Thursday 21 July 2011

தமிழக அரசுக்கு சாட்டையடி கொடுத்த உச்ச நீதி மன்றம்.






அவசரத்தில் அள்ளிதெளித்த அரைவேக்காட்டுத்தனமாக அறிவித்த சமச்சீர் கல்வி தடை இன்று பல பகீரத முயற்சிகளுக்குப் பின் உச்ச நீதி மன்றத்தால் நீக்கப்பட்டு இருக்கிறது.இந்த மனு தொடர்பாக இன்று விசாரித்த ஜே.எம்,. பாஞ்சால் தலைமையிலான பெஞ்ச் நீதிபதிகள் , சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். வரும் ஆகஸ்ட் 2 ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

            அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஏற்படுத்தப்பட்ட இந்த தடை ஏற்படுத்தி இருக்கும் இழப்பு எவ்வளவு  தெரியுமா ??, மக்களின் வரிப் பணத்தில் புத்தகங்களுக்காக குறைந்த பட்சம் இருநூறு கோடி, இதனிலும் அதிகமாக நீதிமன்றத்தில் வாதாடியவர்களுக்கான கூலியும் , மற்றவர்களுக்கான போய் வந்த பொய் செலவுகளும் . இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல ஒண்ணே கால் கோடி மாணவர்களின் அறுபது கல்வி நாட்கள் , இதற்கு  என்ன பதில் சொல்லப் போகிறது இந்த அரசு , ஜெயலலிதாவிடம் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்ப் பார்த்த மக்களுக்கு இந்த மாதிரியான செயல்கள் மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லைஎதில் தான் அரசியல் செய்வது என்ற அடிப்படை நியாம் கூட இல்லாத அரசுகள் அமைவதும் , அவற்றையே நாம் மீண்டும் சுழற்சி முறையில் தேர்தெடுப்பதும், தமிழக மக்களின் சாபக் கேடு .  

அன்பன் 
ARR

Tuesday 19 July 2011

அன்பானவர்களுக்கு வணக்கம்



 என் மிகப் பிரியமானவர்களுக்கு, வணக்கம்
நலம் நாடுவதும் நலமே...............
          இப்போது என் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தை கடந்து கொண்டிருப்பதால், என்னால் முன்பு போல வலைப்பூவில் செயல் பட முடியாமல் போகின்றது, அதன் காரணமாகவே உங்களின் உன்னத படைப்புகளை படித்தும் பின்னூட்டமிட முடியாமல் என் வாக்கினை பதிய முடியாமல் போகின்றது. நீங்கள் அனைவரும் என்னை தயை கூர்ந்து பொறுத்தருள வேண்டுகிறேன்.வெகு விரைவில் நான் மீண்டும் மீண்டு வந்து உங்களின் அன்பு ஜோதியில் ஐக்கியமாவேன்.


அன்பு, நன்றி , நலம்,வணக்கம்
 
அன்பன்
ARR .        

Monday 18 July 2011

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் திருந்தாத தமிழக அரசு

                              

                           சமச்சீர் கல்வியே தொடரவேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகாவது திரிசங்கு சொர்க்கத்தில் அல்லாடும் பாவப்பட்ட தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் தான் பிடித்த முயலுக்கு மூணுகால் என்ற வறட்டு பிடிவாதத்தை தமிழக அரசு இந்த தீர்ப்பை மேல் முறையீடு செய்யப் போவதாக கூறி நிரூபணம் செய்திருக்கிறது.

             இன்று சமச்சீர் கல்வி மீதான வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதி மன்றம்  1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியே தொடரும்,மேலும் அனைத்து வகுப்புகளிலும் நடப்பாண்டில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த வேண்டும். வரும் 22ந் தேதிக்கு சமச்சீர் கல்வி பாடநூல்களை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இன்று தேதி பதினெட்டு இன்னும் நான்கு நாட்களில் அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வியை நிர்ணயம் செய்யும் பாட புத்தகங்களை வழங்குவது குதிரை கொம்பான விஷயம் அதையும் தாண்டி பெரும்பாலான பள்ளிகளுக்கு பழைய பாட திட்ட புத்தககங்களை விநியோகித்து வருவதாகவும் செய்திகள் வந்தபடியே இருந்தன.இவை அனைத்தையும் தாண்டி சமச்சீர் பாட புத்தகங்கள் மாணவர்களை சென்றடையுமா என்பது விடை தெரியாதா கேள்வி.



                      ஏன் இந்த மாதிரியான பிடிவாத செயல்கள் என்பது யாருக்கும் புரியாத மர்மமாகவே இருக்கிறது. இவர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு மாணவர்களின் படிப்பையும் அவர்களின் எதிர்காலத்தையுமா பாழாக்குவது , இதுவா ஒரு பொறுப்புள்ள அரசின் அடையாளம் ?. இப்போதே 50 நாட்களை இழந்து நிற்கின்றனர் மாணவர்களும் ஆசிரியர்களும் , சரியான நேரத்தில் தொடங்கி பாடம் நடத்தினாலே புரியாத நம் மாணவர்கள், இப்போது பாடங்களை நடத்தி முடிக்க அவசரம் காடும் ஆசிரியர்களின் வேகத்துக்கு எப்படி ஈடு கொடுக்க போகிறார்கள் .

                   அடுத்து, மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் பாட வழி புத்தகங்களே வழங்கப்பட்டு இருக்கிறது. இப்போது சமச்சீர் கல்வி என்றால் அந்த பாடப் புத்தககங்களின் கதி என்ன? புதிய  பாட புத்தகங்களுக்கு மீண்டும் பெற்றோர்கள் பணம் செலுத்த வேண்டுமா?. ஒரு தரமான பள்ளிபடிப்பை மாணவர்களுக்கு தர வக்கில்லாமல் கல்வியை தனியாரிடம் தாரை வார்த்த தமிழக அரசுகள் இப்போது இப்படி மாணவர்களின் எதிர்காலத்தில் சதிராட்டம் ஆட எந்த தகுதியும் கிடையாது .

                     இது மாதிரியான கேவலமான செயல் எந்த மாநிலத்திலும் நடக்காது . இதுவே தமிழர்களின் தலைவிதி.மக்களின் குடி கெடுக்கும் மது விற்பனையில் எந்த தடையையும் ஏற்படுத்தாத தடுக்காத அதில் அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டாத அரசுகள் , அவர்களின் அரிப்பை தீர்த்துக்கொள்ள எதிர் கால இந்தியாவை வழிநடத்தப் போகும் இந்த தளிர்களின் எதிர்காலத்தை பாழாக்குவது துளியும் நியாயமில்லை.      

அன்பன் 
ARR      

Monday 11 July 2011

ரஜினியும் கமலும் தமிழ் ரசிகர்களுக்கு செய்யும் துரோகம்

 
                      சென்ற ஞாயிற்று கிழமை ஏதேச்சையாக சூர்யா சேனலில் மலையாள படம் டுவன்டி : டுவன்டி (twenty :20) பார்த்தேன், பிரமித்தேன் மலையாள படவுலக அத்தனை பிரபலங்களும் பிரகாசமாய் நடித்திருக்கும் படம், மோகன் லால் ,மம்முட்டி ,சுரேஷ்கோபி ,திலீப் ,ஜெயராம் , இன்னும் எனக்கு பெயர் தெரியாதா பிரபலங்களும் நடித்திருந்தனர், ஒருவருக்கொருவர் துளியும் ஈகோ இல்லாமல் (இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் ) தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தனர்.



           அதிலும் மம்முட்டியும் மோகன்லாலும் ஒரே திரையை பகிர்ந்து , படர்ந்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு நடித்தது மலையாள ரசிகர்களுக்கு விருந்தாக  இருந்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அவரவர் நடிப்பிற்கு ஏற்ற கதாப் பாத்திரங்களை அமைத்திருந்தார்கள், இந்த நல்ல முன்மாதிரி படங்கள் ஹிந்தியிலும் வருகின்றன.,  .

           இதே போல் இங்கு தமிழ்நாட்டில் கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்தால்  எப்படி இருந்திருக்கும் , இருவரையும் ஒருங்கே ஒரே திரையில் பார்க்கும் போது தமிழ் ரசிகனின் உணர்வுகள் எப்படி இருக்கும், இருவருக்குமான , கதையை எழுதவோ தயாரிக்கவோ முடியாதவர்களா என்ன ? நம் கதாசிரியர்களும்  தயாரிப்பாளர்களும். தியாகராஜ பாகவதர் , பி யு சின்னப்பாவில் தொடங்கி , எம் ஜி ஆர்/ சிவாஜி , ரஜினி/கமல் , அஜித்/விஜய் இன்று வந்த தனுஷ் /சிம்பு வரை தொடரும் இந்த உருவாக்கப் பட்ட கலாச்சாரம் என்று மாறும், நடிப்பிற்கு முக்கியத்துவம் தரும் சினிமாவும் காலமும் எப்போது வரும்.
           இன்னும் கொஞ்சம் விளக்கமாக கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் ரசிகர்களுக்கிடையே சண்டை வரும் , பிரச்சனை வரும் என்ற உப்பு பெறாத காரணங்கள், ரசிகர்கள் என்ன காட்டுமிராண்டிகளா , ரசனையற்ற வெறியர்களா , இவர்களாகவே தன் சுய நலத்திற்க்காக ரசிகர்களுக்கு வெறி ஏற்றிவிடுவது மாதிரியான செயல்களை செய்கிறார்கள் . இரு ரசிகர்களும் பரம்பரை பகை கொண்டவர்களா என்ன?, ஒரே குடும்பத்தில் அண்ணனும் தம்பியும், ஒரே தெருவில் நண்பர்களும் வேறு வேறு நடிகர்களை ரசிப்பதனால் அவர்களுக்குள் பிரச்சனை, விரோதம் என அர்த்தமா என்ன , ரசிகர்களை வெறியர்களாக சித்தரிக்கும் இவர்களின் செயல் எப்படிப் பட்டது என்று ரசிகர்கள் உணரவேண்டும். நடிகர்களும் தங்களின் ஈகோவை விட்டுவிட்டு இதுமாதிரியான படங்களில் இணைந்து நடிக்கவேண்டும், இவர்கள் நடிக்க தயார் என்றால் இயக்குனர்கள் தரமான கதையுடன் வரிசைகட்டி நிற்ப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை, அது ரசிகர்களுக்கும் விருந்தாகும் என்பது ஓர் ரசிகனாய் என் கருத்து.


அன்பன் 
ARR

தமிழ்மணம் பதிவுப்பட்டை அறிவிப்புகள் (TOOL BAR)


தமிழ் மணம் காணாது தவிக்கும் தமிழ் மனங்களுக்கு ஓர்  அறிவிப்பு, நான் பெற்ற  இன்பம் பெருக இவ் வையகம் (நன்றி நாற்று நிரூபன் , அவர் செய்தியாக சொன்னதை நான் பதிவாக போட்டுட்டேன் )

வலைப்பதிவுகளில் எழுதப்படும் இடுகைகளை உடனுக்குடன் தமிழ்மணத்திற்கு அளிக்கவும், மறுமொழிகளை உடனுக்குடன் திரட்டவும், வாசகர் பரிந்துரைக்காக வாசகர்களிடம் இருந்து வாக்குகளை திரட்டவும் பதிவுப்பட்டைச்சேவையை தமிழ்மணத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே வழங்கி வந்துள்ளோம். உடனுக்குடன் மறுமொழிகளும், இடுகைகளும் வலைப்பதிவுகளில் இருந்தே ஒரு சொடுக்கிலே தமிழ்மணத்தின் முகப்பிற்கு வந்தடையும் தொழில்நுட்பம் தமிழ்மணத்தின் சிறப்பம்சமாகவும் இருந்து வந்துள்ளது.
ஆனால், இன்றைக்கு வலைப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் ஒவ்வொரு வலைப்பதிவும் வாசிக்கப்படும் பொழுதும் பதிவுப்பட்டை சேவை தமிழ்மணத்தின் வழங்கிக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது. அது தவிர வலைப்பதிவுகளிலே தரவிறக்கமும் தாமதமாகிறது. இப்பிரச்சனை தமிழ்மணம், வலைப்பதிவர்கள் என அனைவரையும் பாதிக்கும் நிலையில், இச்சேவையை இடைநிறுத்தத் தமிழ்மணம் நிர்வாகம் தள்ளப்பட்டிருக்கின்றது.
இச்சேவையில் உள்ள பிரச்சனைகள் களையப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட்ட சேவை வரும் வரையில் வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் திரட்டுதல் போன்ற சேவைகள் இயங்காதெனத் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் இந்த சேவைகள் மீண்டும் செயற்படத் தொடங்கும்.
இதனால், பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம்.
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி
நிர்வாகம்
தமிழ்மணம்

Sunday 10 July 2011

முத்துக்கள் மூன்று - தொடர் பதிவு



                                முத்தான கேள்விகளை  கேட்டு அதையே வேள்வியாய் தொடரும் இந்த தொடர் பதிவை என்னை தொடர உத்தரவிட்ட என் நண்பன் RVS  கட்டளைப்படி இதை தொடர்வதில் பெருமையும் பெருமிதமும் அடைகிறேன், நன்றி நண்பா
                                  இனி என்னுடைய உள்ளப்பூர்வமான , உணர்வுப்பூர்வமான, உணர்ச்சிப்பூர்வமான பதில்கள் .

       1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
  • தென்றல் தாலாட்டும் ஹரித்ராநதி வடகரை படித்துறையும் , நண்பர்களும் நட்பும் ,
  • கல கலவென , கட கடவென கலக்கலாய் கழிந்த கல்லூரி நாட்கள் 
  • ராசிபுரம்  செந்தில் , ஏர்போர்ட் ஸ்ரீனி யுடனான கோடம்பாக்கம் ராஜாராம் காலனி பேச்சிலர் வாழ்க்கை 
      2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?  
  • தன் குறை தெரியாமல் , தேவை இல்லாமல் தன் புத்திசாலிதனத்தை நிரூபிக்க மற்றவர்கள் மீது கருத்தை திணிக்கும் அறிவுரைவாதிகள்
  • குடிகாரர்களும் , பக்கத்தில் குழந்தைகள் இருந்தாலும் கர்ப்பிணிகள் இருந்தாலும் எதைப் பற்றியுமே கவலைப் படாமல் பொது இடங்களில் புகை பிடிக்கும் மடையர்கள் 
  • குழந்தைகளைக் கொண்டு பிச்சை எடுக்கும் தாய்மை இல்லா பெண்கள்   
      3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
  • மருத்துவமனை (ரத்தத்தை பார்த்தாலே ஐயா காலி )
  • உடற்பயிற்சி (கொஞ்சம் இல்லை நிறையவே சோம்பேறி )
  • மனைவி (நெசமாத்தான் )
   4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
  • நாம் வாழும் பிரபஞ்சம் 
  • பிறந்த குழந்தையின் அன்னிச்சையான சுவாசம்
  • பரிட்சையில கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க அதுல கொஸ்டீன் இருக்கு , ஆனா ஆன்சர் பேப்பர்ல ஆன்சர் இல்லையே ஏன் ?
    5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
  •  என் மகளின் வசீகரிக்கும் போட்டோ 
  • கிரடிட் கார்டு பில்கள் 
  • இலந்தவடை  
   6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
  • என் சகோதரர்கள் (டயமிங்கில் பின்னி பெடலடுப்பவர்கள்)
  • ராசிபுரம் செந்திலின் குழந்தை தனம் (அவனே போன் பண்ணி மச்சி பிசியா இருக்கேன் அப்புறமா பேசுறேன் என்று போனை கட் பண்ணிடுவான், வீட்டிலிருந்து போன் வந்தாலும் சிகரட்   வாசனை அடிக்க கூடாது என்பதற்காக வாய் கொப்பளிப்பான், நான்காம் வருடம் படிக்கும் இவனை இரண்டாம் ஆண்டு மாணவன்  கூப்பிட்டு  கேள்வி கேட்டாலும் நின்று பதில் சொல்லுவான்  ) 
  • வடிவேலு 
  7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
  • என்னுடைய டிரைனிங் அகடமிக்கு ப்ரோபைல் தயாரித்து கொண்டிருக்கிறேன் 
  • மனைவி தந்த சூடான சுவையான அடையை ரசித்து ருசித்து கொண்டிருக்கிறேன் 
  • என் டி சர்ட்டை நைட்டி போல போட்டு அங்கும் இங்கும் அலையும் என் மகளை பார்த்து பூரிக்கிறேன்  
  8) வாழ் நாள் முடிவதர்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
  • ஹரித்ராநதி வடகரையில் உள்ளடங்கிநாற் போல் ஒரு வீடு 
  • ஆதரவற்ற முதியோர்களுக்காக ஒரு இல்லம் 
  • கோபப் படாத கணவனாக 
 9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
  • இல்லையென வந்தவர்களுக்கு இருப்பதை கொடுக்க முடியும் 
  • என்மேல் தவறன தெரிந்தால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியும்
  •   கோபமாய் இருக்கும் என் மகளை சிரிக்க வைக்கமுடியும் 
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
  • காகித கதாநாயகர்களின் பன்ச் டயலாக் 
  • அரசியல் வாதிகளின் வெத்து வாக்குறுதிகள்
  • குழந்தையின் அழுகை 
11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
  • பொறுமை
  • சிக்கனம்
  • பிற பல மொழிகள் 
12) பிடிச்ச மூன்று உணவு வகை?
  • சின்ன வெங்காயம் நிறைய போட்டு நல்லண்ணை ஊற்றிய புளிக்குழம்பு 
  • புளியோதரையும் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு 
  • தேங்காய் சாதம் (துருவிய தேங்காயும்,நெய்யில் வறுத்த முந்திரியும் ஆஹா )
13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
  • நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் - திரைப்படம் இரும்பு திரை 
  • உன்னை நானறிவேன் என்னை யன்றி யாரறிவார் - திரைப்படம் குணா 
  • வா வா என் தேவதையே - திரைப்படம் அபியும் நானும் 
14) பிடித்த மூன்று படங்கள்?
  • கர்ணன்
  • ஹேராம்
  • மொழி 
15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?
  • பணம்
  • நொறுக்குத் தீனி 
  • அதிகாலை தூக்கம் 
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?


Saturday 9 July 2011

சவ ஊர்வலங்களும் சில அநாகரீகங்களும்




           சமீப  காலங்களில் என் மனதை பாதித்த பல செயல்களில் இந்த சவ ஊர்வல அநாகரீகங்களும் ஒன்று, மிக முக்கியமான சாலைகளில் கூட்டமாக செல்லும் இவர்கள், போக்குவரத்திற்கு வழியே விடுவது இல்லை இதனால் பல போக்குவரத்து சிக்கல்களும் தேவை இல்லாத தாமதங்களும் ஏற்படுகின்றன, அவசர ஊர்திகளுக்கு கூட இவர்கள் வழிவிடுவதில்லை .இதை அனுபவிக்காதவர்கள் மிகக் குறைவானவர்களே. 

               அவர்களின் சோகம் சம்பந்த்தப்பட்ட கொண்டாட்டங்களுக்கு      நம் நிம்மதியை, நேரத்தை  கெடுக்கும்  இதுமாதிரியான செயல்களை மக்களாகிய நாம் அனுமதிக்கவே கூடாது என்பது என் விருப்பம். குடித்துவிட்டு சாலையிலே சத்தமிட்டு கும்மாளமிடும் இது போன்ற சமூக அக்கறை இல்லாதவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அவசரமாக பல வேலைகளுக்காக செல்ல இருக்கும் சாமான்யர்களை தடுப்பது , இவர்களை கடந்து செல்ல முயற்சிப்பவர்களை தாக்குவது, திட்டுவது, வழி விட மறுப்பது போன்ற செயல்களை செய்யும் இவர்களை  என்ன செய்தாலும் தகும்.   

                 போகும் வழியில் அந்த சவத்திற்கு போட்ட மலர்களை வீதியெங்கும் வீசி எறிவது,( இது என்ன மாதிரியான அல்லது எதற்கான வழக்கம் என தெரிவதில்லை) நடு ரோட்டிலேயே பயங்கர ஓசையுடன் வெடி வைப்பது மாதிரியான அத்து மீறல்களை செய்வது எந்த விதத்தில் நியாயம் . இதைவிட மோசமான செயல் அந்த மாலைகளையும், மலர்களையும் போவோர் மீதும் வருவோர் மீதும் எறிவது, இதையும் விட கொடுமை இரு சக்கர வாகனங்களில் வரும் பெண்களின் மீதும்  பேருந்தில்  ஜன்னலோரம் அமர்ந்திருக்கும்  பெண்களின்  மீதும் ஒருவிதமான வக்கிர எண்ணத்துடன் அந்த பூக்களை வீசி எறிவதை என்னவென்று சொல்லுவது , அராஜகத்தின் உச்சம் அல்லவா இது .

                 ஓர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் கூட்டம் சேர்ந்தால் என்ன வேணாலும் செய்யலாம் என்ற தவறான எண்ணமே இதற்கு காரணம், இதிலும் கொடுமை இதையெல்லாம் காவல்துறையினரும் அமைதியாய் வேடிக்கைப் பார்ப்பது , கேட்டால் சட்டம் ஒழுங்கு என்ற உப்பு பெறாத காரணம் , ஒரு தனி மனிதனுக்கும் அவன் தன்மானத்திற்கும்,பாதுகாப்பில்லாத , சுதந்திரம் இல்லாத சட்டம் என்ன சட்டம், என்ன ஒழுங்கு , எங்கு போய் முடியப்போகிறதோ இந்த மாதிரியான ஒழுங்கற்ற செயல்கள்.

அன்பன்
ARR  

Friday 8 July 2011

ஒற்றைக் குழந்தை, கற்றைக் கேள்விகள்


நேற்று நான் படித்த எப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு? என்ற அமைதி அப்பாவின் பதிவையும் அதன் பின்னூட்டங்களையும் படித்தவுடன் என் மனதில்   தோன்றிய செய்திகளை இங்கே பதிய நினைக்கிறேன், படித்து  உங்களின் அனுபவக் கருத்துக்களை கூறினால் மகிழ்ச்சியடைவேன்.

     இந்த காலத்தில் ஒரு குழந்தை  பெற்றுக்கொள்வதே சாமர்த்தியம், புத்திசாலித்தனம் , யதார்த்தம் என பலவிதமாக சொல்லப்பட்டாலும், ஒரு குழந்தை பெற்றால் நல்ல முறையில் வளர்க்க , படிக்க,செலவழிக்க எதுவாக இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் , இன்னும் பல சாதகங்கள் பட்டியலிடப்பட்டாலும் , அந்த குழந்தையை சார்ந்து யோசித்தோமேயானால் அது ஆரோக்கியமானதா என்பதே எனது கேள்வியாக எழும்பி நிற்கிறது.

       எனக்கும் சரி என் நண்பர்கள் பலருக்கும் (90%) ஒரே குழந்தைதான், அதற்கான காரணம் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது , ஆனாலும் இனி குழந்தை இல்லை என்பதில் மாற்றம் இல்லாதிருக்கிறோம், என்னுடைய காரணம் என் முதல் மகளை தொட்டுப் பார்ப்பதற்கே நான் பட்ட கஷ்டம் என் முன்னைய பதிவுகளில் தெரிவித்திருந்தேன், என் மகளை ஆரோக்கியமாக வளர்ப்பதே  என் வாழ்வின்  லட்சியமானதால் அடுத்த குழந்தையைப் பற்றிய சிந்தனை எனக்கு இல்லாமல் போனது.

      ஆயினும் இன்று நான் ஒரு குழந்தையாக இருப்பவர்களின்  பிரச்சனையாக கருதுவது தனிமை,அடம் , பகிரும் மன நிலை இல்லாமல் இருப்பது, இன்றைய தனிக் குடித்தனங்களில் அவரவர் தனிமையிலிருந்தாலும் குழந்தைகள் இணைந்து தான் இருக்கிறார்கள் ஆனாலும் எல்லாவற்றிலும் தனக்கே முதலிடமும் முக்கியத்துவமும் தரவேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கி நிற்கிறது , காரணம் வீட்டில் தனிக்காட்டு ரா(ணி)ஜாவாக இருப்பதால் எல்லா இடத்திலேயும் அதே உணர்வு , அது மறுக்கப்படும் போது ஆரம்பிக்கிறது பிரச்சனை , விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை சிறிதளவும் இல்லாமல் இருக்கிறது.வீட்டிற்க்கு வந்தவுடன் தனிமை ஆட்கொள்கிறது, என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள்.வாழ்வியலின் அதிமுக்கிய விதியான விட்டுக் கொடுத்தலை இந்த மாதிரியான குழந்தைகள் இழந்து விடுவார்களோ என அஞ்சுகிறேன் 


   தனக்கு தெரியாததை சொல்லித்தர , தன்னை பரிவாக பார்த்துக்கொள்ள,
பகிர்ந்து கொள் 
ஒரு சகோதரத்துணை  அவசியம் என நான் இப்போது நினைக்கிறேன், ஏனென்றால் எங்கள் வீட்டில் நான்தான் சின்னவன் , மூன்று அண்ணன் , இரண்டு அக்கா , இந்த அனைவருக்குமே  நான்தான் முதல் குழந்தை, வீட்டில் நாங்கள் விளையாடாத விளையாட்டில்லை,

எனக்கு நீந்த கற்றுதந்ததும் , சைக்கிள் ஓட்ட கற்றுதந்ததும் என் சகோதரர்கள் தான். 
என்னை அனுசரிக்கும், அரவணைக்கும் அவர்களின் பாங்கு அலாதியானது, இன்றும் என் இன்ப துன்பங்களை நான் பகிரும் முதல் இடம் என் உடன் பிறந்தவர்கள்தான் , அவர்களிடம் சொன்னால் இன்பம் இரண்டு மடங்காகவும் , துன்பம் பாதியாகவும் குறைந்து விடும் .என் தாய் தந்தையை இழந்த எனக்கு இன்று அவர்கள் தான் என் தாய் தந்தை அவர்களிடம் கண்ட, கற்ற  விட்டுகொடுக்கும் பண்புதான் இன்று எனக்கு நிறைய நண்பர்களைத் தந்திருக்கிறது, இதையெல்லாம் நினைக்கும் போது இதுமாதிரியான சொந்தத்தை, அன்பை , பண்பை என் மகளுக்கு மறுத்துவிட்டேனோ என்று நினைக்கிறேன்.





 இதைச் சார்ந்த உங்களின் கருத்துக்களை பகிர்ந்தால் மனம் நிறைவடைவேன்.
நன்றி 

அன்பன் 
ARR  

Thursday 7 July 2011

வீணே வெறுத்தோம் உறவை மறந்தோம்

Eclipse

என் உருவை பார்க்கும் 
போதெல்லாம் 
நீயே தெரிந்தாய் 
என்  எழுத்தை எழுதும்
போதெல்லாம்
உன் எழுத்தின் பிம்பங்கள் 

விரல்களுக்குள்ளே 
விரோதம் வந்த 
வினோதம் நம்
பிரிவு 
தண்ணீர் போல
பிரிந்தாலும் 
தன்மை மாறாதது நம்
உறவு 

ஒன்றோடொன்று 
சம்பந்தம் இல்லாமல்
தனித் தனி 
தீவுகளாக இருந்தாலும்
நாம் வாழ்ந்த 
பிரபஞ்சம் ஒன்றுதான் 

உருவானதும் 
கருவானதும் 
ஒரே கருவறைதான் 
வாழ்வதும் 
வகுப்பதும் 
ஒரே வழிமுறைதான்


சின்ன மிதிவண்டிகளைப்
பார்க்கும் போதெல்லாம் - உன்
செல்ல பிறந்தநாள் 
பரிசு இன்றும்
ஞாபகம் வராமல் இல்லை 

ஒருமுறை நான் 
வெளியூர் செல்கையிலே
வழியனுப்ப வந்த நீ
மறைந்து மறைந்து 
கண்ணீர் மறைத்தது 
இன்னும் 
மறையாதிருக்கிறது

துரோகங்களை  
தொட்டுவிடவில்லை 
நாம்
உறவின் உரிமைகளை 
விட்டுவிடவில்லை 
நாம்

ரயில் சினேகங்களையும்
மதிக்கும் நாம் - நம்
உயிர் சினேகத்தை 
மறுத்தது துளியும் 
நியாயமில்லை

நம் 
தவறுகளை விட 
குறைகளை விட
கோபங்களை விட
குரோதங்களை விட
பெரியதல்லவா 
நம் சகோதரத்துவம்.

காலத்தின்
களத்தில்
சூழ்நிலையால் 
சுருங்கிப்போனது 
நம் உணர்வு  
காலத்தின்
மாற்றத்தில் 
சந்தோஷத்தில் 
மலரட்டும்
நம் உறவு 

அன்புடன்
சகோதரன் 
ARR