
கடந்த ஏப்ரல் மாதம் இருபத்தி நாலாம் தேதி தனது எண்பத்து ஐந்தாவது வயதில் காலமான ஸ்ரீ சத்ய சாய்பாபா வின் மறைவுக்கு பின்னே நடக்கும் நிகழ்வுகள் பக்தர்களின் மனதிற்கு நல்லவைகளை சேர்ப்பதாக இருக்கவில்லை .பொதுவாகவே ஆண்டவனுக்கும் பக்த்தனுக்கும் இடையே யாரும் இருக்க முடியாது, இருக்க கூடாது என்று நினைப்பவன், ஆண்டவனைத் தவிர வேறு எவராலும் நமக்கு நன்மையைத் தரமுடியாது என்பதை உறுதியாக நம்புபவன் நான், ஆண்டவன் தர மறுப்பதை யாராலும் தரமுடியாது எனபது என் உறுதியான நம்பிக்கை, எனக்கு இது மாதிரியான குரு வழிபாடுகளில் நம்பிக்கை இருந்ததேயில்லை , அதற்காக அந்த செயல்களை நான் தவறென்றும் நினைப்பதில்லை அவற்றை விமர்சனமும் செய்வதில்லை,ஆன்மீகத்தை, அதன் போதனைகளை தாண்டி சாய்பாபா மக்களுக்கு பல நல்ல சேவைகளை செய்து வந்துள்ளார் என்பதையும் மறுப்பதற்கு இல்லை சரி இப்பொழுது விஷயம் அதுவல்ல .,
இந்த பதிவு சத்ய ஸ்ரீ சாய்பாபாவின் மறைவுக்கு பிறகு அங்கு நடக்கும் நிகழ்வுகள் ஒரு ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவனாக பார்க்கும் போது என் மனதில் சில நெருடல்கள் ஏற்படுகின்றன அதைப் பற்றியது.ஒரு துறவறம் பூண்ட மனிதரின் அறையில் ஏன் இவ்வளவு பணமும் , தங்கமும் வைரங்களும், இது உண்மையிலேயே அவர் உ யிரோடிருக்கும் பொது இருந்தனவா இல்லை அவர் இறந்தவுடன் வைக்கப் பட்டனவா?. எது எப்படி இருப்பினும் ஒரே இடத்தில் இவ்வளவு பணத்தை கொட்டி குவித்து வைப்பதா ஆன்மிகம்?, துறவறம்? .இவர்களுக்கும் தானியங்களை ஒரே இடத்தில் சேமித்து வைத்து வீணாக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் ??
ஒரே இடத்தில் குவிந்து கிடக்கும் செல்வம் மக்களிடத்தில் என்ன மாற்றத்தை உண்டாக்கமுடியும், ஒரு தனி மனிதனால் மக்களுக்கு அருளை தர முடியாது அதிக பட்சமாக ஆறுதலைத்தான் தரமுடியும், அந்த ஆறுதலைத் தேடி வந்த மக்களுக்கு தன்னுடைய பேச்சால் , செயலால் ஸ்ரீ சத்ய சாய்பாபா தந்தார் என்பதை மறுக்க முடியாது , ஆயினும் அவர் இப்படி ஒரே இடத்தில் பொன்னையும் பொருளையும் சேமித்து வைக்கவேண்டிய அவசியம் என்ன , துறவறத்தில் பணத்திற்கு என்ன தேவை வந்தது ???

இன்னும் பட்டவர்த்தனமாக சொல்லுவதென்றால் இவரிடம் இருக்கும் செல்வத்தில் நூறில் பத்து பங்கு கூட மக்களுக்கு செலவழித்ததாக சொல்லமுடியாது , இவரிடத்திலே உள்ள பணத்தில் பெரும் பகுதி அரசியல் வாதிகள் மற்றும் பெரும் பணக்காரர்களின் கருப்பு பணம் என்ற வாதத்தின் சாரத்தை இந்த மாதிரியான செயல்கள் உறுதிபடுத்தவே செய்கின்றன
கடந்த 1993 ஆம் ஆண்டு இவரது ஆசிரமத்தில் நடந்த கொலைகளுக்கும் நடத்தப்பட்ட கொலைகளுக்கும் இன்றுவரை விடை கிடைக்கவில்லை, அதற்கான காரணமும் இன்றுவரை தெரியவில்லை , மக்களுக்கு நல் வழி போதிக்கும் இது மாதிரியான ஆசிரமங்கள் ஒரு திறந்த புத்தகம் போல இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை, இது மாதிரியான நிகழ்வுகளே நாத்தீகவதிகளுக்கு ஒரு வலுவான வாதமாக ஆகிவிடுகிறது.
சமீபத்தில் பிடிபட்ட முப்பத்தைந்து லட்ச ரூபாய் பற்றிய கேள்விகளுக்கு கூட அந்த அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் பதிலளிக்கையில் இது சாய்பாபா அறக்கட்டளைக்கு சொந்தமான பணம் அல்ல , பிடிபட்டவரும் பாபாவின் பக்தர் அல்ல என்று பொதுவாகவே பதில் அளித்துள்ளனர்,இதன் மூலம் இன்னும் அந்த மர்மம் விலகாமலே உள்ளது , என்னை பொறுத்தவரையில் அவர்கள் சொல்லியுள்ள பணத்தின் அளவு கம்மியாகவே இருக்கும் என நினைக்கிறேன்,முப்பத்தைந்து லட்ச ரூபாய் அளவு பணத்தை எடுத்துப் போவதெல்லாம் இந்த காலத்தில் வெகு சாதாரணம் , ஒரு பெரும் தொகையே இப்படி குறைவாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன்.

எது எப்படி இருப்பினும் இது பக்தர்களின் பணம் இது பக்தர்களுக்காகவே செலவிடப்பட வேண்டும்,இந்த பணம் அனைத்தும் மற்றுமொரு சுவிஸ் வங்கி முதலீடாக ஆகிவிடக்கூடாது ,இந்த பணம் அனைத்தும் பக்தர்களுக்கும் ஏழை மக்களுக்கும், உணவிற்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் முழுமையாக செலவிடப்பட்டால் அதுவே ஆன்மீகத்தின் முழு அர்த்தத்தை மற்றவர்களுக்கு பிரமாண்டமாய் பிரகடனப்படுத்தும்.ஏனெனில் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.
இந்த பதிவு ஸ்ரீ சத்யா சாய்பாபாவின் பக்தர்களை வருத்தப்பட செய்திருக்குமாயின் அதற்காக என் வருத்தங்களை தெரிவித்துகொள்கிறேன்
இந்த பதிவு ஸ்ரீ சத்யா சாய்பாபாவின் பக்தர்களை வருத்தப்பட செய்திருக்குமாயின் அதற்காக என் வருத்தங்களை தெரிவித்துகொள்கிறேன்
அன்பன்
ARR