Sunday 8 May 2011

அன்னையர் தினம்

கண்ணை கவரும்
அன்னையின் அழகு
கருப்பு வெள்ளை 
சிறப்பு புகைப்படம்!

திருமணம் முடிந்த
திருப்தியில் தெரியும் 
மெல்லிய புன்னகை 
பூவாய் புலப்படும் !!

கண்களில் நிரம்பி
ததும்பும் கருணை!
என்றடைப்பேன் எந்தாயிடம்
பெற்ற கடனை !!

அமைதிக்கு அர்த்தம் 
சமைத்த அன்னபூரணி!
அன்பால் கட்டியாள 
அன்னைப்போல் யாரினி!!

எங்கள் துயரம்தூர
விரட்டிய சம்ஹாரிணி! 
வாழ்வை முழுதாய் 
வாழ்ந்த சம்பூரணி!!


என் அன்னையை போல் என் மகள்

என் மகளைப் போல் என் அன்னை 

நோயால் துவண்டிருந்த 
அன்னையை தூக்கி சுமந்தபோது 
என் மகளைப் போல் 
என் அன்னை .  

நேற்று நேசமாய் 
உணவுடன் பாச உணர்வூட்டிய போது
என் அன்னையை போல் 
என் மகள்

இன்று அன்னையர் 
தினமாம் ........
அன்னை இல்லாத தினம் ஏது?
அன்னை இல்லாவிடில் தினமா அது?


துன்பமே என்றாலும் அளவுண்டு அதற்கு!
இன்பமே என்றாலும் தாயின்றி எதற்கு !!
  


உள்ளங்கை  தண்ணீரை 
காக்க முடியாமல் 
கதியற்று 
காலனிடம் தாயை தந்தேன் 

உறையாத கண்ணீரை 
நிறுத்த முடியாமல்
வழியற்று
எனை நானே நொந்தேன்

எழில் கொண்டு காத்த எந்தாயே !   
துயில் கொண்டு துயர் தந்தாயே !!
----------------------------------------------------------

இந்த
அன்னையர் தினத்தில்
அன்னையை
கண்ணென காக்கும்
கண்மணிகளுக்கு சமர்ப்பணம்
அன்பன்
ARR 




    


  

18 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையான அன்னையர் தினக் கவிதை
உங்கள் படைப்பில் இயைபுத் தொடை
மிக இயல்பாகப்பொருந்தி வருகிறது
அது இருக்கும்படியாக கூடுதல்
படைப்புகள் வழங்க வேண்டியும்
வாழ்த்தியும்....

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எல்லா தினமும் நினைவில் புரளட்டும் அன்னையின் மேன்மை கொண்ட நினைவுகள்.

உங்கள் தாய்க்கும் இந்த மகனின் நினைவாஞ்சலி ராஜகோபாலன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான கவிதை.

ஆயிரம் பேர்கள் இருக்கட்டுமே
அவரவர் அம்மா போல வருமா?

சும்மா சொல்லக்கூடாது,
சுகமான கவிதை !

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன் vgk

வெங்கட் நாகராஜ் said...

அம்மா கவிதை அம்மாவை போலவே அருமை.

Ahamed irshad said...

Good Feel.. :)

Happy Mother's Day.

Madhavan Srinivasagopalan said...

அருமை.. அருமை..
மிகவும் பிரமாதம்..

RVS said...

அற்புதம் கோப்லி! ;-))

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
உங்களின் சீரிய பாராட்டுக்கு
சிரம் குவித்த நன்றிகள் ரமணி சார்

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி
உங்களின் பாச பகிர்விற்கு
பணிவான நன்றிகள் சுந்தர்ஜி

A.R.ராஜகோபாலன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
ஆயிரம் பேர்கள் இருக்கட்டுமே
அவரவர் அம்மா போல வருமா?

உங்கள் கருத்தே ஒரு கவிதை தான் ஐயா .
நன்றிகள் இதயத்திலிருந்து

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்

உங்களின் அருமையான பாராட்டுக்கள்
என்னை மேலும் பெருமை படுத்துகிறது வெங்கட்

A.R.ராஜகோபாலன் said...

@அஹமது இர்ஷாத்
Its my privileged pleasure Irshath

A.R.ராஜகோபாலன் said...

@ Madhavan Srinivasagopalan
தாய்மை என்பது ஒரு தவம்
தாயுடன் இருப்பது ஒரு வரம்
தான் தவமிருந்து நமக்கு வரம் தரும் உன்னதமே அம்மா
இல்லையா மாதவன் ??

A.R.ராஜகோபாலன் said...

@RVS
பொறுமையாக நமையாளும் பூமி
ஆண்டவனுக்கும் அதிகமான சாமி
தங்கத்தில் எதை செய்தாலும் தங்கம் தான்
அன்னையை பற்றி எதை எழுதினாலும் அற்புதம் தான்
நன்றி வெங்கட்

இராஜராஜேஸ்வரி said...

வாழ்வை முழுதாய்
வாழ்ந்த சம்பூரணி!!//
வாழ்வு கொடுத்த அன்னைக்கு
வளமாய் கவிதை சமர்ப்பணம் -
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

A.R.ராஜகோபாலன் said...

நேசம்
நெகிழ்ந்த
நெஞ்சம்
நிறைந்த
நன்றி தோழி

மனோவி said...

நீங்கள் கவிதை புனைவதில்
இன்னொரு ARR..

அன்னையின் நினைவுகளை அழகாக கொட்டி இருக்கிறீர்கள்..

A.R.ராஜகோபாலன் said...

@மனோவி
தங்களின் முதல் வருகைக்கும்
உங்களின் பாராட்டுக்கும்
பெருமையான நன்றி