Saturday, 30 April 2011

அந்நிய தேசத்து இந்தியனின் கண்ணீர்


நினைவுகளில் நனைந்து
ஈரமாகிறது மனம்!
சொந்த பந்தங்கள் 
தூரமாகிறது தினம்!  

சம்பாத்தியமே சுவாசமாகி 
சுருங்கிப்போனது உறவுகள்!
பாசமின்றி பகிர்வின்றி 
கண்ணீராகிறது இரவுகள்!

விருப்பமின்றி நாடுகடந்து 
தத்தளிக்கிறது தனிமை !  
புன்னகையின்றி நகர்புகுதந்து
நரகத்திலும் கொடுமை !


அன்னையின் அன்பை 
அறிய வழியில்லை !
பிறந்த மழலையின் 
முகம்பார்க்க விழியில்லை !


தொலைபேசி தொடர்புகளில் 
தொட்டுக்கொள்ளும் இளமை !
கரம்பிடித்தவளின் குரலில்
குடியிருக்கும் வெறுமை !


பரிவுகளின் பிரிவுகள்
மூடவைக்காது கண்இமை! 
வீடுசெல்ல எத்தனிக்கையில்
போகவைக்காது  கடன்சுமை!


அந்நியதேசத்து இந்தியனாய் 
பணம்பறிக்க வந்தோம் !
அங்கிங்குநகரா அடிமைவாழ்வு
மனம்நொறுக்க நொந்தோம் !      


என்தேசம் துறந்து 
பறவைபோல்  பறந்து 


உறவையெல்லாம் மறந்து 
உணர்வெல்லாம் மரத்து 


உரிமை இழந்து 
உயிர்மை  இழைத்து 


நாங்கள் இங்கு இல்லாமல் இருக்கிறோம்!
தீர்வின்றி தவிக்கிறோம் !


ஓய்வின்றி உழைக்கிறோம்! 
எங்கள் துயரத்தை வார்த்தையாய் வடிக்கிறோம்! 
-----------------------------------------------------------------------------


தூரத்து தேசங்களில் துயரம் துரத்த


இதயம் இரைக்க இரைதேடும்
உதயம் உதிக்க கரைதேடும் 
என் சக இந்தியனுக்கு 
அக சுகம் இழந்தவனுக்கு சமர்ப்பணம்........


அன்பன்
ARR 

பட உதவி :emirates247.com / NDTV 





20 comments:

Anonymous said...

ராஜகோபாலன், பேனாவுக்கு ஊற்றியது மையா இல்லை கண்ணீரா???
அருமையான கவிதை!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நெஞ்சடைக்கும் வரிகள்.பதற வைக்கும் வாழ்க்கை.இதற்குத் தீர்வு நம் அருகிலேயே இருக்க அதைத் துறந்து தொலைதூரம் பறப்பதெல்லாம் கண்ணீரில் கரையத்தானா?

நெகிழ்ச்சி ராஜூ.

A.R.ராஜகோபாலன் said...

@amiksha
மிக்க நன்றி அமிக்ஷா
இது கருத்து கண்ணீர்
வெளிநாட்டு வெந்நீர்

A.R.ராஜகோபாலன் said...

நன்றி திரு சுந்தர்ஜி..........
வார்த்தைகளின் வளமையைவிட அந்த கொடுமையின் வலிமை அதிகம்
நீங்கள் சொன்னது போல்
என்ன இல்லை இங்கே
ஏன் செல்ல வேண்டும் அங்கே

Yaathoramani.blogspot.com said...

குடும்பத்தாரின் நல்வாழ்வுக்காக கடல் கடந்த
சகோதரர்களின் மன நிலையை
இதைவிட ஆழமாய் அழுத்தமாய்
சொல்வது கடினம்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
தங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி ரமணி சார்

Unknown said...

அந்நிய தேசத்தில் இந்தியனின் வேதனையை விட, சொந்த நாட்டிலேயே அன்னியனாய் இருக்கும் இந்தியனின் வேதனை கொடுமையானது.

A.R.ராஜகோபாலன் said...

@JOHN
வித்தியாசமான கருத்து ஜான்சன்
பகிர்ந்தமைக்கு நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சம்பாத்தியமே சுவாசமாகி சுருங்கிப்போனது உறவுகள்!//

//நாங்கள் இங்கு இல்லாமல் இருக்கிறோம்!
தீர்வின்றி தவிக்கிறோம் !

ஓய்வின்றி உழைக்கிறோம்!
எங்கள் துயரத்தை வார்த்தையாய் வடிக்கிறோம்! //

பாதிக்கப்பட்ட நண்பர்களின் நியாயமான உணர்வுகளை எடுத்துச்சொல்லும் உண்மையான வலி மிகுந்த வரிகள்.

பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

A.R.ராஜகோபாலன் said...

தங்களின் முதல்
வருகைக்கும்
வாழ்த்திற்கும்
வளமான
வந்தனம் ஐயா!

பெருமைக்குரியவரின்
பெருதலுக்கரிய
பாராட்டு
எனக்கு ..................................பொக்கிஷம்
பெருமையான நன்றி ஐயா.

சிவகுமாரன் said...

இந்தக் கவிதை என் கண்களை குளமாக்கியது. என் தந்தை சிங்கப்பூரில் வேலை செய்தார். நாங்கள் எல்லாம் என் தாயுடன் இங்கிருந்தோம். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ஒரு மாதம் அப்பா வந்து செல்வார். நாங்கள் எங்கள் தந்தையோடு கழித்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
.. மனம் கரைய வைத்த கவிதைக்கு நன்றி

Ahamed irshad said...

சிற‌ப்பான‌ வ‌ரிக‌ள் ந‌ண்ப‌ரே.

--------------
அந்த‌ க‌ட்டிலும்
க‌ட்டிலின் கீழே
இருக்கும்
பெட்டியும்
சொல்லும்
ஆயிர‌ம்
உண‌ர்வுக‌ளை..
---------------

A.R.ராஜகோபாலன் said...

@சிவகுமாரன்
என் வரிகள் உங்கள் இதயம் தொட்டதில் பெருமை அடைகிறேன்
திரு. சிவகுமாரன்
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் பல வணக்கம்

A.R.ராஜகோபாலன் said...

@அஹமது இர்ஷாத்
நல் நன்றிகள், உங்களின் பாராட்டு என் எழுத்தை பலப்படுத்தும்

வை.கோபாலகிருஷ்ணன் said...

A.R.RAJAGOPALAN said...
//ஒரு வித்தியாச
சாதனையாளரை
சமீபத்தில்
சந்திப்பது
சந்தோஷம்...............
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
மதி நிறைந்த வணக்கங்கள் ஐயா !//

தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

என் வலைப்பூவுக்கு புதிய Follower ஆக வந்துள்ள தங்களை அன்புடன் நன்றியுடன் வரவேற்கிறேன்.

//துணை செய்தி: ஆண்டார் வீதியில் உள்ள (உணவகம் பெயர் நினைவில்லை ) உணவக உணவிற்கு நான் அடிமை , என் ஏழு வருட வாழ்க்கை திருச்சியில் தான் கழிந்தது .//

வடக்கு ஆண்டார் தெருவின், மேற்குக்கோடியில், வடக்கு பார்த்து அமைந்துள்ளது “ராமா கஃபே” என்ற டிபன் கிடைக்கும் ஹோட்டல்.

எனக்குத்தெரிந்து சுமார் 55 வருடங்களுக்கு மேலாக உள்ளது. டிபன்+சாம்பார்+சட்னி நன்றாக இருக்கும். நடுவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, Ownership மட்டும் ஒரு ஐயரிடமிருந்து ஐயங்காரிடம் மாறியுள்ளது.

இதன் அருகே ”பழநி விலாஸ் நெய் ஸ்டோர்” என்ற மிகவும் பிரபலமான தயிர், பால், வெண்ணெய், நெய் விற்கும் கடையும், அதையொட்டி கருப்பர் கோயிலும் உள்ளது.

இந்த ராமா கஃபே ஹோட்டலுக்கு எதிர்புறம் ஒரு பெரிய அரசமரமும், பிள்ளையார் கோவிலும் உண்டு. அதன் அருகே மாங்காய், மாவடு, மஹாளிக்கிழங்கு, சுண்டைக்காய் போன்ற ஊறுகாய்க்கான ஐட்டங்கள் விற்பனை எப்போதும் நடைபெறும்.

அந்தப்பிள்ளையார் கோவிலுக்கு ஒரு 4 கட்டடம் தாண்டி, “மதுரா லாட்ஜ் ஹோட்டல்” உள்ளது. இங்கு பகலிலும் இரவிலும் சாப்பாடு மட்டும் கிடைக்கும். Unlimited Meals.
”எவ்வளவு வேண்டுமானாலும் கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்; ஆனால் பரிமாறிய உணவை தயவுசெய்து சாப்பிடாமல் வீணாக்கி விடாதீர்கள்”

என்ற ஒரு பெரிய அறிவிப்பு வைத்திருப்பார்கள். இன்றும் ரூ.45 க்கு ருசியான Unlimited சாப்பாடு போடுகிறார்கள். நீங்கள் சொல்லுவது இந்த ஹோட்டலாகத்தான் இருக்கும். இந்த ஹோட்டலின் மேல் பகுதியில் பேச்சலர்ஸ் தங்கிக்கொள்ளும் வசதியும் கூட உண்டு.

மற்றொன்று “மாயவரம் லாட்ஜ்” என்பது வடக்கு ஆண்டார் தெரு ராமா கஃபே யிலிருந்து சற்றே தள்ளி வாணப்பட்டரை ரோட்டில் அமைந்துள்ளது. இங்கும் தங்கும் ரூம்களும், நல்ல Homely Meals + Tiffin only for very limited hours கிடைக்கும். பாலக்காட்டு ஐயர் ஹோட்டல் இது. சுமார் 100 ஆண்டுகளாக இருப்பதாகக் கேள்வி. சாப்பிட்ட இலைகளை அவரவர்களே எடுத்து குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்பது போல நிறைய கண்டிஷன்ஸ் உண்டு.

தாங்கள் சொல்வது இந்த ராமா கஃபே/மதுரா லாட்ஜ்/மாயவரம் லாட்ஜ், மூன்றுக்குள் ஒன்று தான் என்பது சர்வ நிச்சயம். வாழ்த்துக்கள்.

நான் செய்த பெரிய பாக்யம், நான் தற்சமயம் வசித்துவரும் வீட்டிலிருந்து 3 நிமிட நடை தூரத்தில் தான் இந்த 3 உணவகங்களும் உள்ளன. சுவையான உணவகங்கள் அருகே இருப்பது சொர்க்கத்தில் இருப்பது போல உள்ளது.

அன்புடன் vgk

A.R.ராஜகோபாலன் said...

மரியாதைக்குரிய ஐயா
மகிழ் வணக்கம் ...........
உங்கள் யூகம் மிகச்சரி அது மதுரா ஹோட்டல் தான் , நான் 1994 இல் ரூ 12 க்கு சாப்பிட்டதாக நினைவு, தேன் மதுர சுவையான வத்தல் குழம்பின் சுவை இன்றும் என் நாவில், அதே போல் ஜங்க்ஷன் சரஸ்வதி கபே அடுத்து பிருந்தாவன் ஹோட்டல் rs 8.50 க்கு புல் சாப்பாடு .

நீண்ட இடைவெளிக்கு பின் என் மனைவியோடு சென்று 2007 இல் மதுரா ஹோட்டலில் சாப்பிட்டேன் .

உங்களின் அதிவிவரமான தகவல்களுக்கு மிக்க நன்றி. அதேபோல் எனக்கு BHEL ம் பரிச்சயமான ஒன்றுதான் , நான் சிட்டி வங்கியில் கிரடிட் கார்டு விக்கும் போது அங்கு அடிக்கடி வருவேன் , அந்த 24 பில்டிங் (நிர்வாகம்) ஒவ்வொரு தளமும் எனக்கு மிக பரிச்சயம்.

என்னை பொறுத்தவரை திருச்சியில் இருப்பதே பாக்கியம் , நானும் உங்களைப்போலவே திருச்சியை ஆழ அகலமாய் நேசிப்பவன் .

எனக்காக உங்களின் பொன்னான நேரத்தை செலவிட்டமைக்கு பணிவான நன்றி ஐயா
அன்பன்
ARR.

வை.கோபாலகிருஷ்ணன் said...

வலைச்சரத்தில் இன்று அதுவும் நாரதர் மூலம் அறிமுகம் ஆகியுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்,
vgk

A.R.ராஜகோபாலன் said...

@ அப்பாவி தங்கமணி
அப்பாவி தங்கமணியால் அப்பாவி எனக்கு சூட்டிய தங்கமணி மகுடம்
சாமான்யன் நான் உங்கள் முன்னால் சுடாத மண்குடம் ...

சரள நடை எழுத்தில் .........
பிரபல்யமானவரின் பின்புலத்தில்
இந்த அற்புத அறிமுகம் என்னை பண்படுத்தும்
என் எழுத்தை பலப்படுத்தும் ..............

நன்றி இது எனக்கு வார்த்தையல்ல ...............வாழ்க்கை .
நன்றி ...........

A.R.ராஜகோபாலன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
மனம் மகிழ்ந்த, நிறைந்த நன்றி ஐயா.......

Karikaal said...

சில தசாப்தங்களாக இந்திய விம்சாவளி இலங்கையர்களாக வாழும் எங்களுக்கும் உண்டா தீர்வு?