மழலைகள் உலகம் மகத்தானது என்ற மகோன்னத தொடர் பதிவை என்னை தொடர அன்பு கட்டளையிட்ட மதிப்புக்குரிய அய்யா திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் உத்தரவை ஏற்று நான் எழுதிய பதிவு இது...........

மழலைகள் உலகம் மட்டுமல்ல மழலைகள் உள்ள உலகமும் கூட மகத்தானதுதான். சரி மழலைகள் உலகம் மகத்தானது என்பதன் காரணத்தை அறிய முற்படுகையில் அந்த அற்புத உலகத்தில் தான் போட்டி, பொறாமை, குரோதம்,துரோகம், என்ற எந்த கீழான எண்ணங்களும் அவர்களிடத்தே இல்லை.சலனமே இல்லாத நிதர்சனமான உள்ளம் அது. சந்தோஷமோ, சோகமோ உடனே வெளிப்படுத்திவிடும் மழலைகளின் உலகம் மகத்தானதாக இருப்பதில் என்ன ஆச்சர்யம் இருந்துவிட முடியும்.
என் வாழ்க்கையில் இன்னும் என் குடும்பத்தில் பல மழலைகளைப் பார்த்திருந்தாலும், நான் ரசித்த இரு மழலைகளைப் பற்றியே இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
1. என் சின்ன அண்ணன் மகள்: கமலகிருஷ்ணவி
எங்கள் குடும்பத்தில் சரியாக 35 வருடங்களுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை அவள். அதற்கு முன் எங்கள் அம்மா அப்பாவிற்கு 8 பேர பசங்க இருந்தாலும் ஒரு பேத்தி இல்லையே என்ற குறை குறைக்க வராது வந்த மாமணி போல் வந்த தேவதை அவள். பேர பசங்களின் கடா முடா விளையாட்டுக்களையே பார்த்த நாங்கள் இவளின் அமைதியான விளையாட்டுக்களால் மனம் மகிழ்ந்து போனோம், அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தின் நிதி நிலை சரியில்லாத கவலையை அகற்ற வந்த அகல்விளக்கு அந்த பாப்பாகுட்டி.
2. என் மகள்: கமலாத்மிகா
என்னையும் என் எழுத்தையும் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு தெரியும் என் மகளை நான் பெற பட்ட வேதனைகள், ஒவ்வொரு முறையும் மருத்துவர்கள் வெவ்வேறு பிரச்சனைகளை சொல்ல, மனம் நொந்து மருத்துவமனையில் இருந்த என் மகளை பார்க்க போகும் போதெல்லாம், என்னை வரவேற்பது போல சின்ன கை, கால்களை ஆட்டி அந்த மணியான காந்த கண்களால் பார்க்கும் பார்வை ஒராயிரம் இடிகளையும் ஒருங்கே தாங்கும் சக்தியை தரும்.
நம் உருவத்தையும், நம்மவர்களின் உருவத்தையும் செயல்களையும் அவர்களின் வழியே காணும் போது நாம் பெரும் இன்பம் எதற்கும் ஈடாகாது.
நம் சந்ததிகளின் வழியே நம் சாயல்களை நம் மழலைகளின் வழியே காணும் போது அந்த ஆண்டவனின் படைப்பையும் அதன் ஆச்சர்யத்தையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
மழலைகளின் உலகம் மகத்தானது மட்டும் அல்ல, மகத்துவமானது இன்னும் மகோன்னதமானது.
அன்பன்
ARR.






