Wednesday 29 June 2011

சத்ய சாய்பாபா ..... விலகாத மர்மங்கள்

          

கடந்த ஏப்ரல் மாதம் இருபத்தி நாலாம் தேதி தனது எண்பத்து ஐந்தாவது வயதில் காலமான ஸ்ரீ சத்ய சாய்பாபா வின் மறைவுக்கு பின்னே நடக்கும் நிகழ்வுகள் பக்தர்களின் மனதிற்கு நல்லவைகளை சேர்ப்பதாக இருக்கவில்லை .பொதுவாகவே ஆண்டவனுக்கும் பக்த்தனுக்கும் இடையே யாரும் இருக்க முடியாது, இருக்க கூடாது என்று நினைப்பவன், ஆண்டவனைத் தவிர வேறு எவராலும் நமக்கு நன்மையைத் தரமுடியாது என்பதை உறுதியாக நம்புபவன் நான், ஆண்டவன் தர மறுப்பதை யாராலும் தரமுடியாது எனபது என் உறுதியான நம்பிக்கை, எனக்கு இது மாதிரியான குரு வழிபாடுகளில் நம்பிக்கை இருந்ததேயில்லை , அதற்காக அந்த செயல்களை நான் தவறென்றும் நினைப்பதில்லை அவற்றை விமர்சனமும் செய்வதில்லை,ஆன்மீகத்தை, அதன் போதனைகளை தாண்டி சாய்பாபா மக்களுக்கு பல நல்ல சேவைகளை செய்து வந்துள்ளார் என்பதையும் மறுப்பதற்கு இல்லை  சரி இப்பொழுது  விஷயம் அதுவல்ல .,

                   இந்த பதிவு சத்ய ஸ்ரீ சாய்பாபாவின் மறைவுக்கு பிறகு அங்கு நடக்கும் நிகழ்வுகள் ஒரு ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவனாக பார்க்கும்  போது என் மனதில் சில நெருடல்கள் ஏற்படுகின்றன அதைப் பற்றியது.ஒரு துறவறம் பூண்ட மனிதரின் அறையில் ஏன் இவ்வளவு பணமும் , தங்கமும் வைரங்களும், இது உண்மையிலேயே அவர் உ யிரோடிருக்கும் பொது இருந்தனவா இல்லை அவர் இறந்தவுடன் வைக்கப் பட்டனவா?. எது எப்படி இருப்பினும் ஒரே இடத்தில் இவ்வளவு பணத்தை கொட்டி குவித்து வைப்பதா ஆன்மிகம்?, துறவறம்? .இவர்களுக்கும் தானியங்களை ஒரே இடத்தில் சேமித்து வைத்து வீணாக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் ??

                      ஒரே இடத்தில் குவிந்து கிடக்கும் செல்வம் மக்களிடத்தில் என்ன மாற்றத்தை உண்டாக்கமுடியும், ஒரு தனி மனிதனால் மக்களுக்கு அருளை தர முடியாது அதிக பட்சமாக ஆறுதலைத்தான் தரமுடியும், அந்த ஆறுதலைத் தேடி வந்த மக்களுக்கு தன்னுடைய பேச்சால் , செயலால் ஸ்ரீ சத்ய சாய்பாபா தந்தார் என்பதை மறுக்க முடியாது , ஆயினும் அவர் இப்படி ஒரே இடத்தில் பொன்னையும் பொருளையும் சேமித்து வைக்கவேண்டிய அவசியம் என்ன , துறவறத்தில் பணத்திற்கு என்ன தேவை வந்தது ???

                      

                 இன்னும் பட்டவர்த்தனமாக சொல்லுவதென்றால் இவரிடம் இருக்கும் செல்வத்தில் நூறில் பத்து  பங்கு கூட மக்களுக்கு செலவழித்ததாக சொல்லமுடியாது , இவரிடத்திலே உள்ள பணத்தில் பெரும் பகுதி அரசியல் வாதிகள் மற்றும் பெரும் பணக்காரர்களின் கருப்பு பணம் என்ற வாதத்தின் சாரத்தை இந்த மாதிரியான செயல்கள் உறுதிபடுத்தவே செய்கின்றன     

                       கடந்த 1993 ஆம் ஆண்டு இவரது ஆசிரமத்தில் நடந்த கொலைகளுக்கும் நடத்தப்பட்ட கொலைகளுக்கும் இன்றுவரை விடை கிடைக்கவில்லை, அதற்கான காரணமும் இன்றுவரை தெரியவில்லை , மக்களுக்கு நல் வழி போதிக்கும் இது மாதிரியான ஆசிரமங்கள் ஒரு திறந்த புத்தகம் போல இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை, இது மாதிரியான நிகழ்வுகளே நாத்தீகவதிகளுக்கு ஒரு வலுவான வாதமாக ஆகிவிடுகிறது.

            சமீபத்தில் பிடிபட்ட முப்பத்தைந்து லட்ச ரூபாய் பற்றிய கேள்விகளுக்கு கூட அந்த அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் பதிலளிக்கையில் இது சாய்பாபா அறக்கட்டளைக்கு சொந்தமான பணம் அல்ல , பிடிபட்டவரும் பாபாவின் பக்தர் அல்ல என்று பொதுவாகவே பதில் அளித்துள்ளனர்,இதன் மூலம் இன்னும் அந்த மர்மம் விலகாமலே உள்ளது , என்னை பொறுத்தவரையில் அவர்கள் சொல்லியுள்ள பணத்தின் அளவு கம்மியாகவே இருக்கும் என நினைக்கிறேன்,முப்பத்தைந்து லட்ச ரூபாய் அளவு பணத்தை எடுத்துப் போவதெல்லாம் இந்த காலத்தில் வெகு சாதாரணம் , ஒரு பெரும் தொகையே இப்படி குறைவாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன்.

Prasanthi Nilayam - The House Of Peace. - Prasanthi Nilayam, Andhra Pradesh
        
          எது எப்படி இருப்பினும் இது பக்தர்களின் பணம்  இது பக்தர்களுக்காகவே செலவிடப்பட வேண்டும்,இந்த பணம் அனைத்தும் மற்றுமொரு சுவிஸ் வங்கி முதலீடாக ஆகிவிடக்கூடாது ,இந்த பணம் அனைத்தும் பக்தர்களுக்கும் ஏழை மக்களுக்கும், உணவிற்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் முழுமையாக  செலவிடப்பட்டால் அதுவே ஆன்மீகத்தின் முழு அர்த்தத்தை மற்றவர்களுக்கு பிரமாண்டமாய் பிரகடனப்படுத்தும்.ஏனெனில் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.

             இந்த  பதிவு ஸ்ரீ சத்யா சாய்பாபாவின் பக்தர்களை வருத்தப்பட செய்திருக்குமாயின் அதற்காக என் வருத்தங்களை தெரிவித்துகொள்கிறேன்

              

அன்பன்
ARR   
              

          

Monday 27 June 2011

என்னுயிருக்கு பிறந்தநாள்



என்னை ஆட்டுவிக்கும் பத்தாவது கிரஹத்திற்கு

நான் பயணிக்கும் ஒன்பதாவது திசைக்கு 

நான் இசைக்கும் எட்டாவது சுரத்திற்கு 

என்னை வழிநடத்தும் ஏழாவது அறிவிற்கு 

என் உணர்வறியும் ஆறாவது புலனிற்கு

நான் படிக்கும் ஐந்தாவது வேதத்திற்கு

நான் ரசிக்கும் நான்காவது தமிழிற்கு 

என்னுடைய மூன்றாவது கண்ணிற்கு 

என்னை அரவணைக்கும் இரண்டாவது தாய்க்கு 

என்னுடைய முதல் குழந்தைக்கு 


  
எல்லாமுமான என்னவளுக்கு
மாண்புமிகு மனைவிக்கு     
நல்லிதைய நளினாவிற்கு


பிறந்தநாள் வாழ்த்துக்கள். 


அன்புடன் 
உன்னவன்- உன்
உயிரானவன்.  

  

லோக்பாலில் பிரதமரை சேர்ப்பது அவசியமா??


                      இன்று பலகட்ட போராட்டங்களுக்கு பின் மத்திய அரசால் ஒப்புக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட லோக்பால் சட்ட வரைவில் பல தடங்கல்கள் , ஆறாவது முறையாக கூடிய இந்த குழு இறுதியில் ஒரு இறுதி முடிவும் எடுக்காமல் கலைந்தது மீண்டும்  கூடுவதற்கு. இந்த பதிவில் நான், என்ன சட்டம் , உரிமை , அளவீடு , சுதந்திரம் பற்றி எல்லாம் எழுதப்போவது இல்லை , ஒரு சராசரி இந்தியனாக , இந்திய ஜனநாயகத்தின் மேல் இன்னும் நம்பிக்கை உள்ளவனாக  என் மனதில் தோன்றும் சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்  

                                சரி இந்த லோக்பால் சட்ட வரைவில் என்னதான் பிரச்சனை , இந்த சட்டத்துக்குள் பிரதமரையும் , உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் விசாரணைக்கு கொண்டுவரவேண்டும் என்பதே அன்ன ஹசாரே , சாந்தி பூஷன் போன்றவர்களுடைய கோரிக்கை, அதை எதிர்க்கிறது பிரணாப் தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு, அதன் காரணம் என்ன என்பதை இன்றுவரை  நான் அறியேன், மக்களால் தேர்தெடுக்க பட்டு மக்களால் அமையப்பெற்ற அரசின் தலைமை அமைச்சராக இருக்கும் பிரதமரை , மக்களுக்கான சட்ட திட்டத்தில் , ஊழலுக்காகவோ இன்னும் பிற காரணங்களுக்காகவோ விசாரிப்பதில் என்ன தவறு இருந்து விடமுடியும்.


                               உலகத்திலேயே மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசில் உச்ச அதிகாரம் பெற்றவராய் இருக்கும் அமெரிக்க குடியரசு தலைவரே அந்நாட்டு நீதிமன்றத்தால் விசாரிக்க படும்போது (நிக்சன் மற்றும் கிளிண்டன்)மக்களுக்காக ஆட்சி நடத்துவதாக சொல்லும் இவர்கள் ஏன் பிரதமரை இந்த சட்ட வரைவுக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை , உள்துறை செயலரிலிருந்து நிதி அமைச்சர்வரை அமெரிக்காவின் ஆணைப்படி நிர்பந்தத்தால்  நிர்ணயிக்கும் இந்திய அரசு இந்த விஷயத்தில் ஏன் அமெரிக்காவை பின் பற்ற மறுக்கிறது.


                                        ஒரு நாட்டை வழிநடத்தும் தலைவர் குற்றமற்றவராக இருக்கவேண்டும் என்று மக்கள் நினைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும், இது மக்களின் உரிமை சம்பந்தப்பட்டது அல்லவா? நாட்டின் எதிர்கால நலன் மற்றும் வளர்ச்சி சம்பந்தப்பட்டது அல்லவா?
 குற்றம் செய்தோ அல்லது குற்றம் செய்தவராக  சந்தேகப்படும் மனிதர் எப்படி பிரதமராக இருக்க முடியும்? இந்திய ஜனநாயகம் இவர்களுக்கு என்ன கேலிக்கூத்தான  விஷயமாக போய்விட்டதா. உயர் பதவியில் இருப்பவர்களிடம்  தூய்மையை எதிர்பார்ப்பது  குற்றமா, அதையும் தாண்டி ஒருவர் குற்றம் சாட்டப்பட்டுவிட்டதலேயே சட்டம் அவருக்கு தண்டனை கொடுத்துவிடப்போகிறதா என்ன?, இப்படி விசாரிப்பதற்கே இத்தனை தடை என்றால் என்ன மக்களாட்சி இது ???

                    மக்களுக்கு வழிக்காட்டியாக இருக்கவேண்டியவர்களே  இப்படி சட்டத்தின் முன்னே நிற்கவும் அதன் விளைவை சந்திக்கவும் இப்படி பயப்பட்டால் அல்லது தவிர்க்க  முயற்சி  செய்தால் என்ன அரசியல் அமைப்பு இது ?, சட்டம் எல்லாம் ஒன்றுமே அறியாத பாமரனை தண்டிக்கத்தானா? பணக்காரர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் சட்டம் என்பதே இல்லையா?   தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க நம் நாட்டின் சட்டத்திற்கு உரிமை உண்டு , இதில் யாருக்கும் விதிவிலக்கு தரக்கூடாது என்பது என் எண்ணம், இதில் உங்களுக்கு ஏதேனும் கருத்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

அன்புடன்
ARR                           

Sunday 26 June 2011

பரதன் பக்தி



ராம பக்தியில் விஞ்சிய விரதன்! 
ராம பாதுகை சுமந்த பரதன்!!

நீதிமான்  பட்டதெல்லாம் அவமானம்!
ராகவன் அன்பொன்றே வெகுமானம் !!

மேகத்தை ஒத்த வண்ணமுடையான்!
ராமநாமத்தை  ஓதும் எண்ணமுடையான் !!

அன்னையளித்த ஆட்சி அரியணை!
அதனையழித்த இவனுக்கு யாரிணை!! 

தயரதன் தவிர்த்த தனையன்!
பழிசுமந்து தவித்த தருமன் !!

தன்னலமில்லா தியாகத்  தூதுவன்! 
அரசமுடி துறந்த தூயவன்!!

அயோத்தியில் பெற்றதெல்லாம் நிந்தனை!
அத்தீயிலும் ராமநலனே சிந்தனை !!


ஆண்டுகள் பதினான்கும் தவக்கோலம்!
ஆர்க்கொள்வார் இதுபோல் ஒருக்கோலம்!! 

அண்ணன் போல் இவன்கொண்டான் வனவாசம்!
அதன்காரணம் அவன்மேல்கொண்ட விசுவாசம் !!

நாட்டை ஆட்கொள்ளா மன்னர்மன்னன்!
நாயகனை ஆட்கொண்டான் வருபிறவிக்கண்ணன்!! 


 பரதன் புகழ் பாடுவோம் 
சகோதரம் போற்றுவோம் 

அன்பன்
ARR

Saturday 25 June 2011

நடுத்தர மக்களை நடுத்தெருவுக்கு கொண்டு வரும் மத்தியஅரசு



                                             இதற்கு என்ன தீர்வு என்றே தெரியாத பிரச்சனை இந்த பெட்ரோலிய விலை உயர்வு , நடுத்தர மக்களை நடுத்தெருவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இன்று மத்திய அரசு டீசல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாயும் , மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாயும் சிகரமாய் சமையல் கேசுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ஐம்பது ரூபாயும் உயர்த்தி தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி கடன் ஆற்றியிருக்கிறது , மன்மோகன் அரசு.


 பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் (கடந்த ஆறு மாதங்களாக ) பெட்ரோல் விலை உயர்வுக்கு பெட்ரோலிய  நிறுவனங்களே காரணம் என்று கூறிவந்த வந்த இந்த கையாலாகாத அரசு இன்று தன கட்டுப் பாட்டில் உள்ள டீசல் ,மண்ணெண்ணெய் , சமையல் கேஸ் விலையை தடாலடியாக உயர்த்தி , மக்களை பற்றிய அக்கறை ஏதும் எமக்கில்லை என்று மற்றுமொருமுறை நிதர்சனமாய் நிரூபித்திருக்கிறது .


ஏன் இந்த மாதிரியான விலை உயர்வு என்று கேட்டால் பெட்ரோலிய நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன, அவர்களின் நஷ்டத்திற்கு ஈடாக மத்திய அரசுதான் மானியம் கொடுக்கிறது என்று கதை அளக்கிறார்கள் , ஆனால் உண்மை என்னவென்றால், இந்த பெட்ரோலிய நிறுவனங்களுக்காக தரும் மான்யத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக வரியாக சம்பாதிக்கிறது மத்திய அரசு இந்த பெட்ரோலிய வர்த்தகத்தில் , எப்படிப் பார்த்தாலும் அது மக்கள் பணம்தான் , இதில் மக்களுக்கு ஏதோ இவர்கள் தியாகம் செய்வதைப்போல் நாடகம் ஆடுகிறார்கள்.ஏழை பங்காளர்களாக காட்டிக்கொள்ளும் இவர்கள் யாருக்கு வேலையாளாக இருக்கிறார்கள் தெரியுமா , பெரும் பணக்காரர்களுக்குதான் , அதனால் தான் ஏழை எளிய மக்கள் உபயோகப்படுத்தும் டீசலின் விலையை ஏற்றி , பணக்காரர்கள் பயணிக்கும் விமானத்தின் எரிபொருளை டீசலில் மூன்றில் ஒரு பங்காக விலை வைத்து கொடுக்கின்றனர் , என்ன கொடுமையான செய்தி இது , இன்னும் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்களோ....... 


         குறு நகரத்தில் இருப்பவர்களும், கிராமத்திலிருப்பவர்களும் கூட மாற்று எரிபொருளாக பழங்காலத்திற்கு திரும்பி விறகோ, ராட்டியோ, வைத்து எரித்து சமைத்து கொள்ளலாம் ஆனால் இன்று நகரத்தில் இருப்பவர்களின் கதி சமையல் கேசை தவிர எந்த வழியும் கிடையாது , இதில் இந்த கேஸ் ஏஜென்சி நடத்துபவர்கள் செய்யும் கொடுமை அதை விட  அதிகம், போன் செய்தால் பாதி நாட்கள் எடுப்பதே இல்லை , அப்படியே எடுத்தாலும் நாம் கேக்காத வரையில் புக்கிங் நம்பர் தருவதும் கிடையாது , டெலிவரி செய்யும் போது கேசை கொண்டு வருபவருக்கு பத்து முதல் இருபது வரை தெண்டம் அழவேண்டும், இது மாதிரியான சகிப்பு தன்மைகள் இருந்தால் தான் சிலண்டர் வீடு வந்து சேரும் இல்லாவிடில் அதவும் இல்லை , இப்படி பிரச்சனைகளுக்கு பயந்தே நம்மில் பலர் அமைதியாகவே இருந்து விடுகிறோம் .

    ஏற்கனவே விண்ணை தொடும் விலைவாசிக்கு உரம் இட்டது போல அமைந்துவிட்டது இந்த விலையேற்றம், இந்த விலையேற்றத்தால் இன்னும் அனைத்து பொருட்களும் விலையேறும் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்த காய்கறியின் விலை தற்போது 25 சதவீதத்திலிருந்து 65 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. உணவுப்பொருட்களின் விலை உயர்வு, வரலாறு காணாத அளவில் 18 சதவீதத்தைத் தொட்டு நிற்கிறது.ஆனால் அரசாங்கம் இதுகுறித்தெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. விலைவாசி விரைவில் குறையும் என்று அறிக்கை விடுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறது. விலை உயர்வின் நுகத்தடியில் மக்கள் உழன்று கொண்டிருக்கும்போது, விலை உயர்வுக்கு ஒரு காரணமான பெட்ரோலியப் பொருட்களின் விலையை தங்கள் இஷ்டம்போல் கடுமையாக உயர்த்தி வருகின்றன எண்ணெய் நிறுவனங்கள்.


நம் நாட்டில் எத்தனையோ இடங்களில் பெட்ரோலிய வளம் இருக்கிறது அதையெல்லாம் கண்டுபிடித்து பயன்படுத்த தொடங்கினால் இது மாதிரியான பிரச்சனைகள் தடுக்க படலாம் , ஆனால் இந்திய அரசு இது மாதிரியான இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்த்து ஊழலில் திளைக்கிறது, இதற்கு என்ன தீர்வென்றே  இது வரையில் தெரியவில்லை, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நடக்கும் , ஏனென்றால் இது தான் அரசியல்வாதிகள் ஊழல்  செய்ய ஏதுவான தளம் . இவர்களின்  ஆட்சியில் நம்முடைய வீட்டில் அடுப்பெரிய முதலில் நமுடைய வயிறு எரியவேண்டும் போல இருக்கிறது.  

அன்பன்
ARR   

Friday 24 June 2011

அடுத்த பிறவி...


நீ பாடியதுபோலான
தாலாட்டை எங்கோ 
கேக்கும் போதெல்லாம்
மனதை வந்து
சூழ்ந்து கொ(ல்)ள்கிறது
துக்கம்...


உன்னை போன்ற
தாய்மாரெல்லாம்  குழந்தையை
கொஞ்சும் போதெல்லாம்
மனதை வந்து
சேர்ந்து கொ(ல்)ள்கிறது
துயரம்... 


நீயில்லாத    
நம்முடைய வீட்டில் 
இருக்கும் போதெல்லாம்
மனதை வந்து
ஆக்கிரமித்து கொ(ல்)ள்கிறது
வெறுமை... 


உனக்கு 
பிடித்த மாம்பழத்தை 
பார்க்கும் போதெல்லாம்
மனதை வந்து
அப்பிக்கொ(ல்)ள்கிறது
சோகம் ...


இந்த மாதிரியான 
துக்கமும் துயரமும்
வெறுமையும் சோகமும்
நீ சொல்லிச் சென்ற 
அடுத்த பிறவியின் மீதான 
ஆசையை
வேண்டுதலை
நம்பிக்கையை 
அதிகரிக்க செய்கிறது
அம்மா ........................



உன்மகன்
கோப்லி. 


பட உதவி :eegarai.net 


Thursday 23 June 2011

கனிமொழி சிறையில்.... கலைஞர் கண்ணீர்....

            

நேற்று தில்லியிலிருந்து சென்னைக்கு தன் மகள் கனிமொழியை திஹார் சிறையில் பார்த்து விட்டு வந்த தி மு க தலைவர் கருணாநிதி தன் மகள் சிறையில் வாடுவதாகவும் , அவரின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார், ஒரு தந்தையின் மனநிலையிலிருந்து பார்த்தோமேயானால் மிகவும் வருந்ததக்க செய்திதான், ஆனால் போராட்டம் பலகண்ட , தனிமை சிறையிலும் மனம் கலங்காத தளபதியாய் களம் பல கண்ட மு.கருணாநிதியா இவர் ??

         இது அவரின் உடல் தள்ளாமையால் வந்த கலக்கமா இல்லை குடும்ப பாசத்தை தள்ளமுடியாமையால் வந்த கஷ்டமா தெரியவில்லை, எது எப்படி இருப்பினும் இது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகல்ல. கடந்த ஒரு மாதத்தில் தன் மகளை பார்க்க இரண்டு முறை தில்லி சென்ற கலைஞர் , முதல்வராய் இருந்த போது நம் மாநில நலனுக்காக எத்தனை முறை சென்றார் 

மீனவர்கள் தாக்கப்பட்டு,சுடப்பட்டு இறந்த போது, இலங்கை தமிழர் பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்தபோதெல்லாம் தில்லி செல்லாமல் இருந்ததேன்?

மாநில பாதுகாப்பை,நலனை  உறுதிசெய்யும் முதல்வர்கள் மாநாட்டிலும் கலந்து கொள்ளாமல் சட்டத்துறை அமைச்சரையும், துணை முதல்வரையும் அனுப்பியதேன்?

       சிறையில் இருக்கும் தன் மகளுக்காக இத்தனை துயரப்படும் கலைஞர், தன் கணவனை, தகப்பனை, சகோதரனை இன்னும் தன் மகனை இழந்த மீனவ தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் இவர் முதல்வராக இருந்தபோது கடிதம் எழுதுவதை விட வேறு என்ன அதிகமாக செய்தார், இது அவர் தமிழர்களுக்கு செய்த துரோகம் அல்லவா?  

                  தனகென்றால் ஒருநீதி மற்றவர்களுகென்றால் ஒருநீதியா, இவரின் ஆட்சியில் பெண்களே கைது செய்யப்படவில்லையா அவர்களுக்கெல்லாம் குடும்பம் இல்லையா ??அல்லது இவரின் ஆட்சியில் எல்லா சிறைகளும் குளிரூட்டப்பட்டு  இருந்தனவா??

                   இது மாதிரியான செயல்கள் ஒரு முன்னாள் முதல்வருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களையும்  கொண்ட பெரிய கட்சியின் தலைவருக்கு ஏற்புடையதா என்று பார்த்தோமேயானால் அவரை முதல்வராக தேர்தெடுத்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்??

            இதையெல்லாம் தவிர்த்துவிட்டு திருமதி கனிமொழியின் நிலையை பார்த்தோமேயானால் , ஏன் இந்த நிலை அவருக்கு எல்லாமே பதவியின் மீதுள்ள ஆசையால் விளைந்தது தானே, அவர் தானுண்டு தன் கவிதை, இலக்கியம் உண்டென்று இருந்திருந்தால் இந்த நிலை அவருக்கு வந்திருக்காதே, தன் மகளும் பதவி, பட்டம், படாடோபம் பெறவேண்டும் என்ற திருமதி ராஜாத்தி அம்மாளின் எண்ணத்தில்  தோன்றிய ஆசையின் விளைவுதானே இது ?? அரசியலில் ஆண் பெண் என்ற பேதமேது , அப்படி இருந்திருந்தால் கலைஞர் ஜெயலலிதாவை கைது செய்திருக்கவே கூடாதே ??    
                       

            கலைஞரையும்,  அவரின் அரசியல் சாதுர்யத்தையும் , தமிழையும் என் தந்தையின் வழியே கேட்டு அவரை நேசித்தவர்களில் நானும் ஒருவன் ஆனாலும் இன்றைய காலக்கட்டத்தில் அவரின் மீதான இந்த கேள்விகளை என்னால் தவிர்க்கமுடியவில்லை.  

அன்பன்
ARR 

Wednesday 22 June 2011

புதிய அரசின் நெருடும் சில செயல்கள்

செயல் 1.

                    
       ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு  காலில் சூடு தெரியாமல் இருக்க மினரல் வாட்டரை காவல்துறை அதிகாரி ஊற்ற இன்னொருவர் துணியால் துடைத்துக்கொண்டே செல்ல முதல்வர் நடந்து சென்றார்,பத்திரிகை செய்தி ,இது சென்ற ஜெயலலிதா அரசின் ஆடம்பர போக்கை மறுபடியும் ஞாபகபடுத்துகிறது , அந்த நாள் திரும்ப வந்து விட்டதோ என நினைக்க தோன்றுகிறது, இது மாதிரியான செயல்களை நல்ல ஆட்சி கொடுக்க போவதாக சொல்லும் முதல்வர் அனுமதிக்ககூடாது. இது காவல்துறையின் கண்ணியத்தை பாதிக்கும் செயல்.      

செயல் 2. 

                      
             டாஸ்மாக் கடை திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது , அரசின் இந்த அறிவிப்பு மதுவிலக்கை  பற்றிய எண்ணமே இந்த அரசுக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது, தினம் தினம் உழைக்கும் பணத்தில் முக்கால்வாசி பணத்தை மதுவிடமிழக்கும் ஏழை மக்கள் மிச்ச பணத்தையும் இழக்க வைக்கும் செயலாகவே எனக்கு படுகிறது , இது குடிகாரகளை இன்னும் ஊக்குவித்து குடியை அதிக படுத்த எடுக்க பட்ட நடவடிக்கையாகவே தெரிகிறது.இருக்கிற காசை பிடுங்கி இலவச அரிசி கொடுக்கும் செயல் ஏற்புடையது அல்ல. 

செயல் 3 

                      
          சென்ற ஆட்சியில் இலங்கை படையினரால் நம்  தமிழக மீனவர்கள் கடத்தப்பட்ட போதெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார் என கண்டன அறிக்கைகள் பல தந்த இந்நாள் முதல்வர் நேற்று, கடத்தப்பட்ட மீனவர்களுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதியது ஆட்சிகள்  மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதை எடுத்துக் கட்டியது, இது மாதிரியான கண்டனங்களும் கடிதங்களும் எந்த மாற்றத்தையும் உண்டாக்காது எனபது இவர்கள் இருவருக்குமே தெரியும்,  நம் மீனவர்கள் தான் பாவம்.    
  
அன்பன்
ARR

Sunday 19 June 2011

ஏன் மக்கள் திருட்டு வி சி டி யில் படம் பார்க்கிறனர்

         

இன்று எல்லா தயாரிப்பாளர்களும் எதிர்க்கும் ஒரு விஷயம்,அவர்களை  பாதிக்கும் ஒரு விஷயம் என்றால் அது  திருட்டு வி சி டிதான் (இப்பெல்லாம் டி வி டி வந்தாலும் அது வி சி டி என்றே  அழைக்கபடுகிறது) இது அவர்கள் உழைப்பையும் பணத்தையும் விழலுக்கு இறைத்த நீர் போல பயனற்று ஆக்குகிறது  , படம் ரிலீசாகி  இரண்டாம் நாளே டி வி டி ரெடி, சில படங்கள் ரிலிசாவதற்கு முன்னமே திருட்டு டி வி டி வந்து விடுகிறது, இதற்கு காரணம் சரியான தேதியில் படங்கள் ரிலிசாகாமல்  இருப்பதுதான், குறிப்பிட்ட காலம் வரையே அவர்கள் டிவிடி வெளியிடாமல் இருப்பதற்கு ஒப்பந்தம் போடுகிறார்கள், இதுதான் பிரச்சனை என்றால் அவர்கள் ஏன் டி வி டிக்கு அனுமதி கொடுக்கிறார்கள் என தெரியவில்லை , இப்படி வெளிநாடுகளில் அனுமதிக்க பட்ட டி வி டிக்கள் தான் இந்தியாவில் இறக்குமதியாகிறது.

                     இது போன்ற டி வி டி தயாரிக்கும் கும்பல் நோகாமல் நொங்கு தின்ன கதையாக படத் தயாரிப்பாளர்களின் முதலீட்டை உறிஞ்சிவிடுகிறார்கள்.இந்த திருட்டு டி வி டியால் தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள்  எத்தனையோ பேர் இன்று தமிழ்நாட்டில் உண்டு , இதை தடுக்க எத்தனை முயற்சித்தாலும் முடிவதில்லை , இதற்கு காரணம் என்னவென்று பார்த்தோமேயானால் இந்த திருட்டு வி சி டி க்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதுதான். இந்த ஆதரவுக்கு  என்ன காரணம்?? 



             

                       என்னை பொறுத்தவரை இதற்கு காரண காரணியாக இருப்பது திரைஅரங்குகள் தான், அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் தான் . இன்றைய கால கட்டத்தில் ஒரு நான்கு பேர் கொண்ட குடும்பம் சினிமாவுக்கு போகவேண்டும் என்றால் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது வேண்டும், எங்கும் எதிலும் அநியாய விலை , பைக் நிறுத்த இருபது ரூபாய் , டிக்கெட் 150 ரூபாய் இது படத்திற்கு தகுந்தாற்போல் மாறும் , காபி இருபது ரூபாய் , பாப்கார்ன் ஐம்பதிலிருந்து இருநூறு வரை போகும் , பப்ஸ் நாற்பது ரூபாய் இப்படி எல்லாமே அநியாய விலை, அந்த படத்தை பார்க்க இந்த டிராப்பிகிலும் மனித கூட்டத்திலும் கடந்து செல்லவேண்டும்.இவை எல்லாம் நல்ல நிலையில் பராமரிக்கப்படும் நிலையில் உள்ள திரை அரங்குகள்.



              சற்று சுமாரான திரைஅரங்குகள் என்றால் சுகாதாரத்திற்கு கேட்கவே வேண்டாம், அங்கே போய் வந்தால் அனைத்து தொற்று நோயும் நம்மை வந்து சேரும் , இப்படி அநியாய விலையும் , சுகாதார சீர்கேடும் இருந்தால் எப்படி மக்கள் அங்கு சினிமா செல்ல ஆசைப்படுவார்கள் , முன்பெல்லாம் பொழுபோக்க சினிமாவே கதி இன்று அப்படி அல்ல ஷாப்பிங் என்ற பெயரில் வெளியே வந்து பொழுதை கழிக்கலாம். இதையெல்லாம் தாண்டி அவர்கள் போனாலும் நம்ம கதாநாயகர்கள் சுயதம்பட்டம் அடிக்கும் காத்து குத்தும் வேலைகள் மக்களை வெறுப்படைய வைக்கிறது, கதைக்காக நாயகர்களை தேடாமல் கதாநாயகர்களுக்காக கதையை ஒட்டவைக்கும் வேலையை செய்வதால் மக்களும் என்ன செய்வார்கள்.


            இதை எல்லாவற்றையும் விட வசதியான காரணங்கள் நிறைய உள்ளன, ஒரு டி வி டி யின் விலை இருபது ரூபாய் மட்டுமே , இப்போதெல்லாம் நல்ல தரத்துடன் 5:1 வசதியுடன் கிடைக்கிறது , அதிக அலைச்சல் இல்லை , வீட்டிலேயே வசதியாக பார்க்க முடியும், பிடித்த பகுதிகளை பல முறையும் பார்க்க முடியும், பிடிக்காத பகுதிகளை பார்க்காமல் தவிர்க்க முடியும்.இதற்கெல்லாம் தீர்வு நியாயமான கட்டணங்களும் , நல்ல கதையம்சம் கொண்ட படங்களும் தான் ஓரளவுக்காவது நல்ல மாற்றத்தை கொண்டு வரும் , மக்களும் படம் பார்க்க தியேட்டர் வருவார்கள் இல்லாவிடில் திரை அரங்குகள் எல்லாம் மண்டபங்களாவதை  யாராலும் தடுக்க முடியாது.   

அன்பன்
ARR                 


Saturday 18 June 2011

மனதை பாதித்த சாலை விபத்துக்கள்



                                இன்று வளர்ந்து வரும் வாகன பெருக்கத்திலும் நமது அவசர போக்குவரத்திலும் , தகுதி இல்லாத வாகன ஓட்டிகளாலும், குடி போதைகளாலும் , கவனக் குறைவுகளாலும் , முறையற்ற பாதுகாப்பற்ற போக்குவரத்தாலும், அவசியமே இல்லாத அவசரங்களாலும் கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் நடந்த சாலை விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?????
ஒரு லட்சத்து முப்பத்தையிந்தாயிரம் பேர் (1,35,000), இதில் உடல் உறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.

         தமிழகத்தில் 2006​ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழப்பு 11,009 பேர். 2010​ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழப்பு 15,409 பேர். 2007 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை 2006​ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, 2013​ஆம் ஆண்டு 20 சதவீதம் உயிர் இழப்பைக் குறைப்போம் என்ற கொள்கை முடிவை எடுத்தது. ஆனால், 2010​லேயே 40 சதவீதம் உயிர் இழப்பு அதிகரித்து இருக்கிறது. 5 வருடங்களாக தமிழ்நாட்டில் மட்டும் சாலை விபத்துகளில் உயிர் இழந்தவர்கள் 59,870 பேர்.  

            உலகின் வாகன எண்ணிக்கையில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ள இந்தியாவில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு 13 சதவீதம்; சாலை விபத்து உயிரிழப்புகளில் உலகிலேயே இந்தியாதான் முதலிடம் என்ற புள்ளி விவரங்கள்,என் மனதை என்னவோ செய்கிறது.ஜப்பானில் ஒரு அணுகுண்டு வீசப்பட்டபோது, இறந்தவர்கள் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர். ஆனால், கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் சாலை விபத்துகளில் இறந்தவர்கள் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் பேர்.இது, சுனாமியின் பாதிப்பை விட அதிகம்; பூகம்பங்களில் உயிர் இழப்பவர்களை விட அதிகம். ஆனால், இந்த இழப்பு, ஒவ்வொரு நாளும் பரவலாக ஏற்படுவதால் ஒட்டுமொத்த பாதிப்பு நமக்குப் புரிவது இல்லை. ஒவ்வொரு விபத்திலும் உயிர்களை இழப்பவர்களது குடும்பங்கள், வேதனையில் துடிக்கின்றன. அவர்களது எதிர்கால வாழ்வு இருண்டு போகிறது.அவர்களிப்பற்றி கொஞ்சமாவது சிந்திக்கிறோமா நாம் , எதற்கடுத்தாலும் அவசரம் எங்கும் அவசரம் எதிலும் அவசரம் ஒரு சிறு இடைவெளி கிடைத்தாலும் புகுந்து வெளியே வர அவசரம், நாம் இல்லாது போனால் நம் குடும்பத்திற்கு யார் துணை என எண்ணிப்பார்த்தால் இப்படி கவனக்குறைவாக நடந்து கொள்வோமா??


                            இந்த விஷயத்தில் போக்குவரத்து காவலர்களுக்கும் கொஞ்சம் பொறுப்பும் , வேலையில் கவனமும் தேவை சிக்னலை மீறும் வாகன ஓட்டிகளை இவர்கள் கண்டு கொள்ளுவதே இல்லை , நேற்று தி.நகரில் இருந்து திரும்பிக்கொண்டு இருந்த  நான் எனக்கான சிக்னல் விழுந்ததும் என் வண்டியை செலுத்திய வேளையிலே எதிர்புறத்தில் இருந்து வந்த ஒரு பைக் என்னை மின்னலென கடந்து சென்றது , நான் கொஞ்ச வேகமாக எடுத்திருந்தாலோ  இல்லை அவன் சற்றுமெதுவாக வந்திருந்தாலோ ஒரு விபத்து நடந்திருக்கும் என்பது நிச்சயம், அவனின் அஜாக்கரதைக்கு அவன் விழட்டும் சாலை விதிகளை பின்பற்றும் நான் ஏன் பாதிக்க படவேண்டும்.இதை தேமே என்று பார்த்து கொண்டிருந்த அந்த போக்குவரத்து காவலரை என்ன செய்வது, தவறு செய்தால் தண்டிக்க படுவோம் என்ற எண்ணம் எந்த வாகன ஓட்டிகளுக்குமே இல்லை, அப்படியே அவர்கள் பிடிப்பட்டாலும் ஐம்பதோ  நூறோ கொடுத்து சரிக்கட்டிவிடலாம் என்ற எண்ணம் தான் அவர்களை இப்படி பொறுப்பின்றி செயல்படச் செய்கிறது, அந்த பணம் அவர்களுக்கோ அல்லது ஏதோ ஒரு அப்பாவிக்கோ போடும் வாய்க்கரிசி என்பதை அவர்கள் உணர்ந்தால் தான் மாற்றம் வரும்.

        இது ஒருமாதிரியான கொடுமை என்றால் நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துக்கள் இன்னும் மோசமானது, அதுவும் இரவு நேரப்பயணம் மிகவும் ஆபத்தானது , முன்னே செல்லும் வாகனம் கண்களுக்கு தெரியவேண்டி, எரிய விடவேண்டிய சிவப்பு விளக்குகள் எந்த லாரியிலுமே எரிவதில்லை , சில பஸ்களிலும் இருப்பதில்லை இதையெல்லாம் எந்த போக்குவரத்து காவலரும் கவனிப்பது இல்லை , நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசாரும் பணமே கண்ணாக இருப்பதால் இது மாதிரியான கொடுமைகள் நிகழ்கின்றன , அதுவும் சாலை திருப்பங்களில் நிறுத்தப்படும் லாரிகளால் தான் மிக அதிகமான விபத்துகள் நடக்கின்றன.

            
  

  இதற்கல்லாம் என்ன தீர்வு என்பது நாம் அறியாத தெரியாத விஷயம் எல்லாம் அல்ல , தனி மனித ஒழுக்கமும் , மற்றவர்களின் உயிரின்மீதும் உடமையின்மீதும் இருக்க வேண்டிய மதிப்பும் மிக அவசியம்.நம்முடைய பொறுப்பற்ற செயலாலும் நமக்கும் மற்றவருக்கும் ஏற்ப்படும் இழப்பை என்ன செய்தாலும் திருப்பி தர முடியாது என்பதை மக்களாகிய நாம் அனைவரும் உணரவேண்டும், அரசாங்கமும் அதன் பொறுப்பை உணர்ந்து சட்ட திட்டங்களை சீர்ப்படுத்தி கடுமையான தண்டனைகளை உறுதிப்படுத்தினால் இது மாதிரியான தேவை இல்லாத இழப்புகளை தடுக்கலாம், இது போன்ற சாலை விபத்தில் தன அமைச்சரவை சகாவையே இழந்த நம் முதல்வர் இதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம் , அதே போல் நாம் நல்ல முறையில் வாகனத்தை ஓட்டினால் மட்டும் போதாது எதிரே , அருகே வருபவரும் எப்படி ஓட்டுகிறார் என்பதை பார்த்து யூகித்து வாகனத்தை செலுத்தி சாலை விபத்துக்களை தடுக்கவேண்டும் என உங்கள் அனைவரையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்




         இந்த ஒரு படமே சாலை விபத்தின் கோரத்தை உங்களுக்கு எடுத்துச் சொல்லும் , ஆயிரம் வார்த்தைகள் சாதிக்காததை ஒரு படம் கொண்டு சேர்க்கும் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப இதை இணைத்துள்ளேன். இதை படித்த ஒருவராவது இனி நமக்கும் நம்மால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராதவாறு வாகனம் ஓட்டுவேன் என முடிவு செய்தீர்களேயானால் அதுவே இந்த பதிவின் வெற்றி 
நன்றி

அன்பன்
ARR   


Friday 17 June 2011

தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கைகள்

    

                      கடந்த பத்து நாட்களில் வேலூர் , சேலம் , தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் கட்சியின் பெயரையும் ஆளுமையையும் சொல்லி மக்களிடமும், வியாபாரிகளிடமும், ஏன் அவர்கள் கட்சியினரிடமே பணம் சம்பாதிக்க முயன்ற அல்லது சம்பாதித்த கட்சி உறுப்பினர்களை அதிரடியாய் கட்சியை விட்டு நீக்கியும் காவல் துறையினரால் கைதும் செய்ய உத்தவிட்டு இருக்கிறார்.

   இது தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்றம், பாராட்டுக்கு உரிய செயலும் கூட ,நன்றாக நடக்கும் ஆட்சியையும் தங்களது தவறான நடவடிக்கைகளால் கெடுப்பது கட்சியின் இடைப்பட்ட தொண்டர்கள்தான், ஒன்றியம், நகரம் என பதவிகளை பெற்று கொண்டு இவர்கள் நடத்தும் தர்பார் மக்களை முகம் சுழிக்க செய்யும் என்பதில் ஐயமில்லை , இவர்களால் அரசாங்கமே நடப்பது போல இவர்கள் செய்யும் பந்தாக்களும் , எங்கோ எவரோ வருவதற்கு அவரிடம் நல்ல பெயர் வாங்க இந்த அரசியல் அல்லக்கைகள்  செய்யும் அட்டூழியங்களும் எல்லா ஆட்சியிலும் நடக்கும் தொடர்கதை, அந்த மாதிரியான செயல்களுக்கு தடை போடும் வகையில் இருக்கிறது முதல்வரின் நடவடிக்கைகள் .  


           அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், எந்த கட்சியின் தொண்டர்களாலும் எந்த கட்சியும் ஆட்சியை பிடிப்பதில்லை , மக்களால்தான் அவர்களால் ஆட்சியில் அமரமுடியும் , முடிகிறது , ஆளும் கட்சிக்கு விழும் ஓட்டுகளில் முப்பது சதவீதம் மட்டுமே கட்சியின் தொண்டர்களில் ஓட்டுக்கள் மற்றவை எல்லாம் நடுநிலையாளர்களின் ஓட்டுதான் , அதை மனதில் வைத்து இது மாதிரியான அரசியல் ரௌடிகளின் அராஜகங்களை இரும்பு கரம் கொண்டு நசுக்கவேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.

                       இந்த விஷயத்தில் நூறு குற்றவாளி தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்க படக்கூடாது என்ற சித்தாந்தம் எல்லாம் சரிப்பட்டு வராது, நூறு குற்றங்கள் நடக்காமல் இருக்க இரண்டு நிரபராதிகள் தண்டிக்க பட்டாலும் பரவாயில்லை  ஏனெனில் இது மக்களின் நலன் சம்பந்தப்பட்ட  விஷயம், கட்சியின் வளர்ச்சி பாதிக்கும் விஷயம் .


                        இது மாதிரியான ஆரோக்கியமான நடவடிக்கைகளை ஜெயலலிதா இத்தோடு நிறுத்திவிடக்கூடாது , அவரை நம்பி வாக்களித்த தமிழக நலனை பாதிக்கும் எந்த செயலையும் அவர் அனுமதிக்ககூடாது என்பதே எல்லோரின் விருப்பமும்.இந்த நல்ல மாற்றம் தொடரட்டும் , மக்கள் நலன் காக்கட்டும்  

அன்பன்
ARR    


Thursday 16 June 2011

நண்பனின் தற்கொலை முயற்சி

   


                               அது ஒரு மார்கழி மாத ஞாயிற்று கிழமை,  மாலை அநேகமாக ஆறு மணி இருக்கும் லேசான மழைத் தூறல் தூறிக்கொண்டே  இருந்தது, அன்று வீட்டிலிருந்து வெளியே வந்த நான், எங்கள் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி இருக்கும் கேபிள் ரூமில் என் நண்பர்களில் ஒருவனான சதா.ராஜாவை( இவனை நம் பதிவுலக நண்பர்கள் RVSM - தீராத விளையாட்டுப் பிள்ளை மற்றும் மன்னைமைந்தர்களில் ஒருவன் மாதவனுக்கும் தெரியும்)   பார்த்தேன், அருகில் சென்று பார்த்த போது அவன் கண்களில் கண்ணீர் எங்கள் ஹரித்திராநதியில் உள்ள பசங்க எல்லோருமே சிறுவயது முதல்  நண்பர்கள், நாங்கள் செய்யாத வேலைகள் கிடையாது அடிக்காத லூட்டிகள் இல்லை , நாங்கள் பகிர்ந்தது கொள்ளாத விஷயங்களும் இல்லை அதனால் ஒருவருக்கு  ஒன்று என்றால் மத்தவர்கள் துடித்து போய்விடுவோம் , அதனால் பதறியபடியே "என்னடா ஆச்சி ஏன் அழுவற" என்றேன் , அதற்கு அவன் மௌனமாய் தொடர்ந்து அழ இன்னும் குழப்பம் அடைந்த நான் "சொல்லு ராஜா என்னாச்சி ஏன் இப்படி அழற" என்று கேட்க்க , "ஒண்ணும் இல்ல கோப்லி எனக்கு வாழவே பிடிக்கல அதனால தூக்க  மாத்திரை சாப்பிட்டுட்டேன் என்றான்" அழுதவாறே ( எங்களுக்கு அப்போது பதினைந்து வயது தான் இருக்கும் ) நான் அப்படியே ஆடிப்போயிட்டேன் , இது மாதிரியான அனுபவம் எனக்கு புதிது, என்ன செய்வதென்றே தெரியவில்லை , பதறியபடியே நான் அங்கும் இங்கும் ஓடி என் அண்ணன் ரமேஷ், நண்பர்கள் R.ஸ்ரீராம் மற்றும் முரளி ஆகியோரை  அழைத்து வரவும் அவன் மயங்கி விழாவும் சரியாக இருந்தது , அப்போது மழையும் சற்று வலுக்க தொடங்கியது , நாங்கள் அவனை எழுப்ப முயற்சிக்க சற்றே நினைவுக்கு வந்தான் , உடனே அவனை சைக்கிளில் வைத்து எங்கள் குடும்ப டாக்டர் சந்திரசேகரிடம் (மன்னார்குடியில் தொண்ணூறு சதவீதம் அவரிடம் தான்) அழைத்து சென்றோம்.

  அவரிடம் விஷயத்தை சொன்னதும் அவனை ஒரு மாதிரியாக பார்த்தவர் என்ன மாத்திரை , எத்தனை மாத்திரை  என்று கேட்க ஒன்றுக்கும் சரியான பதில்  இல்லை அவனிடம் , முழித்தான் , உடனே அவர் பல்ஸ் நல்லா இருக்கு அதனால வீட்டுக்கு அழைச்சிகிட்டு போய் உப்பு தண்ணி குடுங்க பார்க்கலாம் ஏதாவதுன்னா ஜி ஹெச் க்கு அழைச்சிக்கிட்டு போங்க என்று கூறிவிட , மீண்டும் அவனை அழைத்து கொண்டு (எங்க வீட்டுக்கும் அவரின் மருத்துவ மனைக்கும் நான்கு  கிலோமீட்டர் தூரம் இருக்கும்)  ஹரித்திராநதி வந்து இரண்டு படி உப்பை ஒரு வாளியில் கலந்து குடிக்க சொன்னால் அதை குடி குடியென குடித்து விட்டு வாந்தி எடுக்கிறான், அவன் கண்ணுலேந்து எல்லாம் தண்ணியா வருது வாந்தியின் வேகத்தில, ஒரு வழியா வயிறு சுத்தமாக சோர்ந்து போய் அமர்ந்துட்டான். எங்களுக்கோ ஒரு மிகப்பெரிய சாதனையை செய்த மாதிரியான உணர்வு .

 அந்த களேபரம் எல்லாம் முடிந்தவுடன் இரண்டு மணி நேரம் கழித்து நாங்கள் எப்போதும் உக்காரும் படித்துறையில் அமர்ந்திருக்கும் போது இப்பவாவது சொல்லுடா எத்தனை மாத்திரை முழுங்கின என்று நான் கேட்ட போது அவன் சொன்ன பதில் .............................................................
அரை மாத்திர கோப்லி, உடனே விட்டார் என் அண்ணன் அவன் கன்னத்தில் ஒரு அறை, ஏண்டா  இந்த அரை மாத்திரைக்க்காகவா எங்களை இப்படி மழையில சைக்கிள்ள அலைய விட்ட என கேக்க, ஏன்டா இப்ப அடிக்கிறிங்க இதுக்கு தான் நான் அப்பவே சொல்லலே என்றானே பாக்கலாம் .......... அப்போது எங்களுக்கு கோவம் வந்தாலும் இப்போதும் நாங்கள் பேசி மகிழும் நினைவு அது .


அந்த அரை மாத்திரை  தற்கொலை  முயற்சிக்கான  காரணம்  என்ன  பாழப்போன காதல்தான் 

மன்னை  ஸ்ரீவித்யா ராஜகோபாலனின் ஏகாந்த சேவை செங்கமலத்தாயாருடன்    




அன்பன்
ARR
           



       

Wednesday 15 June 2011

ஈழம் - மரணித்துப் போன மனிதம்



சிதறிய உடல்கள்
பதறிய உள்ளங்கள் 
நடுங்கிய தேகம்
ஒடுங்கிய தேசம் 
சத்தமிடும் ஓலம் 
சகித்திடும் காலம் 
அழித்திடும் முடிகொண்டு
வெடித்திடும் வெடிகுண்டு 
நிலையில்லா சித்தம்
நிலமெல்லாம் ரத்தம் 



மானம் மறைக்கிறது  ஒரு கை
கண்ணீர் துடைக்கிறது மறு கை 
துண்டாகி கிடக்கிறது ஒரு கை
துடிதுடித்து தவிக்கிறது மறு கை 

மண்ணுமில்லை இழக்க ஒன்றுமில்லை
உறவுமில்லை காக்க எவருமில்லை
துக்கம் துடைக்க யாருமில்லை 
உயிரை துறக்க வழியுமில்லை  
புத்தனும் இங்கே புனிதமில்லை 
மறந்தும் அங்கே மனிதமில்லை


காமம் கழிக்க எங்குலப் பெண்டீரா 
ஐக்கிய சபையே இந்நிலை கண்டீரா
இவர்களின் நிலையாவும் சர்வநாசம்
இனியாவது களைஎடுக்குமா சர்வதேசம் 



புயலென   தாக்கி அழித்த குண்டுகள்
புல்லென  வீழ்ந்தன மழலை செண்டுகள்
நெருப்பென தகிக்கிறது தமிழர் நெஞ்சம்
கடவுளுக்கும் கருணையில் ஏனிந்த கஞ்சம்

சொந்தத்தை  இழந்து நிற்கின்றனர்
துன்பத்தை தொடர்ந்து கற்கின்றனர்
அடிமைத்தனமே அவர்கள் நிலையானது 
அழுதழுது கண்ணீரே கடலலையானது 



தமிழர்களும்   ஆண்டாண்டு காலமாய் ஆண்டவரே
இவர்களின் துயர்துடைக்க வருவீரா ஆண்டவரே 


நேற்று சேனல் 4 இல் பார்த்த வீடியோவின் விளைவு இந்த கவிதை 
மனம் கனமாகிப்போன கணம் அது, இப்படி கேட்ப்பாரற்று கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களின் நிலையை தடுக்க முடியாத கோழையாக , கையாலாகாதவனாக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் .

அன்பன் 
ARR