Sunday, 27 November 2011

அம்மாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்.
தாயே தவமே, பண்பே பயனே!
வாழ்வே வரமே, அன்பே அறனே!
பாசத்தின் பிரமாண்டமே! ஆட்டுவித்த அற்புதமே!
பிரியத்தின் பிரகடனமே! சாதித்த சகாப்தமே!

நீ சென்றது
யாராலும் தொடமுடியாத தூரம்!
ஆனாலும் இது
யார் தூக்கிவைத்த பாரம்!

புரியாத புதிரே, பிரியாத உயிரே!
உள்ளங்கை தண்ணீரே,  உறையாத கண்ணீரே!
நீ மற்றவர்களால் உணரமுடியாத உயரம் – ஆனாலும்!
நீ மறைந்தது சொல்லிமாளா துயரம்!


எங்களின்..... 
சேவைகள் மறுத்த கண்மணியே,
தேவைகள் தீர்த்த தேவதையே,
தீர்ந்து போன தேன்மொழியே,
விட்டுச் சென்றதேன் வான்வழியே! 

பெறுதலுக்கரிய பொக்கிஷமே,
வீழ்த்தமுடியா வைராக்கியமே,
இருள் அழித்த ஒளியே,
நிஜமாய் நீயில்லை இனியே!

துன்பம் துடைத்த தூயவளே,
இன்பம் இழைத்த இனியவளே,
பாசம் பழக்கிய பனிமலரே – இனி,
எங்களுக்கு உனைப்போல் யாருளரே!

ஓய்ந்து விட்ட ஓவியமே!
கரைந்து விட்ட காவியமே!
வளரமுடியாத வளர்பிறையே – நீ
வரமுடியாதா மறுமுறையே ?

வரமுடியாதா மறுமுறையே??

இன்று (28/11/2011) எங்கள் அம்மாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்.
அன்பன்
ARR
ARR

15 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆண்டுகள் ஆறாயினும் யாராலும்
ஆறுதல் அளித்திட முடியாத
பிரிவு அல்லவா தாய் என்ற அந்த உன்னதமான உறவு.

//ஓய்ந்து விட்ட ஓவியமே!
கரைந்து விட்ட காவியமே!
வளரமுடியாத வளர்பிறையே – நீ
வரமுடியாதா மறுமுறையே ?//

அருமையான பாச உணர்ச்சி பொங்கிடும் வரிகள்

உங்களுடன் அந்த உத்தமியின் நினைவினிலேயே நாங்களும் இன்று.

தமிழ்மணம் 2 இண்ட்லி 2 vgk

Yaathoramani.blogspot.com said...

நினைவுப் பா நெஞ்சைத் தொட்டுப் போனது
தொடர்ந்து அவர்கள் ஆசீர்வாத்தால்
தங்கள் வாழ்வும் தங்கள் குடும்பத்தார் வாழ்வும்
சிறந்து விளங்க அருள வேண்டுமாய்
எல்லாம் வல்லவனை இந்த நாளில்
வேண்டிக் கொள்கிறோம்

ஸ்ரீராம். said...

நெகிழ்வான கவிதை. அருமை.
உலராத கண்ணீரே பொருத்தமாக இருக்குமோ...
எனக்கு என் அம்மா நினைவுக்கு வந்தார். நன்றி.

G.M Balasubramaniam said...

என்னைப் பொறுத்தவரை நீத்தார்க்கு நாம் செய்யும் கடன் என்பது , அவர்கள் இருக்கும்போது செய்ய நினைத்து, செய்ய முடியாமல் விட்டுச்சென்ற பணிகளை நல்ல விதமாக முடிப்பதுதான். நினைவு நாட்களில் நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம். பெற்றோரின் ஆசி பிள்ளைகளுக்கு என்றும் இருக்கும்.

RAMA RAVI (RAMVI) said...

//ஓய்ந்து விட்ட ஓவியமே!
கரைந்து விட்ட காவியமே!
வளரமுடியாத வளர்பிறையே – நீ
வரமுடியாதா மறுமுறையே ?//

உங்கள் அன்பை வெளிபடுத்தும் அழகான வரிகள்.
மிகவும் நெகிழ்ச்சியான கவிதை.

Madhavan Srinivasagopalan said...

என்னமா எழுதி இருக்கீங்க..
தாயன்பிற்கு ஈடுண்டோ ?
உங்கள் எண்ணம் புரிகிறது..

ஷர்புதீன் said...

எல்லோருக்கும் பொதுவான பிடித்த ஒரே ஒரு உறவு., தாய் ! அஞ்சலிகள் !

Unknown said...

புரியாத புதிரே, பிரியாத உயிரே!
உள்ளங்கை தண்ணீரே, உறையாத கண்ணீரே!
நீ மற்றவர்களால் உணரமுடியாத உயரம் – ஆனாலும்!
நீ மறைந்தது சொல்லிமாளா துயரம்//

தாயின் மறைவு தனை
தவிக்கின்ற உணர்வு தனை
சேயின் அழுகுரலாய் என்
செவியில் விழுந்ததுவே
அருமை

புலவர் சா இராமாநுசம்

ADHI VENKAT said...

//துன்பம் துடைத்த தூயவளே,
இன்பம் இழைத்த இனியவளே,
பாசம் பழக்கிய பனிமலரே – இனி,
எங்களுக்கு உனைப்போல் யாருளரே!//

அருமையான வரிகள்.
தாயைப் போல் ஒரு உன்னதமான உறவு ஏது....

சுதா SJ said...

அம்மாவுக்கு நிகரான உறவு வையகத்தில் உண்டோ....?!!!

வெங்கட் நாகராஜ் said...

ஆண்டுகள் பல ஆனாலும் அம்மா அம்மா தானே....

இந்த உறவினை மிஞ்ச ஏது உறவு....?

நல்ல கவிதை உங்கள் அம்மாவின் நினைவு தினத்தில்...

ரசிகன் said...

கவிதை, ஆறாம் ஆண்டு நினைவு நாளாய் தெரியவில்லை. ஆறு ஆண்டு நினைவுகளாய் தெரிகிறது.

அப்பாதுரை said...

நினைவுகளைக் கொண்டாடுங்கள். நினைவுகள் நிலைக்க வாழ்த்துக்கள்.

Anonymous said...

பெற்ற தாயின் அன்பிற்கு
உருவகப்படுத்தி சொல்லிட
சொல்லுண்டோ!
கற்ற கல்வியும்
சொல்லில் வாராமல்
நென்ஞினிலே மவுனித்து
அழுகிறதே!
http://atchaya-krishnalaya.blogspot.com

Unknown said...

அருமை