Showing posts with label உறவு. Show all posts
Showing posts with label உறவு. Show all posts

Thursday, 8 March 2012

சந்தேகமும் நம்பிக்கையும்........


சந்தேகம் சங்கடங்களின் சங்கமம்
நம்பிக்கை நகர்தலின் நற்குணம்.

ஆனாலும்….

சந்தேகத்தின் மீதான நம்பிக்கையும்
நம்பிக்கையின் மீதான சந்தேகமுமே
நம்மை வழி நடத்துகிறது


சந்தேகம் சலனத்தின் குறியீடு
நம்பிக்கை அறியாமையின் அளவீடு


சந்தேகத்தின் முழுமையில்
நரகம் உருப்பெறுகிறது

நம்பிக்கையின் முழுமையில்
சொர்க்கம் விடைப்பெறுகிறது


குருடனுக்கு காட்சிகளில் சந்தேகம்
பார்வையில் நம்பிக்கை
பரிவறியாதவர்க்கு நட்பில் சந்தேகம்
காதலில் நம்பிக்கை

இரண்டுமே எரிகின்ற கொள்ளி
இதில் எந்த கொள்ளி
நல்ல கொள்ளி.

நம்பிக்கை
யோசிக்க விடுவதில்லை
சந்தேகம்
வாழவே விடுவதில்லை

ஆகவே
அனைத்தையும் அன்பால்
உணர்வோம்
உணர்த்துவோம்

அன்பே
சந்தேகத்திற்கும்
நம்பிக்கைக்கும்
அப்பாற்பட்டது – செயலில்
அளப்பறியது.

அன்பன் 
ARR

Friday, 13 January 2012

சசிகலாவின் நீக்கமும்? அதன் காரணமும்?

இது எல்லோரும் எழுதி தீர்த்த விஷயம் தான் என்றாலும் எனக்கு இதில் மற்றவர்களைவிட சற்றே கூடுதலான உரிமை உண்டு காரணம் நான் மன்னையின் மகன் என்பதால்.............



                               சசிகலாவின் நீக்கத்தின் நோக்கம் இன்றுவரை ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது , அதன் காரணத்தை இன்றுவரை ஜெயலலிதா சொல்லவில்லை , அது அவசியமா இல்லை அவரின் தனிப்பட்ட விஷயமா என்று பார்த்தோமேயானால் ஜெ அவரை போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றி இருந்தால் அது அவரின் தனிப்பட்ட விஷயம் ஆனால் ஒரு ஜனநாயக அமைப்பாக சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சியை விட்டு வெளியேற்றும் போது அதற்கான காரணத்தை, அவர் அவரின் தொண்டர்களுக்கு சொல்லியிருக்க வேண்டும் ஆனால் வழக்கம் போலவே இதிலும் மர்மம், மௌனம் 

அதோடு சேர்த்து இதுவரை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஏற்பட்ட குற்றங்களுக்கும் , ஊழல்களுக்கும் , தவறுகளுக்கும் சசிகலாவே முழு பொறுப்பு என்பது மாதிரியான செய்திகள் பத்திரிக்கையின் வாயிலாக பரப்ப படுவது சரியல்ல என்பது என் கருத்து , அதே வேளையில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கமும் , அராஜகமும் அந்த கட்சியில் இல்லை என்று சொல்லவோ அதை நியாயப்படுத்தவோ இல்லை இந்த பதிவு , ஆனால் அந்த தவறுகளுக்கு ஜெயலலிதாவும் பொறுப்பு என்பதுதான் என் கருத்து. 

                                      
                                       இதில் ஜெயலலிதாவிற்கு பொறுப்பு இல்லை சசிகலாவே முழு காரணம் என சொன்னால், ஒரு மிகப் பெரிய கட்சியின் தலைவி , மூன்றாவது முறையாக முதல் அமைச்சர் பதவில் இருப்பவர் சசிகலா என்ற ஒற்றை மனுஷிக்கு அடிமையாக இருந்தார் என்றல்லவா அர்த்தம், இதற்கு முன் சசிகலாவை பற்றியும் அவர்தம் குடும்பத்தை பற்றியும் யாரும் குறை கூறவோ குற்றம் சொல்லவோ இல்லையா என்ன ? அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது மட்டும் வந்ததென்றால் அதன் காரணம் என்ன ?. அதற்கான காரணம் பெங்களுரு சொத்து குவிப்பு வழக்கும் அதன் பின் இடப்பட்ட திட்டங்களும் என்றால், மற்றவர்களுக்கு பங்கம் என்றால் அமைதியாக இருக்கும் ஜெயலலிதா தனக்கு ஆபத்து என்றால் ஆவேசப்படும் சுயநலவாதியா என்ன ?

                                                இதுநாள் வரை சசிகலா பெற்ற பயன்களை அவரின் தவறுகளை சொல்பவர்கள் ஜெயலலிதா விற்காக அவர் பட்ட அவமானங்களையும் இழப்புகளையும் பட்டியலிடாததேன்?என்னமோ சசிகலாதான் எல்லாக் குற்றங்களையும் செய்தவர்மாதிரியும் ஜெயலலிதா தவறே செய்யாதவர் மாதிரியும் மாயையை உருவாக்குவது ஏன் என்றுதான் எனக்கு புரியவில்லை , அப்படியே இது உண்மையாக இருந்தாலும் அவரின் தவறுகளை தடுக்காது இருந்த ஜெயலலிதாவும் குற்றம் செய்தவர்தானே ? அதை சசிகலா வை குறை சொல்பவர்கள் வசதியாக மறந்ததேன் ? 


 சசிகலா மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நீக்கத்தால் ஜெயலலிதாவின் தவறுகளை மறைக்க முடியாது, என்பதே என் கருத்து, இது அரசியலில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியதே தவிர வேறு எந்த மாற்றமும் மக்களுக்கு நிகழ்ந்து விடப்போவதில்லை. இதற்கு ஜெயலலிதாவின் புயல் நிவாரண கடலூர் ஹெலிகாப்டர் பயணமே சாட்சி , இதைப் பற்றி பின்னொரு பதிவில் .    

                               இந்த பதிவை ஒரு மாற்று கருத்திற்காகவும், என்னுடைய மனதில் தோன்றிய கேள்விகளுக்காகவும் பதிந்தேனே அன்றி இன்றுவரை நான் மன்னார்குடியில் இருந்து வந்திருந்தாலும் அவரின் குடும்பத்தினருடன் ஒரு வினாடி தொடர்பும் இல்லாதவன் , இந்த பதிவை படித்து நான் அவர்தம் குடும்பத்தால் பயன் பெற்றவனாக நீங்கள் கருதினால் நான் பொறுப்பல்ல .
                                         நன்றி !

அன்பன் 
ARR                     

Tuesday, 29 November 2011

மழலைகள் உலகம் மகத்தானது - தொடர் பதிவு



மழலைகள் உலகம் மகத்தானது என்ற மகோன்னத தொடர் பதிவை என்னை தொடர அன்பு கட்டளையிட்ட மதிப்புக்குரிய அய்யா திரு.வை.கோபாலகிருஷ்ணன்  அவர்களின் உத்தரவை ஏற்று நான் எழுதிய பதிவு இது...........




                      மழலைகள் உலகம் மட்டுமல்ல மழலைகள் உள்ள உலகமும் கூட மகத்தானதுதான். சரி மழலைகள் உலகம் மகத்தானது என்பதன் காரணத்தை அறிய முற்படுகையில் அந்த அற்புத உலகத்தில் தான் போட்டி, பொறாமை, குரோதம்,துரோகம், என்ற எந்த கீழான எண்ணங்களும் அவர்களிடத்தே இல்லை.சலனமே இல்லாத நிதர்சனமான உள்ளம் அது. சந்தோஷமோ, சோகமோ உடனே வெளிப்படுத்திவிடும் மழலைகளின் உலகம் மகத்தானதாக இருப்பதில் என்ன ஆச்சர்யம் இருந்துவிட முடியும்.


                      என் வாழ்க்கையில் இன்னும் என் குடும்பத்தில் பல மழலைகளைப் பார்த்திருந்தாலும், நான் ரசித்த இரு மழலைகளைப் பற்றியே இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.




1. என் சின்ன அண்ணன் மகள்: கமலகிருஷ்ணவி 


                     எங்கள் குடும்பத்தில் சரியாக 35 வருடங்களுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை அவள். அதற்கு முன் எங்கள் அம்மா அப்பாவிற்கு 8 பேர பசங்க இருந்தாலும் ஒரு பேத்தி இல்லையே என்ற குறை குறைக்க வராது வந்த மாமணி போல் வந்த தேவதை அவள். பேர பசங்களின் கடா முடா விளையாட்டுக்களையே பார்த்த நாங்கள் இவளின் அமைதியான விளையாட்டுக்களால் மனம் மகிழ்ந்து போனோம், அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தின் நிதி நிலை சரியில்லாத கவலையை அகற்ற வந்த அகல்விளக்கு அந்த பாப்பாகுட்டி.


2. என் மகள்: கமலாத்மிகா


                என்னையும் என் எழுத்தையும் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு தெரியும் என் மகளை நான் பெற பட்ட வேதனைகள், ஒவ்வொரு முறையும் மருத்துவர்கள் வெவ்வேறு பிரச்சனைகளை சொல்ல, மனம் நொந்து மருத்துவமனையில் இருந்த என் மகளை பார்க்க போகும் போதெல்லாம், என்னை வரவேற்பது போல சின்ன கை, கால்களை ஆட்டி அந்த மணியான காந்த கண்களால் பார்க்கும் பார்வை ஒராயிரம் இடிகளையும் ஒருங்கே தாங்கும் சக்தியை தரும். 


               நம் உருவத்தையும், நம்மவர்களின் உருவத்தையும் செயல்களையும் அவர்களின் வழியே காணும் போது நாம் பெரும் இன்பம் எதற்கும் ஈடாகாது.
நம் சந்ததிகளின் வழியே நம் சாயல்களை நம் மழலைகளின் வழியே காணும் போது அந்த ஆண்டவனின் படைப்பையும் அதன் ஆச்சர்யத்தையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.


மழலைகளின் உலகம் மகத்தானது மட்டும் அல்ல, மகத்துவமானது இன்னும் மகோன்னதமானது.






அன்பன்
ARR.

Tuesday, 19 July 2011

அன்பானவர்களுக்கு வணக்கம்



 என் மிகப் பிரியமானவர்களுக்கு, வணக்கம்
நலம் நாடுவதும் நலமே...............
          இப்போது என் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தை கடந்து கொண்டிருப்பதால், என்னால் முன்பு போல வலைப்பூவில் செயல் பட முடியாமல் போகின்றது, அதன் காரணமாகவே உங்களின் உன்னத படைப்புகளை படித்தும் பின்னூட்டமிட முடியாமல் என் வாக்கினை பதிய முடியாமல் போகின்றது. நீங்கள் அனைவரும் என்னை தயை கூர்ந்து பொறுத்தருள வேண்டுகிறேன்.வெகு விரைவில் நான் மீண்டும் மீண்டு வந்து உங்களின் அன்பு ஜோதியில் ஐக்கியமாவேன்.


அன்பு, நன்றி , நலம்,வணக்கம்
 
அன்பன்
ARR .        

Friday, 8 July 2011

ஒற்றைக் குழந்தை, கற்றைக் கேள்விகள்


நேற்று நான் படித்த எப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு? என்ற அமைதி அப்பாவின் பதிவையும் அதன் பின்னூட்டங்களையும் படித்தவுடன் என் மனதில்   தோன்றிய செய்திகளை இங்கே பதிய நினைக்கிறேன், படித்து  உங்களின் அனுபவக் கருத்துக்களை கூறினால் மகிழ்ச்சியடைவேன்.

     இந்த காலத்தில் ஒரு குழந்தை  பெற்றுக்கொள்வதே சாமர்த்தியம், புத்திசாலித்தனம் , யதார்த்தம் என பலவிதமாக சொல்லப்பட்டாலும், ஒரு குழந்தை பெற்றால் நல்ல முறையில் வளர்க்க , படிக்க,செலவழிக்க எதுவாக இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் , இன்னும் பல சாதகங்கள் பட்டியலிடப்பட்டாலும் , அந்த குழந்தையை சார்ந்து யோசித்தோமேயானால் அது ஆரோக்கியமானதா என்பதே எனது கேள்வியாக எழும்பி நிற்கிறது.

       எனக்கும் சரி என் நண்பர்கள் பலருக்கும் (90%) ஒரே குழந்தைதான், அதற்கான காரணம் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது , ஆனாலும் இனி குழந்தை இல்லை என்பதில் மாற்றம் இல்லாதிருக்கிறோம், என்னுடைய காரணம் என் முதல் மகளை தொட்டுப் பார்ப்பதற்கே நான் பட்ட கஷ்டம் என் முன்னைய பதிவுகளில் தெரிவித்திருந்தேன், என் மகளை ஆரோக்கியமாக வளர்ப்பதே  என் வாழ்வின்  லட்சியமானதால் அடுத்த குழந்தையைப் பற்றிய சிந்தனை எனக்கு இல்லாமல் போனது.

      ஆயினும் இன்று நான் ஒரு குழந்தையாக இருப்பவர்களின்  பிரச்சனையாக கருதுவது தனிமை,அடம் , பகிரும் மன நிலை இல்லாமல் இருப்பது, இன்றைய தனிக் குடித்தனங்களில் அவரவர் தனிமையிலிருந்தாலும் குழந்தைகள் இணைந்து தான் இருக்கிறார்கள் ஆனாலும் எல்லாவற்றிலும் தனக்கே முதலிடமும் முக்கியத்துவமும் தரவேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கி நிற்கிறது , காரணம் வீட்டில் தனிக்காட்டு ரா(ணி)ஜாவாக இருப்பதால் எல்லா இடத்திலேயும் அதே உணர்வு , அது மறுக்கப்படும் போது ஆரம்பிக்கிறது பிரச்சனை , விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை சிறிதளவும் இல்லாமல் இருக்கிறது.வீட்டிற்க்கு வந்தவுடன் தனிமை ஆட்கொள்கிறது, என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள்.வாழ்வியலின் அதிமுக்கிய விதியான விட்டுக் கொடுத்தலை இந்த மாதிரியான குழந்தைகள் இழந்து விடுவார்களோ என அஞ்சுகிறேன் 


   தனக்கு தெரியாததை சொல்லித்தர , தன்னை பரிவாக பார்த்துக்கொள்ள,
பகிர்ந்து கொள் 
ஒரு சகோதரத்துணை  அவசியம் என நான் இப்போது நினைக்கிறேன், ஏனென்றால் எங்கள் வீட்டில் நான்தான் சின்னவன் , மூன்று அண்ணன் , இரண்டு அக்கா , இந்த அனைவருக்குமே  நான்தான் முதல் குழந்தை, வீட்டில் நாங்கள் விளையாடாத விளையாட்டில்லை,

எனக்கு நீந்த கற்றுதந்ததும் , சைக்கிள் ஓட்ட கற்றுதந்ததும் என் சகோதரர்கள் தான். 
என்னை அனுசரிக்கும், அரவணைக்கும் அவர்களின் பாங்கு அலாதியானது, இன்றும் என் இன்ப துன்பங்களை நான் பகிரும் முதல் இடம் என் உடன் பிறந்தவர்கள்தான் , அவர்களிடம் சொன்னால் இன்பம் இரண்டு மடங்காகவும் , துன்பம் பாதியாகவும் குறைந்து விடும் .என் தாய் தந்தையை இழந்த எனக்கு இன்று அவர்கள் தான் என் தாய் தந்தை அவர்களிடம் கண்ட, கற்ற  விட்டுகொடுக்கும் பண்புதான் இன்று எனக்கு நிறைய நண்பர்களைத் தந்திருக்கிறது, இதையெல்லாம் நினைக்கும் போது இதுமாதிரியான சொந்தத்தை, அன்பை , பண்பை என் மகளுக்கு மறுத்துவிட்டேனோ என்று நினைக்கிறேன்.





 இதைச் சார்ந்த உங்களின் கருத்துக்களை பகிர்ந்தால் மனம் நிறைவடைவேன்.
நன்றி 

அன்பன் 
ARR  

Thursday, 7 July 2011

வீணே வெறுத்தோம் உறவை மறந்தோம்

Eclipse

என் உருவை பார்க்கும் 
போதெல்லாம் 
நீயே தெரிந்தாய் 
என்  எழுத்தை எழுதும்
போதெல்லாம்
உன் எழுத்தின் பிம்பங்கள் 

விரல்களுக்குள்ளே 
விரோதம் வந்த 
வினோதம் நம்
பிரிவு 
தண்ணீர் போல
பிரிந்தாலும் 
தன்மை மாறாதது நம்
உறவு 

ஒன்றோடொன்று 
சம்பந்தம் இல்லாமல்
தனித் தனி 
தீவுகளாக இருந்தாலும்
நாம் வாழ்ந்த 
பிரபஞ்சம் ஒன்றுதான் 

உருவானதும் 
கருவானதும் 
ஒரே கருவறைதான் 
வாழ்வதும் 
வகுப்பதும் 
ஒரே வழிமுறைதான்


சின்ன மிதிவண்டிகளைப்
பார்க்கும் போதெல்லாம் - உன்
செல்ல பிறந்தநாள் 
பரிசு இன்றும்
ஞாபகம் வராமல் இல்லை 

ஒருமுறை நான் 
வெளியூர் செல்கையிலே
வழியனுப்ப வந்த நீ
மறைந்து மறைந்து 
கண்ணீர் மறைத்தது 
இன்னும் 
மறையாதிருக்கிறது

துரோகங்களை  
தொட்டுவிடவில்லை 
நாம்
உறவின் உரிமைகளை 
விட்டுவிடவில்லை 
நாம்

ரயில் சினேகங்களையும்
மதிக்கும் நாம் - நம்
உயிர் சினேகத்தை 
மறுத்தது துளியும் 
நியாயமில்லை

நம் 
தவறுகளை விட 
குறைகளை விட
கோபங்களை விட
குரோதங்களை விட
பெரியதல்லவா 
நம் சகோதரத்துவம்.

காலத்தின்
களத்தில்
சூழ்நிலையால் 
சுருங்கிப்போனது 
நம் உணர்வு  
காலத்தின்
மாற்றத்தில் 
சந்தோஷத்தில் 
மலரட்டும்
நம் உறவு 

அன்புடன்
சகோதரன் 
ARR