேழு முறை தோற்கடிக்கபட்டான், அதன் பயனாக மகத நாட்டின் ஒரு பகுதி அங்கத (கர்ணனுக்கு துரியோதனனால் கொடுக்க பட்ட நாடு )நாட்டுடன் இணைந்தது, கர்ணனுக்கு வில் பயிற்சி தர துரோணர் மறுத்ததால் சூரியனையே தன் குருவாக கொண்டு துரோணரின் மகனும் தன் நண்பனுமாகிய அஷ்வத்தாமாவின் உதவியுடன் வில் பயிற்சியை சுயமாக கற்றான். எல்லோருக்கும் தெரிந்த நிகழ்வு அர்ஜுனனுக்கு கிளியின் ஒரு கண் மட்டுமே தெரிந்து அதனை வில் கொண்டு எய்தது , ஆனால் கர்ணனால் ஒரே நாணில் ஒரே சமயத்தில் வெவ்வேறு இடங்களில் பூட்ட பட்ட இரு அம்புகளால் கிளியின் இரு கண்களையும் எய்த முடியும், இது அஷ்வத்தாமாவின் முன்னால் கர்ணனால் நிகழ்த்தப்பட்டது.

               அர்ஜுனனை காக்கவும் , நீதி வெல்லவும் பலராலும் பலமுறை பலகீனபடுத்தப்பட்ட காவிய நாயகன் கர்ணன் குருஷேத்திர போரிலும் யாராலும் வெல்ல முடியாத வெற்றி வீரனாகவே வலம் வந்தான் களம் கண்டான். ஒருமுறை அர்ஜுனனோடு  போர்புரியும் போது அர்ஜுனனின் அம்புகள் அவன் தேரை பல நூறு அடிகள் பின்தள்ளியது , உடனே வீறு கொண்ட வேங்கையாய் வெகுண்டெழுந்த கர்ணன் அர்ஜுனனின் தேரை சில அடிகள் பின் தள்ள, அதிசயித்த கண்ணன் பலே கர்ண பலே என பாராட்டினார் , உடனே அர்ஜுனன் என்ன கண்ணா இது என்னை விடவா அவன் நம்மை பின் தள்ளிவிட்டான் என கேட்க அதற்கு பரமாத்மா மெல்ல சிநேஹமாய் அவனிடம் அந்த தேரில் அவனும் தேரோட்டியும் மட்டுமே உள்ளனர் , ஆனால் இங்கே தீயை உமிழும் அக்னியும் , பலவான் அனுமனும் (கொடியில்) எல்லவற்றுக்கும் மேலாக இந்த அண்ட சராசரத்தையும் என்னுளே கொண்ட நானும் இருக்கிறேன் இதனை பேரையும் தாண்டி அவன் வில்லின் பராக்கிரமம் நம்மை பின் தள்ளுகிதென்றால், நீ மட்டுமே இருந்தால் அவனால் ஏவப்பட்ட அம்பின் வேகம் உன்னை இந்த பூமியின் மத்தியில் கொண்டு சேர்த்திருக்கும், உணர்ந்து கொள் அவன் ஒரு நாயகன் இன்னும் நாயகர்களில் முதலானவன் என்றார்.இந்த இடத்தில் அவன் உங்களுக்கெல்லாம் மூத்தவன் என கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்லாமல் சொல்லுகிறார்.          இறுதியாய் அநீதியின் பக்கம் நின்று அநீதியாய் கொல்லப்பட்ட கர்மவீரன் கர்ணனின் முதல் ரசிகர் அந்த கிருஷ்ண பரமாத்மாதான், கர்ணன் போர்க்களத்தில் வீழ்த்த பட்டு கிடந்த வேளையிலே அவனிடம் சென்று தான் நீதியை காக்க அவனுக்கு செய்த அநீதியை சொல்லி மன்னிக்க வேண்டி பின் விஸ்வருபியாய் அவனுக்கு காட்சி தந்து கர்ணனை மோட்சமடைய செய்கிறார், காக்கும் கடவுள், துன்பம் போக்கும் கடவுள் கண்ணனே ரசித்த கர்ணனை நான் ரசிப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும் .

அன்பன்
ARR                

பட உதவி : vidhoosh.blogspot.com / e-learning.kkpi.or.id 

Monday, 11 April 2011

அன்பான அம்மாவுக்கு .....அன்பான அம்மாவுக்கு ..... 
அன்புடன் உன் மகன் எழுதுவது , நலம் நாங்கள், நலமா நீ? உன்னைவிடவும் எங்களை பற்றிய கவலைகளே உனக்கு அதிகம் என்பதால் எங்கள் நலத்தினை முன்னமே சொன்னேன் .உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது , என்ன செய்வது இங்கு உன் பேத்தியை நான் தான் பாத்துக்கணும் அதனாலேயே உன்னை பாக்க வரமுடியாமல் போகிறது. 

உன்னிடம் பேசவும்,சொல்லவும் , கேக்கவும் நிறைய விஷயங்கள் இருக்கு , ஆனா அதுக்கு இந்த லட்டர் போதுமான்னு தெரியல , குட்டிம்மா வை பார்ப்பவர்கள் எல்லாம் அவள் உன்னைமாதிரியே இருப்பதாக சொல்லுறாங்க , அதுல அவளுக்கும் ரொம்ப சந்தோஷம் , அடிக்கடி நான் பாட்டி மாதிரி இருக்கேன்ல்லப்பா என்று பெருமையாகவும் , பாட்டி மாதிரி இருக்கேனாப்பா என்று கேள்வியாகவும் கேட்டு கொண்டே இருக்கிறாள் , அதே சமயத்தில் ஸ்கூல் யூனிபார்ம் போட்டுக்கிட்டு பாட்டியும் இதே மாதிரி இருந்தங்கலாப்பா? என்று நான் பார்க்காத ஒன்றை பற்றியும் கேட்டு , என் மௌனத்தை தொடர்ந்து அவளே அதற்க்கு ஒப்புதலும் பெற்று செல்வதை நீ கூட  இருந்து பாக்கணுமே, அப்படியே பூரிச்சி போய்டுவே .போன மாதம் நவராத்திரி விழாவில் மழலையாய் "குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்க மாட்டானா" என்று என் மகள் பாடியபோது பெற்ற சந்தோஷத்தைவிட , அதை உன்னால பாக்கமுடியலேயே  என்கிற துக்கம் தான் எனக்கு அதிகம்  

நான் எழுதிய முதல் கவிதை இப்போ உனக்கு ஞாபகம் இருக்குமான்னு தெரியல .. 
அம்மா என்றால் அழகு அது எல்லோருக்கும் தெரியும் , ஆனால் 
அழகே அம்மாவாக வந்தது , என் அன்னையை பார்த்தபின் தான் புரியும்.
என்று தப்பு தப்பாக நான் எழுதிய அந்த கவிதையை மிக சரியாக புரிந்து கொண்ட என் முதல் ரசிகை நீ , அது சரி குழந்தையின் மழலை புரியாத தாய் யார் . உங்க அம்மா ரொம்ப நல்லவங்களா இருக்காங்கடா ன்னு, என் சிறு வயது நண்பர்கள் சொல்லும்போது எனக்கு அப்படியே கோவம் கோவமா வரும் , ஏன் நம்ம அம்மா எல்லார் கிட்டயும் பாசமா இருக்காங்க ன்னு ,  சின்ன வயசுலேந்தே எனக்கு மட்டும் தான் நீ அம்மாவாக இருக்கணும்கிற எண்ணம் எனக்கு இப்பவரைக்கும் இருக்கு. 

நம்ம சொந்தகாரங்க சொல்லுற மாதிரி உன்கிட்ட ஒரு காந்த சக்தி எல்லோரையும் கவர்ந்திழுக்கும் கனிவு , தாய்மை , பாசம் உன்னிடம் உண்டு. இப்போ நினைத்தாலும் என் கண்ணில் கண்ணீர் வரும் நிகழ்வு அது , ஒரு முறை எனக்கு மஞ்சள்  காமாலை வந்து பத்திய சாப்பாடு (உப்பில்லாத உணவு ) கடைபிடித்தபோது , நீ என் முன்னே சாப்பிடுவதே இல்லை அப்படியே சாப்பிட்டாலும் நீ என்ன சாப்பிடுகிறாய் என எனக்கு தெரியாத வகையில் உன் உணவு உட்கொள்ளுதல் இருக்கும். எனக்கு எப்படியாவது நீ சாப்பிடும் நல்ல சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என ஒரு பத்திய பைத்திய ஆசை. அதற்கான  வாய்ப்பும் ஒரு நாள் வந்தது , சாப்பிட்டு கொண்டிருந்த நீ .... அவசர வேலையாக எழுந்து செல்ல ... இதற்காகவே காத்திருந்த நான் துள்ளி எழுந்து உன் உணவை ருசிக்க பார்த்தபோது ........  நான் சாப்பிடும் உணவை விட மிக மோசமாய் சாதத்தில் தண்ணீர் மட்டுமே இட்டு இருந்தது . அப்போது நான் சிந்திய கண்ணீர் உன் சாதத்துக்கு தேவைக்கு அதிகமாகவே உப்பை சேர்த்திருக்கும் , ஆனால் இன்றுவரை உனக்கு இது தெரியாது.அப்போது எனக்கு ஆயிரமாயிரம் ஆண்டவர்கள் கூட உன் அன்பிற்கும் தியாகத்திற்கும் முன்னால் தூசியாக தெரிந்தனர்.

கருணையும் கம்பீரமும் கலந்த மகோன்னதம்  நீ , அன்பும் பரிவும் இணைந்த அற்புதம் நீ என்னை தூங்க வைக்க நீ சொல்லிய கண்ணன் கதைகளும் கன்னன் கதைகளும் இன்றுவரை என்னோடு பயணித்து கொண்டுதான் இருக்கின்றது .நீ ஒரு கற்பனை பிரவாகம் , நாம் இருவரும் சேர்ந்தே படித்த ஒரு விஷயத்தை என்னிடமே புதுமையாய் சொல்லும் உன் சொல்லும் திறன் இன்றவரை நான் யாரிடமும் காணாதது.

சரிம்மா அடுத்த கடிதத்தில் பார்ப்போம் , உன் பேத்தி அவளை தூங்க வைக்க சொல்லி என்னை படாத பாடு படுத்துகிறாள் , அதுவும் இல்லாமல் நாளைக்கு உன் ஐந்தாவது திவசம் அதற்கான வேலைகளும் இருக்கின்றது , இது நான் உனக்கு அனுப்பாத பல கடிதங்களில் ஒன்று , எப்போதெல்லாம் உன்னிடம் பேச வேண்டும் என என் மனம் தவியாய் தவிக்கின்றதோ அப்போதெல்லாம் நான் உனக்கு எழுத  தொடங்கிவிடுகிறேன் , என் கூடவே நீ இருப்பதால் இதை என்னுடன் சேர்ந்து நீயும் படிப்பாய் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு ,எனக்கு கொஞ்சம் தைரியத்தையும் எதார்த்தத்தை புரிந்து கொள்ளும் அறிவையும் கொடும்மா , நீ இனிமேல் திரும்ப வரமாட்டாய் என்று தெரிந்தும் உன்னை எதிர் பார்த்து கொண்டே இருக்கிறேன் , நீ என் மகளாய் என்னுடனே இருக்கிறாய் என்பதை அறியாமல் , உன் அன்பும் இழப்பும் என்னை ரொம்ப கோழை ஆக்கிவிட்டது , அதனால் எனக்கு தைரியம் கொடு . மரத்தில் இருந்து விழுந்து என் இரு கால், கைகளை ஒருங்கே உடைத்து கொண்டு கட்டு போட்ட போது
கண்ணாடிக்கு அந்த பக்கமாய் இருந்து பார்வையாலே தைரியம், சக்தி  தந்தாயே அது போல........   

அன்புடன் 
உன் மகன் கோப்லி . 

Monday, 4 April 2011

என் மண்ணும் மக்களும்

             இதுவரை எத்தனையோ சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ள தமிழகம் , இந்த முறை ஒரு புதிய எதிர்பார்ப்புடன் தேர்தல்ஐ எதிர்கொள்கின்றது . திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் எதிர் எதிரே போட்டியிடுகின்றன.               இந்த தேர்தலிலே இரு கூட்டணிகளும் மக்களுக்கு வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளன. மடிக்கனணி தொடங்கி மின் விசிறி வரை எல்லாம் இலவசம் . ஆனால் இது மாதிரியான இலவச திட்டங்கள் எத்தனை தூரம் ஆரோக்கியமானது என்று சிந்தித்தோமேயானால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.இது மாதிரியான இலவசங்கள் தமிழகத்தை எப்படி முன்னேற்றும்? அல்லது இதை தவிர வேறு என்ன மாதிரியான முன் மாதிரி முன்னேற்ற  திட்டங்கள் இவர்களிடம்  உள்ளது என்பது மாதிரியான எந்த அறிகுறியும் தென்படவில்லை. 

              ஒரு அரசாங்கத்தின் அடிப்படை சேவையான கல்வியும், மருத்துவமும் இன்று தனியார் வசம் , இந்த துரதிஷ்டத்துக்கு யார் காரணம்   என்றால், இருவருமே ஒருவரை ஒருவர் குறை கூறி குற்றம் சாட்டுகின்றனர். இதில் விழி பிதுங்கி , வழி தெரியாமல் முழிப்பவர்கள் அப்பாவி தமிழர்கள் தான் .ஆனால் இன்றுவரை இந்த இலவசங்களை வேண்டாம் என கூற யாருக்குமே தைரியமும் , துணிவும் இல்லை , நான் வேண்டாம் என்றால் மற்றொருவன் வாங்கி கொள்வான் என்ற சராசரி எண்ணம் நமக்கு, நான் உள்பட .

            ஆனால் என்னால் சகித்து கொள்ளவே முடியாத இரண்டு விஷயங்கள் 

ஒன்று . தமிழக புவியியல் சார்ந்தது

இரண்டு . தமிழர்களின் உடலியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்தது , 

அவை ...........................................................................
மணலும் , மதுவும் .

இரண்டுமே இன்று அரசாங்கத்திற்கும் , அரசியல்வாதிகளுக்கும் தங்கம் தரும் சொர்க்க சுரங்கங்கள் .மேற்கண்ட இரண்டுமே சென்ற ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது தான் என்றாலும் , அதை முழுமை படுத்தி முழுமை அடைந்தது இன்றைய ஆட்சியாளர்கள் தான் .மிகக்கொடுமையாக  ஆற்றையும் , ஆளையும் அழிக்கும் பேரழிவுகள் இவை . ஆனால் இதை பற்றி எந்த கவலையும் இந்த அரசியல் வாதிகளுக்கு இல்லை , இயற்கை தந்த உடலையும் , இயற்கை தன்னை தானே காத்துக்கொள்ள உபயோகமான ஆறுகளையும் எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இவர்கள் இப்படி கொன்று  அழிப்பது வருங்கால சந்ததியினருக்கு இவர்கள் இழைக்கும் துரோகம். இவர்களின் கட்சி பெயரிலும், கட்சியினருக்கும் தாம் முன்னேற்றம் ,தமிழகத்திற்கு எதுவுமே இல்லை .                           நம் நாட்டின் நீராதாரத்தை அழிக்கும் இது மாதிரியான செயல்கள் இந்த நாட்டை எந்த விதத்தில் முனேற்ற  பாதைக்கு அழைத்து செல்லும் . இயற்கை வளங்கள் ஒரு அரசாங்கத்தாலேயே இப்படி சுரண்டப்பதுவது வேறு எங்காவது உண்டா .ஒரு அடி ஆற்று மணல் சேர 240 ஆண்டுகள் ஆகும் என்கிறது புவியியல் சொல்லும் அறிவியல் , இன்று இவர்கள் எத்தனை ஆண்டு இயற்கையின் உழைப்பை தோண்டி துருவி எடுத்திருக்கிறார்கள் , 1500 ஆண்டுகளுக்கு முன்பு  ஆறுகளை வெட்டி , கல்லணை அமைத்த மன்னராட்சி எங்கே , இன்று மக்களால் பதவி பெற்று மக்களாட்சி என்று கூறிக்கொண்டு இயற்கை வளத்தை வளைத்து அழிக்கும் இவர்கள் எங்கே இவர்களா மக்கள்  நலனில் அக்கறை கொள்ளப்போகிறார்கள்.


                         குடி குடியை கெடுக்கும் என்பது எல்லோரும் அறிந்த, புரிந்த தெரிந்த ,தெளிந்த சேதி , அனால் இன்று தமிழகத்தில் நடப்பது என்ன அரசாங்கமே காலையிலிருந்து இரவு வரை கடை விரித்து மடை திறக்கும் வினோத அநியாயம் , தரணி எங்கும் தாராள தண்ணீர் மயம்.ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையில் இந்த குடி பழக்கம்  குழப்பம் ஏற்படுத்தாத நாளே இல்லை . வியாபார நோக்கில் நடத்தப்படும் இந்த மதுக்கடைகள் , எங்கெங்கு இருக்கலாம் என்ற வரைமுறையோ, வழிமுறையோ,விதிமுறையோ கிடையாது , சேர்ந்தாற்போல் ஒரு 10 நபர்கள் இருந்தால் கூட  அங்கு ஒரு கடை திறக்க நம் அரசாங்கம் ரெடி . கோயில்,பள்ளி , கல்லூரி, ஆன்மீக கூடங்கள் என எங்கும் மதுக்கடைகள் தான் ,தமிழ் குடிமகன்கள் , குடிகாரர்களாகி தன்னிலை இழந்து மதி மறந்து , ஒழுக்கம் துறந்து மூளை மழுங்கி மூலைக்கொருவராய் மல்லாந்து கிடப்பதை பாக்கும் போது, என் ரத்தம் கொதிக்கின்றது, இந்த இழி நிலையை இளைஞர்களுக்கு தந்த இந்த மாண்பில்லா மக்கள் ஆட்சியாளர்களை நினைத்து கோபம் கொப்பளிக்கிறது .

தன் ஒருநாள் ஊதியத்தில் முக்கால் பங்கு ஊத்திக்கொ(ல்ல)ள்ளவே என் சக தமிழன் செலவழிக்கிறான் , மீதம் உள்ளதே மனைவி மக்கள் உணவிற்கும் , உடமைக்கும் , எங்க கையை எடுத்தே எங்கள் கண்ணை குத்திவிட்டு பின் எங்களுக்கு கண்ணாக இருப்போம் என வீர வசனம் பேசும் இந்த அரசியல் தலைவர்களை வருங்காலம் மன்னிக்காது. 


இந்த கொடுமையை தொடங்கியது ஜெயலலிதா தொடர்வது கருணாநிதி , இந்த துரோகத்தில் இருவருக்குமே சரி சம பங்கு உள்ளது .இருவருமே சுயநலக் கொள்கை கொண்டவர்தாம். 

   என் மக்களையும் மண்ணையும் அழிக்கும் இந்த கோர கொடூர கொடுமையிலிருந்து மக்களையும் மண்ணையும் காப்போம் என இரு கழகங்களும் தங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லாதது தான் உலகின் உச்சக்கட்ட அராஜகம். இலவசங்களால் அடித்து இந்த இனிய நாட்டை இழி நிலைக்கு கொண்டு செல்ல துடிக்கும் இந்த இரு கழகங்களும் நாட்டுக்கு நல்லது செய்யப்போவதில்லை .கொள்ளை அடிப்பதையே கொள்கையாக கொண்ட இந்த அரசியல்வாதிகளை கல்லை கொண்டு அடிக்கும் காலம் என்று வருமோ ?????  


 மாற்றம் வேண்டும்.............. அதற்கு நாம் முதலில் மாற வேண்டும், அப்படியும் மாற்றம் வரவில்லையெனில் நாம் தான் மற்றவரை மாற்றவேண்டும் 

நிறைவாய் .........
அரசியல்வாதிகளே
 நீங்கள் உணரவேண்டியது ஒன்று உண்டு அது
தமிழர்கள் சகித்துக்கொண்டு இருக்கவில்லை ,
 உள்ளே உங்களை 
எண்ணி தகித்துகொண்டு இருக்கிறார்கள் ................ 

அன்பன் 
ARR