Saturday 26 March 2011

ம தி மு க முடிவு மதியூக முடிவா ?



தமிழக அரசியலில் யாராலும் தவிர்க்க முடியாத தலைவர்  வைகோ என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமும் இருக்க முடியாது, 


‘அரசியலில் நேர்மை;    பொதுவாழ்வில் தூய்மை ;     இலட்சியத்தில் உறுதி’ என்ற
 கொள்கை முழக்கங்களை கொண்டு அரசியலில் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் நாள், சென்னை, தியாகராய நகரில் உள்ள ‘தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் தொடங்கப்பட்ட இயக்கம் தான் ம தி மு க. தி மு கவில் இருந்து எம் ஜி ஆர் விலகி அ தி மு க வை துவக்கியபோது ஏற்பட்ட எழுச்சி ம தி மு க தொடங்கப்பட்டபோதும் மக்களிடையே இருந்தது,வை கோ சென்ற இடமெல்லாம் கூட்டம் . ம தி மு க சந்தித்த முதல் பொது தேர்தல் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது, ஆனால் துரதிஷ்டவசமாக அன்று வீசிய ஜெயலலிதா எதிர்ப்பு அலையில் வை கோ கூறியதை போலவே கட்டு மரங்களுடன் சேர்ந்து சந்தன மரங்களும் அடித்து செல்லப்பட்டன .ஆனாலும் 1996ல் போட்டியிட்ட ம.தி.மு.க., 5.78 சதவீத ஓட்டுகளை பெற்று போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வை கோ உட்பட தோல்வியடைந்தனர்.அன்று தொடர்ந்த அதே தனித்தன்மையை வை கோ தொடர்திருப்பாரேயானால் இன்று தமிழகத்தில் ம தி மு க ஒரு அசைக்க முடியாத சக்தியாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

         ஆனால் வை கோ செய்த முதல் அரசியல் தவறு 1998 இல் அ தி மு க வுடன் கூட்டணி அமைத்தது , யாரை ஊழல் ராணி என பட்டி தொட்டி எல்லாம் பேசினாரோ , அதே ஜெயலலிதா உடன் கூட்டணி அமைத்தது, அந்த தேர்தலில் ம தி மு க . சிவகாசி, பழநி, திண்டிவனம் ஆகிய மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இரண்டாவது தவறு யாரை எதிர்த்து தனிக்கட்சி துவங்கினரோ அதே கருணாநிதியுடன் 1999 கூட்டணி அமைத்தது , இவரை கட்சியை விட்டு கருணாநிதி நீக்கிய போது  வைகோவைக் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி, நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர், தீக்குளித்து மடிந்தனர். உலகில் வேறு எந்த இயக்கத்திலும், கட்சித்தலைமையைக் கண்டித்து, இவ்வாறு தீக்குளித்த மடிந்ததாக வரலாறு இல்லை.  இந்த தொண்டர்களின் உணர்வுகளை கொஞ்சமும் மதிக்காமல் தி மு க உடன் கூட்டணி கண்டார் .1999 நாடாளுமன்றத் தேர்தலில், சிவகாசி, பொள்ளாச்சி, திண்டிவனம், திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றது. இரண்டு அமைச்சர்கள் பொறுப்பு வகித்தனர்.


     மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்ற கதையாக 2001 சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி ம தி மு க வை அழிக்க பார்க்கிறார் எனக்கூறி 2001 தேர்தலில் 211 இடங்களில் தனித்து போட்டியிட்டு 4.65 சதவீத ஓட்டுகள் பெற்றது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது . பின் அமைந்த  ஜெயலலிதா அரசாங்கத்தால் இவர் மீது பொடா சட்டம் பாய்ச்சப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார் , மீண்டும் 2004 இல் தி மு க வுடன் தேர்தல் உடன்பாடு 2004 நாடாளுமன்றத் தேர்தலில்,  ம.தி.மு.க. சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது.அடுத்து வந்த 2006 சட்டமன்ற தேர்தலில் , தி.மு.க., கூட்டணியில் தொகுதி பிரச்னையால், கடைசி நேரத்தில் விலகி, அ.தி.மு.க., கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டது. இதில், ஆறு இடங்களில் வெற்றி பெற்று 5.98 சதவீத ஓட்டுகளை பெற்றது. மீண்டும் அவர் அ தி மு க உடன் கூட்டணி சேர்ந்தது ம தி மு க வுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த கால கட்டங்களில் மதிமுக வின் நிலையற்ற தன்மையாலும் , ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறமுடியாமலும் பல இரண்டாம் கட்ட தலைவர்கள் கட்சியை விட்டு விலகினார்கள் , இது ம தி மு க விற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. இன்று அதே காரணத்தை சொல்லியே அ தி மு க , ம தி மு க விற்கு குறைந்த தொகுதிகளை கொடுக்க முன்வந்துள்ளது, ஆனால் இவரை விட்டு விலகி போனவர்கள் எல்லாம் கூறிய ஒரே காரணம் அ தி மு க வுடன் உடன்பாடு கொண்டதை கூறித்தான் ( 1998 பொன் . முத்துராமலிங்கத்திலிருந்து  2010 கண்ணப்பன் வரை ) யாரை எதிர்த்து கட்சி கரைந்ததோ அந்த கட்சியே இன்று இவரை கரைந்த கட்சி என்று காரணம் சொல்லி தனித்துவிட்டுள்ளது.

சரி எல்லாவற்றிக்கும் பிறகும் இன்று ம தி மு க தொண்டனும் தமிழக நடுநிலை வாக்காளர்களும் வை கோ விடம் எதிர்பார்ப்பது என்ன ??????????????     தேர்தல் புறக்கணிப்பை புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் , புறக்கணிப்பு என்பது புறமுதுகிட்டு ஓடுவதை போல அல்லவா? 
அ தி மு க , தி மு க விற்கு பிறகு எல்ல தொகுதிகளிலும் , நகரத்திலும் ,ஒன்றியத்திலும் கட்சியின் கட்டமைப்பை கனமாக வைத்திருக்கும் ஒரே கட்சி ம தி மு க , எந்த ஜாதி சாயலும் பூசிக்கொல்லாத ஒரு கட்சி ம தி மு க, தோல்விகளை கண்டு கலங்காத கட்சி ம தி மு க. இத்தனை தகுதிகளை ஒருங்கே கொண்ட ம தி மு க தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறுவது அந்த கட்சி தொண்டர்களை சோர்வடையவே செய்யும் . எல்லா கட்சி தொண்டர்களும் தேர்தல் திருவிழாவில் பங்கு பெரும் போது , உங்களுக்காக (வை கோ ) உழைத்து இன்றுவரை அதன் பலனை அனுபவிக்காமல் இருக்கும் அந்த தொண்டனின் நிலையை எண்ணிபார்க்க வேண்டாமா?

இந்த தேர்தல் ம தி மு க தன்னை மீண்டும் தமிழக அரசியலில் நிலை நிறுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பு, ம தி மு க தொண்டர்கள் வாய் நிறைய வருங்கால முதல்வர் வை கோ என்றழைக்க காத்து கிடக்கிறார்கள் , அவர்களுக்காகவாவது ம தி மு க தேர்தலில் பங்கு பெறவேண்டும், 234 தொகுதிகள் இல்லை என்றாலும் கூட அவர்கள் பலமாக இருக்கும் 35 தொகுதிகளிலாவது (அ தி மு க விடம் கொடுத்த பட்டியலின் படி ) போட்டியிட வேண்டும் என்பதே உண்மையான ம தி மு க தொண்டனின் எதிர்பார்ப்பு . இது வரை நடந்த தேர்தல்களின் படி நீங்கள் தனித்து நின்றாலும் , கூட்டணியில் இருந்தாலும் உங்களுக்கென்று ஒரு நிலையான ஓட்டு வங்கி உள்ளது (ஏறக்குறைய 5% ), இந்த தேர்தலில் நீங்கள் தோற்றாலும் அது ம தி மு க விற்கு ஒரு நல்ல அடித்தளத்தை அமைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .


வாழ்த்துக்கள் திருமிகு .வைகோ 
பல்கட்டும் பலம் வளரட்டும் வளம் 


அன்பன்
ARR.

0 comments: