சமச்சீர் கல்வியே தொடரவேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகாவது திரிசங்கு சொர்க்கத்தில் அல்லாடும் பாவப்பட்ட தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் தான் பிடித்த முயலுக்கு மூணுகால் என்ற வறட்டு பிடிவாதத்தை தமிழக அரசு இந்த தீர்ப்பை மேல் முறையீடு செய்யப் போவதாக கூறி நிரூபணம் செய்திருக்கிறது.
இன்று சமச்சீர் கல்வி மீதான வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதி மன்றம் 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியே தொடரும்,மேலும் அனைத்து வகுப்புகளிலும் நடப்பாண்டில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த வேண்டும். வரும் 22ந் தேதிக்கு சமச்சீர் கல்வி பாடநூல்களை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இன்று தேதி பதினெட்டு இன்னும் நான்கு நாட்களில் அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வியை நிர்ணயம் செய்யும் பாட புத்தகங்களை வழங்குவது குதிரை கொம்பான விஷயம் அதையும் தாண்டி பெரும்பாலான பள்ளிகளுக்கு பழைய பாட திட்ட புத்தககங்களை விநியோகித்து வருவதாகவும் செய்திகள் வந்தபடியே இருந்தன.இவை அனைத்தையும் தாண்டி சமச்சீர் பாட புத்தகங்கள் மாணவர்களை சென்றடையுமா என்பது விடை தெரியாதா கேள்வி.

ஏன் இந்த மாதிரியான பிடிவாத செயல்கள் என்பது யாருக்கும் புரியாத மர்மமாகவே இருக்கிறது. இவர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு மாணவர்களின் படிப்பையும் அவர்களின் எதிர்காலத்தையுமா பாழாக்குவது , இதுவா ஒரு பொறுப்புள்ள அரசின் அடையாளம் ?. இப்போதே 50 நாட்களை இழந்து நிற்கின்றனர் மாணவர்களும் ஆசிரியர்களும் , சரியான நேரத்தில் தொடங்கி பாடம் நடத்தினாலே புரியாத நம் மாணவர்கள், இப்போது பாடங்களை நடத்தி முடிக்க அவசரம் காடும் ஆசிரியர்களின் வேகத்துக்கு எப்படி ஈடு கொடுக்க போகிறார்கள் .
அடுத்து, மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் பாட வழி புத்தகங்களே வழங்கப்பட்டு இருக்கிறது. இப்போது சமச்சீர் கல்வி என்றால் அந்த பாடப் புத்தககங்களின் கதி என்ன? புதிய பாட புத்தகங்களுக்கு மீண்டும் பெற்றோர்கள் பணம் செலுத்த வேண்டுமா?. ஒரு தரமான பள்ளிபடிப்பை மாணவர்களுக்கு தர வக்கில்லாமல் கல்வியை தனியாரிடம் தாரை வார்த்த தமிழக அரசுகள் இப்போது இப்படி மாணவர்களின் எதிர்காலத்தில் சதிராட்டம் ஆட எந்த தகுதியும் கிடையாது .
இது மாதிரியான கேவலமான செயல் எந்த மாநிலத்திலும் நடக்காது . இதுவே தமிழர்களின் தலைவிதி.மக்களின் குடி கெடுக்கும் மது விற்பனையில் எந்த தடையையும் ஏற்படுத்தாத தடுக்காத அதில் அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டாத அரசுகள் , அவர்களின் அரிப்பை தீர்த்துக்கொள்ள எதிர் கால இந்தியாவை வழிநடத்தப் போகும் இந்த தளிர்களின் எதிர்காலத்தை பாழாக்குவது துளியும் நியாயமில்லை.
அன்பன்
ARR