Wednesday, 30 March 2011

சுதந்திரம் ..........

சுதந்திரம் .......... 






ராகவன் அய்யா எங்கள் ஊரில் எல்லோராலும் மதிக்கபடுகின்ற மாசற்ற மனிதர் , சுதந்திர போராட்ட தியாகி , மகாத்மா காந்தியுடன் மிக நெருக்கமாய் பழகியவர் , அவரையே இன்றுவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு அவர் வழி நடப்பவர் . வயது 95  ஐ நெருங்கினாலும் இன்னும் இளமை மாறாத மிடுக்கு நடை , கண்ணாடி போடாத களங்கமில்லா கண் பார்வை , அவர் கதர் உடுத்தி தெருவில் நேர்கொண்ட பார்வையுடன்  நடந்து வந்தால் ராஜநடைதான்.நம்மை அறியாமலேயே கைகள் அவரை வணங்கும் .

      அதிர்ஷ்டவசமாக அவர் எங்கள் பக்கத்து வீடு மனிதர் என்பதால் நான் சிறுவயது முதலே அவரை பார்த்து , பிரமித்து ,வளர்ந்தவன் . எனக்கு வாஞ்சிநாதன் என வாஞ்சையுடன் பெயர் சூட்டியதும் அவர்தான். நான் என்றால் அவருக்கு மிக பிரியம் , வாஞ்சி ... வாஞ்சி என வாய் நிறைய அழைத்து கொஞ்சி மகிழ்வார் .இன்று நானும் படித்து , வேளையில் சேர்ந்து திருமணம் ஆகி , குழந்தை குடும்பம் என்று ஆனாலும் , இன்றும் அதே மாறாத அன்பு , ஆதரவு,அரவணைப்பு அவர் இளமை போலவே மாறாதிருக்கின்றது. அவரின் பிள்ளைகளும் படித்து பம்பாய் , தில்லி என இருந்தாலும் அவர் இன்னும் எங்கள் ஊரில் தான் வாசம் , கேட்டால் இந்த ஊரை போல எது வரும் என்பார் , நானும் அதை பற்றி அதிகம் கேட்பதில்லை , ஏனென்றால் எனக்கும் அதில் முழு உடன்பாடு உண்டு .

     என்னதான் பெரிய வேலையில் இருந்தாலும் , இரு குழந்தைக்கு தந்தை என்றாலும் , இந்த சொந்த ஊருக்கு வரும் போது நான் குழந்தை தான். கவலை மறந்து போகும் , துயரம் தொலைந்து போகும் , பொறுப்பு பறந்து போகும் , இன்னும் சொல்வதென்றால் , நகர வாழ்க்கை எனும் நரக வாழ்க்கையில் சிக்கி மூச்சி திணறும் எனக்கு எங்கள் ஊர் விஜயம் தான் ஆக்சிஜன். என் தாயின் மடியில் படுத்து இருப்பதை போல ஒரு சுகம் .


     அப்படி ஒருநாள் ஊருக்கு வரும்போது , என் ஊரை பற்றிய புராணத்தை கேட்டு , என் நெருங்கிய நண்பன் ஜெயந்தன் என்னுடன் வந்தான் நான் சொல்வதெல்லாம் உண்மை தானா என கண்டறிய வந்தானா என்பதை நானறியேன் . அவனுடன் வந்த அந்த சனிக்கிழமையில் நாள் முழுவதும் ஊர் சுற்றினோம் , நான் வரும் போதெல்லாம் வாங்கி சாப்பிடும் இலந்த வடையிலிருந்து, ஆட்டுக்கால் சூப் வரை அவனும் ருசி பார்த்தான்.  

     எங்களோடு சேர்ந்து சுற்றிய சூரியன் எலுமிச்சை பழ வண்ணத்திலிருந்து ஆரஞ்சு பழமாக மாறி மறையும் வேலையில், பெரியவர் ராகவன் அய்யா வீட்டுக்கு சென்றேன் என் நண்பனுடன் , வழக்கமான அறிமுக படலம் முடிந்தவுடன் , இந்த இந்திய தேசத்துக்கு காந்தி நிஜமாவே நல்லது செஞ்சிருக்காருன்னு நீங்க நினைகிறீங்களா என்றான் ஜெயந்தன் ,  இந்த கேள்வியால் கலவரமாகி என்னடா இப்படி கேக்குற என்ற என்னை கை அமர்த்தி ராகவன் அய்யா பேச தொடங்கினார் , நினைகிறேனா , அதை முழு மனசோட நம்புறேன் என்றார் .அப்படியா அவர் விட்டு சென்ற எதாவது ஒரு நல்ல விஷயத்தை சொல்லுங்க பார்க்கலாம் இது ஜெயந்தன் , அகிம்சை இது அய்யா , நடுவில் தர்ம சங்கடமாய் நான் .

  அகிம்சையா, அப்பாவி தொண்டர்களை அடி வாங்க உட்டுட்டு இவர் மட்டும் அடிபடாமல் இருந்தாரே , அந்த அகிம்சையா , இவர்  போதித்ததெல்லாம் மற்றவர்களுக்கு தானே இவர் ஒன்னும் அதை கடைபிடித்ததா, தெரியலையே .
இன்னும் சொல்ல போனால் இவர் நிறுத்திய வேட்பாளர் பட்டாபி சீதாராமையா   தோற்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவராக  வெற்றி பெற்ற போது நேதாஜி யின் வெற்றி என்னுடைய தோல்வி என்று கூறினாரே , இதனால் பின்னாளில் இவரின் ஆதரவாளர்களின் ஒத்துழையாமையால், நேதாஜி காங்கிரஸ் பதவியிலிருந்து ராஜினமா செய்தாரே அப்போது எங்கே போனது இவரின் ஜனநாயகம் , இன்னும் பாகிஸ்தான் பிரிவினையின் போது ஜின்னா பாகிஸ்தான் முஸ்லிம்களின் நாடு என சொன்னபோது இவர் இது இந்துக்களின் நாடு என்று சொல்லாமல் தன் சுய புகழுக்காக இந்தியா  மத சார்பற்ற நாடு என்று சொல்லி அன்று தொடங்கிய கலவரம் இன்று வரை தொடர யார் கரணம் உங்கள் காந்தி தானே , ஒன்று பாகிஸ்தான் பிரிக்க படாமல் இருந்திருக்க வேண்டும் இல்லை என்றால் பாகிஸ்தான் முஸ்லிம் நாடாக பிரகடனபடுத்த பட்ட போதே இந்தியாவும் இந்துக்களின் நாடாக மலர்ந்திருக்க வேண்டும் , அவரின் அந்த முடிவுதான் இன்று இந்தியாவின் எல்லா பின்னடைவுகளுக்கும் காரணம் , இன்னும் இது போல் சொல்லிக்கொண்டே போகலாம், அவரின் சொந்த புகழுக்காக எங்களை அடகு வைத்து விட்டு போனார். இவர் ஜெயிலில் இருந்த போது கூட எந்த கஷ்டங்களையும் அனுபவிக்கவில்லை , வ .உ . சி, சுப்ரமணிய சிவா போன்றோர்கள்  பட்ட கஷ்டங்களின் நிழல்  கூட இவர் மேல் படவில்லை. அன்று இருந்த சுயநல தலைவர்களாலும், அப்பாவி தொண்டர்களாலும் நம்ப வைக்கப்பட்ட தலைவர் தான் உங்கள் காந்திஜி , என ஜெயந்தன் பொரிந்து தள்ளி விட்டான்,
                நிலத்தில்  விழுந்த மீனை போல நான் துடியாய் துடித்தேன் . எங்க ஊரே வணங்கும் ஒரு உத்தமரிடம் இப்படி வகை தொகை இல்லாமல் பேசுகிறானே என்ன செய்வது என்று புரியாமல், தெரியாமல் டேய்  நீ வீட்டுக்கு போடா , நான் அப்பறமா வரேன் என கூறி அவனை அங்கிருந்து அப்புறபடுத்தினேன், ஆனாலும் அய்யாவின் முகத்தை ஏறெடுத்து பார்க்க முடியாமல் தவித்தேன் , நெளிந்தேன் , ஒரு வழியாக தெளிந்து அய்யா என்ன மன்னிச்சிடுங்க , அவன் எபோதுமே இப்படிதான் எல்லாம் தெரிஞ்ச மாதிரி  எதாவது உளறி கொட்டுவான் , எனக்காக நீங்க அவனை மன்னிக்கணும் , என்னை அறியாமலேயே , அவரின் பதங்களில் சரணடைந்தேன் , கண்களில் கண நேரத்தில் கட கட வென கண்ணீர் . 

               என்னை தூக்கி அமரவைத்த அய்யா, கணீரென கம்பீரமாய் பேச தொடங்கினார் , வாஞ்சி இப்போ என்ன நடந்து போச்சின்னு இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுற , அவர் அவரோட கருத்துக்களை சொன்னார் அவ்வளவுதானே , அவர் சொன்னதுனால மகாத்மா வின் புகழ் மங்கிடவா போவுது , இதெல்லாம் சின்ன விஷயம் . மகாத்மாவின் உண்மையான தொண்டனின் முதல் தகுதியே சகிப்புதன்மைதான். இதுக்கு நான் கோவப்பட்டேன்னா, அப்புறம் நான் காந்தியவாதியே கிடையாது. ஆனா ஒரு விஷயத்தில் எனக்கு சந்தோசம் தான் , ஏன்னா , மகாத்மா வாங்கி கொடுத்த  சுதந்திரம் தானே இவரை இப்படி பேசவைக்குது, எது எப்படி இருந்தாலும் இவரின் இந்த சுதந்திர சிந்தனைக்கு , பேச்சுக்கு காரணம் மகாத்மா என்பதில் பெருமை தான். இந்த இந்திய தேசத்துக்கு சுதந்திரம் புகழுரதில மட்டும் இல்லை  இகழுரதிலேயும் இருக்கு . இவரின் கருத்துக்களை நான் எதிர்க்காமல் இருக்கிறதில்தான் அவரின் சுதந்திரம் இருக்கு.அவரின் சுதந்திரத்துல நான் தலையிடாம இருக்கிறதில்தான்ஒவ்வொரு காந்தியவாதியின் கண்ணியம் இருக்கு, ஒருவரின் சுதந்திரத்தில் நான் இடையூறு செய்யாதிருத்தல் மகாத்மாவிற்கு நான் செய்யும் சேவை ,இன்னும் கடமை . எனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லை,மௌனத்தை விட பெரிய அகிம்சை இல்லை ,  நீ கவலை படாம போய்ட்டு வா , என கூறிய ராகவன் அய்யா முன்பை விட என்னில் விஸ்வரூபமெடுத்து உயர்ந்து நின்றார் .


       
அன்பன் 
ARR

0 comments: