Thursday, 2 June 2011

தியாகி அன்னாஹசாரே., யோகாகுரு ராம்தேவ்.., ஐரோம் ஷர்மிளா ??


             கடந்த இரண்டு மூன்று  நாட்களாக எந்த சேனலை திறந்தாலும் பத்திரிக்கையை படித்தாலும் தெரியும் அறியும் ஒரு பொது செய்தி ,டில்லி ராம்லீலா மைதானத்தில் யோகாகுரு ராம்தேவ் பாபா உண்ணாவிரதம் துவக்குகிறார்,  ஊழலை ஒழிக்கவும், வெளிநாடுகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கவும், மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்  இந்த விஷயத்தில் அரசின் சுணக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து ராம்தேவ் பாபா நாளை 4 ம் தேதி உண்ணாவிரதம் துவக்குகிறார்,இதனால் மத்திய அரசு பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது.நேற்று அமைச்சர்கள் கபில்சிபல் , பிரணாப் முகர்ஜி ,பன்சிலால் ராம்தேவ் பாபாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர் ,ஆனால் தனது முடிவில் மாற்றமில்லை என உறுதியாக தெரிவித்து விட்டார். இவரது போராட்டத்திற்கு தியாகி அன்னாஹசாரே ஆதரவு தெரிவித்துள்ளார். ஊழல் ஒழிப்பு மசோதா உருவாக்குவதில் அரசு தம்மை ஏமாற்றி வருவதாகவும் , ராம்தேவ் உண்ணாவிரதத்தில் தாமும் பங்கேற்பதாகவும் கூறியுள்ளார்.

                        இவர்கள் இருவரின் செயல்களில் எனக்கு எந்தவிதமான எதிர்ப்போ, மாறுபாடோ இல்லை ஏன் இவர்களின் உயர்ந்த போராட்டத்திற்கு நான் ஆதரவாய் கூட இருக்கிறேன், அதே நேரத்தில் அன்னாஹசாரேவின் நான்கு நாள் போராட்டத்திற்கும் , இன்னும் தொடங்கவே இல்லாத யோகாகுரு ராம்தேவ் உண்ணாவிரதத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இன்னும் மத்திய அரசும் கூட சுதந்திர இந்தியாவின் அடிப்படை உரிமைகளுக்காக கடந்த பத்து ஆண்டுகளாக போராடிவரும் ஒரு உத்தம பெண் போராளி  ஐரோம் ஷர்மிளா வை கண்டு கொள்ளாது இருப்பதேன் ???

                       யார் இந்த ஐரோம் ஷர்மிளா......................??    


 கடந்த பத்து ஆண்டுகளாக தன் மாநில மக்களுக்காக தண்ணீரை தவிர எந்த உணவும் வாய்வழியே உட்கொள்ளாத ஒரு உன்னத பெண் , ஏன் இந்த நிலை அவருக்கு ???

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அருணாச்சலப்ரதேஷ், அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம், நாகாலந்து, திரிபுரா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் செப்டம்பர் 11, 1958 முதல் Armed Forces Special Powers Act (AFSPA) நடைமுறையில் இருக்கிறது. இதன் மூலம்  நம் இந்திய ராணுவத்திற்கு வழங்க பட்டிருக்கும் உரிமைகள் என்னவென்று பார்க்கலாம் 
  • யாரை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எவ்வித பிடி வாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம். அவர்களை சுட்டு வீழ்த்தவும் அதிகாரம் உண்டு.
  • அவர்கள் எங்கு வேண்டுமானாலும் எவ்வித உத்தரவுமின்றி தேடுதல் வேட்டை நிகழ்த்தலாம்.
  • இந்த சட்டத்தின் படி பொது வெளியில் 5 பேர் சேர்ந்து நின்றால் அவர்களை சுட்டு வீழ்த்தலாம்.
  • இராணுவ அதிகாரிகள் மீது எவ்விதமான வழக்கும் பதிவு செய்ய இயலாது.
  • இவைகள் மீது எந்த நீதி மன்றமும் நடவடிக்கை எடுக்க இயலாது 
  இது போன்ற உரிமைகளை அல்லது சலுகைகளை வைத்து கொண்டு இந்த வட கிழக்கு மாநிலங்களில் இவர்கள் வைத்ததுதான் சட்டம், கொலை கற்பழிப்பு என பல சட்ட மீறல்கள் இங்கே நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள் , பெண்களின் மீதான இவர்களின் அத்துமீறல்களை  கண்டித்து அம் மாநில தாய்மார்கள் இந்திய ராணுவத்தின் அலுவலகம் முன்னே நிர்வாணமாய் நின்று இந்திய ராணுவமே எங்களை கற்பழி என்ற கோஷத்தோடும் போராடி பார்த்தனர் அதற்கும் மசியவில்லை ராணுவமும் அரசும்

   

   சரி நம் நாயகி ஐரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரத்தத்தின் நோக்கம் என்ன ??

          நான் மேல சொன்ன அதிகாரத்தை வைத்துகொண்டு ராணுவம்அப்பவிப் பொதுமக்களையும் கொன்று குவித்திருக்கிறது. நவம்பர் 1, 2000 ம் ஆண்டு மணிப்பூரில் உள்ல "மலோம்" எனும் நகரத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பத்து அப்பாவி பொதுமக்களை இராணுவம் சுட்டுக் கொன்றது.மேலும் முப்பது அப்பாவி பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர்  இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த போதும் "AFSPA" அதற்கு இடமளிக்கவில்லை. அப்போது அந்த கொடூரத்தை தன் கண் முன்னே பார்த்த  28 வயதே ஆன ஐரோம் ஷர்மிளா இந்த சட்டத்திற்கு எதிராக  போர்க் கொடி தூக்கினார். மகாத்மா காந்தி நமக்குகற்றுத் தந்த உண்ணாவிரதத்தை நவம்பர் 4, 2000 அன்று துவக்கினார். இந்த சட்டம் அமலில் இருக்கும் மாநிலங்களில் இருந்து நீக்கப் பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

  மகாத்மாவின் உண்ணாவிரதத்திற்கு பணிந்த ஆங்கிலேய அரசை விட அடிமை ஆட்சி நடத்தி  மக்களுக்கான ஆட்சி என சொல்லி நம்மை ஏமாற்றி வரும் நம் இந்திய அரசு ஒரு அங்குலம் கூட அசையவில்லை, அதற்க்கு மாறாக நவம்பர் 6, 2000 அன்று அவர் IPC 309 பிரிவின் கீழ் "தற்கொலை முயற்சி" செய்வதாகக் கூறி போலீசாரால் கைது செய்யப் பட்டார். தண்ணீர் தவிர வேறு ஆகாரங்களை உட்கொள்வதில்லை என்பதில் ஷர்மிளா உறுதியாக இருந்து வருகிறார். ஆனால் கைது செய்யப் பட்ட ஒருவர் உயிரைக் காப்பது காவல் துறையின் வேலை என்பதால் வலுக்கட்டாயமாக அவருக்கு "Nasogastric intubation" (அதாவது மூக்கின் வழியே ஒரு ப்ளாஸ்டிக் ட்யூப் உபயோகித்து நீர் வகை உணவுகளை அளித்தல்) செய்ததது அரசு

                                                                                                                                                                    
             
                      இதன்பின் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அவர் தற்கொலை முயற்சி எனும் பிரிவில் கைது செய்யப் பட்டு இன்றுவரை சிறையிலிருக்கிறார். இந்த சிறப்பு சட்டத்தை ஆராய அமைக்க பட்ட ஜீவன் ரெட்டி கமிசன் ஜீன் 6, 2005ம் ஆண்டு இந்த சட்டம் குறித்தான தனது கருத்துக்களைத் தெரிவித்தது. ஆனால் மன்மோகன் சிங் அரசு அதை ஒன்றரை ஆண்டுகள் வரை கிடப்பில் போட்டது. அதன் பின் ப்ரணாப் முகர்ஜி, ஜீவன்ரெட்டி கமிசன் அளித்த சட்டத் திருத்தக் கருத்துக்களை நிராகரித்தார். அத்துடன் அவர் இது போன்ற மாநிலங்களில் இராணுவம் இத்தகைய அதிகாரங்கள் இன்றி செயல் பட முடியாது என கருத்தும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2, 2006 ல் ஷர்மிளா விடுவிக்கப்பட்டதும் 4 மாத காலங்கள் டெல்லிக்குத் தப்பிச் சென்று அங்குள்ள மாணவர்கள், சமூக அமைப்புகளுடன் கை கோர்த்து ஒரு போராட்ட ஊர்வலம் நடத்தினார்.அவரது உண்ணாவிரதம் டெல்லியிலும் தொடர்ந்ததால் டெல்லி போலீசாரால் மீண்டும் தற்கொலை முயற்சி பிரிவின் கீழ் கைது செய்யப் பட்டார்.அவர் பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பினார். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை 
                அவர் கடந்த பத்தாண்டுகளாக எந்தவிதமான திட உணவையும் உட்கொள்ள மறுத்து வருவதால், அவரது முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு எந்த வேளையிலும் அவர் மரணத்தைச் சந்திக்கக் கூடும் என்ற அபாயகரமான கட்டத்தில் இருந்து வந்தாலும், அவர் தனது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார்.         நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க , சம அந்தஸ்த்து வழங்க , ஊழலை ஒழிக்க இப்படி மக்களின் நலனுக்காகவே போராடி வரும் இந்த போராளிகளை இரண்டு விதமான கண்ணோட்டத்தில்  இந்த அரசு பார்ப்பதேன்,

 ஊழலுக்கு ஒரு நீதி உரிமைகளுக்கு ஒரு நீதியா ?


ஐரோம் ஷர்மிளாவுக்கு பாலிவுட் நட்ச்சதிரங்களின் ஆதரவு இல்லையா?


ஏன் இந்த மத்திய அரசு இந்த உரிமை போராட்டத்தை நசுக்க பார்க்கிறது? 


ஏன் இந்த ஊடகங்கள் இதை முன்னிறுத்தவில்லை?


இதுவா ஜனநாயகம் ?
        உண்மையான காரணம் தியாகி அன்னாஹசாரே, யோகாகுரு ராம்தேவ் இவர்களின் உண்ணாவிரதத்திற்கு பின்னால் பிராதான எதிர் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இருப்பதாக நம்பப்படுகிறது , இந்த போராட்டத்திற்கு திரு. நிதின் கட்கரி நேற்று ஆதரவு தந்திருப்பதன் மூலமும் இது உறுதியாகிறது , ஆகவே இவர்கள் பயப்படுவது கட்கரியின் கட்சிக்காகத்தான் காந்திய உண்ணாவிரதத்திற்கு இல்லை.


            கடந்த பத்து ஆண்டுகளாக நடந்து வரும் இந்த போராட்டம் இன்று ஊழலுக்கு எதிராக பேசிவரும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் போது தொடங்கப்பட்டதுதான் , ஆகவே இந்த இருகட்சிகளும் மக்களுக்கு உரிமைகளை அளிப்பதில்லை என்பதில் உறுதியாகவே இருந்து வருவதாக தெரிகிறது.


இந்த பதிவின் நோக்கம் அரசியல் கட்சிகளை சாடவோ இல்லை எல்லைகளில் பல இன்னலுகிடையில் நம் தேசத்தை காக்கும் இந்திய ராணுவத்தை குறைகூறவோ இல்லை  தியாகி அன்னாஹசாரே,யோகாகுரு ராம்தேவ் ஆகியோரின் போராட்டத்தை கொச்சை படுத்தவோ இல்லை , நம்மை போன்ற மக்களின் அடிப்படை   உரிமைகளுக்காக தன் இளமையை , நாவின் சுவையை, உடலின் ஆரோக்கியத்தை, ஒரு சராசரி இந்திய பெண்ணின் கனவுகளை  இழந்து போராடி வரும் ஐரோம் ஷர்மிளா திடத்தையும் அவரின் மனோதைரியத்தையும் ,போரட்டகுணத்தையும் நாம் அறிந்து கொள்ளத்தான், உரிமை மீட்பு போராளியே  நீங்கள் உள்ள திசையை  பார்த்து இரு கரம் குவித்து, சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என் சகோதரியே .   


என்னை பொறுத்தவரை ஊழலை விட உரிமை மறுப்பு மிகக்  கொடுமையானது . 


அன்பன் 
ARR 

25 comments:

நிரூபன் said...

ஒரு இனத்தின் உரிமையினை மறுத்தல் என்பது ரொம்பக் கொடுமையான விடயம். ஐரோம் ஷர்மிளாவின் போராட்டத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும், இல்லையேல் மனித உரிமை அமைப்புக்கள் மூலமாக அவர்களின் போராட்டத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் பெற வேண்டும். இதனை இந்தியாவில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் முன்னெடுத்தால் தான் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டத்திற்கான முழுப் பயனும் கிடைக்கும்.

நிரூபன் said...

தியாகி அன்னஹாசாரே, யோகா ராம்தேவ் அவர்களின் முயற்சி வரவேற்கத்தக்கது. இவற்றிற்கு அரசினைச் செவி சாய்க்க வைக்க வேண்டும் எனில் மக்கள் இப் போராட்டங்களிற்கு/ உண்ணாவிரதத்திற்கு பேராதரவு வழங்க வேண்டும்,

வை.கோபாலகிருஷ்ணன் said...

சரிவர தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளும் விதமாக மிகவும் அருமையான பல தகவல்களைத் தொகுத்து அளித்துள்ளீர்கள். மிகவும் நியாயமான பார்வையும் கேள்விகளும் தங்களுடையது.

//ஊழலுக்கு ஒரு நீதி உரிமைகளுக்கு ஒரு நீதியா?//

அனைத்துத்தரப்பினருக்கும் சாட்டையடியாக ஒரு கேள்வி இது.

***மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக தன் இளமையை , நாவின் சுவையை, உடலின் ஆரோக்கியத்தை, ஒரு சராசரி இந்திய பெண்ணின் கனவுகளை இழந்து போராடி வரும் ஐரோம் ஷர்மிளா திடத்தையும் அவரின் மனோதைரியத்தையும் ,போரட்டகுணத்தையும்*** நானும் தங்களின் இந்தப்பதிவின் மூலம் மிகத்தெளிவாக உணர்ந்து, அந்த சகோதரி உள்ள திசையை பார்த்து இரு கரம் குவித்து, சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

//
என்னை பொறுத்தவரை ஊழலை விட உரிமை மறுப்பு மிக கொடுமையானது//

நியாயம் தான். அனைவருமே ஒத்துக்கொள்ள வேண்டியது தான்.

நல்லதொரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவை, இத்தருணத்தில் வெளியிட்டுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும், தங்களுக்கு. அன்புடன் vgk

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் விழிப்புணர்வு பகிர்வு நண்பரே.... அரசு எப்போது விழிக்கும் என்பதுதான் ஒரு பெரிய கேள்விக்குறி...

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
மிக்க நன்றி சகோ

A.R.ராஜகோபாலன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
தங்களின் கருத்துக்கு நன்றி ஐயா

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
நண்பரே , உங்களின் உன்னத கருத்திற்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

ஊழலை விட உரிமை மறுப்பு மிக கொடுமையானது . //

வலிமையான பகிர்வு.

A.R.ராஜகோபாலன் said...

@ இராஜராஜேஸ்வரி
தங்களின் பாராட்டுக்கு நன்றி மேடம்

MANO நாஞ்சில் மனோ said...

செமையா சாடி இருக்கீங்க....

A.R.ராஜகோபாலன் said...

@MANO நாஞ்சில் மனோ
நன்றி அண்ணாச்சி

Unknown said...

நெருப்பு பதிவு நண்பரே ...நன்றி ...

Unknown said...

நீங்கள் என் எழுத்தையும் படித்து வருகிறீர்கள் என்பது பெருமையாக உள்ளது

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ்
மிக்க நன்றி ரியாஸ்

Unknown said...

இருட்டடிப்பு செய்திகளை ஊடகங்கள் வெளியிடாது ..நாமாவது வெளியிடுவோம் ...
அந்த அம்மையாருக்கும் உங்களுக்கும் எனது முழு ஆதரவு
நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ ரியாஸ் அஹமது

"நீங்கள் என் எழுத்தையும் படித்து வருகிறீர்கள் என்பது பெருமையாக உள்ளது"

என்னை பார்த்து நீங்கள் பெருமைபடுவது தற்பெருமை , ஏனெனில் நீங்களும் நானும் வேறல்லவே ??

A.R.ராஜகோபாலன் said...

@ ரியாஸ் அஹமது
"இருட்டடிப்பு செய்திகளை ஊடகங்கள் வெளியிடாது ..நாமாவது வெளியிடுவோம் ...
அந்த அம்மையாருக்கும் உங்களுக்கும் எனது முழு ஆதரவு
நன்றி"

நிச்சயமாக ஏனென்றால் நம் வழி அன்பு வழி ரைட்டா ??
ஆதரவுக்கு நன்றி

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட..எவ்வளவு விஷயங்கள்..ஒரு சமூகப் பொறுப்புணர்வோடு எழுதப்படும் ப்ளாக் ETHICAL VALUE சிறிதும் இல்லாத
நாலாந்தர பத்திரிகையை விட எவ்வளவோ மேல்!

HATS OFF TO MR ARR!!

A.R.ராஜகோபாலன் said...

@ ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி
ராமமூர்த்தி சார்

ஷர்புதீன் said...

இது அநியாயம், பாபா ராம்தேவ் வந்ததும் இது பற்றி சிறிய குறிப்பு எழுதி வைத்திருந்தேன், என்னுடைய போஸ்ட் வருவதற்குள், நீங்கள் பதிவிட்டு விட்டீர்கள்., தொலைகாட்சியில் இது யார் கண்டுபிடியுங்கள் என்ற ஏமாற்று நிகழ்ச்சியை பற்றியும் எழுதி வைத்திருந்தேன், அதனை இரண்டு நாட்களுக்கு முன் இன்னொரு நண்பர் பதிவிட்டுவிட்டார்.,

ஆக இனிமே

பதிவுக்கு முந்து பந்திக்கு பிந்து

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எப்படி இந்தப் பதிவைப் படிக்க விட்டுவிட்டேன் என்று தெரியவில்லை ராஜு.

ஆழமான சிறப்பான பதிவு.

பல நேரங்களில் கிழக்கில் இருக்கும் பாகமும் இந்தியாவின் பகுதிதான் என்று நம்பமுடியாதபடி இந்தியாவின் செய்கைகள் இருப்பதுதான் சீனாவுக்கு அல்வா சாப்பிடுவது போல் இருக்கிறது.

இப்படி நிலைமை இருக்க ஜரோம் ஷர்மிளாவைப் பற்றி ஊடகங்கள் என்ன பெரிதாய் அக்கறை கொண்டுவிடப்போகின்றன?

நம் நாட்டின் பரப்பளவுதான் பல விஷயங்களில் நமது பலவீனமும் கூட.

A.R.ராஜகோபாலன் said...

@ ஷர்புதீன்
நீங்க பதிவிட்டால் என்ன நான் பதிவிட்டால் என்ன சகோதரரே
ரெண்டுமே ஒண்ணுதான்

A.R.ராஜகோபாலன் said...

@ சுந்தர்ஜி
ரொம்ப சரியாக சொன்னிர்கள் அண்ணா
சீனாவிற்கு தான் இது சாதகம்
கருத்திற்க்கு நன்றி

bala said...

அய்யா அன்னா ஹசாரே ,ராம்தேவ் போன்றோரின் போராட்டத்திற்கும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு .இவர்கள் இருவரும் இருக்கிற ஜனநாயக (?) அமைப்புக்குள் எதாவது மாற்றங்களை கொண்டுவந்துவிட நினைக்கிறார்கள் .அனால் அந்த வீரப்பெண்ணின் போராட்டம் அப்படிப்பட்டதல்ல ,அவள் ராணுவத்தை அல்லது அதன் செயலை எதிர்க்கிறாள் .அது சரி அங்கே ராணுவத்துக்கு என்ன வேலை யாரை அடக்க கொடுமையான ராணுவ சட்டம் .அங்கு மக்கள் என்னதான் கேட்கிறார்கள் .இதை எல்லாம் நம் யோசிக்க வேண்டும் .அன்னா ஹசாரே ,ராம்தேவ் ஆகியோருக்கு பின் யார் இருந்தால் என்ன அவர்கள் சொல்வது பொருள் உள்ளதா என்பதுதானே முக்கியம் .

A.R.ராஜகோபாலன் said...

@bala
நண்பரே
இங்கு நான் குறை கூறியிருப்பது ஊடகங்களின் பொறுப்பின்மையைத்தான், அவர்களின் போராட்டத்தை அல்ல