Monday, 30 January 2012

தரமும் தகுதியும் தாழ்ந்து போன இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு, மிகப்பெரும் தோல்வியையும் அவமானத்தையும் தந்திருக்கிறது நம் இந்திய அணி அல்லது பி சி சி ஐ அணி. ஒவ்வொரு இந்தியர்களின் ரத்தத்திலும், சித்தத்திலும் இரண்டற கலந்து விட்ட கிரிக்கெட் ரசனை ஒவ்வொரு இந்திய வீரரையும் உச்சத்தில் அமர வைத்து அழகு பார்த்தாலும் கொஞ்சமும் பொறுப்பின்றி கிரிக்கெட் விளையாட்டை விளையாட்டாய் விளையாடிய இந்திய அணியை எவ்வளவு விளாசினாலும் தகும்.


இந்த பதிவில் ஒவ்வொரு வீரரின் பேட்டிங், பௌலிங் ஸ்டாடிஸ்டிக்ஸ் சொல்லி என்னையும் உங்களையும் வேதனை படுத்த விருப்பம் இல்லை, தனி வீரரைப் பற்றிய விமர்சனமாகவும் இது இருக்காது. தொடரின் துவக்கத்திலேயே இந்திய அணியை காகித புலிகள் என விமர்சனம் செய்திருந்த ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளின் தீர்க்கதரிசனத்தை ஆரம்பத்தில் எதிர்த்தாலும் கொஞ்சம் வெறுத்தாலும் இப்போது அதை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை, அவர்களின் தீர்க்கதரிசனத்தை முழுமையான உண்மையாக்கிய பெருமை நமது வீரர்களையே சேரும்.

ஒவ்வொரு இந்தியனின் விளையாட்டு ஆர்வத்தை பல வழிகளில் பயன்படுத்தி அவனின் உழைப்பை உறிஞ்சி பணமாக்கி உலகத்திலேயே மிகவும் பணக்கார கிரிக்கெட் போர்டாக தன்னை நிலை நிறுத்தி கொண்டிருக்கும் பி சி சி ஐ, இந்த விளையாட்டை முன்னேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த தோல்விக்கு காரணமாக அவர்கள் சொல்லப்போகும் காரணம் அரதபழசான ஆஸ்திரேலியாவின் ஆடுகளம், இது என்ன யாருமே அறியாத ரகசியமா என்ன?, ஒவ்வொரு முறையும் உதை வாங்கி வரும் போதும் அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல், இந்திய அணியின் தரத்தை தாழ்த்தும் பி சி சி ஐ க்கு அறிவோ? அக்கறையோ இல்லாமல் இருப்பதுதான் இதன் காரணம்.


இவர்களிடம் இருக்கும் பணத்தை கொண்டு அதேமாதிரியான ஒரு ஆடுகளத்தை உருவாக்கி இளம் வீரர்களுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களைக் கொண்டே பயிற்சி அளிக்கலாம், கூடுதலாக ஆஸ்திரேலியாவிலேயே ஒரு ஆடுகளம் அமைத்து அங்கு நம் வீரர்களை அழைத்து சென்று முன்னாள் சிறந்த பந்து வீச்சாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கலாம்.பல நாட்டு சிறந்த ஆடுகளம் மாதிரியான ஆடுகளம் அமைத்து பயிற்சி அளிக்கலாம்,இதற்கு மெக்ராத், டொனால்டு, அக்ரம்,வால்ஷ்,போன்றோர்களை பயன் படுத்தலாம் அவர்கள் கேக்கும் தொகைக்கு அதிகமாகவே நம்மிடம் பணம் உண்டு. இது நம்முடைய பேட்ஸ்மேன்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.


உள்ளூர் ஐ பி எல் மாதிரியான பிற நாட்டு 20 - 20 ஓவர் போட்டிகளில் நம் அணி வீரர்களை விளையாட அனுமதிக்கவேண்டும், இது அந்த நாட்டு ஆடுகளத்தை அறிய ஒரு வாய்ப்பாக அமையும், அப்படித்தானே நம் நாட்டு சுழலையும்,இந்திய வீரர்களின் பலகீனத்தையும் , மித வேக ஆடுகளத்தையும் ஐ பி எல் மூலமாக வெளி அணிவீரர்கள் அறிந்து கொள்கிறார்கள். 


என்னதான் கரடியாக கத்தினாலும் கிரிக்கெட் பார்ப்பதை அதன் ரசிகர்கள் விடப்போவதில்லை, அவர்களும் மாறப்போவதில்லை ( நானும் தான்) இதே இந்திய அணி அடுத்து ஏதாவது ஒரு சிறு வெற்றி பெற்றாலும் கோபம் எல்லாம் வற்றி போய் அவர்களின் புகழ் பாடத்தான் போகிறோம் ஆனாலும் என்னில் பொங்கி வரும் ஆற்றாமையையாவது இந்த பதிவு குறைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவு.


அன்பன் 
ARR. 

Friday, 27 January 2012

துக்ளக் தர்பாராகும் ஜெ மந்திரி சபை

நேற்று நடந்த மந்திரிசபை மாற்றத்தின் படி  அ.தி.மு.க., அமைச்சரவையில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக எம்.எல்.ஏ.,க்கள் சிவபதி, முக்கூர் சுப்ரமணியன் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  

 
 
வாரத்துக்கு ஒருமுறை ஞாயிற்று கிழமை , 30 நாளுக்கு ஒருமுறை அம்மாவாசை மாதிரி மாற்றப்படும் செல்வி.ஜெயலலிதாவின் அமைச்சரவை மக்கள் மனதில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதைவிட, இந்த மாதிரியான மாற்றங்கள் அமைச்சர்களை எப்படி மக்கள் பணியாற்ற வைக்கும்,  துறை ரீதியான ஞானம் பெற எத்தனை காலம் பிடிக்கும் , ஆட்சி அமைத்து 9  மாதங்கள் ஆகியும் இன்னும் நிர்வாக ரீதியாக இந்த அரசு இன்னும் நிலைபெறாமல் இருப்பது தமிழகத்தின் நலனை எவ்வாறு பாதிக்கும் என்கிற கவலையோ, எண்ணமோ துளியும் இன்றி இப்படி துக்ளக் தர்பார் போல மந்திரிகளை மாற்றுவது ஏன் என்று யாருக்கும் தெரிவதில்லை,  அதை பற்றிய அறிவிப்பும் அரசு வெளியிடுவதில்லை. ஆனால் இங்கு நடப்பது மக்களாட்சி. 


ஏற்கனவே இதுமாதிரியான நிர்வாக நிலையின்மையால் தாண்டவமாடிய தானே புயலின் பாதிப்பிலிருந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் கடலூர் பண்ருட்டி , நெய்வேலி மக்கள் மீளமுடியாமலும் அடிப்படை  வசதியின்றியும்  தவிதவித்து வருகின்றனர். இந்த பாதிப்பின் தன்மையையும் கோரத்தையும் முப்பது நிமிட பயணத்தில் அறிந்து கொண்டார் (?) நம் முதல்வர் .

இதில் இன்னுமொரு விஷேச செய்தி இப்போது அமைச்சராக பதவி ஏற்கவிருக்கும் திரு.சிவபதி ஏற்கனவே, அமைச்சராக இருந்து பின் நீக்கப்பட்டவர் , அவர் நீக்கப்பட்டதன் தகுதி குறைவென்ன ?  சேர்க்கப் பட்டதென் தகுதி நிறை என்ன? யாரும் அறியார் . மாற்றம் ஒன்றே மாறாதது சரிதான் ஆனால் மாறிக்கொண்டே இருப்பது ஒரு நிலையான நல்லாட்சியின் அறிகுறியல்லவே ?  

களை எடுத்தல் அவசியம்தான் ஆனால் களைஎடுத்தலே விவசாயம் (நிர்வாகம்)  அல்ல , இன்னும் இதில் விதைதவரின் தவறும் இருக்கிறது. சிறந்த விதையை விவசாயி தேர்ந்தெடுப்பதைப் போலே நல்ல அமைச்சரவை சகாக்களை தெர்தெடுப்பதும் முதல்வரின் முதல் கடமை , இனியாவது இவர்களாவது நிலைத்திருக்கட்டும்.    

அன்பன் 
ARR

Sunday, 22 January 2012

அ தி மு க வை உடைக்கும் (சசிகலா) நடராஜன்

ஒவ்வொரு வருடமும் தஞ்சையில் பொங்கல் விழாவை வெகு விமரிசையாக நடத்தும் நடராஜன் ஒன்று ஆளும் கட்சியாக இருப்பார் இல்லை என்றால் எதிர்க் கட்சியாக இருப்பார் ஆனால் இந்த முறைதான் எந்த கட்சியும் இல்லாத நொந்த கட்சிக் காரராக இந்த விழாவை நடத்தி முடித்திருக்கிறார்.


விழாவிற்கு சுவாரசியம் கூட்டவோ அல்லது தன் இருப்பை காட்டவோ வழக்கம் போலவே வாய் சொல்லில் வீரம் காட்டியிருக்கிறார், தன்னை முடிவெடு தலைவா, என தன் கோடிகணக்கான தொண்டர்கள் ஆர்ப்பரித்து கேட்பதாகவும், தான், எப்போது முடிவெடுக்காது இருந்தேன் என்றும் நான் (நடராஜன்) முடிவெடுத்ததால் தான் ஆட்சியே மாறியதென்றும் விட்டு விளாசி இருக்கிறார்.தன் மனைவி சசிகலா சம்பந்தமான வழக்கு நீதி மன்றத்தில் இருப்பதால் அமைதியாக இருப்பதாகவும் இல்லையெனில் தன்னுடைய நடவடிக்கைகள் வேறுவிதமாக இருக்கும் என ஆவேசப்பட்டு இருக்கிறார்


இன்னும் உறுதி செய்யப்படாத செய்திகளின் படி இவரிடம் 90  எம் எல் ஏ கள் இருப்பதாகவும், ஜெயலலிதாவின் பெங்களூரு வழக்கு அவருக்கு எதிராக அமையும் பட்சத்தில் அ தி மு க வை உடைத்து ஆட்சி அமைக்க போவதாக செய்தி உலவுகிறது. எனக்கு செல்வி ஜெயலலிதாவின் பல நடவடிக்கைகளில் உடன்பாடு இல்லை என்றாலும் அ தி மு கவின் ஒற்றை சொல் மந்திரம் அவர், யாராலுமே அவரை தவிர வேறுயாரையுமே நினைத்துப் பார்க்கமுடியாத தலைவி அவர், அவரை தவித்து அ தி மு க என்பது நிலைபெறாத நினைக்க கூட  முடியாத நிகழ்வு. சசிகலாவும் சரி அவர்தம் உறவினர்களும் சரி, திரு நடராஜன் உட்பட ஜெயலலிதா என்கிற சூரியனால் மலர்கின்ற....... மணக்கின்ற  மலர்களே அன்றி சுயம் இல்லாதவர்கள் என்பது என் கருத்து . 

ஆகையால் இவர்கள் பேசுகின்ற பேச்சுகள் பத்திரிகை களுக்கும் , அவரை அண்டி பிழைப்பவர்களுக்கும் பயனளிக்குமே தவிர கதைக்கு உதவாது என்பது திண்ணம் .

அன்பன்
ARR      

    

Wednesday, 18 January 2012

அன்னா ஹசாரே காகித காந்தியா ??? பெரிய பூஜ்ஜியமா ???

                          சமீப காலமாக எல்லோராலும் உச்சரிக்கபடும் ஒரு பெயர் அல்லது நம்பிக்கை வார்த்தை அன்னா ஹசாரே, இந்தியாவின் தலை எழுத்தையே தலை கீழாக மாற்றும் சக்தி கொண்ட மாமனிதராக மீடியாக்களாலும் அவரது ஆதரவாளர்களாலும் உருவகப் படுத்தப் பட்டவர், இன்று மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக தன்னை நிலைப் படுத்திக் கொண்டுள்ளாரா என்று பார்த்தால் அவர் அதில் தோல்வி அடைந்தவராகவே என்னால் அறியப்படுகிறார். 


                         தன்னை காந்தியவாதியாக மக்களின் முன் காட்டிக்கொள்ளும் அன்னா தன்னை முழுமையான காந்தியவாதியாக நிலை நிறுத்திக் கொண்டாரா என்றால் இல்லை என்பதே என் பதில் , தன் ஊரில் குடிப்பவர்களை மரத்தில் கட்டி அடிப்பேன் என்று கூறிய போதே அவரின் அகிம்சை அழிந்து போனது , இன்னும் சற்று விரிவாக அரசியல் ரீதியாக இவரின் செயல்பாடுகளைப் பார்த்தோமேயானால் , இத்தனை ஊழல்களுக்கு பிறகும் மக்கள் விரோத செயல்களுக்கு பிறகும் காங்கிரஸ் என்னும் அரசியல் இயக்கம் இந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக இருப்பதற்கு காரணங்கள் 
  • சுதந்திர போராட்டத்தின் காரணியான கட்சி 
  • கதராடையும் காந்தி குல்லாவும்
  • தேசியக்கொடி மாதிரியான கட்சிக் கொடி
  • காந்தியம்....................... இவை அனைத்தையும் பின்பற்றாவிட்டாலும் தன் முழுமையான சொத்தாக பாதுகாத்து வருவதுதான்  
           இதை கைபற்ற முடியாமல் போனவர்களின் ஊதுகுழலாக இவர் செயல் பட்டு இருக்கலாம் என்பது என் எண்ணம் . நான் முன்னமே என் பதிவில் பதிந்த படி ஐரோம் ஷர்மிளாவிற்கு கொடுக்காத முக்கியத்துவத்தை அன்னா ஹசாரேவிற்கு கொடுப்பதன் வியப்பை வெளிப்படுத்தி இருந்தேன் , ஏனெனில் ஊழலை அழிப்பதை விட உரிமையை பெறுவது மிக முக்கியம் இன்னும் அவசியம்.  

         ஜனநாயகத்தை பற்றி பேசும் இவரின் குழுவினரே அன்னாவின் மீதான தனி மனித துதியை தொடங்கியதுதான், இதற்கு அடையாளமாக பல நிகழ்வுகளை சொல்லலாம். இதற்கு சாட்சியாக கீழ் உள்ள படத்தைக் கொள்ளலாம்.
  

         ஊழலில் ஊறித்திளைத்தவர்கள் காங்கிரஸ் காரர்கள் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனாலும் ஊழல் என்பது காங்கிரஸ் காரர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது போல லோக்பால் மசோதா முழுமையாக நிறைவேறாமல் போனதற்கு காரணம் அவர்களே, காங்கிரஸ் காரர்களே என் முதல் முழு எதிரி அவர்களை எதிர்த்து ஐந்து  மாநிலங்களிலும் களம் காணுவேன் என்று சொல்லியதும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கேள்விகளை தவிர்த்து புறக்கணித்ததும் பூனைக்குட்டி வெளியே வந்த கதையைத்தான் நினைவுப் படுத்தியது. 

        அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரானவரா இல்லை மற்றக் கட்சிகளின்   ஊதுகுழலானவரா என்பது அவரின் கடந்த கால செயல்கள் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இனிவரும் காலங்கள் அவரின் நடவடிக்கைகளைப் பொறுத்தே தெரியவரும்.    

அன்பன் 
ARR

Saturday, 14 January 2012

சொல்லாமல் செல்கிறேன்

காதலை 
சொல்லாமல் செல்கிறேன் - காதலை 
மறைத்து நட்பென சொல்கிறேன்


கடக்கும் வினாடியும்
நடக்கும் நிகழ்வும்
பழையதாகிப் போக
பழுதாகாத காதலை 
சொல்லாமல் செல்கிறேன் - காதலை 
மறைத்து நட்பென சொல்கிறேன்


பறக்கும் பறவையும்
கறக்கும் பசுவையும்
பழக்கினாலும்
பழுக்காத  காதலை 
சொல்லாமல் செல்கிறேன் - காதலை 
மறைத்து நட்பென சொல்கிறேன்


கம்பனின் எழுத்தையும்
கர்ணனின் வீரத்தையும்
விளக்கினாலும்
விளங்காத  காதலை 
சொல்லாமல் செல்கிறேன் - காதலை 
மறைத்து நட்பென சொல்கிறேன்


ஞாபகப்படுத்தினாலும்
நியாயப்படுத்தினாலும்
நீக்கமற 
நிறைந்த  காதலை 
சொல்லாமல் செல்கிறேன் - காதலை 
மறைத்து நட்பென சொல்கிறேன்


கடைந்த அமிர்தம் போல
அன்னையின் அன்பை போல
தூய்மையான
துகிலுரியாத  காதலை 
சொல்லாமல் செல்கிறேன் - காதலை 
மறைத்து நட்பென சொல்கிறேன் - ஆனாலும்
உன்னை வெட்கத்தால் வெல்கிறேன்!


அன்பன்
ARRFriday, 13 January 2012

சசிகலாவின் நீக்கமும்? அதன் காரணமும்?

இது எல்லோரும் எழுதி தீர்த்த விஷயம் தான் என்றாலும் எனக்கு இதில் மற்றவர்களைவிட சற்றே கூடுதலான உரிமை உண்டு காரணம் நான் மன்னையின் மகன் என்பதால்.............                               சசிகலாவின் நீக்கத்தின் நோக்கம் இன்றுவரை ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது , அதன் காரணத்தை இன்றுவரை ஜெயலலிதா சொல்லவில்லை , அது அவசியமா இல்லை அவரின் தனிப்பட்ட விஷயமா என்று பார்த்தோமேயானால் ஜெ அவரை போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றி இருந்தால் அது அவரின் தனிப்பட்ட விஷயம் ஆனால் ஒரு ஜனநாயக அமைப்பாக சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சியை விட்டு வெளியேற்றும் போது அதற்கான காரணத்தை, அவர் அவரின் தொண்டர்களுக்கு சொல்லியிருக்க வேண்டும் ஆனால் வழக்கம் போலவே இதிலும் மர்மம், மௌனம் 

அதோடு சேர்த்து இதுவரை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஏற்பட்ட குற்றங்களுக்கும் , ஊழல்களுக்கும் , தவறுகளுக்கும் சசிகலாவே முழு பொறுப்பு என்பது மாதிரியான செய்திகள் பத்திரிக்கையின் வாயிலாக பரப்ப படுவது சரியல்ல என்பது என் கருத்து , அதே வேளையில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கமும் , அராஜகமும் அந்த கட்சியில் இல்லை என்று சொல்லவோ அதை நியாயப்படுத்தவோ இல்லை இந்த பதிவு , ஆனால் அந்த தவறுகளுக்கு ஜெயலலிதாவும் பொறுப்பு என்பதுதான் என் கருத்து. 

                                      
                                       இதில் ஜெயலலிதாவிற்கு பொறுப்பு இல்லை சசிகலாவே முழு காரணம் என சொன்னால், ஒரு மிகப் பெரிய கட்சியின் தலைவி , மூன்றாவது முறையாக முதல் அமைச்சர் பதவில் இருப்பவர் சசிகலா என்ற ஒற்றை மனுஷிக்கு அடிமையாக இருந்தார் என்றல்லவா அர்த்தம், இதற்கு முன் சசிகலாவை பற்றியும் அவர்தம் குடும்பத்தை பற்றியும் யாரும் குறை கூறவோ குற்றம் சொல்லவோ இல்லையா என்ன ? அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது மட்டும் வந்ததென்றால் அதன் காரணம் என்ன ?. அதற்கான காரணம் பெங்களுரு சொத்து குவிப்பு வழக்கும் அதன் பின் இடப்பட்ட திட்டங்களும் என்றால், மற்றவர்களுக்கு பங்கம் என்றால் அமைதியாக இருக்கும் ஜெயலலிதா தனக்கு ஆபத்து என்றால் ஆவேசப்படும் சுயநலவாதியா என்ன ?

                                                இதுநாள் வரை சசிகலா பெற்ற பயன்களை அவரின் தவறுகளை சொல்பவர்கள் ஜெயலலிதா விற்காக அவர் பட்ட அவமானங்களையும் இழப்புகளையும் பட்டியலிடாததேன்?என்னமோ சசிகலாதான் எல்லாக் குற்றங்களையும் செய்தவர்மாதிரியும் ஜெயலலிதா தவறே செய்யாதவர் மாதிரியும் மாயையை உருவாக்குவது ஏன் என்றுதான் எனக்கு புரியவில்லை , அப்படியே இது உண்மையாக இருந்தாலும் அவரின் தவறுகளை தடுக்காது இருந்த ஜெயலலிதாவும் குற்றம் செய்தவர்தானே ? அதை சசிகலா வை குறை சொல்பவர்கள் வசதியாக மறந்ததேன் ? 


 சசிகலா மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நீக்கத்தால் ஜெயலலிதாவின் தவறுகளை மறைக்க முடியாது, என்பதே என் கருத்து, இது அரசியலில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியதே தவிர வேறு எந்த மாற்றமும் மக்களுக்கு நிகழ்ந்து விடப்போவதில்லை. இதற்கு ஜெயலலிதாவின் புயல் நிவாரண கடலூர் ஹெலிகாப்டர் பயணமே சாட்சி , இதைப் பற்றி பின்னொரு பதிவில் .    

                               இந்த பதிவை ஒரு மாற்று கருத்திற்காகவும், என்னுடைய மனதில் தோன்றிய கேள்விகளுக்காகவும் பதிந்தேனே அன்றி இன்றுவரை நான் மன்னார்குடியில் இருந்து வந்திருந்தாலும் அவரின் குடும்பத்தினருடன் ஒரு வினாடி தொடர்பும் இல்லாதவன் , இந்த பதிவை படித்து நான் அவர்தம் குடும்பத்தால் பயன் பெற்றவனாக நீங்கள் கருதினால் நான் பொறுப்பல்ல .
                                         நன்றி !

அன்பன் 
ARR                     

Monday, 2 January 2012

நகர்த்தும் நம்பிக்கைதுவைத்த துணியைப் போலே

துடைத்த மணியைப் போலே


ஒவ்வொரு நாளும், 


வாரமும்,


மாதமும், 


வருடமும்,


புதிதான முழுமையான


தூய்மையான

நம்பிக்கையுடனே தொடங்குகிறது


இந்த முறையாவது 


நம்பிக்கை வெல்லும்


வெற்றியை சொல்லும் என………….


அனாலும்


துணியையும் மணியையும்


மீண்டும் தீண்டாதிருக்க முடியவில்லை


 மறுபடியும்


துவைக்கவும்,  துடைக்கவும்.........

அன்பன் 


ARR