சமீப காலமாக எல்லோராலும் உச்சரிக்கபடும் ஒரு பெயர் அல்லது நம்பிக்கை வார்த்தை அன்னா ஹசாரே, இந்தியாவின் தலை எழுத்தையே தலை கீழாக மாற்றும் சக்தி கொண்ட மாமனிதராக மீடியாக்களாலும் அவரது ஆதரவாளர்களாலும் உருவகப் படுத்தப் பட்டவர், இன்று மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக தன்னை நிலைப் படுத்திக் கொண்டுள்ளாரா என்று பார்த்தால் அவர் அதில் தோல்வி அடைந்தவராகவே என்னால் அறியப்படுகிறார்.
தன்னை காந்தியவாதியாக மக்களின் முன் காட்டிக்கொள்ளும் அன்னா தன்னை முழுமையான காந்தியவாதியாக நிலை நிறுத்திக் கொண்டாரா என்றால் இல்லை என்பதே என் பதில் , தன் ஊரில் குடிப்பவர்களை மரத்தில் கட்டி அடிப்பேன் என்று கூறிய போதே அவரின் அகிம்சை அழிந்து போனது , இன்னும் சற்று விரிவாக அரசியல் ரீதியாக இவரின் செயல்பாடுகளைப் பார்த்தோமேயானால் , இத்தனை ஊழல்களுக்கு பிறகும் மக்கள் விரோத செயல்களுக்கு பிறகும் காங்கிரஸ் என்னும் அரசியல் இயக்கம் இந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக இருப்பதற்கு காரணங்கள்
- சுதந்திர போராட்டத்தின் காரணியான கட்சி
- கதராடையும் காந்தி குல்லாவும்
- தேசியக்கொடி மாதிரியான கட்சிக் கொடி
- காந்தியம்....................... இவை அனைத்தையும் பின்பற்றாவிட்டாலும் தன் முழுமையான சொத்தாக பாதுகாத்து வருவதுதான்
இதை கைபற்ற முடியாமல் போனவர்களின் ஊதுகுழலாக இவர் செயல் பட்டு இருக்கலாம் என்பது என் எண்ணம் . நான் முன்னமே என் பதிவில் பதிந்த படி ஐரோம் ஷர்மிளாவிற்கு கொடுக்காத முக்கியத்துவத்தை அன்னா ஹசாரேவிற்கு கொடுப்பதன் வியப்பை வெளிப்படுத்தி இருந்தேன் , ஏனெனில் ஊழலை அழிப்பதை விட உரிமையை பெறுவது மிக முக்கியம் இன்னும் அவசியம்.
ஜனநாயகத்தை பற்றி பேசும் இவரின் குழுவினரே அன்னாவின் மீதான தனி மனித துதியை தொடங்கியதுதான், இதற்கு அடையாளமாக பல நிகழ்வுகளை சொல்லலாம். இதற்கு சாட்சியாக கீழ் உள்ள படத்தைக் கொள்ளலாம்.
ஊழலில் ஊறித்திளைத்தவர்கள் காங்கிரஸ் காரர்கள் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனாலும் ஊழல் என்பது காங்கிரஸ் காரர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது போல லோக்பால் மசோதா முழுமையாக நிறைவேறாமல் போனதற்கு காரணம் அவர்களே, காங்கிரஸ் காரர்களே என் முதல் முழு எதிரி அவர்களை எதிர்த்து ஐந்து மாநிலங்களிலும் களம் காணுவேன் என்று சொல்லியதும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கேள்விகளை தவிர்த்து புறக்கணித்ததும் பூனைக்குட்டி வெளியே வந்த கதையைத்தான் நினைவுப் படுத்தியது.
அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரானவரா இல்லை மற்றக் கட்சிகளின் ஊதுகுழலானவரா என்பது அவரின் கடந்த கால செயல்கள் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இனிவரும் காலங்கள் அவரின் நடவடிக்கைகளைப் பொறுத்தே தெரியவரும்.
அன்பன்
ARR