வென்றோம் உலக கோப்பை 2011
ஒவ்வொரு இந்தியனின் 28 வருட கனவு , தவம் ,இன்னும் சுவாசம் கூட இந்தியாவின் தேசிய விளையாட்டாகி போன கிரிக்கெட் -இல் உலக கோப்பை எனும் அந்த உலோக கோப்பை , யாருமே எதிர் பார்க்காமல் 1983 இல் உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், தூக்கியது கப்பை மட்டுமல்ல, இந்தியாவின் கெளரவம் , அந்த விளையாட்டின் மீதான இந்தியர்களின் ஆர்வம் . அந்த மாயா ஜால 1983 வித்தைக்கு பின் , இந்தியாவே இந்த விளையாட்டில் சொக்கி போய் சுற்றி சுற்றி வந்தது .
பல முறை இந்திய ரசிகர்களின் கனவை பொய்யாக்கினாலும்,இந்த ஆட்டமே வேண்டாம் என துறவறம் பூண்டாலும் அடுத்த ஆட்டத்திற்குள் , அந்த ஆட்டத்தினுள் இழுக்கும் சூட்சமம் என்ன வென்று இன்றுவரை யாருமே அறியார் .1987 இல் உலக சாம்பியனாக உள்ளே நுழைந்த இந்திய அணி செமி பைனல் வரை முன்னேறி இங்கிலாந்துவிடம் தோல்வி,. அடுத்து 1992 முதல் ரவுண்டிலேயே காலி, 1996 இல் இலங்கையிடம் செமி பைனலில் தோல்வி , 1999 இல் சூப்பர் சிக்ஸ் இல் காலி , அடுத்து வந்த 2003 இல் எல்லோராலும் இந்த முறை வென்றே தீருவோம் என்றே நம்பப்பட்ட பைனலில் ஆஸ்திரேலியாவிடம், படு தோல்வி . 2007 உலக கோப்பையில் உலக்கை அடி தோல்வி .
இப்படி கடந்த 28 ஆண்டுகளாக ஆட்டம் காட்டிய இந்த உலோக உலக கோப்பை , இந்த முறை நம் அணியின் கேப்டன் தோனி இன் தலைமையில் இளமையும் , அனுபவமும் கலந்த கலக்கல் அணியாக புத்தம் புது எழுச்சியுடன், சென்ற மூன்று ஆண்டுகளில் சரித்திரம் பல படைத்து , வென்றே தீருவோம் என்றே சொல்லி,கில்லியாக இந்த முறை களமிறங்கியது .
இத்தனை ஆண்டுகளில் நம் அணியில் நல்ல பிளேயர் விளையாட மாட்டனா என்று எண்ணிய காலம் போய் இந்த முறை நல்ல பிளேயர் எல்லாம் விளையாட முடியலையே என்று பெருமை பொங்கும் படியான டீம் அமைந்தது , பந்து வீச்சு தான் சற்று பலவீனம் என்றாலும் , பேட்டிங்கில் பட்டையை கிளப்பினார்கள் நம்மவர்கள் .அதிலும் சேவாக் , சச்சின் , யுவராஜ் , கம்பீர் , கோஹ்லி, ரெய்னா என கலக்கல் அதிரடி சரவெடி தான் .
மிகவும் கடினமான பிரிவில் இருந்த இந்தியா , தென் ஆப்பிரிக்காவுடன் போராடி தோற்றது , இங்கிலாந்துடன் சதிராடி சமன் செய்தது , பங்களாதேஷ் , அயர்லாந்து , நெதர்லாந்து ,மேற்கிந்திய தீவுகளுடன் வெற்றியை வெகுமானித்தது.அடுத்து நாக் அவுட் முறையிலான போட்டிகள் . காலிறுதியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை , அசால்டாக அடித்து , அமோக வெற்றியை பெற்றது . அரை இறுதியில் பங்காளி பாகிஸ்தானை புதுப் புனலாய் புரட்டி எடுத்து, இறுதியில் புகுந்தது .
இறுதியில் இறுமாப்பு இலங்கையுடன் இன்று மோதியது இந்தியா .டாஸ் இல் வென்ற இலங்கையின் அணி தலைவர் சங்ககரா பேட்டிங்கை தேர்வு செய்ய , தொடங்கியது , தொடரின் இறுதியாட்டம் . தரமான தரங்கா தட்டு தடுமாறி 2 ரன்னில் அவுட் ஆக, தில்லான தில்ஷனும் சங்கா வும் இலங்கையை நிலை நிறுத்த முயற்சித்தனர். தில்ஷன் முப்பது சொச்ச ஓட்டத்திலும், சங்கா 48ஓட்டத்திலும் பெவிலியன் திரும்ப , அடுத்து வந்த மகத்தான மகிலா இலங்கை அணிக்கு வெற்றி பாதையை தான் சதத்தால் காட்ட துவங்கினார் , அடுத்து வந்த 2 ஆட்டக்காரர்களும் சொற்ப ரன்னில் அவுட் ஆக பின் வந்த பின் வரிசை பிளேயர்கள் குலசேகராவும், பெரேராவும் அதிரடியில் ஸ்கோரை உயர்த்த ஆட்ட நேர முடிவில் இலங்கையின் ஸ்கோர் 274/6.
275 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் , ஆட தொடங்கிய சேவாகும், சச்சினும் சொற்ப ரன்னிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர் , மலிங்காவின் வேகத்தில். ஆனால் அடுத்து ஆடவந்த கம்பீர் , கம்பீரமாய் தன் ஆட்டத்தை துவக்க , துணைக்கு வீரமான வீராட் , இருவரும் இந்திய அணியின் வெற்றிக்கு ராஜா பார்ட்டை அமைக்க அடித்தளமிட்டனர் , திஷானின் சுழலில் வீராட் வீழ , அடுத்து வந்தது மச்சக்கார மகேந்திர சிங் தோனி , வேகமும் விவேகமும் கலந்து ஆடிய கம்பீரும் , தோனியும் இலங்கையின் பந்து வீச்சை விளாசி , விரட்டி, வெளுத்து எடுத்தனர் . இருவரும் சேர்ந்து 100 ரன்னுக்குமேல் எடுத்து ஆடிய வேளையிலே 97 ரன்னில் தன் விக்கெட்டை கம்பீர் பறிகொடுத்தார். அடுத்து வந்த யுவன் யுவராஜும் , கேப்டன் தோனியும் வரலாற்று வெற்றியை இந்திய அணியின் இதயத்தில் இசையாய் இணைத்தனர் .
வெற்றிக்கு தேவை பட்ட ரன்னை தன் இமாலய சிக்சரால் நிறைவு செய்த தோனி , இன்றைய தன்னுடைய தன்னிகரில்லா ஆட்டத்தின் மூலம் தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைத்தார் .
ஆட்டம் நிறைவடைந்தவுடன் சச்சினை சக அணிதோழர்கள் தங்கள் தோளில் சுமந்து மைதானத்தை சுற்றிவந்தது , அவர்களின் இதயத்தில் சச்சினின் இடத்தை உலகுக்கு வெளிக்காட்டியது . அழுகையும் ஒரு அழகை கொடுக்கும் என்பது நம்மவர்கள் சிலரின் ஆனந்த கண்ணீரில் தெரிந்தது .
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு
உயிர் ஊட்டிய
உணர்வு ஊட்டிய
உரம் ஊட்டிய
உற்சாகம் ஊட்டிய
உன்னத தலைவன் தோனிக்கும்
சாதனை நாயகன் சச்சினுக்கும்
சரித்திர புகழ் வாழ்த்துக்கள்
இளைய அணிக்கு
இனிய அணிக்கு
இணையில்லா அணிக்கு
இதய பூர்வமான வாழ்த்துக்கள்
வென்றோம் ............
உலோக கோப்பை மட்டும் அல்ல
உலக கோப்பை .................
உயரிய கோப்பை........................
அன்பன்
ARR
4 comments:
நல்ல கட்டுரை கோப்லி. ;-))
குட் ஒன்
சகலமும் வெங்கடார்ப்பணம், நன்றி வெங்கட்
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மனம் நிறை , மகிழ் உரை நன்றி எல் கே சார்
Post a Comment