Wednesday, 30 November 2011

ஸ்டாலின் / அழகிரி ஒரு ஒப்பீடு          இந்த தலைப்பே இது ஒரு அரசியல் சார்ந்த பதிவு என்பதை சொல்லிவிடும், கடந்த தேர்தல்களில் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் தி மு கழகத்தில் இது மாதிரியான ஒரு ஒப்பீடு தேவையா என்று பார்த்தோமேயானால், ஆம் இப்போது தான் தேவை, ஏனெனில் தோல்விகளின் போதும், அதை எதிர் கொள்கிற போதும் தான் ஒரு தலைவனின் தகுதி தெரியும், அதைப் போலவே ஒரு நல்ல தலைவனால் தான் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள, தோல்விகளைக்கூட பயன் படுத்திக்கொள்ள முடியும்.


                        தன்னுடைய தமிழால், திறமையால், எழுத்தால், பேச்சால் பிரளயம் போல அரசியல் வானை பிளந்துகொண்டு வந்த மு.கருணாநிதியின், புத்திரர்களாக இருந்தாலும் இந்த இருவருக்குமே அவரைப் போல திறமை கிடையாது என்பதே முழு உண்மை. தனக்கென தானே தனி ராஜபாட்டை அமைத்து கொண்ட அவருக்கும், ராஜபாட்டை அமைத்து தந்தும் அதில் தன் முழு ஆதிக்கத்தை செலுத்த முடியாத இவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.


            சரி இப்போது தி மு கழகத்திலே அடுத்த தலைவர் யார் என்ற போட்டியும், தொண்டர்கள் பலம் பெற்றவர் யார் என்ற போட்டியும் தி மு க வின் ஒவ்வொறு மட்டத்திலும் விவாதிக்க பட்டு வருகின்றது.


அடுத்து யார்? ஸ்டாலினா? அழகிரியா??.     


இதற்கான பதிலை சொல்ல நான் அரசியல் ஜோதிடன் இல்லை ஆனால் அரசியலை உற்று நோக்கும் ஒரு சராசரி மனிதனாய் என் பார்வையில் இருவருக்குமிடையேயான ஒப்பீட்டு அளவிலான செய்திகளை இங்கே பார்ப்போம்.


முதலில் அழகிரி......... 
தென் மண்டல செயலாளரும், மத்திய அமைச்சரும் அவரின் தொண்டர்களால் அஞ்சா நெஞ்சன் என்று அழைக்க படும் அழகிரியின் செயல் பாடுகள் பெரும்பாலும் உணர்ச்சிகளின் வழியே நடத்தப் படுவதாகவே உணர்கிறேன். அதன் காரணங்கள் • எந்த ஒரு பொதுவான கட்சி நிகழ்வுகளிலும் தன்னை முன்னிலை படுத்தவிடில் அந்த நிகழ்சியை புறக்கணிக்க போவதாக செய்திகளை அவரின் தொண்டர்களின் மூலமாக பரப்புவது
 • 2001 தேர்தலில் தன் ஆதரவாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு தர வில்லை என்ற காரணத்திற்காக ஒரு நகர செயலாளரைப் போல தன் கட்சிக்கு எதிராகவே போட்டி வேட்பாளர்களை நிறுத்தி தி மு க வின் தோல்விக்கு காரணமாக இருந்தது.
 • தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்து அவர்களின் கொட்டத்தை அடக்காமலிருந்தது.
 • தன்னை புகழ்பவர்கள் தன் குடும்பத்தாரையும் முன்னிலைப் படுத்த வேண்டும் என் நினைத்தது
 • விமர்சனங்களை தாங்கமுடியாமல், விமர்சித்தவர்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது.
 • தகுதியே இல்லாதவராக இருப்பினும் தன்னை புகழ்ந்தால் அவர்களுக்கு பதவிகளை வாரி வழங்குவது
 • எந்த கட்டுபாடும் இல்லாமல் கட்சியின் எதிர் காலத்தை நினைக்காமல் தன் விருபத்திற்கு ஏற்றார் போல செயல் படுவது.
 • ஆட்சியில் இருந்த போது தென் மாவட்டங்களின் ஒரே பிரதி நிதியாக செயல்பட்டு , கடந்த உள்ளாட்சி தேர்தலில், தன் சொந்த தொகுதியில் கூட பிரச்சாரம் செய்யாமல் இருந்தது 
 • மத்திய அமைச்சராக ஒரு பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு, பெரும்பாலான நாட்களில் நாடாளுமன்றத்திற்கு செல்லாமலும், துறை சம்பந்தமான கூட்டங்களில் கலந்து கொள்ளாமலும் இருப்பது.
 • ஸ்டாலின் எப்போது மதுரை வந்தாலும் குறுகிய மனப்பான்மையுடன் அவரை யாரும் வரவேற்க்க செல்லக்கூடாது என தடை விதித்து கட்சியில் பிரிவு வருவதற்கு காரணமாக இருப்பது. 
 • எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற் போல, சென்ற ஆட்சியில் அஞ்சாநெஞ்சனாக வலம் வந்து, இந்த அ தி மு க ஆட்சியில் சத்தமே இல்லாமல் தில்லியிலேயே இருப்பது.

இனி ஸ்டாலின்

இவரின் கடந்த கால, அதாவது 1989க்கு முன் செயல் பாடுகள் பல விமர்சனங்களுக்கு ஆளானாலும், இவரின் கடந்த 15 ஆண்டு அரசியல் செயல்பாடுகள் ஒரு பக்குவப்பட்ட அரசியல்வாதியை இவரின் உள்ளே காணமுடிகிறது.அதற்கான காரணங்களாக நான் கருதுவது

 • தோல்வியோ வெற்றியோ தன் அரசியல் பயணத்தில் கிஞ்சித்தும் தளர்வு வராமல் தொடர்ந்து செயலாற்றிக்கொண்டு இருப்பது
 • இது வரை அவருக்கு அளிக்க பட்ட கட்சி பதவிகள் அனைத்தையும் குறையின்றி செயல் படுத்தியது.
 • எந்த ஒரு ஆட்சிப் பணிக்கும் மக்களின் மூலமாகவே ஜனநாயகத்தின் வழியே தன்னை தேர்வு செய்ய வைத்தது.
 • 2001ஆம் ஆண்டில் சென்னை மேயரா? அல்லது சட்ட மன்ற உறுப்பினரா என்ற கேள்விக்கு எதிர்கட்சி வரிசையில் இருந்தாலும், முக்கிய பதவியில் இல்லை என்றாலும் சட்ட மன்ற உறுப்பினராகவே தொடர்ந்தது.  
 • தன்னை சுற்றி இருப்பவர்கள் தொடர்ந்து தவறு செய்வதாக அறிந்தால் அவர்களை தன்னிடமிருந்து விலக்கி வைப்பது.
 • விமர்சனங்களை துவளாமல் எதிர்கொள்வது
 • கட்சியின் வெற்றிக்காக தொடர்ந்து கடந்த 25 வருடங்களாக பிரச்சாரத்தில் ஈடுபடுவது
 • கட்சிக்கு கடந்த காலங்களில் எந்த சங்கடங்களையும் ஏற்படுத்தாதிருப்பது
 • மக்களிடம் நல்ல அபிமானத்தை பெற்றிருப்பது
 • அரசியல் கடந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது
 • ஒரு நல்ல தலைவனாக தன்னை நிலை நிறுத்த முயற்சிப்பது.
 • கூட்டணிக் கட்சி தலைவர்களை அரவணைத்து செல்வது
 • கட்சி தலைவரின் மகன் என்பதையும் தாண்டி தனக்கென ஒரு நிலையை அடைந்திருப்பது
 • தன் தகுதிக்குட்பட்ட பதவிகளைப் பெறுவது
 • தலைவனுக்குரிய போராட்ட குணம்
 • கட்சியில் பெரும்பாலான தொண்டர்களால் விரும்பப்படுவது.

       இப்படி பல ஒப்பீடுகளின் அடிப்படையில் என்னை பொறுத்த மட்டில் ஸ்டாலினே முன்னிலையில் இருக்கிறார், இந்நிலை, என்னிலை மட்டுமே, தொண்டர்களின் நிலை நானறியேன். இப்பதிவில் உங்களுக்கு மாறுபட்ட அல்லது வேறுபட்ட கருத்திருந்தால் அதை பின்னூட்டங்களில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

அன்பன்
ARR

Tuesday, 29 November 2011

மழலைகள் உலகம் மகத்தானது - தொடர் பதிவுமழலைகள் உலகம் மகத்தானது என்ற மகோன்னத தொடர் பதிவை என்னை தொடர அன்பு கட்டளையிட்ட மதிப்புக்குரிய அய்யா திரு.வை.கோபாலகிருஷ்ணன்  அவர்களின் உத்தரவை ஏற்று நான் எழுதிய பதிவு இது...........
                      மழலைகள் உலகம் மட்டுமல்ல மழலைகள் உள்ள உலகமும் கூட மகத்தானதுதான். சரி மழலைகள் உலகம் மகத்தானது என்பதன் காரணத்தை அறிய முற்படுகையில் அந்த அற்புத உலகத்தில் தான் போட்டி, பொறாமை, குரோதம்,துரோகம், என்ற எந்த கீழான எண்ணங்களும் அவர்களிடத்தே இல்லை.சலனமே இல்லாத நிதர்சனமான உள்ளம் அது. சந்தோஷமோ, சோகமோ உடனே வெளிப்படுத்திவிடும் மழலைகளின் உலகம் மகத்தானதாக இருப்பதில் என்ன ஆச்சர்யம் இருந்துவிட முடியும்.


                      என் வாழ்க்கையில் இன்னும் என் குடும்பத்தில் பல மழலைகளைப் பார்த்திருந்தாலும், நான் ரசித்த இரு மழலைகளைப் பற்றியே இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
1. என் சின்ன அண்ணன் மகள்: கமலகிருஷ்ணவி 


                     எங்கள் குடும்பத்தில் சரியாக 35 வருடங்களுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை அவள். அதற்கு முன் எங்கள் அம்மா அப்பாவிற்கு 8 பேர பசங்க இருந்தாலும் ஒரு பேத்தி இல்லையே என்ற குறை குறைக்க வராது வந்த மாமணி போல் வந்த தேவதை அவள். பேர பசங்களின் கடா முடா விளையாட்டுக்களையே பார்த்த நாங்கள் இவளின் அமைதியான விளையாட்டுக்களால் மனம் மகிழ்ந்து போனோம், அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தின் நிதி நிலை சரியில்லாத கவலையை அகற்ற வந்த அகல்விளக்கு அந்த பாப்பாகுட்டி.


2. என் மகள்: கமலாத்மிகா


                என்னையும் என் எழுத்தையும் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு தெரியும் என் மகளை நான் பெற பட்ட வேதனைகள், ஒவ்வொரு முறையும் மருத்துவர்கள் வெவ்வேறு பிரச்சனைகளை சொல்ல, மனம் நொந்து மருத்துவமனையில் இருந்த என் மகளை பார்க்க போகும் போதெல்லாம், என்னை வரவேற்பது போல சின்ன கை, கால்களை ஆட்டி அந்த மணியான காந்த கண்களால் பார்க்கும் பார்வை ஒராயிரம் இடிகளையும் ஒருங்கே தாங்கும் சக்தியை தரும். 


               நம் உருவத்தையும், நம்மவர்களின் உருவத்தையும் செயல்களையும் அவர்களின் வழியே காணும் போது நாம் பெரும் இன்பம் எதற்கும் ஈடாகாது.
நம் சந்ததிகளின் வழியே நம் சாயல்களை நம் மழலைகளின் வழியே காணும் போது அந்த ஆண்டவனின் படைப்பையும் அதன் ஆச்சர்யத்தையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.


மழலைகளின் உலகம் மகத்தானது மட்டும் அல்ல, மகத்துவமானது இன்னும் மகோன்னதமானது.


அன்பன்
ARR.

Sunday, 27 November 2011

அம்மாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்.
தாயே தவமே, பண்பே பயனே!
வாழ்வே வரமே, அன்பே அறனே!
பாசத்தின் பிரமாண்டமே! ஆட்டுவித்த அற்புதமே!
பிரியத்தின் பிரகடனமே! சாதித்த சகாப்தமே!

நீ சென்றது
யாராலும் தொடமுடியாத தூரம்!
ஆனாலும் இது
யார் தூக்கிவைத்த பாரம்!

புரியாத புதிரே, பிரியாத உயிரே!
உள்ளங்கை தண்ணீரே,  உறையாத கண்ணீரே!
நீ மற்றவர்களால் உணரமுடியாத உயரம் – ஆனாலும்!
நீ மறைந்தது சொல்லிமாளா துயரம்!


எங்களின்..... 
சேவைகள் மறுத்த கண்மணியே,
தேவைகள் தீர்த்த தேவதையே,
தீர்ந்து போன தேன்மொழியே,
விட்டுச் சென்றதேன் வான்வழியே! 

பெறுதலுக்கரிய பொக்கிஷமே,
வீழ்த்தமுடியா வைராக்கியமே,
இருள் அழித்த ஒளியே,
நிஜமாய் நீயில்லை இனியே!

துன்பம் துடைத்த தூயவளே,
இன்பம் இழைத்த இனியவளே,
பாசம் பழக்கிய பனிமலரே – இனி,
எங்களுக்கு உனைப்போல் யாருளரே!

ஓய்ந்து விட்ட ஓவியமே!
கரைந்து விட்ட காவியமே!
வளரமுடியாத வளர்பிறையே – நீ
வரமுடியாதா மறுமுறையே ?

வரமுடியாதா மறுமுறையே??

இன்று (28/11/2011) எங்கள் அம்மாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்.
அன்பன்
ARR
ARR

Monday, 14 November 2011

குழந்தைகள்........ வாழ்வியலின் வண்ணங்கள்
குழந்தைகள்........

வாழ்வியலின் வண்ணங்கள்


வாழ்வியலின் வசீகரங்கள்


வாழ்வியலின் வசந்தங்கள்வாழ்வியலின் வடிகால்கள்

வாழ்வியலின் வடிவங்கள்


வாழ்வியலின் விழுதுகள்


வாழ்வியலின் அற்புதங்கள்


வாழ்வியலின் அஸ்த்திவாரங்கள்


வாழ்வியலின் அர்த்தங்கள்


வாழ்வியலின் முழுமைகள்வாழ்வியலின் மகிமைகள்

வாழ்வியலின் தத்துவங்கள்


வாழ்வியலின் மகத்துவங்கள்

இன்னும்


இது போல் எத்தனையோ

இந்த குழந்தைகள் தின நாளில்

குழந்தைகளாய் இருப்பவர்களுக்கும்


குழந்தைகளாய் இருந்தவர்களுக்கும்


மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்அன்பன் 
ARR