Monday, 11 April 2011

அன்பான அம்மாவுக்கு .....அன்பான அம்மாவுக்கு ..... 
அன்புடன் உன் மகன் எழுதுவது , நலம் நாங்கள், நலமா நீ? உன்னைவிடவும் எங்களை பற்றிய கவலைகளே உனக்கு அதிகம் என்பதால் எங்கள் நலத்தினை முன்னமே சொன்னேன் .உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது , என்ன செய்வது இங்கு உன் பேத்தியை நான் தான் பாத்துக்கணும் அதனாலேயே உன்னை பாக்க வரமுடியாமல் போகிறது. 

உன்னிடம் பேசவும்,சொல்லவும் , கேக்கவும் நிறைய விஷயங்கள் இருக்கு , ஆனா அதுக்கு இந்த லட்டர் போதுமான்னு தெரியல , குட்டிம்மா வை பார்ப்பவர்கள் எல்லாம் அவள் உன்னைமாதிரியே இருப்பதாக சொல்லுறாங்க , அதுல அவளுக்கும் ரொம்ப சந்தோஷம் , அடிக்கடி நான் பாட்டி மாதிரி இருக்கேன்ல்லப்பா என்று பெருமையாகவும் , பாட்டி மாதிரி இருக்கேனாப்பா என்று கேள்வியாகவும் கேட்டு கொண்டே இருக்கிறாள் , அதே சமயத்தில் ஸ்கூல் யூனிபார்ம் போட்டுக்கிட்டு பாட்டியும் இதே மாதிரி இருந்தங்கலாப்பா? என்று நான் பார்க்காத ஒன்றை பற்றியும் கேட்டு , என் மௌனத்தை தொடர்ந்து அவளே அதற்க்கு ஒப்புதலும் பெற்று செல்வதை நீ கூட  இருந்து பாக்கணுமே, அப்படியே பூரிச்சி போய்டுவே .போன மாதம் நவராத்திரி விழாவில் மழலையாய் "குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்க மாட்டானா" என்று என் மகள் பாடியபோது பெற்ற சந்தோஷத்தைவிட , அதை உன்னால பாக்கமுடியலேயே  என்கிற துக்கம் தான் எனக்கு அதிகம்  

நான் எழுதிய முதல் கவிதை இப்போ உனக்கு ஞாபகம் இருக்குமான்னு தெரியல .. 
அம்மா என்றால் அழகு அது எல்லோருக்கும் தெரியும் , ஆனால் 
அழகே அம்மாவாக வந்தது , என் அன்னையை பார்த்தபின் தான் புரியும்.
என்று தப்பு தப்பாக நான் எழுதிய அந்த கவிதையை மிக சரியாக புரிந்து கொண்ட என் முதல் ரசிகை நீ , அது சரி குழந்தையின் மழலை புரியாத தாய் யார் . உங்க அம்மா ரொம்ப நல்லவங்களா இருக்காங்கடா ன்னு, என் சிறு வயது நண்பர்கள் சொல்லும்போது எனக்கு அப்படியே கோவம் கோவமா வரும் , ஏன் நம்ம அம்மா எல்லார் கிட்டயும் பாசமா இருக்காங்க ன்னு ,  சின்ன வயசுலேந்தே எனக்கு மட்டும் தான் நீ அம்மாவாக இருக்கணும்கிற எண்ணம் எனக்கு இப்பவரைக்கும் இருக்கு. 

நம்ம சொந்தகாரங்க சொல்லுற மாதிரி உன்கிட்ட ஒரு காந்த சக்தி எல்லோரையும் கவர்ந்திழுக்கும் கனிவு , தாய்மை , பாசம் உன்னிடம் உண்டு. இப்போ நினைத்தாலும் என் கண்ணில் கண்ணீர் வரும் நிகழ்வு அது , ஒரு முறை எனக்கு மஞ்சள்  காமாலை வந்து பத்திய சாப்பாடு (உப்பில்லாத உணவு ) கடைபிடித்தபோது , நீ என் முன்னே சாப்பிடுவதே இல்லை அப்படியே சாப்பிட்டாலும் நீ என்ன சாப்பிடுகிறாய் என எனக்கு தெரியாத வகையில் உன் உணவு உட்கொள்ளுதல் இருக்கும். எனக்கு எப்படியாவது நீ சாப்பிடும் நல்ல சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என ஒரு பத்திய பைத்திய ஆசை. அதற்கான  வாய்ப்பும் ஒரு நாள் வந்தது , சாப்பிட்டு கொண்டிருந்த நீ .... அவசர வேலையாக எழுந்து செல்ல ... இதற்காகவே காத்திருந்த நான் துள்ளி எழுந்து உன் உணவை ருசிக்க பார்த்தபோது ........  நான் சாப்பிடும் உணவை விட மிக மோசமாய் சாதத்தில் தண்ணீர் மட்டுமே இட்டு இருந்தது . அப்போது நான் சிந்திய கண்ணீர் உன் சாதத்துக்கு தேவைக்கு அதிகமாகவே உப்பை சேர்த்திருக்கும் , ஆனால் இன்றுவரை உனக்கு இது தெரியாது.அப்போது எனக்கு ஆயிரமாயிரம் ஆண்டவர்கள் கூட உன் அன்பிற்கும் தியாகத்திற்கும் முன்னால் தூசியாக தெரிந்தனர்.

கருணையும் கம்பீரமும் கலந்த மகோன்னதம்  நீ , அன்பும் பரிவும் இணைந்த அற்புதம் நீ என்னை தூங்க வைக்க நீ சொல்லிய கண்ணன் கதைகளும் கன்னன் கதைகளும் இன்றுவரை என்னோடு பயணித்து கொண்டுதான் இருக்கின்றது .நீ ஒரு கற்பனை பிரவாகம் , நாம் இருவரும் சேர்ந்தே படித்த ஒரு விஷயத்தை என்னிடமே புதுமையாய் சொல்லும் உன் சொல்லும் திறன் இன்றவரை நான் யாரிடமும் காணாதது.

சரிம்மா அடுத்த கடிதத்தில் பார்ப்போம் , உன் பேத்தி அவளை தூங்க வைக்க சொல்லி என்னை படாத பாடு படுத்துகிறாள் , அதுவும் இல்லாமல் நாளைக்கு உன் ஐந்தாவது திவசம் அதற்கான வேலைகளும் இருக்கின்றது , இது நான் உனக்கு அனுப்பாத பல கடிதங்களில் ஒன்று , எப்போதெல்லாம் உன்னிடம் பேச வேண்டும் என என் மனம் தவியாய் தவிக்கின்றதோ அப்போதெல்லாம் நான் உனக்கு எழுத  தொடங்கிவிடுகிறேன் , என் கூடவே நீ இருப்பதால் இதை என்னுடன் சேர்ந்து நீயும் படிப்பாய் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு ,எனக்கு கொஞ்சம் தைரியத்தையும் எதார்த்தத்தை புரிந்து கொள்ளும் அறிவையும் கொடும்மா , நீ இனிமேல் திரும்ப வரமாட்டாய் என்று தெரிந்தும் உன்னை எதிர் பார்த்து கொண்டே இருக்கிறேன் , நீ என் மகளாய் என்னுடனே இருக்கிறாய் என்பதை அறியாமல் , உன் அன்பும் இழப்பும் என்னை ரொம்ப கோழை ஆக்கிவிட்டது , அதனால் எனக்கு தைரியம் கொடு . மரத்தில் இருந்து விழுந்து என் இரு கால், கைகளை ஒருங்கே உடைத்து கொண்டு கட்டு போட்ட போது
கண்ணாடிக்கு அந்த பக்கமாய் இருந்து பார்வையாலே தைரியம், சக்தி  தந்தாயே அது போல........   

அன்புடன் 
உன் மகன் கோப்லி . 

13 comments:

RVS said...

கோப்லி!!!
அட்டகாசம்...பாச உணர்வுகளை வார்த்தையாய் வடித்திருக்கிறாய்.
அம்மாவிற்கு என்னுடைய நினைவஞ்சலிகளும்.... ;-((

A.R.ராஜகோபாலன் said...

கண்ணீர் நன்றி வெங்கட் ....

Madhavan Srinivasagopalan said...

கடைசி சில வரிகள் படிக்கும் வரை.. உங்கள் அன்னை இவ்வுலகில் நாம் பார்க்கும் நிலையில் இல்லை எனப் புரிந்து கொள்ள முடியவில்லை..
அப்படியொரு பாச மழையில் நனைந்தேன்..

நம்மால்தான் அவரைப் பார்க்க முடியாது... ஆனால் அவர் எப்பவும்.. உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.. உங்கள் கடிதத்தை படித்தும்.. பதிலும் கூட சொல்லுகிறார்.. ஆனால் அதனை படிக்க நமக்குத்தான் அந்த சக்தியில்லை....

"அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை.. .."
"அம்மா என்றழைக்காத உயிரில்லையே.. .."

A.R.ராஜகோபாலன் said...

உண்மைதான் மாதவன் ........
என்னுள்ளே சுவாசமாக என் தாய் இயங்கி கொண்டும் என்னை இயக்கி கொண்டும் இருக்கிறார்கள் .........
நன்றி உங்களின் அர்த்தம் பொதிந்த கருத்துக்களுக்கு
அன்பன்
ARR

Ahamed irshad said...

good Post :))

A.R.ராஜகோபாலன் said...

மனம் நிறைந்த நன்றி திருமிகு அஹமது இர்ஷாத்..........
தொடர்ந்து கருத்துக்களை கூற வேண்டுகிறேன்
அன்பன்
ARR

Madhavan Srinivasagopalan said...

மேலும் இரண்டு படங்களை செர்த்ததுபோலத் தெரிகிறது..
அன்று இந்தப் பதிவை படித்தபோது.. இந்த இரண்டு படங்களையும் நான் கவனிக்க / பார்க்க வில்லையே !

A.R.ராஜகோபாலன் said...

ஆமாம் மாதவன் ..........
புதிதாய் இணைக்க பட்டது தான்
என் மகளின் வேண்டுகோளுக்கு இணங்க .........

Unknown said...

உனது மடல் பொக்கிஷம்..எங்காவது வெளியில் சில பல நாட்கள் சென்று விட்டு வந்தால் என்ன கொண்டு வந்தோம் என்று மற்றவர்கள் நோக்க, தாய் மட்டுமே நாம் எப்படி இருக்கிறோம் என்று கவனிப்பாள்..தூய அன்பை அற்புதமாக சொல்லி இருக்கிறாய்..தாயின் அன்பிற்கு ஈடு இணையில்லை..

miruna said...

மிக நெகிழ்ச்சியான பதிவு. சொல்ல வார்த்தைகள் இல்லை. Keep Going

A.R.ராஜகோபாலன் said...

@miruna
மிக்க நன்றி மிருணா உங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி

பனித்துளி சங்கர் said...

ஆஹா அருமையானப் படைப்பு நண்பரே . இந்த உலகை அறிமுகம் செயதம் தாயிற்கு உள்ளம் குளிர்ந்திருக்கும் வாழ்த்துக்கள் .

A.R.ராஜகோபாலன் said...

@ ! ❤ பனித்துளி சங்கர் ❤ !
மனம் நிறைந்த மகிழ்ச்சி
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி