Saturday, 11 June 2011

சமச்சீர் கல்வியும் தமிழக அரசின் வறட்டு கௌரவமும்




 முதல் கோணல் முழுவதும் கோணல் என்பது போல அமைந்துள்ளது , தமிழக அரசின் அறிவிப்பு , சமச்சீர் கல்வி சட்ட திருத்தம் - 3க்கு சென்னை உயர் நீதி மன்றம் இடைக்கால தடை வழங்கியுள்ள நிலையில், இந்த தீப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்ற தமிழக அரசின் அறிவிப்பால்,தமிழக மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.


இத சமச்சீர் கல்வியை எதிர்த்து போடப்பட்ட பொதுநல வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற தலைமை  நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் சமச்சீர் கல்வி பாடபுத்தகத்தில் சுயவிளம்பரத்திற்காக சில பாடங்கள் உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அனைத்து பாடபுத்தகங்களும் சரியானது அல்ல என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் நிருபிக்க வில்லை. சமச்சீர் கல்வி பாடதிட்டம் குறைபாடு உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்படவில்லை. தற்போதுள்ள சட்டத்திருத்தம் அரசியல் சாசனம் அளிக்கும் உரிமையை பறிப்பதாக உள்ளதா? இந்த ஐகோர்ட் ஏற்கனவே அளித்த தீர்ப்பை செல்லாததாக மாற்றுகிறதா? என்பதை பரிசீலிக்க வேண்டும். இதற்கு விரிவாக அரசிடம் பதில் பெற வேண்டும். அரசு விரிவாக பதில் மனு தாக்கல் செய்த பிறகு வழக்கை விரிவாக விசாரித்தால் தான் முடிவு எடுக்க முடியும். இதற்கிடையில் என்ன செய்யலாம் என்பது தான் தற்போதைய கேள்வி எழுந்துள்ளது?  எனவே தான் திருத்த சட்டத்திற்கு தடைவிதிகிறோம் என்று தீர்ப்பு வழங்கினர் .

ஆனால் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக அரசு இதை உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக கூறியுள்ளார், ஆனால் உச்ச நீதிமன்றம் இப்போது ஒரு மாதம் கோடை கால விடுமுறையில் இருப்பதால் (இந்த நாட்டில் இந்த கோடை காலத்தில் வேலை செய்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா, நாட்டில் எத்தனையோ லட்சோப லட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்க இந்த மாதிரியான விடுமுறைகள் தேவையா என்பது தனிக்கதை)இதை எப்படி மேல் முறையீடு செய்ய முடியும் என்பது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது, ஏற்கனவே எந்த பாடத்தை படிப்பது என்று தெரியாமல் பத்தாம் வகுப்புக்கு செல்லும் மாணவர்கள் படு குழப்பத்தில் இருக்கிறார்கள் , இதில் இணையத்தில் பதிவிறக்கம் செய்து இத்தனை நாட்களாக படித்து வந்தவர்களின் நிலையை சொல்லி தெரிய வேண்டாம் , இத்தனை நாட்களாய் அவர்களின் உழைப்பும் நேரமும் வீண் .

இந்த தீப்புக்கு முன்னதாகவே தமிழக அரசு  4 கோடி அளவில் பழைய புத்தகங்களை மீண்டும் அச்சடிக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் டெண்டர் விட்டு, தற்போது பழைய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த 45-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் புத்தகங்கள் அச்சிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.இந்த மேல் முறையீட்டிலும் உச்ச நீதி மன்றம் தடை வழங்குமேயானால் இந்த புத்தகங்களின் நிலை என்னவாகும் என்பதும் இந்த வீண் விரயத்திற்கு யார் பொறுப்பாவார்கள் என்பது நூறு கோடி ரூபாய் கேள்வி.

இவை அனைத்திற்கும் உச்சமாய் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா அவர்களின் இன்றைய அறிவிப்பு மாணவர்களையும் பெற்றோர்களையும் படு குழப்பத்தில் தள்ளியுள்ளது அந்த அறிவிப்பு "கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் 15-ம் தேதிக்கு திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதில் எந்த மாற்றமும் இல்லை. 15-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். எந்த பாடப் புத்தகத்தை பின்பற்றுவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்." இந்த அறிவிப்பை நினைத்து அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை , பள்ளிகள்  ஜூன் 15-ம் தேதிக்கு திறக்கப்படும் ஆனால் எந்த பாடப் புத்தகத்தை பின்பற்றுவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும், என்ன ஒரு தீர்க்கமான முடிவு. 

அரசியல் காரணங்களுக்காக அள்ளி தெளித்த கோலத்தில் எடுக்கப்பட்ட இது மாதிரியான முடிவுகள் மாணவர்களிடையே என்ன மாதிரியான பாதிப்பை உருவாக்கும் என்பதை ஆட்சியாளர்கள் அறிந்து இருக்கிறார்களா ?? மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையாக இருக்கிறது இந்த அரசின் வறட்டு கெளரவம்.

உடனடி இட்லி , தோசை மாதிரி எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது மாதிரியான இந்த முடிவை அரசு மறு பரிசீலனை செய்து என்ன விதமான பாடங்கள் குறையோடிருக்கிறதோ அந்த பாடங்களை நீக்கி , இதற்கென ஒரு வல்லுநர் குழுவை அமைத்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.

அதை செய்யுமா இந்த அரசு இல்லை அவர்களின் முடிவின்படியே மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடப்போகிறதா ???

காலம்தான் பதில் சொல்லவேண்டும்

எல்லாவற்றிர்க்கும்

எல்லோருக்கும் 

அன்பன்
ARR

Friday, 10 June 2011

விபச்சாரம்



பூக்களின்
வாசத்தைப்போலே 
எங்கெங்கும் 
வீசிக்கொண்டே 
இருக்கிறது அன்னியம் 

மேகத்தின் 
உருவங்களைப்போலே
நிலை இல்லாமல் 
மாறிக்கொண்டே 
இருக்கிறது துணை 

கடலின் 
அலையினைப்போலே 
ஓய்வில்லாமல் 
மோதிக்கொண்டே
இருக்கிறது நினைவுகள் 

உருவத்தின்
நிழலைப்போலே 
பின்னாலே 
தொடர்ந்துகொண்டே 
இருக்கிறது வெறுமை 


இருதயத்தின் 
துடிதுடிப்பினைப்போல
அசராமல் 
இயங்கிக்கொண்டே 
இருக்கிறது சுயநலம் 

காற்றின் 
தன்மைப்போலே 
நீக்கமற 
இருந்துகொண்டே 
இருக்கிறது வலி 


ஜீவநதியின்
ஊற்றைப்போலே 
வற்றாமல் 
வந்துகொண்டே 
இருக்கிறது கண்ணீர்

வறுமை 
தீயைப்போலே 
எங்களை 
எரித்துக்கொண்டே 
இருக்கிறது விபச்சாரத்தில் ........................



   





Monday, 6 June 2011

என்ன நடக்கிறது இந்தியாவில் ஜனநாயக நாடா இது??

  கடந்த இரண்டு நாட்களில் நம் சுதந்திர இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் ஒரு இந்தியனாய்  என்னை வேதனையடையச்செய்கிறது, ஆங்கிலேயே ஆட்சியில் கூட இத்தனை கொடுமைகள் நடந்திருக்குமா என்பது சந்தேகமே ,ஒரு அறப்போராட்டத்தை இத்தனை உக்கிரமாய் இந்த அரசு கையாளவேண்டிய அவசரம் என்ன ? அவசியம் என்ன ?

பாபா ராம் தேவினால் தொடங்கப்பட்ட இந்த உண்ணாநிலை போராட்டம் எதற்கு தனிநாடு  கோரியா?? 
மக்களை கொன்று அழித்த தீவிரவாதிகளை விடுதலை செய்யக்கோரியா??   

          இந்த நாட்டின் வளங்களையும் , அரசுக்கு வரவேண்டிய வருமானத்தையும் சுரண்டி தன் சுய நலத்துக்காக நம் செல்வத்தை அந்நிய நாட்டில் கருப்பு பணம் என்ற பெயரில் பதுக்கி வைத்திருக்கும் துரோகிகளை அடையாளம் காட்டவும் அவர்களின் சொத்துக்களை முடக்கவும், நடவடிக்கை எடுக்க கோரியும், மத்திய அரசின் மெத்தன போக்கையும் கண்டித்து ஜனநாயக முறையில் நடத்தப்பட்ட உண்ணாநிலை போராட்டத்தை




இத்தனை கொடூரமாய் அதில் கலந்து கொண்டவர்களை கண்ணீர் புகை குண்டு வீசியும் , லத்தியடி வீசியும் கலைக்க வேண்டிய அவசியம் என்ன ???

அதுவும் நள்ளிரவில் பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் ஈவு இரக்கமின்றி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் காரணம் என்ன ??

நியாயமே இல்லையா இந்த நாட்டில்?,

தன் கருத்துக்களை கூறவும் தவறுகளை தட்டிக்கேக்கவும் உரிமை இல்லாத நாடா இது ?

சர்வாதிகாரம் ஆட்சி செய்கிறதா இந்த நாட்டை ??

இந்த செயல் யாரை காப்பாற்ற??

கீழே உள்ள படங்களைப்பாருங்கள் 

       
யார் இவர்கள் பிரிவினை வாதிகளா? 
மருத்துவமனையில்  குண்டு வைத்தவர்களா? 
பாலியல் பலாத்காரம் செய்தவர்களா ?
வழிப்பறி செய்தவர்களா ?
மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்தவர்களா ?

ஏன் இந்த அடி, உதை, காயம், அவமானம், இழிநிலை, இவர்களுக்கு , இந்திய பொருளாதாரத்தை நிலை நிறுத்த முயற்சித்ததற்குதான் இந்த கையாலாகாத அரசின் பரிசு. 

நம்மை காப்பதாக சொல்லிக்கொள்ளும் இந்த அரசியல் வாதிகள் அந்நிய நாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தின் மொத்த மதிப்பு எழுபது லட்சம் கோடி , என்ன கொடுமை பார்த்தீர்களா ?? இந்த ஊழல் பணம் வந்தால் எத்தனையோ பல நல்ல திட்டங்கள் செயல் படுத்த முடியும் , இந்தியாவின் பொருளாராதாரத்தையே தூக்கி நிறுத்த முடியும் 

ஒரே நாளில் , ஒரே நாட்டில் ஒரு பக்கம் வெள்ளமும் இன்னொரு பக்கம் வறட்சியையும் சந்திக்கும் அவல நிலை போக்க நதி நீர் இணைப்பை செயல் படுத்த முடியும் , இதன் மூலம் விவசாயம் வளரும் , அண்டை மாநிலங்களிடையே பகமை குறையும் , விவசாயிகளின் நிலை உயரும், உலக நாடுகளிடம் வாங்கிய கடனை ஒரே நாளில் அடைக்க முடியும். நம் நாட்டின்  கல்வி தரத்தை மிக நல்ல நிலையில் உயர்த்த முடியும் ,நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40%  க்கும் மேலானவர்கள் வறுமை கோட்டுக்கு கீழே ஒரு வேலை உணவுக்கு கூட வழியின்றி தவிப்பதாக புள்ளிவிவரம் சொல்லுகிறது , இவர்களுக்கு நல்ல நிலையை அமைத்து தரமுடியும் இது போன்ற பல நல்ல காரியங்களை செய்ய இந்த பதுக்கல் பணம் பயன்படும்.

  இந்த மாதிரியான பயனை தரும் அந்த கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்ச்சியில் ஈடுபட்டதற்கு தான் இந்த அராஜகம், அடாவடி செயல் , இது எல்லாவற்றையும் விட கொடுமை இந்த அறப்போராட்டத்தை நம் தமிழகத்தில் எந்த பெரிய அரசியல் கட்சிகளும் ஆதரிக்கவில்லை .

ஒரே இடத்தில் குவிந்திருக்கும் கட்டுப்பாடற்ற அதிகாரமும் சர்வாதிகாரம் தான், அந்த அடிப்படையிலேயே இந்த செயல் சர்வாதிகார செயலாகவே என்னால் பார்க்கபடுகிறது.

அன்பன் 
ARR          

Sunday, 5 June 2011

என் மகள்


என் செல்ல குட்டி தேவதை - இவள் 
செய்யும் சுட்டியெல்லாம் தேன்வதை 



தாயை இழந்த எனக்கு - ஆண்டவன் 
தொடங்கிய புது கணக்கு 



பூப்போலே புன்னைகைக்கும் புதுமலர் - அவள் 
பிராத்தனையில் துளிர்விட்ட அன்புஅலர்



என்வாழ்வுக்கு அவளே அர்த்தம் - தருவேனென் 
பாசத்தை அவளுக்கு மொத்தம் 



என் உயிரின் ஒளியவள் - என்னை 
நேசத்தால் செதுக்கும் உளியவள் 



மழலைபேசி மயக்கும் தந்திரம் - நான்
அறிந்தேவீழும் அன்பு மந்திரம் 



அச்சாய் என்அன்னையின் அம்சம் - அவளால்
பெருமைபெறட்டும் என் வம்சம்   

அன்பன் 
ARR  

Saturday, 4 June 2011

அநியாய அராஜக ஆட்டோ கட்டணக் கொள்ளை



            சென்னையில் மத்திய தர வர்க்கத்தினரின் அவசர போக்குவரத்துக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் இந்த ஆட்டோ , இப்போதெல்லாம் வழிப்பறி கொள்ளையாக ஆகிவிட்டது, எந்த ஆட்டோகாரராக இருந்தாலும் அவர் கேக்கும் கட்டணம் உடனடியாக நம் ரத்தத்தை கொதிக்க வைக்கிறது.அந்த ஆட்டோவை தவிர்த்து வேறு ஆடோ காரரிடம் சென்றாலும் அதே கட்டணம் தான், ஒரே ஸ்டாண்டில் இவர்கள் சிண்டிகேட் போல அமைத்து கொண்டு அவர்தான் முதல் வண்டி என்று சொல்லி நம்மை அலைக்கழிக்கும் கொடுமை சொல்லி மாளாது அப்படியும் நாம் வேறு எங்கோ செல்ல எத்தனிக்கையில் அவர்களின் மறை முக அல்லது நேரடியான வசவு வார்த்தைகள் குடும்பத்துடன் செல்லும் நம்மை கூனி  குறுக வைக்கிறது, இப்படி ஒரு சம்பவத்தில் ஆத்திரப்பட்ட நான் அந்த ஆடோ டிரைவரிடம் சண்டைக்கு போக , அதே ஸ்டாண்டில் இருந்த ஒரு பெரியவர் (அவரும் ஆட்டோ டிரைவர் தான் ) ஹலோ குடும்பத்தோட இருக்க , அவங்க நெறையா பேர் இருக்காங்க பேசாம போ என்றார், அப்படியானால் பெரும்பான்மை அநியாயம் கூட நியாயமா ? இது தான் ஜனநாயகமா?. அப்போதுதான் எனக்கு திருமணம் ஆன புதிது என்பதால் என் புது மனைவி முன் மேலும் அசிங்க பட வேண்டாம் என அங்கிருந்து நகர்ந்தேன்.


               ஆனால் இந்த பதிவு அதை பற்றியது இல்லை என்றாலும், ஒரு சராசரி மனிதனின் மனதை உணர்த்த அதை சொன்னேன், சரி மேட்டருக்கு வருவோம், இந்த ஆட்டோ கட்டணங்களை பற்றி அரசின் நிலைப்பாடு என்ன அவர்களின் கொள்கைகள் என்ன? ஆட்டோ கட்டணங்கள் அரசு விதித்துள்ள படி  குறைந்தபட்ச கட்டணம் ரூ.14 ஆகவும், கி.மீ.ருக்கு ரூ.7 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது இது பெட்ரோல் விலை ரூ.50ஆக இருக்கும் போது நிர்ணயிக்கபட்டது  விலைவாசி உயர்வின் மிக முக்கிய காரணமாக இருக்கும் பெட்ரோலிய பொருட்களின் விலையை  கூட நிர்ணயிக்க வைக்கில்லாத மத்திய அரசு , அதன் பின் பல முறை பெட்ரோல் விலை ஏறியும் இந்த அடிப்படை போக்குவரத்து காரணியின் கட்டணங்களை நிர்ணயிக்காத மாநில அரசு இது போன்ற அரசின் ஆட்சியில் இருக்கும் நம் மக்களின் நிலை எவ்வாறு இருக்கும்.

         சரி அடிக்கடி பாதை மாறுகிறேன் என நினைக்கிறேன், இப்போது உள்ள விலையின் படி பெட்ரோலும் ஆயிலும் 75 ரூபாய் என கொண்டாலும் முன்பு அரசு விகித்துள்ள கட்டணத்தின் படி குறைந்த பட்ச கட்டணமாக இருபது ரூபாயும் கிலோ மீட்டருக்கு பத்து ரூபாயும் விதிக்கலாம் அல்லது வாங்கலாம் ஆனால் இப்போதைய நிலை இப்படியா உள்ளது? குறைந்த பட்ச கட்டணம் முப்பது ரூபாய்,மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு குறைந்த பட்சமாக இன்றைய கட்டணம் எழுபது ரூபாய் அதுவும் நீங்கள் பேரம் பேசுவதில் கில்லாடியாகவும் அவர் சொல்லும் சுத்து வழிகளை கண்டு பிடிப்பவராக இருந்தால் மட்டுமே இது சாத்தியம், நீங்கள் ஊருக்கு புதிது என்றால் பல திடீர் ஒன்வேக்கள் முளைக்கும்.

             சென்னையை தவிர்த்து நம்மை சுற்றியுள்ள தென்மாநிலங்களில் மீட்டர் கட்டணம் உள்ளபோது இங்கு மட்டும் ஏன் இந்த நிலைமை. அங்கெல்லாம் இது போன்ற பேரம் பேசும் பிரச்சனைகளே இல்லை ஏறி உட்கார்ந்த உடனேயே மீட்டர் ஐ போட்டு விடுகின்றனர், அங்கிங்கு விதிவிலக்காக சில ஆட்டோ ஓட்டுனர்கள் இருந்தாலும் நம் சென்னையை போல எங்குமே மோசம் இல்லை ஏன் இந்த நிலைமை,

இது போன்ற பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்தாதா??  
இதற்கும் போராடினால் தான் விடிவு கிடைக்குமா ?? 
அரசுக்கு சுயமே இல்லையா ??         .                     

                       ஸ்டான்டிலேயே சும்மா கதை பேசிக்கொண்டு இருக்கிறார்களே தவிர நியாயமான கட்டணத்திற்கு  வருவதே இல்லை அப்படி கிடைக்கும்  ஒரு பயணியிடமே அந்த மொத்த நாளுக்கும் சேர்த்து சம்பாதிக்க நினைப்பது தவறு இல்லையா ??. இதை பற்றி சில ஆட்டோ நண்பர்களிடம் விசாரித்த போது சென்னையில் ஓடும் ஆட்டோக்களில் பாதி  வட்டார போக்குவரத்து அலுவலர்களோடதும் காவல்துறையினரோடது என்று கூறினார் . அவர்களிடம் நியாயத்திற்காக செல்லும் போது பணம் பறிப்பது மட்டும் இல்லாமல் இப்படி மறைமுகமாகவும்  மக்களை உறிஞ்சுவது என்ன நியாயம் ??

இதற்கு ஒரு தீர்வே கிடையாதா?? 
நடுத்தர வர்க்கத்து மக்கள் இவர்களிடையே நசுக்க பட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா?   

இதில் இந்த அரசு உடனடியாக தீர்வு காணவேண்டும் , குறைந்த பட்ச கட்டணத்தை நிர்ணயம் செய்யவேண்டும் , மீட்டர் ஐ நடைமுறைப்படுத்தவேண்டும் , மீறுபவர்களின் ஆட்டோ பெர்மிட் மற்றும் லைசென்ஸ் ஐ தகுதி இழக்க செய்யவேண்டும் 

செய்யுமா அரசு ??? 

அன்பன் 
ARR 

Thursday, 2 June 2011

தியாகி அன்னாஹசாரே., யோகாகுரு ராம்தேவ்.., ஐரோம் ஷர்மிளா ??










             கடந்த இரண்டு மூன்று  நாட்களாக எந்த சேனலை திறந்தாலும் பத்திரிக்கையை படித்தாலும் தெரியும் அறியும் ஒரு பொது செய்தி ,டில்லி ராம்லீலா மைதானத்தில் யோகாகுரு ராம்தேவ் பாபா உண்ணாவிரதம் துவக்குகிறார்,  ஊழலை ஒழிக்கவும், வெளிநாடுகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கவும், மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்  இந்த விஷயத்தில் அரசின் சுணக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து ராம்தேவ் பாபா நாளை 4 ம் தேதி உண்ணாவிரதம் துவக்குகிறார்,இதனால் மத்திய அரசு பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது.நேற்று அமைச்சர்கள் கபில்சிபல் , பிரணாப் முகர்ஜி ,பன்சிலால் ராம்தேவ் பாபாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர் ,ஆனால் தனது முடிவில் மாற்றமில்லை என உறுதியாக தெரிவித்து விட்டார். இவரது போராட்டத்திற்கு தியாகி அன்னாஹசாரே ஆதரவு தெரிவித்துள்ளார். ஊழல் ஒழிப்பு மசோதா உருவாக்குவதில் அரசு தம்மை ஏமாற்றி வருவதாகவும் , ராம்தேவ் உண்ணாவிரதத்தில் தாமும் பங்கேற்பதாகவும் கூறியுள்ளார்.

                        இவர்கள் இருவரின் செயல்களில் எனக்கு எந்தவிதமான எதிர்ப்போ, மாறுபாடோ இல்லை ஏன் இவர்களின் உயர்ந்த போராட்டத்திற்கு நான் ஆதரவாய் கூட இருக்கிறேன், அதே நேரத்தில் அன்னாஹசாரேவின் நான்கு நாள் போராட்டத்திற்கும் , இன்னும் தொடங்கவே இல்லாத யோகாகுரு ராம்தேவ் உண்ணாவிரதத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இன்னும் மத்திய அரசும் கூட சுதந்திர இந்தியாவின் அடிப்படை உரிமைகளுக்காக கடந்த பத்து ஆண்டுகளாக போராடிவரும் ஒரு உத்தம பெண் போராளி  ஐரோம் ஷர்மிளா வை கண்டு கொள்ளாது இருப்பதேன் ???

                       யார் இந்த ஐரோம் ஷர்மிளா......................??    


 கடந்த பத்து ஆண்டுகளாக தன் மாநில மக்களுக்காக தண்ணீரை தவிர எந்த உணவும் வாய்வழியே உட்கொள்ளாத ஒரு உன்னத பெண் , ஏன் இந்த நிலை அவருக்கு ???

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அருணாச்சலப்ரதேஷ், அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம், நாகாலந்து, திரிபுரா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் செப்டம்பர் 11, 1958 முதல் Armed Forces Special Powers Act (AFSPA) நடைமுறையில் இருக்கிறது. இதன் மூலம்  நம் இந்திய ராணுவத்திற்கு வழங்க பட்டிருக்கும் உரிமைகள் என்னவென்று பார்க்கலாம் 
  • யாரை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எவ்வித பிடி வாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம். அவர்களை சுட்டு வீழ்த்தவும் அதிகாரம் உண்டு.
  • அவர்கள் எங்கு வேண்டுமானாலும் எவ்வித உத்தரவுமின்றி தேடுதல் வேட்டை நிகழ்த்தலாம்.
  • இந்த சட்டத்தின் படி பொது வெளியில் 5 பேர் சேர்ந்து நின்றால் அவர்களை சுட்டு வீழ்த்தலாம்.
  • இராணுவ அதிகாரிகள் மீது எவ்விதமான வழக்கும் பதிவு செய்ய இயலாது.
  • இவைகள் மீது எந்த நீதி மன்றமும் நடவடிக்கை எடுக்க இயலாது 
  இது போன்ற உரிமைகளை அல்லது சலுகைகளை வைத்து கொண்டு இந்த வட கிழக்கு மாநிலங்களில் இவர்கள் வைத்ததுதான் சட்டம், கொலை கற்பழிப்பு என பல சட்ட மீறல்கள் இங்கே நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள் , பெண்களின் மீதான இவர்களின் அத்துமீறல்களை  கண்டித்து அம் மாநில தாய்மார்கள் இந்திய ராணுவத்தின் அலுவலகம் முன்னே நிர்வாணமாய் நின்று இந்திய ராணுவமே எங்களை கற்பழி என்ற கோஷத்தோடும் போராடி பார்த்தனர் அதற்கும் மசியவில்லை ராணுவமும் அரசும்

   

   சரி நம் நாயகி ஐரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரத்தத்தின் நோக்கம் என்ன ??

          நான் மேல சொன்ன அதிகாரத்தை வைத்துகொண்டு ராணுவம்அப்பவிப் பொதுமக்களையும் கொன்று குவித்திருக்கிறது. நவம்பர் 1, 2000 ம் ஆண்டு மணிப்பூரில் உள்ல "மலோம்" எனும் நகரத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பத்து அப்பாவி பொதுமக்களை இராணுவம் சுட்டுக் கொன்றது.மேலும் முப்பது அப்பாவி பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர்  இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த போதும் "AFSPA" அதற்கு இடமளிக்கவில்லை. அப்போது அந்த கொடூரத்தை தன் கண் முன்னே பார்த்த  28 வயதே ஆன ஐரோம் ஷர்மிளா இந்த சட்டத்திற்கு எதிராக  போர்க் கொடி தூக்கினார். மகாத்மா காந்தி நமக்குகற்றுத் தந்த உண்ணாவிரதத்தை நவம்பர் 4, 2000 அன்று துவக்கினார். இந்த சட்டம் அமலில் இருக்கும் மாநிலங்களில் இருந்து நீக்கப் பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

  மகாத்மாவின் உண்ணாவிரதத்திற்கு பணிந்த ஆங்கிலேய அரசை விட அடிமை ஆட்சி நடத்தி  மக்களுக்கான ஆட்சி என சொல்லி நம்மை ஏமாற்றி வரும் நம் இந்திய அரசு ஒரு அங்குலம் கூட அசையவில்லை, அதற்க்கு மாறாக நவம்பர் 6, 2000 அன்று அவர் IPC 309 பிரிவின் கீழ் "தற்கொலை முயற்சி" செய்வதாகக் கூறி போலீசாரால் கைது செய்யப் பட்டார். தண்ணீர் தவிர வேறு ஆகாரங்களை உட்கொள்வதில்லை என்பதில் ஷர்மிளா உறுதியாக இருந்து வருகிறார். ஆனால் கைது செய்யப் பட்ட ஒருவர் உயிரைக் காப்பது காவல் துறையின் வேலை என்பதால் வலுக்கட்டாயமாக அவருக்கு "Nasogastric intubation" (அதாவது மூக்கின் வழியே ஒரு ப்ளாஸ்டிக் ட்யூப் உபயோகித்து நீர் வகை உணவுகளை அளித்தல்) செய்ததது அரசு

                                                                                                                                                                    
             
                      இதன்பின் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அவர் தற்கொலை முயற்சி எனும் பிரிவில் கைது செய்யப் பட்டு இன்றுவரை சிறையிலிருக்கிறார். இந்த சிறப்பு சட்டத்தை ஆராய அமைக்க பட்ட ஜீவன் ரெட்டி கமிசன் ஜீன் 6, 2005ம் ஆண்டு இந்த சட்டம் குறித்தான தனது கருத்துக்களைத் தெரிவித்தது. ஆனால் மன்மோகன் சிங் அரசு அதை ஒன்றரை ஆண்டுகள் வரை கிடப்பில் போட்டது. அதன் பின் ப்ரணாப் முகர்ஜி, ஜீவன்ரெட்டி கமிசன் அளித்த சட்டத் திருத்தக் கருத்துக்களை நிராகரித்தார். அத்துடன் அவர் இது போன்ற மாநிலங்களில் இராணுவம் இத்தகைய அதிகாரங்கள் இன்றி செயல் பட முடியாது என கருத்தும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2, 2006 ல் ஷர்மிளா விடுவிக்கப்பட்டதும் 4 மாத காலங்கள் டெல்லிக்குத் தப்பிச் சென்று அங்குள்ள மாணவர்கள், சமூக அமைப்புகளுடன் கை கோர்த்து ஒரு போராட்ட ஊர்வலம் நடத்தினார்.அவரது உண்ணாவிரதம் டெல்லியிலும் தொடர்ந்ததால் டெல்லி போலீசாரால் மீண்டும் தற்கொலை முயற்சி பிரிவின் கீழ் கைது செய்யப் பட்டார்.அவர் பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதங்கள் அனுப்பினார். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை 
                அவர் கடந்த பத்தாண்டுகளாக எந்தவிதமான திட உணவையும் உட்கொள்ள மறுத்து வருவதால், அவரது முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு எந்த வேளையிலும் அவர் மரணத்தைச் சந்திக்கக் கூடும் என்ற அபாயகரமான கட்டத்தில் இருந்து வந்தாலும், அவர் தனது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து வருகிறார்.



         நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க , சம அந்தஸ்த்து வழங்க , ஊழலை ஒழிக்க இப்படி மக்களின் நலனுக்காகவே போராடி வரும் இந்த போராளிகளை இரண்டு விதமான கண்ணோட்டத்தில்  இந்த அரசு பார்ப்பதேன்,

 ஊழலுக்கு ஒரு நீதி உரிமைகளுக்கு ஒரு நீதியா ?


ஐரோம் ஷர்மிளாவுக்கு பாலிவுட் நட்ச்சதிரங்களின் ஆதரவு இல்லையா?


ஏன் இந்த மத்திய அரசு இந்த உரிமை போராட்டத்தை நசுக்க பார்க்கிறது? 


ஏன் இந்த ஊடகங்கள் இதை முன்னிறுத்தவில்லை?


இதுவா ஜனநாயகம் ?




        உண்மையான காரணம் தியாகி அன்னாஹசாரே, யோகாகுரு ராம்தேவ் இவர்களின் உண்ணாவிரதத்திற்கு பின்னால் பிராதான எதிர் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இருப்பதாக நம்பப்படுகிறது , இந்த போராட்டத்திற்கு திரு. நிதின் கட்கரி நேற்று ஆதரவு தந்திருப்பதன் மூலமும் இது உறுதியாகிறது , ஆகவே இவர்கள் பயப்படுவது கட்கரியின் கட்சிக்காகத்தான் காந்திய உண்ணாவிரதத்திற்கு இல்லை.


            கடந்த பத்து ஆண்டுகளாக நடந்து வரும் இந்த போராட்டம் இன்று ஊழலுக்கு எதிராக பேசிவரும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் போது தொடங்கப்பட்டதுதான் , ஆகவே இந்த இருகட்சிகளும் மக்களுக்கு உரிமைகளை அளிப்பதில்லை என்பதில் உறுதியாகவே இருந்து வருவதாக தெரிகிறது.


இந்த பதிவின் நோக்கம் அரசியல் கட்சிகளை சாடவோ இல்லை எல்லைகளில் பல இன்னலுகிடையில் நம் தேசத்தை காக்கும் இந்திய ராணுவத்தை குறைகூறவோ இல்லை  தியாகி அன்னாஹசாரே,யோகாகுரு ராம்தேவ் ஆகியோரின் போராட்டத்தை கொச்சை படுத்தவோ இல்லை , நம்மை போன்ற மக்களின் அடிப்படை   உரிமைகளுக்காக தன் இளமையை , நாவின் சுவையை, உடலின் ஆரோக்கியத்தை, ஒரு சராசரி இந்திய பெண்ணின் கனவுகளை  இழந்து போராடி வரும் ஐரோம் ஷர்மிளா திடத்தையும் அவரின் மனோதைரியத்தையும் ,போரட்டகுணத்தையும் நாம் அறிந்து கொள்ளத்தான், உரிமை மீட்பு போராளியே  நீங்கள் உள்ள திசையை  பார்த்து இரு கரம் குவித்து, சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என் சகோதரியே .   


என்னை பொறுத்தவரை ஊழலை விட உரிமை மறுப்பு மிகக்  கொடுமையானது . 


அன்பன் 
ARR 

Wednesday, 1 June 2011

அரவான் மனைவிகள்



சமூகம்  சாபமிட்ட 
சந்தன சக்கைகள் நாங்கள் 
முழுமை அடையாத 
இடையின நங்கைகள் நாங்கள்

பிறப்பால் நாங்கள் 
ஆணானோம் - பின் 
உணர்வால் பெண்ணாக 
ஆளானோம்   

ஆண்டவன் படைப்பில் 
முற்றுபெறாத பரிதாபம் 
யார் தருவார்
இதற்கோர் பரிகாரம்    

அவள் போல் அவன் 
கொண்ட அவதாரம் - பின்
அவனுமின்றி அவளுமின்றி 
அதுவாகிப்போன அலங்கோலம்


 தாயும் புரியவில்லை 
எங்கள் உணர்வு
அதற்கு பின்யார்தான்
எங்கள் உறவு 

குடும்பத்திலிருந்து
பிரிக்கபடவில்லை
குற்றமென 
பிய்க்கபட்டிருக்கிறோம்

நாங்கள் 
ஆண்டவனின் 
சமமான கலவை
அந்த சமமே 
எங்கள் கவலை 


உடலால் ஆணையும்
உள்ளத்தால் பெண்ணையும் 
சுமக்கும் 
சுழல் விளக்கு
அரவா 
எங்களை புரியாதார் 
உள்ள 
இருள் விலக்கு 

சமூக அங்கீகாரம் வேண்டி 
அங்குமிங்கும் 
அலைகிறோம்
புள்ளிஇட்ட கோலமாய் 
அலையடித்து 
கலைகிறோம்  

பாசம் வேண்டி 
நேசம் நாடி 
தவி தவித்து 
தவிக்கிறோம் -இதை எல்லாம் 
அறிந்தும்,புரிந்தும்
மீண்டும் மீண்டும் 
பெண்ணாகவே 
துளிர்க்கிறோம்  

உள்ளத்தில் சோகம்
தைத்து
உதட்டில் சிரிப்பை 
வைத்து 
ஆடுகிறோம்  
நாடகம்
அறிவீரா இந்த 
பூடகம்



எங்களின் 
பெண்ணுணர்ச்சியை
வழிமொழிய
வன்புணர்ச்சியா 
வழிமுறை 





திருநங்கையராம் 
நாங்கள்,
பாருங்கள் 
அதிலிலும் முழுமை 
இல்லை 
பெயரிலாவது 
திருமதிநங்கை என 
அழையுங்களேன் 
பெயருக்காவது 
பெண்மையை 
அளியுங்களேன் ...............


நேற்று ரயிலில் பார்த்த இவர்களை பற்றி எண்ணியபோது எழுந்த விதை இது சக பயணியாக வரமுடிந்த இவர்களை நாம் (நான் உட்பட )சக மனிதர்களாக பாவிக்க  போவது எப்போது ????? 


அன்பன்
ARR