Wednesday, 13 April 2011

நான் ரசிக்கும் கர்ணன்

நான் ரசிக்கும் கர்ணன் 


          மகாபாரத மாந்தர்களில் நான் மிகவும் ரசித்த , வியந்த , பிரமித்த ஒருவன் கர்ணன் , வாழ்கையில் இகழ்தல்களை களைய கடும் முயற்சி செய்த மாசற்ற மாமனிதன், விதியின் வலிமையால் வாழ்க்கை முழுவதும் வலி சுமந்த வீர வில்லாள வித்தகன். அவமானங்களுக்கும் அவச்சொல்லுக்கும் ஆட்பட்ட அவதார அற்புதன். வாழ்கையில் உணர்வுகளின் வழியே தன் செயல்களை செதுக்கிய சீர்மிகு சிறப்பாளன்.தானம் தருவதையே தன் சுவாசமாக கொண்ட சுந்தர சுதன் .துரதிஷ்டங்களாலேயே துரத்தப்பட்டு வீழ்த்தப்பட்ட அசகாய சூர சூரியபுத்திரன் .       வாழ்கையில் மற்றவர்களால் புறக்கணிக்கபடுவதென்பது, யாராலும் ஏற்று கொள்ள முடியாத செயல் , அதுவும் திறமைகளனைத்தும் ஒருங்கே பெற்ற ஒப்பற்ற ஒருவனால் எப்படி ஏற்று கொள்ள முடியும் , அந்த மாதிரியான நெருடல்களின் நெருக்குதல்கள் தான் கர்ணனை அநீதியின் பக்கம் அழைத்து சென்றது , கர்ணன் காலத்தின் கோலத்தால் அநீதியின் பக்கம் நின்றவன் ஆனால் அநீதி செய்தவன் அல்லன். 

கிருஷ்ணா பரமாத்மா என்றுமே கர்ணனிடம் ஒரு அதீத ஈடுபாடு கொண்டவர் , ஒருமுறை அவர் பாண்டவர்களிடம் கர்ணனின் புகழை சொல்லிக்கொண்டு இருந்த போது சினம் கொண்ட அர்ஜுனன், நீங்கள் கர்ணனை இத்தனை தூரம் புகழ அவன் ஒன்றும் பெரிய தானப்பிரபு அல்லன் , நீங்கள் அவனை தகுதிக்கு மீறி கொண்டடுவதாகவே நினைக்கிறேன் என்ற வேளையில் கிருஷ்ணர் அவனின் பெருமையை புரிய வைக்க நிகழ்த்தினார் ஒரு நிகழ்வை , பாண்டவர்களை அழைத்து இரு பெரிய தங்க மலைகளை கொடுத்து இந்த இரண்டையும் இன்று மாலைக்குள் நீங்கள் தானம் செய்துவிட வேண்டும் என கூறினார் , உடனே பாண்டவர்களும் இதென்ன பிரமாதம் என வேக வேகமாய் வருவோர் போவோரிடம் எல்லாம், மலையை வெட்டி வெட்டி கொடுத்தனர் , சூரியன் மறையும் மாலை வேளைவரை அள்ளி அள்ளி கொடுத்ததும் மலையின் கால் பகுதி கூட அவர்களால் கொடுக்க முடியவில்லை , ஆனாலும் அவர்கள், இதே கதி தானே அவனுக்கும் , ஐந்து பேரான எங்களாலேயே கொடுக்க முடிய வில்லையே கர்ணன் ஒருவனால் எப்படி இது சாத்தியமாகும் என பரமாத்மாவை வினவ , உடனே கர்ணனை அழைத்த கண்ணன் அதே மலைகளை தந்து செய்தியையும் சொன்னார் , சிறிதும் யோசிக்காத கர்ணன் , அவ்வழியே வந்த ஒரு முதியவரிடம் இதோ இந்த இரண்டு மலைகளையும் தானமாக கொள்வீர் என கூறி தந்து சென்றான் , இதை கண்ட  பாண்டவர்கள் விக்கித்து நின்றனர் ,உடனே கண்ணன் இது தான் உங்களுக்கும் கர்ணனுக்கும் உள்ள வித்தியாசம் என கூறினார்.தானத்தில் தனக்கென ஒரு வரையறையே வைத்து கொள்ளாத வான் புகழ் வள்ளலவன்.

       அவன் ஒரு மாபெரும் மாவீரன் அவன் வென்ற மன்னர்களின் வரிசை மிக நீளம் அவற்றில் சில கம்போஜாக்கள், ஷாகாக்கள், கேகாயாக்கள், அவந்தியாக்கள், காந்தாராக்கள், மடரகாக்கள், டிரைகர்டாக்கள், தன்கனாக்கள், பாஞ்சாலாக்கள், விதேஹாக்கள், சுஹ்மாக்கள், அங்ககாக்கள், வங்காக்கள், நிஷாடாக்கள், கலிங்காக்கள், வாட்சா, ஆஷ்மகாக்கள், ரிஷிகாக்கள் ஜரசந்தா, சிசுபாலா, தண்டவக்ரா, சால்யா மற்றும் ருக்மி உள்ளிட்டோர் தோற்கடிக்கப்பட்டவர்கள். கிருஷ்ணரையே அச்சுறுத்திய ஜராசந்தன் கர்ணனால் பதினேழு முறை தோற்கடிக்கபட்டான், அதன் பயனாக மகத நாட்டின் ஒரு பகுதி அங்கத (கர்ணனுக்கு துரியோதனனால் கொடுக்க பட்ட நாடு )நாட்டுடன் இணைந்தது, கர்ணனுக்கு வில் பயிற்சி தர துரோணர் மறுத்ததால் சூரியனையே தன் குருவாக கொண்டு துரோணரின் மகனும் தன் நண்பனுமாகிய அஷ்வத்தாமாவின் உதவியுடன் வில் பயிற்சியை சுயமாக கற்றான். எல்லோருக்கும் தெரிந்த நிகழ்வு அர்ஜுனனுக்கு கிளியின் ஒரு கண் மட்டுமே தெரிந்து அதனை வில் கொண்டு எய்தது , ஆனால் கர்ணனால் ஒரே நாணில் ஒரே சமயத்தில் வெவ்வேறு இடங்களில் பூட்ட பட்ட இரு அம்புகளால் கிளியின் இரு கண்களையும் எய்த முடியும், இது அஷ்வத்தாமாவின் முன்னால் கர்ணனால் நிகழ்த்தப்பட்டது.

               அர்ஜுனனை காக்கவும் , நீதி வெல்லவும் பலராலும் பலமுறை பலகீனபடுத்தப்பட்ட காவிய நாயகன் கர்ணன் குருஷேத்திர போரிலும் யாராலும் வெல்ல முடியாத வெற்றி வீரனாகவே வலம் வந்தான் களம் கண்டான். ஒருமுறை அர்ஜுனனோடு  போர்புரியும் போது அர்ஜுனனின் அம்புகள் அவன் தேரை பல நூறு அடிகள் பின்தள்ளியது , உடனே வீறு கொண்ட வேங்கையாய் வெகுண்டெழுந்த கர்ணன் அர்ஜுனனின் தேரை சில அடிகள் பின் தள்ள, அதிசயித்த கண்ணன் பலே கர்ண பலே என பாராட்டினார் , உடனே அர்ஜுனன் என்ன கண்ணா இது என்னை விடவா அவன் நம்மை பின் தள்ளிவிட்டான் என கேட்க அதற்கு பரமாத்மா மெல்ல சிநேஹமாய் அவனிடம் அந்த தேரில் அவனும் தேரோட்டியும் மட்டுமே உள்ளனர் , ஆனால் இங்கே தீயை உமிழும் அக்னியும் , பலவான் அனுமனும் (கொடியில்) எல்லவற்றுக்கும் மேலாக இந்த அண்ட சராசரத்தையும் என்னுளே கொண்ட நானும் இருக்கிறேன் இதனை பேரையும் தாண்டி அவன் வில்லின் பராக்கிரமம் நம்மை பின் தள்ளுகிதென்றால், நீ மட்டுமே இருந்தால் அவனால் ஏவப்பட்ட அம்பின் வேகம் உன்னை இந்த பூமியின் மத்தியில் கொண்டு சேர்த்திருக்கும், உணர்ந்து கொள் அவன் ஒரு நாயகன் இன்னும் நாயகர்களில் முதலானவன் என்றார்.இந்த இடத்தில் அவன் உங்களுக்கெல்லாம் மூத்தவன் என கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொல்லாமல் சொல்லுகிறார்.          இறுதியாய் அநீதியின் பக்கம் நின்று அநீதியாய் கொல்லப்பட்ட கர்மவீரன் கர்ணனின் முதல் ரசிகர் அந்த கிருஷ்ண பரமாத்மாதான், கர்ணன் போர்க்களத்தில் வீழ்த்த பட்டு கிடந்த வேளையிலே அவனிடம் சென்று தான் நீதியை காக்க அவனுக்கு செய்த அநீதியை சொல்லி மன்னிக்க வேண்டி பின் விஸ்வருபியாய் அவனுக்கு காட்சி தந்து கர்ணனை மோட்சமடைய செய்கிறார், காக்கும் கடவுள், துன்பம் போக்கும் கடவுள் கண்ணனே ரசித்த கர்ணனை நான் ரசிப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும் .

அன்பன்
ARR                

பட உதவி : vidhoosh.blogspot.com / e-learning.kkpi.or.id 

2 comments:

Madhavan Srinivasagopalan said...

கர்ணன் சிறந்த வீரன்.. பண்பாளன்..
பலரையும் கவர்ந்தவனன்றோ..!!

உங்கள் கருத்துக்களை நன்றாக பதித்தமைக்கு பாராட்டுக்கள்..

A.R.ராஜகோபாலன் said...

மிக்க நன்றி மாதவன்
உங்கள் பாராட்டுகள் என் எழுத்தை மேலும் பண்படுத்தும்