Friday, 20 May 2011

மௌனம் கொடிதுவாக்கியத்தின் வார்த்தைகளிலுள்ள
எழுத்துக்களை கலைத்து போட்டது, போல் 
புரியாதிருக்கிறது உன் மௌனம் 

புறக்கணிக்கபடுதல் புதிது 
என்பதால் மட்டுமல்ல, புதிராய்
 புரியாதிருக்கிறது உன் மௌனம் 

சண்டையில்லை சச்சரவில்லை 
சந்தேகமில்லை சங்கோஜமில்லை, ஆயினும் 
புரியாதிருக்கிறது உன் மௌனம் 

நிறுத்தா பாவனை பேசும் உன் விழி கூட
விளக்கவில்லை ஒரு இம்மி, அதனால் 
புரியாதிருக்கிறது உன் மௌனம் 

நட்பாய் நகர்ந்த நம் உறவு 
நெருப்பாய் நெருடும் தகிப்பில் 
புரியாதிருக்கிறது உன் மௌனம் 

பேசாதிருத்தல் உன் அடையாளமே 
 இல்லை அந்த மாறுதலினாலேயே
புரியாதிருக்கிறது உன் மௌனம்

காதலை சொல்லுதல் பாவமா 
அதனால் வந்த கோபமா , இன்னும் கூட 
புரியாதிருக்கிறது உன் மௌனம்

சம்மதத்தின்  மொழியும் எதிர்ப்பின்  
வழியும் இது என்பதாலேயே 
புரியாதிருக்கிறது உன் மௌனம்  

சரி ............
என் குற்றத்தை 
கூறியாவது 
தூக்கிலிடு, 
என்னை ஏன் 
பிடிக்கவில்லை உனக்கு ???

அன்பன்
ARR


   


25 comments:

Madhavan Srinivasagopalan said...

மௌனம் - கொடியது (நீங்கள் சொல்லிவிட்டீர்கள்)
மௌனம் - சம்மதம்
மௌனம் - சங்கேத மொழியும் கூட
மௌனம் - சங்கடமும் கூட..

A.R.RAJAGOPALAN said...

@Madhavan Srinivasagopalan
நன்றி மாதவன்
இத்தனை விரைவான உங்கள் கருத்துக்கு
மௌனம் -எல்லாமுமே

நிரூபன் said...

மௌனத்தினால் சிதறுண்டிருக்கும், மன உணர்வுகளை,
எதிர்ப்பார்ப்புக்கள் நிறை வேறும் எனும் காத்திருப்பினை அழகான மொழிகளினால் கவிதையாக்கியிருக்கிறீர்கள்.

Anonymous said...

நமக்கு பிடித்த மனிதர்களின் மௌனம் மிகவும் வலிதரக்கூடியது ....

நிரூபன் said...

வாக்கியத்தின் வார்த்தைகளிலுள்ள
எழுத்துக்களை கலைத்து போட்டது, போல்
புரியாதிருக்கிறது உன் மௌனம்//

ரொம்பத் தான் தலை சுத்த வைக்கிறாங்க போல இருக்கே))):

நிரூபன் said...

நட்பாய் நகர்ந்த நம் உறவு
நெருப்பாய் நெருடும் தகிப்பில்
புரியாதிருக்கிறது உன் மௌனம்//

காரண்ம் ஏதுமின்றி, விலகிச் செல்லும் போது.. உருவாகும் வலியினை நெருப்பினால் ஏற்படும் வெப்பமான உணர்வுகளுக்கு ஒப்பிட்டுள்ளீர்கள்

நிரூபன் said...

மௌனம் கொடிது, காத்திருப்பின் பின்னர் உள்ள பிரிவுகளின் வலிகளின் புனைவாக வந்துள்ளது.

A.R.RAJAGOPALAN said...

@நிரூபன்
மனம் நிறைந்த
மனம் மகிழ்ந்த நன்றி

A.R.RAJAGOPALAN said...

@ கந்தசாமி
தங்களின்
முதல் வருகைக்குக்ம்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி திரு.கந்தசாமி

சுந்தர்ஜி said...

புறக்கணிப்பு உண்டாக்கும் மௌனத்தைவிட வலி நிறைந்தது எதுவுமில்லை-இறத்தலையும் விட.

மௌனத்தின் பல நிலைகளைச் சொன்ன கவிதை ஏற்கெனவே செத்தவனை ஏன் காரணம் சொல்லித் தூக்கிலிடச் சொல்கிறது ராஜு?

அபாரம்.

Ramani said...

சம்மதத்தின் மொழியும் எதிர்ப்பின் வழியும்
இது என்பதாலே...
மௌனத்தின்.பலத்தையும் பலவீனத்தையும்
இந்த ஒரு வரி மிக அழகாக விளக்கிப்போகிறது
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

A.R.RAJAGOPALAN said...

@சுந்தர்ஜி

மௌனத்தின் பல நிலைகளைச் சொன்ன கவிதை ஏற்கெனவே செத்தவனை ஏன் காரணம் சொல்லித் தூக்கிலிடச் சொல்கிறது ராஜு?

கருத்தையே கவிதையாய் சொன்னதற்கு நன்றி அண்ணா

A.R.RAJAGOPALAN said...

@ Ramani

சம்மதத்தின் மொழியும் எதிர்ப்பின் வழியும்
இது என்பதாலே...
மௌனத்தின்.பலத்தையும் பலவீனத்தையும்
இந்த ஒரு வரி மிக அழகாக விளக்கிப்போகிறது

உங்களின் கருத்துக்கு பின்தான்
என் கவிதையின் சிறந்த பகுதியே
எனக்கு தெரிகிறது ரமணி சார்

வை.கோபாலகிருஷ்ணன் said...

மெளன கீதத்தை மெளனமாகப் படித்து மகிழ்ந்தேன்.

அவள் மெளனம் கலைந்து ஏதாவது சொல்லிவிட்டால், பிறகு நாம் மெளன விரதத்தை கடைபிடிக்க வேண்டியதாகி விடுமோ என்றும் அஞ்சுகிறேன், ஒருவித வாழ்க்கை அனுபவத்தினால்.

நல்லதொரு படைப்பு. பாராட்டுக்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்
உங்களின் ஒவ்வொரு கருத்துக்கு பின்னாலும் உங்களின்
அதி மதுர ரசனை வெளிப்படுவது அபாரம் ஐயா
தங்களின் கருத்துக்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

அட்டகாசமாக இருக்குய்யா வாழ்த்துகள்...

A.R.ராஜகோபாலன் said...

@MANO நாஞ்சில் மனோ
நன்றி மிக நன்றி நாஞ்சில் மனோ சார்

அப்பாவி தங்கமணி said...

Nice one...

A.R.ராஜகோபாலன் said...

@ அப்பாவி தங்கமணி
ரொம்ப நன்றி மேடம்

எல் கே said...

உண்மைதான் .. ஒரு தப்பு பண்றப்ப சம்பந்தப்பட்டவங்க திட்டினா சரி ஆகிடும். அதே எதுவுமே சொல்லாம விட்டா அது எவ்வளவு பெரிய தண்டனை தெரியுமா

வெங்கட் நாகராஜ் said...

நாம் செய்யும் சில விஷயங்கள் நமக்குச் சரியென பட்டாலும் மற்றவர்களுக்கு தவறாகப்படுகிறது. அதை அவர்கள் சுட்டிக்காட்டாமல் மௌனமாய் சென்றுவிட்டால் அதுவும் துக்கம்தான். கவிதையாய் சொன்ன விதம் அருமை….

A.R.ராஜகோபாலன் said...

@ எல் கே
மிக்க நன்றி எல் கே
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

RVS said...

மௌனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்! புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்... அன்பே சிவத்தில் வரும் பாடல்......

நல்லா இருக்கு கவிஞர் கோப்லி! ;-))

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
மிகச்சரியாய் சொன்னீர்கள் நண்பரே
நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@RVS
வெங்கட் என்னை வச்சி ஏதும் காமடி கீமடி பண்ணலையே ?
நன்றி நண்பா