Friday, 8 July 2011

ஒற்றைக் குழந்தை, கற்றைக் கேள்விகள்


நேற்று நான் படித்த எப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு? என்ற அமைதி அப்பாவின் பதிவையும் அதன் பின்னூட்டங்களையும் படித்தவுடன் என் மனதில்   தோன்றிய செய்திகளை இங்கே பதிய நினைக்கிறேன், படித்து  உங்களின் அனுபவக் கருத்துக்களை கூறினால் மகிழ்ச்சியடைவேன்.

     இந்த காலத்தில் ஒரு குழந்தை  பெற்றுக்கொள்வதே சாமர்த்தியம், புத்திசாலித்தனம் , யதார்த்தம் என பலவிதமாக சொல்லப்பட்டாலும், ஒரு குழந்தை பெற்றால் நல்ல முறையில் வளர்க்க , படிக்க,செலவழிக்க எதுவாக இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் , இன்னும் பல சாதகங்கள் பட்டியலிடப்பட்டாலும் , அந்த குழந்தையை சார்ந்து யோசித்தோமேயானால் அது ஆரோக்கியமானதா என்பதே எனது கேள்வியாக எழும்பி நிற்கிறது.

       எனக்கும் சரி என் நண்பர்கள் பலருக்கும் (90%) ஒரே குழந்தைதான், அதற்கான காரணம் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது , ஆனாலும் இனி குழந்தை இல்லை என்பதில் மாற்றம் இல்லாதிருக்கிறோம், என்னுடைய காரணம் என் முதல் மகளை தொட்டுப் பார்ப்பதற்கே நான் பட்ட கஷ்டம் என் முன்னைய பதிவுகளில் தெரிவித்திருந்தேன், என் மகளை ஆரோக்கியமாக வளர்ப்பதே  என் வாழ்வின்  லட்சியமானதால் அடுத்த குழந்தையைப் பற்றிய சிந்தனை எனக்கு இல்லாமல் போனது.

      ஆயினும் இன்று நான் ஒரு குழந்தையாக இருப்பவர்களின்  பிரச்சனையாக கருதுவது தனிமை,அடம் , பகிரும் மன நிலை இல்லாமல் இருப்பது, இன்றைய தனிக் குடித்தனங்களில் அவரவர் தனிமையிலிருந்தாலும் குழந்தைகள் இணைந்து தான் இருக்கிறார்கள் ஆனாலும் எல்லாவற்றிலும் தனக்கே முதலிடமும் முக்கியத்துவமும் தரவேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கி நிற்கிறது , காரணம் வீட்டில் தனிக்காட்டு ரா(ணி)ஜாவாக இருப்பதால் எல்லா இடத்திலேயும் அதே உணர்வு , அது மறுக்கப்படும் போது ஆரம்பிக்கிறது பிரச்சனை , விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை சிறிதளவும் இல்லாமல் இருக்கிறது.வீட்டிற்க்கு வந்தவுடன் தனிமை ஆட்கொள்கிறது, என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள்.வாழ்வியலின் அதிமுக்கிய விதியான விட்டுக் கொடுத்தலை இந்த மாதிரியான குழந்தைகள் இழந்து விடுவார்களோ என அஞ்சுகிறேன் 


   தனக்கு தெரியாததை சொல்லித்தர , தன்னை பரிவாக பார்த்துக்கொள்ள,
பகிர்ந்து கொள் 
ஒரு சகோதரத்துணை  அவசியம் என நான் இப்போது நினைக்கிறேன், ஏனென்றால் எங்கள் வீட்டில் நான்தான் சின்னவன் , மூன்று அண்ணன் , இரண்டு அக்கா , இந்த அனைவருக்குமே  நான்தான் முதல் குழந்தை, வீட்டில் நாங்கள் விளையாடாத விளையாட்டில்லை,

எனக்கு நீந்த கற்றுதந்ததும் , சைக்கிள் ஓட்ட கற்றுதந்ததும் என் சகோதரர்கள் தான். 
என்னை அனுசரிக்கும், அரவணைக்கும் அவர்களின் பாங்கு அலாதியானது, இன்றும் என் இன்ப துன்பங்களை நான் பகிரும் முதல் இடம் என் உடன் பிறந்தவர்கள்தான் , அவர்களிடம் சொன்னால் இன்பம் இரண்டு மடங்காகவும் , துன்பம் பாதியாகவும் குறைந்து விடும் .என் தாய் தந்தையை இழந்த எனக்கு இன்று அவர்கள் தான் என் தாய் தந்தை அவர்களிடம் கண்ட, கற்ற  விட்டுகொடுக்கும் பண்புதான் இன்று எனக்கு நிறைய நண்பர்களைத் தந்திருக்கிறது, இதையெல்லாம் நினைக்கும் போது இதுமாதிரியான சொந்தத்தை, அன்பை , பண்பை என் மகளுக்கு மறுத்துவிட்டேனோ என்று நினைக்கிறேன்.

 இதைச் சார்ந்த உங்களின் கருத்துக்களை பகிர்ந்தால் மனம் நிறைவடைவேன்.
நன்றி 

அன்பன் 
ARR  

36 comments:

RAMA RAVI (RAMVI) said...

தனிமரம் தோப்பாகாது என்று சொல்லுவார்கள்..அதற்க்காக வசவச என்று வேண்டாம். ஒன்றோடு ஒன்று துணையாக இரண்டு கட்டாயம் வேண்டும் என்பது என் கருத்து.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

தனியாய் வளரும் குழந்தையின் மனநிலை குணாதிசயங்கள் சகோதர அல்லது சகோதரி இணையுடன் வளரும் குழந்தையுடன் வேறுபட்டுத்தான் இருக்கிறது.

ஒற்றைக் குழந்தைக்கு உரிமையுடன் அவர்களின் மனதைப் பகிர உரிமையுடன் யாருமற்றுப் போவதும்

வளர்ந்த பின் மாமா-அத்தை-சித்தப்பா-பெரியப்பா-சித்தி-பெரியம்மா எல்லாமே ஒன்று விட்டுப் போய்விடுகிறது. அவர்களின் அடுத்த தலைமுறை இன்னும் கொடூரம்.

வெங்கட் நாகராஜ் said...

தனிமரம் தோப்பாகாது.... உண்மையான வார்த்தைகள். நாம் இருவர் நமக்கு இருவர் என்று அரசாங்கமே சொல்லியது. சில வருடங்களுக்கு முன் “One is Fun" என்ற வாசகத்தினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பிரச்சாரம் செய்து வந்தது. ஆனாலும் அதற்கு அத்தனை வரவேற்போ, ஆதரவோ இல்லை.

இத்தனை இருந்தும் சொந்த பந்தங்கள், சில உறவுகள் மறந்தே போய்விடும் நிலை நிச்சயம் ஏற்பட்டு விட்டது. ஒரு குழந்தை மட்டும் இருப்பவர்கள் அணியில் நானும் இருப்பதால் சில சமயங்களில் உங்கள் பகிர்வில் இருந்த சில விஷயங்களை அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்..

நகைச்சுவை-அரசர் said...

ஒற்றைக் குழந்தைக்காரர்கள் இதுகுறித்து துயர்கொள்ளத் தேவையில்லையென்றே எனக்குத் தோன்றுகிறது..

பெற்றோர்களே குழந்தையிடம் நண்பர்களாகப் பழகுமிடத்து அதன் தனிமையுணர்வைப் போக்கலாம்.. நண்பர்கள் அல்லது உறவினர்களின் குழந்தைகளை உடன்பிறப்பு நிலையில் வரிக்கக் கற்றுத்தரலாம்..

ஒரு குழந்தையின் விட்டுக்கொடுத்தல் உள்ளிட்ட நற்குணநலன்களுக்கு, அது இன்னொரு உடன்பிறப்பைக் கொண்டிருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.. ஆனால் பெற்றோரின் (இல்லம் சார்ந்த/ வெளிப்புறத் தொடர்பான) செயல்பாடுகள் நிச்சயம் குழந்தையின் குணநலன்களை வ்குப்பதில் பங்கு வகிக்கின்றன..

கவனம் : உங்கள் குழந்தை உங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறது.. நீங்கள் அதைக் கவனிக்காமல் இருக்கும்போதுகூட..!

Yaathoramani.blogspot.com said...

இன்று உள்ள பொருளாதாரச் சூழலில் ஒரு குழந்தையோடு
நிறுத்திக் கொள்வதுதான் சரி எனப்படுகிறது.
இப்பொதெல்லாம் பிள்ளைகள் பேசத் துவங்கிய உடனே
இரண்டரை வயதில் பள்ளிக்கு அனுப்பிவிடுகிறோம்
பள்ளி பாடம் கூடுதல் தகுதி வளர்த்தல் என
அப்போது துவங்குகிற ஓட்டம் திருமணம் வரை நிற்பதே இல்லை
திருமணத்திற்குப் பின் புதிய உறவுகள் வந்த பின்பு
பங்காளி உறவெல்லாம் இரண்டாம் பட்சமாகத்தான் போகிறது
ட்ராக்டர் வந்த புதிதில் மாட்டுவண்டிக்காரர்கள் புலம்பிய புலம்பல் போல்தான்
இப்போது இரண்டு நிலைக்கும் இடையில் இருக்கிற நாம் தவிக்கிறோமோ எனப் படுகிறது
எதிர்காலத்தை யோசித்துப் பார்க்கையில் நாமே குழந்தை நமக்கேன் குழந்தை
என்கிற எண்ணம் வர வர இந்த ஒரு குழந்தை போதும் என்கிற கருத்தே
நிலைத்து நிற்கும் என நினைக்கிறேன்.

bandhu said...

ஒற்றையாய் இருப்பதில் குழந்தைக்கு தனிமை என்ற கொடுமை ஒருபுறம் இருக்க, பெற்றோருக்கும் அந்த குழந்தை ஒன்றே உலகம் என்று இருப்பதிலும் பிரச்சனைகள் அதிகம். அந்த குழந்தை வளர்ந்து காலேஜிற்க்கோ வேலைக்கோ கல்யாணம் முடிந்தோ செல்லும்போது வரும் empty nest தனிமை பெற்றோருக்கு பெரிய கொடுமை!

A.R.ராஜகோபாலன் said...

@RAMVI
உங்களின் நிறைவான கருத்திற்கு மிக்க நன்றி சார்

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி
உண்மையான கருத்து அண்ணா
அடுத்த தலைமுறை உறவறுந்துதான் போகும் போல

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
அனுபவப் பூர்வமான கருத்திற்கு உணர்வுப் பூர்வமான நன்றி நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@ நகைச்சுவை-அரசர்
//ஒற்றைக் குழந்தைக்காரர்கள் இதுகுறித்து துயர்கொள்ளத் தேவையில்லையென்றே எனக்குத் தோன்றுகிறது..//

உன்னுடைய நம்பிக்கையூட்டும் கருத்திற்கும் முதல் நன்றிண்ணே

//கவனம் : உங்கள் குழந்தை உங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறது.. நீங்கள் அதைக் கவனிக்காமல் இருக்கும்போதுகூட..!


பெற்றோரின்

கடமையை

கன

கச்சிதமாக

கருத்திட்டதற்கு

கனிவான நன்றிண்ணே

A.R.ராஜகோபாலன் said...

@ Ramani
தங்களின் கருத்தாயிந்த கருத்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி ரமணி சார்

A.R.ராஜகோபாலன் said...

@bandhu
குழந்தையைப் பற்றி நினைக்கையில் பெற்றோரின் தனிமையை தனித்துவமாய் சொன்னதற்கு மிக்க நன்றி நண்பரே

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

பதிவில் கூறப்பட்டுள்ள விடயம் தொடர்பாக அனுபவ அறிவேதும் அற்ற எனக்கு, இவ் விடயம் தொடர்பாக என்ன சொல்வதென்றே தெரியவில்லை, என் மனதில் தோன்றும் எண்ணங்களை முன் வைக்கிறேன், தவறேதும் இருந்தால் மன்னிக்கவும்.

நிரூபன் said...

முதலாவது விடயம், இயந்திரமயமான உலகில், பெற்றோர் வேலைக்குச் செல்வதால், பிள்ளையோடு நேரம் செலவழிக்க ஓர் ஜீவன் தேவை.

அந்த ஜீவன் இன்னோர் சகோதரமாக ஏன் இருக்கக் கூடாது என்று நாம் கருதினாலும்,

பெற்றோரின் பொருளாதார நிலமைகள்,
அவர்களின் குடும்பத் திட்டமிடல் முதலியவற்றால் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்ற முடிவினை எடுப்பதால்.

ஓர் பிள்ளைதான் தனிமைப்படுத்தப்பட்டு,

மனோதத்துவ ரீதியில் பிறருடன் அண்டி வாழும்/ சேர்ந்து வாழும் பண்பினை மெது மெதுவாக இழந்து விடுகிறது அல்லது இழக்கத் தொடங்குகிறது..

இதனை நிவர்த்தி செய்ய, ஒரு சகோதரமோ அல்லது சிறுவர்கள் இணைந்து வாழும் சூழலோ இங்கே அவசியமாவது தவிர்க்க முடியாததாகிறது.

ஸ்ரீராம். said...

அந்தக் காலத்தில் விளையாட நிறைய இடமும் நேரமும் இருந்தது. இந்தக் காலத்தில் கான்க்ரீட் காடுகளில் எப்படி யாரோடு விளையாட? கம்ப்யூட்டர் கேம்ஸ் பாதி நேரத்தை எடுத்து விடுகின்றன. வரும் காலத்தில் சித்தப்பா பெரியப்பா உறவுகளே மறைந்து விடலாம்!! இந்தக் கால குழந்தைகள் டெக்னாலஜி முன்னேற்றத்தில் நிறையப் பெற்றிருந்தாலும் இயல்பான வாழ்க்கைச் சூழலை நிறைய இழக்கிறார்கள்.

சென்னை பித்தன் said...

நிரூபனின் கருத்தே என்னுடையதும்! ஒரு குழந்தையான என் பேத்தியின் பிரச்சினைகளைப் பார்த்த அனுபவம்!

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
பீடிகை எல்லாம் வேண்டாம் சகோ
மனதில் பட்டதை சொல்லவேண்டியது தானே

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
நல்ல பல கருத்தை
வல்லமையை
அள்ளிதந்ததர்க்கு
நன்றி சகோ

குணசேகரன்... said...

நல்ல விசயத்தை சொல்லியிருக்கீங்க.. என்னோட கருத்தும் அதே என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க

A.R.ராஜகோபாலன் said...

@ஸ்ரீராம்.
தங்களின் கருத்தாயிந்த
கருத்துக்கு நன்றி சார்

A.R.ராஜகோபாலன் said...

@சென்னை பித்தன்
மிக்க நன்றி ஐயா
உங்களின் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ குணசேகரன்...
நன்றி நண்பரே
வந்திட்டா போச்சி

Unknown said...

நண்பா கூட ஒரு தம்பியோ அண்ணனோ இல்லையே என்று இன்றும் எங்கும் ஜீவன் நான்.நான் இதுலும் ஒத்து போகிறேன் நண்பரே

Unknown said...

உங்க சகோதரி லாப்டாப்பை ஒளித்து வைத்து சதி செய்தார்கள் நண்பா அதான் தாமதம்

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
கரக்ட்டுதானே எப்ப பாத்தாலும் அதோடயே இருந்த , சகோதரிக்கும் நேரம் ஒதுக்கணும் இல்ல ..........

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
என்ன கவலை நண்பா அதான் நானிருக்கிறேனே
நன்றி நண்பா உங்களின் கருத்துக்கு , லேப்டாப் கொடுத்ததற்கு சகோதரிக்கும் நன்றி ,

vidivelli said...

நிருபன் சொன்னது போல்..எனக்கு இந்தக்கருத்தைச்சொல்ல அவ்வளவிற்கு அனுபவம் நிறைந்தவர் இல்லை ,,,,,
இருந்தும் எனது மனதில் எழுந்ததைச்சொல்கிறேன்...

நிச்சயமாக கடைசி இரண்டு சகோதரர்களாவது வேண்டும்,,,,
மொத்தமாய்ச்சொன்னால் அனைத்திற்குமே,,,,,,
உதாரணத்திற்கு எனது அக்காவிற்கு ஒரே ஒரு மகன்.அவருக்கு தான் தனிய என்ற ஏக்கம் ,கூடி விளையாட யாருமில்லை என்றதாக்கம் இப்போதும் இருக்கிறது.

!! எது எப்படி இருந்தாலும் எந்த வேளையிலும் கை கொடுப்பது சகோதரம் தான்....வளர்ந்ததும் பிள்ளை கவலைப்படக்கூடாது....மற்ற சகோதரங்களைப்பார்த்து!!

A.R.ராஜகோபாலன் said...

@vidivelli
சகோதரத்தின் ஏக்கத்தையும் முக்கியத்துவத்தையும் சொன்ன கருத்து
அற்புத கருத்திற்கு நன்றி சகோ

அமைதி அப்பா said...

வணக்கம் சார், எனது பதிவைப் படித்து அது தொடர்பாக ஒரு பதிவு எழுதியிருகிறீர்கள். மிக்க நன்றி.

விரிவான பின்னூட்டம் இன்னொருநாள் எழுதுகிறேன்.

A.R.ராஜகோபாலன் said...

@அமைதி அப்பா
மிக்க நன்றி ஐயா

மோகன்ஜி said...

உங்கள் கருத்தை தெளிவு படுத்தும் விதம் அழகாய் இருக்கிறது. ரொம்பவே யோசிக்க வைத்தது.

நிரூபன்,மற்றும் ஸ்ரீராம் இருவரின் கருத்தும் பதிவுக்கு வளம் சேர்த்திருக்கின்றன. வாழ்த்துக்கள் சகோதரா!

A.R.ராஜகோபாலன் said...

@மோகன்ஜி

தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி சார்

நெல்லி. மூர்த்தி said...

நானும் உங்கள் அணியில் இருந்தவன் தான். ஒரேயொரு குழந்தை எனும் போது அதுவே நம் உலகம் என்றெண்ணி என்னமாய் மாய்ந்து மாய்ந்து அவர்களுக்காக வாழ்ந்தாலும், அவர்களுக்கு தம் வயதொத்தவர்களிடம் உறவாடுவதால், விளையாடுவதால், பழகுவதால், பகிர்வதால் கிடைக்கும் மகிழ்ச்சிக்குக் அளவேயில்லை. அந்த அனுபவத்தை வடித்திட வார்த்தைகளுமில்லை. மழலைகள், மழலைப்பருவத்தில் மழலையாக இருந்து அந்த உலகினை அனுபவிக்க வேண்டுமெனில் அவர்களுக்கு தேவை அவர்கள் பருவத்திற்குள்ளானவர்கள் மட்டும் தான். உதவும் மனமும், விட்டுக் கொடுத்தல் குணமும், மதிக்கும் பண்பும் நம் வாயினால் கூறி அவர்கள் விளங்கிக் கொள்வதை விட அதற்கான சூழலினை நாம் உருவாக்கிதருவது தான் உத்தமம். வருங்காலத்தில் இரத்த சம்பந்தமுள்ள அல்லது அனுதினமும் நெருங்கியத் தொடர்பு உள்ளவர்களுக்குத் தான் எத்தருணங்களிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள துடிப்புடன் மனமும் முன் வரும்.
ஒருவேளை உடலியற் காரணங்களுக்காக ஒன்றிற்கு மேல் பேறு அடைய வாய்ப்பில்லாத பட்சத்தில் இன்னொரு குழந்தையை தத்து எடுக்கலாம். இதைக் கூறுவது எளிது. அதற்கு மனதளவில் கணவன் மனைவியிடையே புரிதல் உணர்வு மிக அவசியம். என்னதான் நெருக்கமான நண்பர்களாக இருப்பினும் வருங்காலத்தில் வயோதிகத்தில் அவரவர் குடும்பங்களை காணவே நேரம் சரியாக இருக்கும். இன்றைய தொழில் சார்ந்த உலகில் எவருக்குமே இது தான் என் இருப்பிடம் என கடைசி வரை அறுதியிட்டும் கூற இயலாது. இன்றைய நண்பர்கள் நாளைக்கும் நமது அண்மையிலேயே இருப்பார் என்று பொருள் கொள்ளவும் இயலாது. குறைந்தது இரண்டுக் குழந்தைகளாவது இருப்பது தான் உளவியல் ரீதியாகவும் உறுதியாக அவர்கள் பயணிக்க வழி வகுக்கும்!

(மழை ஆஞ்சி, பேஞ்சி ஓஞ்சினதுக்கப்புறம் குடையை தூக்கிகிட்டு கருத்து சொல்ல வந்துட்டாருன்னு நினைக்க வேண்டாம். பணிப் பளுவில் சற்று தாமதமாகிவிட்டது தோழரே!)

vettha.(kovaikavi) said...

உலகில் ஆத்மார்த்தமாக ஒருவருக்கொருவர் உதவுவது சகோதரர்கள் தானே. நிச்சயமாக இரண்டு பிள்ளைகளாவது தேவை. ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேச வேண்டுமே! இங்கு டெனிஸ் மக்கள் 3 பிள்கைளக் கூடப் பெறுவதில்லை. 2 சிநேகிதமாகி ஒன்றைத் தனித்துத் தள்ளி விடுவார்கள் என்று. 4 அல்லது 2 பெறுவார்கள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www. kovaikkavi.wordpress.com

Mother of 2 kids said...

The biggest asset that you can leave behind for your child, is his/her sibling. One person whom u can rely on to help your child after your period, is his/her sibling. Please do not hesitate now to repent later.
Regards,
A well wisher.

ஜீவன் சுப்பு said...

ஒற்றைக் குழந்தைகள் சபிக்கப்பட்டவர்கள் - நான் சபிக்கப்பட்டவன் .